ஈருலகிலும் பேரொளியில் பெருவாழ்வு

உள்ளத்தில் உதிக்கும் ஒளிமயமான வாழ்வை உலகில் உன்னதமாய் உயரிய முறையில் நன்னெறி பிறழாது நற்செயல் புரிந்து புன்னகை பூரிப்புடன் வாழவும் உலக வாழ்வில் மறுமை வாழ்வை
ஈருலகிலும் பேரொளியில் பெருவாழ்வு

உள்ளத்தில் உதிக்கும் ஒளிமயமான வாழ்வை உலகில் உன்னதமாய் உயரிய முறையில் நன்னெறி பிறழாது நற்செயல் புரிந்து புன்னகை பூரிப்புடன் வாழவும் உலக வாழ்வில் மறுமை வாழ்வை மனத்தில் இருத்தி தனத்தைத் தானம் செய்து ஞானம் தரும் ஞானிகளுக்கு ஆன உதவிகள் செய்து மானமோடும் மதிப்போடும் மரியாதையோடும் உரிய முறையில் வாழ்ந்தால் ஈருலகிலும் பேரொளி பளிச்சிடும் பெருவாழ்வு வாழலாம். இவ்வுலகிலும் மறு உலகிலும் ஒளிமயமாக திகழ ஈமான் கொண்டவர்கள் செய்ய வேண்டிய வழிபாடுகள் நற்செயல்கள்.
 ஒவ்வொரு நாளும் வழக்கமாக திருக்குர்ஆன் ஓத வேண்டும். அதில்தான் நேரான வழி இருக்கிறது. தெளிவான விழி திறக்கும் வழிகாட்டலும் ஒளியும் இருக்கின்றன. இதனை, இறைமறை குர்ஆனின் 42- 52 ஆவது வசனம் உங்களுக்கு வஹீ (இறைதூது) மூலம் நம் கட்டளைகள் அறிவிக்கப்படுகின்றன. நீங்கள் வேதம் இன்னதென்றும் நம்பிக்கை இன்னதென்றும் அறிந்திருக்கவில்லை. ஆயினும் இந்த வேதத்தை நாம் உங்களுக்கு ஒளியாகவும் ஆக்கி நம் அடியார்களில் விரும்பியவர்களுக்கு அதனைக் கொண்டு நேரான வழியைக் காண்பிக்கிறோம். நிச்சயமாக, நீங்கள் நேரான வழியைக் காட்டுகிறீர்கள் என்று இறைதூதருக்கு இயம்புகிறது.
 இதனால்தான் இத்திருமறையை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு இறைதூதர் நபி (ஸல்) அவர்கள் நம்மை வலியுறுத்துகிறார்கள். இவ்வேதம் சொல்லும் வழிமுறைகளை உறுதியாக கடைபிடிக்க வேண்டும். அல்லாஹ்வின் வேதத்தில் நல்வழியும் பேரொளியும் உள்ளன. எனவே, நீங்கள் அல்லாஹ்வின் வேதத்தை உறுதியாக கடைபிடியுங்கள் என்று உத்தம நபி (ஸல்) அவர்கள் உரைத்ததை முஸ்லிம் நூலில் காணலாம். இறை வசனங்களை நன்கு சிந்தித்து அதில் வலியுறுத்தப்பட்ட சட்டதிட்டங்களைப் பின்பற்றி நடந்தால் இவ்வுலகில் நேர்வழி பெற்றவர்களாக திகழலாம். இதன்மூலம் பெறும் பேரொளி மறுமையில் மாறாத நேர் வழியைக் காட்டும்.
 வேத நூலை நாமே உங்களுக்கு இறக்கினோம். மனிதர்களை இறைவனின் கட்டளைப்படி இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வாருங்கள். அந்த ஒளியே அனைவரையும் மிகைத்தவனான புகழுக்குரிய அல்லாஹ்வின் நேரான வழி என்று 14- 1 ஆவது வசனம் கூறுகிறது. வழிகேடு அறிவீனம் இறை நிராகரிப்பு முதலிய இருளில் இருந்து மனிதர்களை வெளியேற்றி இறைவன் மீது நம்பிக்கை கொண்டு அறிவு பெற்று நேர்வழியில் ஒளியில் ஒளிருவதற்காகவே குர்ஆன் இறக்கப்பட்டதாக இயம்புகிறது இந்த வசனம்.
 உளு செய்து எப்பொழுதும் தூய்மையாய் இருப்பவரின் பேரொளி பெருகி காணப்படும். என்னைப் பின்பற்றுவோர் முகம், கை, கால் முதலிய உளுவில் கழுவப்படும் உறுப்புகள் மறுமையில் ஒளிமிக்கவையாக இருக்கும்.
 தொழுகை ஒளிமயமானது, என்பதன் பொருள் தொழுகையின் பயனால் தொழுகையாளி மறுமையில் ஒளிமயமாக வலம் வருவார். "எவர் தொழுகையை பேணி தவறாமல் நேரத்தோடு தொழுகிறாரோ அவருக்குத் தொழுகை மறுமையில் ஒளியாகவும் அத்தாட்சியாகவும் அமைந்து நரகிற்குச் செல்லாமல் தடுத்து வெற்றி பெற வைக்கும்''. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழியை அறிவிக்கிறார்- அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுஆஸ்(ரலி) நூல் - அஹ்மது. இருள்சூழ்ந்த வேளையிலும் பள்ளிவாயிலுக்குச் சென்று பஜ்ர் மற்றும் இஷா தொழுகையை நிறைவேற்றுபவர்கள் மறுமையில் முழுமையான ஒளியைப் பெறுவர். நூல்- அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா. தொழுகையினால் அகத்தில் ஒளிரும் ஒளியைப் புறத்திலும் அடையாளம் காணலாம். ஒவ்வொரு நற்செயலுக்கும் உள்ளத்தில் ஒளி ஏற்படும். முகம் பிரகாசமாக இருக்கும்.
 57- 12 ஆவது வசனம் "நம்பிக்கை உடைய ஆண்களையும் பெண்களையும் நீங்கள் காணும் அந்நாளில் அவர்களின் ஒளியின் பிரகாசம் அவர்களுக்கு முன்னும் வலப்பக்கத்திலும் சென்று கொண்டிருக்கும். அன்றைய நாளில் உங்களுக்கு நற்செய்தி. தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கத்தில் நுழைவீர்கள். என்றென்றும் அங்கு தங்குவீர்கள். இதுவே மகத்தான வெற்றி'' என்று கூறுகிறது. மறுமையில் சொர்க்கம் செல்லும் குறுகிய பாதையில் இருள் சூழ்ந்திருக்கும். நம்பிக்கையாளர் அவ்வழியை கணத்தில் கடந்து சொர்க்கம்புக, அவர்களின் நற்செயல்கள் ஒளி வீசி வழிகாட்டும். ஒவ்வொருவரும் அவரவரின் வணக்க வழிபாடுகள் நற்செயல்களுக்கு தக்கவாறு ஒளிமயமாக இருப்பர். அவர்களில் மலையளவு ஒளிரும் வெளிச்சத்தில் சிலரும் குறைந்த ஒளியில் சிலரும் இருப்பர் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) கூறுகிறார். ஈருலகிலும் நம்வாழ்வு ஒளிமயமாக திகழ இறைவனை இறைஞ்ச வேண்டும். பூமான் நபி (ஸல்) அவர்கள் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. நீயே வானிலும் பூமியிலும் ஒளியாக இருக்கிறாய் என்று இறைவனை இறைஞ்சுவார்கள்.
 அவரவரின் தகுதிக்கு ஏற்ற ஒளியை அவரவர் பெறுவர். சொர்க்கத்தில் முதலில் நுழையும் அணியினர் பௌர்ணமி நிலவைப் போன்று தோன்றுவர். அவர்களைப் பின்பற்றி வருவோர் நட்சத்திரங்களைப் போன்று பிரகாசிப்பர். அவர்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டதாக இருக்கும். அவர்களுக்கிடையே வெறுப்போ பொறாமையோ இருக்காது. எல்லாம் வல்ல அல்லாஹ் இவ்வுலகிலேயே ஈமான் கொண்டவர்களுக்குத் தெளிவான ஒளியை வழங்குகின்றான். இதனால் இவ்வுலக வாழ்வின் நெறிகளையும் மறுஉலக வாழ்வின் தெளிவையும் பெறுவர்.
 அதற்கேற்ப அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடந்து அவர்களின் அன்றாட வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்வர். அடிக்கடி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைஞ்சிய இறைவேட்டல். இதயத்தில் ஒளியை ஏற்படுத்து. எனக்கு மேலேயும் கீழேயும் ஒளியைப் பரப்பு. எனக்கு முன்னும் பின்னும் ஒளியைப் பிரகாசிக்கச் செய். அவ்வொளியை எனக்கு வலிமையானதாக்கு. நபி (ஸல்) அவர்கள் வெளியில் புறப்படும்பொழுது உடல் உறுப்புகளில் ஒளி பளிச்சிடவும் செல்லும் வழி ஒளிமயமாக விளங்கவும் இறைவனை வேண்டுவார்கள்.
 நேர்மையான ஆட்சியாளர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளியிலான மேடைகளில் இருப்பார்கள் என்ற திருநபி (ஸல்) அவர்களின் அறிவிப்பை முஸ்லிம் நூலில் காணலாம். மறுமையில் அதிகமான ஒளியில் பிரகாசிப்பவர்கள் மனிதர்களுக்கு இடையில் அன்பை வளர்த்தவர்கள். ஒவ்வொருவரின் மதிப்பையும் மரியாதையையும் காத்தவர்கள். அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வை மெய்யாக்கி நல்லுறவைப் பேணியவர்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்தவர்கள். பிறர் நலனில் அக்கறை கொண்டு ஆவன செய்தவர்கள்.
 நற்செயல்களை நாளும் ஆர்வத்தோடு செய்ய வேண்டும். பிறரையும் பேணி நடக்க தூண்ட வேண்டும். ஈருலகிலும் பேரொளியில் பிரகாசிக்கலாம்.
 - மு.அ.அபுல் அமீன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com