பொருநை போற்றுதும்! 29 - டாக்டர் சுதா சேஷய்யன்

கன்னடியன் கால்வாய் குறித்துப் பற்பல தகவல்கள் உலவுகின்றன. இந்தத் தகவல்கள் பலவும், காலப்போக்கிலும் மக்கள் புழக்கத்திலும் , முன்னும் பின்னும் மாறி, ஆங்காங்கே "இடைச்செருகல்கள்' கூடி.
பொருநை போற்றுதும்! 29 - டாக்டர் சுதா சேஷய்யன்

கன்னடியன் கால்வாய் குறித்துப் பற்பல தகவல்கள் உலவுகின்றன. இந்தத் தகவல்கள் பலவும், காலப்போக்கிலும் மக்கள் புழக்கத்திலும் , முன்னும் பின்னும் மாறி, ஆங்காங்கே "இடைச்செருகல்கள்' கூடி. . . சுவாரசிய அரட்டைகளாக உலவுகின்றன. இவற்றின் முக்கியமான கட்டுக்கோப்பை மட்டும் காணலாம்.
 சேரன்மாதேவிப் பகுதியைப் பிரதானமாகக் கொண்டு அரசாண்ட மன்னர் ஒருவர், கொடிய நோயினால் பீடிக்கப்பட்டார்; அதனைப் போக்கிக் கொள்ள வழி தேடினார்; தன்னைப் போலவே தங்க உருவம் ஒன்று செய்து, அதன்மீது துன்பங்களையும் பாவங்களையும் சார்த்தி, அந்தப் பிரதிமத்தை அந்தணர் ஒருவருக்கு தானம் கொடுத்துவிட்டால், நோய் நீங்கிவிடும் என்று யாரோ யோசனை சொல்லிவிட்டார்கள்; மன்னரும் அதே போல, பிரதிமம் செய்து, பாவங்களை ஏற்றியும் விட்டார்.
 ஆனால், பிரதிமத்திற்குப் பின்னிருக்கும் கதை தெரிந்தால், எந்த அந்தணர் அதனை வாங்கிக் கொள்ளச் சம்மதிப்பார்? யாரும் வரவில்லை; அரசருக்கும் நோய் தீரவில்லை. இந்த நிலையில், பல காலத்திற்குப் பிறகு, கன்னட தேசப் பகுதியிலிருந்து (அல்லது கன்னடம் பேசுபவர்களுக்கு இடையேயிருந்து) அந்தணர் ஒருவர் வந்தார். விஷயத்தைக் கேள்விப்பட்டார். முறையாகச் சந்தியாவந்தனமும் அனுஷ்டானங்களும் செய்து, காயத்ரி மந்திரத்தின் ஆசீர்வாதங்களைப் பூரணமாகப் பெற்றிருந்த அவருக்கு, அனுஷ்டானங்களின்மீதும் காயத்ரி மாதாவின் மீதும் நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தானத்தை ஏற்றுக்கொள்ள முன்வந்தார்.
 பிரதிமையின் முன்சென்று, "போ,போ' என்று விரட்டினார் (பிரதிமைக்குள் பொதிந்துகொண்டிருந்த பாவங்களின் மூட்டையைத்தான் விரட்டினார்). பாவங்களைத் துடைக்கக்கூடிய அளவுக்கு காயத்ரியின் பலன்களைக் கேட்டது பிரதிமம். காலை-மதியம்-மாலை ஆகிய மூன்று கால அனுஷ்டானப் பலன்களையும் அது கேட்க, முடியாது என்று மறுத்தார் பிரம்மசாரி. "இரண்டு வேளைப் பலன்களைக் கொடு' என்று பிரதிமம் பேரத்தைத் தொடர்ந்தது. அதற்கும் முடியாது என்று அந்தணர் மறுக்க. . . நெருப்பாகக் கனன்ற அவருடைய காயத்ரி பலத்திற்கு முன்னால் நிற்கமுடியாமல் தவித்த பாவமூட்டை, விட்டால் போதுமென்று, ஒருவேளை பலனுக்கு ஒத்துக்கொண்டது. அந்தணரின் மாத்யானிகப் பலன்களால் பாவமூட்டை அழிந்துவிட, தங்கப் பிரதிமமும் தூய்மையாக, அரசரின் நோய் அகன்றது. தன்னுடைய நோயைப் போக்கிய அந்தணருக்கு ஏராளமான பொன்னையும் பொருளையும் அரசர் கொடுத்தார்.
 மாட்டுவாலும்
 மடைநீர்ப் பாதையும்
 பொருளைப் பெற்றுக்கொண்ட சில காலத்தில், அந்தணருக்குப் பாவம் சேர்ந்தது. எப்படி என்கிறீர்களா? காயத்ரியின் பலன்களை பேரம் பேசினால் பாவம் வராதா? வந்தது. தன்னுடைய பாவத்தைப் போக்கிக் கொள்ள, இப்போது அந்தணர் வழிதேடினார். அகத்தியரை நாடினால் வழிகிட்டும் என்று அறிந்தார்.
 இங்கேதானே, பொருநைப் பகுதியில்தானே, அகத்தியர் நித்யவாசம் செய்கிறார். தேடித் தேடி அலைந்தார். அவ்வளவு சுலபத்தில் அகத்தியர் அகப்பட்டுவிடுவாரா என்ன?
 கையில் தங்கப் பிரதிமையை வைத்துக் கொண்டு அலைவது சங்கடமாக இருந்தது. விட்டுவிட்டும் போகமுடியவில்லை. தங்கமாயிற்றே! யுக்தி ஒன்றைக் கண்டுபிடித்தார். பிரதிமத்தை உடைத்துச் சிறு சிறு துண்டுகளாக்கினார்; சாக்கு மூட்டையில் கட்டினார். அம்பாசமுத்திரப் பகுதியில் கோயில் அர்ச்சகர் ஒருவரிடம் கொடுத்து வைத்திருக்கச் சொன்னார். கொடுக்கும்போது, "இது பருப்பு மூட்டை; திரும்ப வரும்போது எடுத்துக் கொள்கிறேன்' என்று கூறிவிட்டுப் போனார்.
 இவ்வாறு தேடி அலைந்த காலத்தில், மலையுச்சிப் பகுதியில், ஒரு நாள் நண்பகல் வேளையில், முதியவர் ஒருவர் மேலே போகவொட்டாமல் அந்தணரைத் தடுத்தார். அகத்தியரைக் காணாமல் அவ்விடத்தை விட்டு நகரமாட்டேன் என்று அந்தணர் அடம் பிடிக்க. . . பிடிவாதத்திற்குப் பணிந்த அகத்தியர், முதியவர் வேடத்திலிருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அருகில் அமர்ந்திருந்த பசு ஒன்றைக் காட்டி, அதன் வாலைப் பிடித்துக் கொண்டு புறப்படும்படியும், முதலில் போய் அப்பசு எங்கே நிற்கிறதோ, அங்கே அணை ஒன்றைக் கட்டும்படியும், தொடர்ந்து அது போகும் பாதையில் வாய்க்கால் வெட்டும்படியும், இவ்வாறு போகும்பொழுது, எங்கெல்லாம் அப்பசு இளைப்பாறிப் படுத்துக் கொள்கிறதோ, அங்கெல்லாம் குளங்கள் அமைக்கும்படியும் அறிவுறுத்தினார். அணையும் வாய்க்காலும் குளமும், நதி நீரை மடை மாற்றிவிடும்; இதனால், ஏராளமான பகுதிகள் சாகுபடி செய்யப்படும்; விளைச்சலே பாவத்திற்கான பரிகாரமாகும் – இப்படிப்பட்ட ஏற்பாடே அகத்தியரின் கருத்து.
 பசுவின் வாலைப் பற்றியபடியே அந்தணர் நடந்தார். மணிமுத்தாறும் பொருநையும் கலக்கும் இடத்தைத் தாண்டியவுடன் பசு நின்றுவிட்டது. இங்கேதான் கன்னடியன் அணைக்கட்டு.
 பின்னர் நடக்கத் தொடங்கிய பசுவைப் பிடித்தபடியே பின் சென்ற அந்தணர், பசு போன பாதையின் அடையாளம் தெரிவதற்காக, வழியெல்லாம் முளைகள் அடித்துக் கொண்டே போனார். பசுவானது, தாசிப்பெண் ஒருத்தியின் வீட்டுக்குள் புகுந்து சென்றது. அங்கேயும் முளையடித்து கால்வாய்க்கான வழி குறிக்கப்பட்டது.
 ஆங்காங்கே சில இடங்களில் படுத்தெழுந்த பசு, ஓரிடத்தில் போய் படுத்துக் கொண்டது; அப்படியே மறைந்தும் போனது.
 - தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com