வெப்பநோய் நீக்கும் வேதநாதர்!

சைவசமய திருமுறைத்தலங்கள் வரிசையில் தேவாரம், திருவாசகத்தை அடுத்து 9 - ஆம் திருமுறையில் சிறப்பிக்கப்படும் திருவிசைப்பா - திருப்பல்லாண்டு தலங்களுள் கருவூர்த்தேவரின்
வெப்பநோய் நீக்கும் வேதநாதர்!

சைவசமய திருமுறைத்தலங்கள் வரிசையில் தேவாரம், திருவாசகத்தை அடுத்து 9 - ஆம் திருமுறையில் சிறப்பிக்கப்படும் திருவிசைப்பா - திருப்பல்லாண்டு தலங்களுள் கருவூர்த்தேவரின் (சித்த புருஷர்) பதிகம் பெற்ற பேறுடையது திருச்சாட்டியக்குடி. மக்கள் வழக்கில் சாட்டியக்குடி, சாத்தியக்குடி என்று வழங்கப்படுகின்றது. நாகை மாவட்டத்தில் கீழ்வேளூருக்கு மேற்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள இவ்வூர், மாசிமக உற்சவம் நடைபெறும் தலங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.
 புராண வரலாறு: தேவர்கள் பிரகஸ்பதியை அவமதித்தால் ஏற்பட்ட துன்பங்களை, நாரதருடைய ஆணையின்படி இத்தலத்தில் வந்து வேத தீர்த்தத்தில் நீராடி வேதமந்திரங்களால் இறைவனை பூசித்து அருள்பெற்றனர். ஆத்ரேய குலத்தில் உதித்தவரான சாண்டில்ய மகா முனிவர் இங்கு வந்து பேறு பெற்றார். குபேரனுக்கு இறைவர் அம்மை, அப்பராக காட்சியருளிய தலம். வெப்ப நோய்க்குரிய தேவதையான ஜ்வர
 தேவதை வழிபட்ட தலம். அதன் பொருட்டே இத்தலம் ஜாட்டியக்குடி (சாட்டியக்குடி) எனப் பெயர் பெற்றது என்பர். சாட்டியம் என்றால் வெப்ப நோய் என்று பொருள்.
 தலச்சிறப்புகள்: இத்தல இறைவனுக்கு வேதநாதர், வேதபுரீஸ்வரர், ரிக்வேதநாதர் என்றும் இறைவிக்கு வேதநாயகி என்றும் திருநாமங்கள். தலமரமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையான வன்னிமரம் உள்ளது. தீர்த்தம் வேத தீர்த்தம், மூலஸ்தானத்தில் ஸ்ரீவேதநாதர் சற்று உயர்ந்த பாணத்துடன் ஏழு அடுக்குகள் போன்ற வடிவ அமைப்புடன் கூடிய சதுர்வடிவ ஆவுடையார் மேல் லிங்க ரூபமாய் காட்சியளிக்கின்றார்.
 அனந்தாசனம், சிம்மாசனம், விமலாசனம், யோகாசனம், பத்மாசனம், விமலாசன ஊர்த்தவம், பத்மாசன ஊர்த்தவம் என்ற ஏழு ஆசனங்களின் மேல் இறைவன் வீற்றிருப்பதாய் ஐதீகம். மற்றொரு கூற்றின்படி, ஆறு ஆதாரங்களாகிய மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா ஆகியவற்றுக்கும் மேலாக ஏழாவதாக துவாதசாந்த இருக்கையின் மேல் வீற்றிருப்பதாகவும் கொள்ளலாம். இக்காரணம் பொருட்டு, இத்தலத் திருவிசைப்பா பதிகத்தில் கருவூர்த்தேவர் ஒவ்வொரு பாட்டிலும், "ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே' என்று பாடிப் போற்றியுள்ளார்.
 அம்பாள் தனிக்கோயிலில் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் நெடிய உருவில் அருமையாக காட்சிதரும் அற்புதக்கோலம். ஆலயத்தில் உள்ள கற்தெய்வத் திருமேனிகளில், சாண்டில், முனிவர், கருவூர்த்தேவர், குபேரன் போன்றவர்களுக்கும் இடம் உண்டு. கி.பி. 4 -ஆம் நூற்றாண்டுக்கு முன்னரேயிருந்து இத்தலம் வழிபாட்டில் உள்ளது. பிற்காலத்தில் தஞ்சாவூரை ஆண்ட சோழமன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட பெருமையுடையது. கடைசியாக 2010 -இல் மஹாகும்பாபிஷேகம் நடந்தேறியது.
 பரிகாரம்: இத்தலத்தில் உள்ள வேதபுஷ்கரணியில் முக்கியமாக ஐப்பசி மாத பிறப்பிலும், "மாசி மாத பௌர்ணமியிலும்', வைகாசிமாத பௌர்ணமியிலும் முதல் நாள் இரவே தங்கி முறைப்படி நீராடி ஈசனை வழிபட எப்பேர்பட்ட வெப்ப நோய்களும் நீங்கி சரீர சுகம் பெறலாம் என்ற திடமான நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகின்றது. தீர்த்தக் குளத்தைச் சுற்றி மூலிகைச் செடிகள் படர்ந்துள்ளன. மேலும் திருமணங்கள் கூட்டி வைக்கும் தலமாகவும் கருதப்படுகின்றது.
 திருவிழா: இங்கு நடைபெறும் திருவிழாக்களில் ஒன்றாக வரும் பிப்ரவரி மாதம் 19- ஆம் தேதி (மாசி -7) மாசிமகத்தன்று சிறப்பு அபிஷேகங்களும், இரவு ரிஷப வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 94424 46077 / 04366-279410.
 - எஸ். வெங்கட்ராமன்
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com