மாசி மகத்தில் ரத்தின வேல் தரிசனம்!

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு தேவகோட்டையைச் சார்ந்த நயினப்பச் செட்டியார் கொழும்புவில் தொழில் செய்த போது ஒருரத்தின கற்கள் பதித்த வேலினைச் செய்தார்.
மாசி மகத்தில் ரத்தின வேல் தரிசனம்!

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு தேவகோட்டையைச் சார்ந்த நயினப்பச் செட்டியார் கொழும்புவில் தொழில் செய்த போது ஒருரத்தின கற்கள் பதித்த வேலினைச் செய்தார். கொழும்புவில் இருந்து அவர்கள் பரம்பரையினர், தேவகோட்டைக்கு வந்தபோது பாதுகாப்பு கருதி ரத்தினவேலை விபூதி பெட்டிக்குள் வைத்து, பூமிக்குள் பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். அதன் மகிமை வெளிப்பட ஆரம்பித்தபின், உலக நலனுக்காக அந்த வேலினை, பூஜை செய்து அதனால் அனைவரும் பலன் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தகுதியான நபராக தீர்மானித்து கண்டனூர் அருளாடியார் குட்டையய்யா என்பவரிடம் ஒப்படைத்தனர். அருளாடியார் அவர்களும் அவர்கள் பரம்பரையினரும் ரத்தின வேலை விபூதி பைக்குள் வைத்து குன்றக்குடி அன்னதான மடத்தில் பாதுகாப்பாக வைத்து நித்ய பூஜைகளையும் பழநி, பாதயாத்திரை சமயத்தில் பையுடன் எடுத்தும் செல்வார்கள். வழிநெடுகிலும் மக்கள் தரிசனம் செய்வார்கள். பைக்குள்தான் வேல் வைக்கப்பட்டிருக்கும்.
 சிறப்பு வாய்ந்த இந்த ரத்தின வேலினை தேவகோட்டை நகரத்தார்கள் குன்றக்குடியில் இருந்து பெற்று வந்து ஆண்டுதோறும் மாசிமகத் திருநாளில் தேவகோட்டை நகரச்சிவன் கோயிலில் இருந்து வெள்ளித் தாம்பாளத்தில் பட்டுத்துணியின் மேல் வைத்து நகரப் பள்ளிக் கூடத்திற்கு (கோட்டையம்மன் கோயில் அருகில்) எடுத்துச் செல்வார்கள். நாற்பது வகை நகரத்தார்களில் அறங்காவலராக இருக்கும் அறுபது வயது நிரம்பிய ஒருவர் இதனை எடுத்துச் செல்வார். இதற்காக அவர் ஒரு மாத கால விரதம் மேற்கொள்வார் என்பது சிறப்பு.
 மங்கல வாத்யம் முழங்க முருகப்பெருமான் பக்தி பாடல்களுடன், கட்டியம் கூறிட பயபக்தியுடன் விபூதி பையிலிருந்து ரத்தின வேலை எடுத்துக்கொண்டு பாதையெங்கும் "மாத்து' எனப்படும் துணிகளை விரித்து அதன்மேல் நடந்து செல்வார்கள். வழி நெடுகிலும் பக்தர்கள் ரத்தின வேலுக்கு பன்னீரால் தங்கள் கைகளாலேயே (ஆண்கள் மட்டும்) அபிஷேகம் செய்து மகிழ்வார்கள். ஒரு கி. மீ. தொலைவிலுள்ள நகரப்பள்ளிக் கூடத்திற்கு எடுத்துச்சென்று அங்கு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் முருகப்பெருமான் திருக்கரங்களில் சார்த்தி சிறப்பு பூஜை செய்வார்கள்.
 ஒரு முறை இந்த ரத்தினவேலை வெளியே எடுத்தால் குறைந்தது 32 மூட்டை அரிசி சாதம் வடித்து ஊருக்கெல்லாம் அன்னதானம் செய்ய வேண்டும் என்ற ஒரு நியதி பின்பற்றப்படுவதால், முதல் நாள் அந்தணர்களுக்கு அரிசியும், காய்கறிகளும் வழங்குவார்கள். மாசிமகத்தன்று மகேஸ்வர பூஜை என்னும் அன்னம் பாலிப்பினை ஊர் மக்கள் அனைவரும் உண்ணும் வண்ணம் நகரத்தார் பெரு மக்கள் ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக செய்து வருகின்றார்கள்.
 "வேலை வணங்குவதே வேலை' என்பார்கள் முருகபக்தர்கள். இவ்வாண்டு, பிப்ரவரி 19 (மாசி- 7) மாசி மகத் திருநாள் அமைகின்றது.
 - இலக்கியமேகம் ஸ்ரீநிவாஸன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com