வேலைக்கு வழிகாட்டும் வீரட்டேஸ்வரர்!

தொன்மைச் சிறப்புடைய தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் தாம்பரம்-காஞ்சிபுரம் சாலையில் படப்பை என்ற கிராமத்தில் கீழ்படப்பையில் அருள்மிகு ஸ்ரீ சாந்தநாயகி உடனுறை
வேலைக்கு வழிகாட்டும் வீரட்டேஸ்வரர்!

தொன்மைச் சிறப்புடைய தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் தாம்பரம்-காஞ்சிபுரம் சாலையில் படப்பை என்ற கிராமத்தில் கீழ்படப்பையில் அருள்மிகு ஸ்ரீ சாந்தநாயகி உடனுறை ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இத்திருக்கோயில் காரண ஆகம சாஸ்திரப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த இத்திருக்கோயில் சிதிலமடைந்திருந்த காரணத்தினால் இதனை சீரமைக்க இக்கிராம மக்களின் முயற்சியாலும், பரமேஸ்வரப் பெருமானின் திருஉளப்படியும் முழுவதும் கருங்கல் திருப்பணியாக நடைபெற்று வருகிறது.
தொல்லியல் நோக்கில், சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான இத்திருக்கோயில் அமைந்துள்ள படப்பையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் மணிமங்கலம் என்ற பெரிய ஊர் உள்ளது. மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் மணிமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு சிற்றரசர்கள் ஆண்டு வந்துள்ளனர். அக்காலத்தில் போர்புரிய பயிற்சியளிப்பதற்கான ஊராக படப்பை இருந்துள்ளது. அதன்படியே போரில் வெற்றி பெறும் பொருட்டு சிற்றரசர் ஒருவரால் உருவாக்கப்பட்டதே வீரட்டேஸ்வரர் திருக்கோயிலாகும்.
அந்தப்போரில் வெற்றிபெற்ற பின்னர் இக்கோயில் கற்றளியாக கட்டப்பட்டது. அதன்பிறகு அவ்வூரில் குடியேறிய கைத்தறி நெசவாளர்களால் இக்கோயிலில் வழிபாடுகள் செய்யப்பட்டது. 
இத்திருக்கோயில், மஹாமண்டபம், அர்த்தமண்டபம், அந்தராளம், கருவறை என்ற அமைப்பில் உள்ளது. கிழக்கு நோக்கிய கருவறையில் சுவாமி வீரட்டேஸ்வரர் அமைந்து அருளுகின்றார். சுவாமிக்கு பின்புறம் சோமாஸ்கந்தர் வடிவமைப்பு உள்ளது சிறப்பு. மஹா மண்டபத்தில் தெற்கு நோக்கி அம்பிகை சாந்தநாயகி அபய, அஸ்தம் தாங்கி வரத முத்திரையோடு அருளுகின்றார்.
வெளிச்சுற்றில் நந்திமண்டபம், கோஷ்டங்களில் நர்த்தன கணபதி, தட்சாணமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை அலங்கரிக்கின்றனர். மேலும், கன்னிமூலை கணபதி, காசி விஸ்வநாதர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், சந்நிதிகள் அமைந்துள்ளன. ஈசான்ய பகுதியில் வடகிழக்கில் பைரவர் சந்நிதியும், நவகிரக சந்நிதியும் அமைந்துள்ளன. சூரியன், சந்திரன் நால்வர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் ஓரு சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகின்றது.
அரசாங்க வேலை, தனியார் துறையில் வேலை வேண்டி, இத்தல ஈசனை வழிபட்டால் பரிபூரணமான திருவருள் கிட்டும். மாமியார், மருமகள் இடையே ஏற்படும் மனக்கசப்புகள் நீங்க வழிபடவேண்டிய தலமாகும். சகோதரர்களிடையே ஏற்படும் தோஷங்கள் தீர, இங்கு வந்து வழிபடவேண்டிய தலம். 
தந்தைக்கு நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பின் அவரது பிள்ளைகள் சுவாமியை மனமுருகி வழிபட அந்நோய் குணமாகும். வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் உள்ளவர்களின் குறைபாடுகள் இத்திருக் கோயிலிலுள்ள சந்திரனை வழிபட நீங்கும். பக்தர்கள் இவ்வாலய திருப்பணியில் பங்குகொண்டு சிவனருள் பெறலாம்.
ஆலயம் செல்ல: தாம்பரத்திலிருந்து கீழ்படப்பை சென்று அங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இத்திருக்கோயிலை அடையலாம்.
தொடர்புக்கு : 99418 47979. 
- எழுச்சூர். க. கிருஷ்ணகுமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com