ஆழ்வார்திருநகரி மாசி தீர்த்தவாரி!

தென் தமிழ்நாட்டை வளப்படுத்தும் தன்பொருநைநதியாம் தாமிரபரணியின் வடகரையிலும், தென்கரையிலும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒன்பது வைணவத் திருத்தலங்கள் அமைந்துள்ளது.
ஆழ்வார்திருநகரி மாசி தீர்த்தவாரி!

தென் தமிழ்நாட்டை வளப்படுத்தும் தன்பொருநைநதியாம் தாமிரபரணியின் வடகரையிலும், தென்கரையிலும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒன்பது வைணவத் திருத்தலங்கள் அமைந்துள்ளது. அவை "நவதிருப்பதிகள்' என அழைக்கப்படுகிறது. இவற்றுள் ஆழ்வார்திருந்நகரி திருத்தலம் மிகச்சிறப்புடன் விளங்குகிறது. வைணவ குலபதி எனப்போற்றப்படும் நம்மாழ்வார் அவதரித்த தலமாதலால் "ஆழ்வார் திருநகரி' என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்திற்கு அமைந்துள்ள பல்வேறு சிறப்பு பெயர்களில் "திருக்குருகூர்' என்ற பெயரும் உண்டு. "குருகு' என்றால் சங்கு என்று பொருள். சங்கு இத்தலத்து பெருமாளை வலம் வந்து வழிபட்டதால் "குருகூர்' என்று அழைக்கப்படுகிறது.
 ஊருக்கு நடுவில் ஆதிநாதர் திருக்கோயிலும், அதனைச்சுற்றி திரு வேங்கடமுடையான், திருவரங்கநாதன் கோயிலும், ஆண்டாள், பிள்ளை லோகாச்சாரியார், அழகர் கோயிலும் அமைந்துள்ளன. மேற்கில் உடையவர், பெரிய நம்பி, திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வான் கோயில்களும் அமைந்துள்ளன. எனவே இப்பகுதிகள் ராமானுஜ சதுர்வேதி மங்கலம், ஸ்ரீ பராங்குச சதுர்வேதி மங்கலம் எனப் பெயர் பெற்று விளங்கியது.
 ஆதிநாதர் கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. முன்புறவாயிலில் பந்தல் மண்டபம், சிற்ப வேலைப்பாடு மிக்க ராஜகோபுரம் கடந்து உள்ளே நுழைந்தால் பலிபீடம், துவஜஸ்தம்பம் அமைந்துள்ளன. திருச்சுற்றின் தென்புறத்தில் வராக மூர்த்தி ஞானபிரானாகக் காட்சி அளிக்கிறார். மூலஸ்தான விமானம் கோவிந்த விமானம் என அழைக்கப்படுகின்றது. கருவறையில் அருள் செய்கின்ற ஆதிபிரான் நின்றகோலத்தில் பிரயோகச் சக்கரத்தை தனது வலது கரத்தில் தாங்கி, ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தந்து அருள்புரியும் அற்புதக் கோலம். கருவறையின் பின் புறம் பரமபதநாதர், சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் உள்ளன. மேற்கு திருச்சுற்றில் ஆதிநாதவல்லி - குருகூர்வல்லி தாயார் சந்நிதிகள் அமைந்துள்ளன.
 வடக்குத் திருச்சுற்றில் நம்மாழ்வார்க்கு என்று தனிக்கோயில் அமைந்துள்ளது. அருகில் நம்மாழ்வார் ஞானம் பெற்ற "உறங்காபுளி' என்ற ஸ்தல விருட்சமான புளியமரமும் உள்ளது. ஏழுகிளைகளுடன் கூடிய இம்மரத்தைச் சுற்றியுள்ள சுவரில் நம்மாழ்வார் திருவாய்மொழிந்த 33 தலங்களில் உள்ள பெருமாளின் திருக்கோயில்கள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. தனிக்கோயிலில் நம்மாழ்வாரை உபதேசிக்கும் ஞானமுத்திரையோடு காட்சி தரும் அற்புதவடிவினை தரிசிக்கலாம். இறை அருளால் பேச்சுத்திறன் வரப்பெற்று தமிழ்க்கவி ஆயிரம்பாடி, மகிழ்ந்தார் நம்மாழ்வார். இவர் இயற்றிய நான்கு பிரபந்தங்கள் நான்கு வேதங்களின் சாரமாக விளங்குகின்றன. "வேதம் தமிழ் செய்த மாறன்' எனப்புகழ் பெற்றார். இவருக்கு அமைந்த பல்வேறு சிறப்புப்பெயர்களில் "சடகோபன்' என்பதும் ஒன்றாகும். திருமால் கோயில்களில் வழிபடச் செல்லும்பொழுது அவர் திருவடி நம் தலையில் வைக்கப்படுவது உண்டு. அதற்கு "சடகோபன்' "சடாரி' என வழங்கப்படுகிறது. சமயப்புரட்சி செய்த ராமானுஜர் இத்தலத்தை "சடகோபன் ஊர்', "பரமபத்தின் எல்லை' என்றெல்லாம் போற்றுகின்றார். ஸ்ரீமந்நாத முனிகள் திராவிட வேதமான நாலாயிரத் திவ்யபிரபந்த பாடல்களை - பாசுரங்களைப் பெற்ற தலச்சிறப்புடன் ஆழ்வார் திருநகரி விளங்குகிறது.
 சுவாமி நம்மாழ்வாரின் திவ்யமங்கள விக்ரகத்தை எழுந்தருளப் பண்ணித்தர வேண்டும் என இவரை குருவாக அடைந்த மதுரகவிகள் பிரார்த்திக்க ஒரு மாசிமாதம் திருவிசாகத்தன்று தாமிரபரணி பெருநல்சங்கணித் துறையிலிருந்து தீர்த்தம் எடுத்துக் காய்ச்சவும் அதிலிருந்து இன்றும் நாம் சேவித்து வருகின்ற வடிவில் அர்ச்சா மூர்த்தியாக தோன்றி விளங்குகின்றார் நம்மாழ்வார். இந்த நன்னாளை போற்றும் முறையிலேயே ஆண்டுதோறும் மாசிமாத உற்சவம் இத்தலத்தில் நடைபெறுகின்றது. இவ்வாண்டு, உற்சவம் பிப்ரவரி 14 கொடியேற்றத்துடன் துவங்குகியது. பிப்ரவரி 22 - திருத்தேர், பிப்ரவரி 23 - பெருமாள் தெப்பம், பிப்ரவரி 24 - நம்மாழ்வார், ஆசார்யர்கள் தெப்பம், பிப்ரவரி 25 - மாசி தீர்த்தவாரி (முக்கியமான நாள்)
 ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளி அருள்புரியும் ஆதிநாதன் திருக்கோயில் சென்று வழிபட்டு வரம் அனைத்தும் பெறுவோம். திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.
 - கி.ஸ்ரீதரன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com