வெள்ளிமணி

வரதன் கோயில் வண்ணத் தூரிகை!

DIN

அத்திகிரி - 7
 கச்சி வரதர் கோயிலின் மூலவர் கருவறையின் வெளிப்புறச் சுவர்ப்பகுதியில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் தொன்மைக்கு மேலும் சான்றாக விளங்குகின்றன. விசயநகர காலத்தில் வரையப்பட்ட இவ்வோவியங்கள் இன்று சிதைந்த நிலையில் காட்சியளிக்கின்றன. வரதர் கோயிலின் மேன்மைய விளக்கும் இவ்வரைகலையானது, இறைவனை முதலில் பாறைகளில், குகைகளில், வீட்டின் சுவர்களில் எழுதி வழிபட்ட தொல்பழங்கால மனிதக்கலையின் வளர்ச்சியாய் நம் பண்பாட்டை உணர்த்தி நிற்கிறது.
 கி.பி.15-16-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சமயமும் கலையும் சிறக்க ஏற்ற சூழ்நிலை தமிழகத்தில் மேலோங்கி நின்றது. ஹரிஹரர், புக்கர், தேவராயர் முதலிய விஜயநகர அரசர்கள் ஏராளமான நிலங்களையும், பொருள்களையும் கொடுத்திருந்த போதிலும் ஒரு பெரும் கலைப்பணி, கட்டடப்பணி, வழிபாட்டுக்குச் சிறப்பு பணி, விஜயநகர மன்னர்களில் ஈடு இணையற்றவராக இருந்த கிருஷ்ணதேவராயர் காலத்திலிருந்துதான் துவங்கின.
 கிருஷ்ணதேவராயர் காலத்தில் திருமால் வழிபாடு உயர்நிலையை அடைந்தது. இராமாநுஜர் விட்டுச் சென்ற பக்தி நெறி மார்க்கம் ராயரின் உள்ளத்தைக் கவர்ந்த ஒன்று. ஆழ்வார்கள் பாசுரங்களில் மெய் மறந்தவன் அவன். கோதையின் பாவைப்பாடல்கள் அவன் உள்ளத்தை நெகிழ்த்திய பாடலாகும். அவ்வுணர்ச்சியில் மெய்மறந்து "ஆமுக்தமால்யதா' என்னும் அழகிய தெலுங்குக் காப்பியத்தைக் கிருஷ்ணதேவராயர் தானே எழுதி மகிழ்ந்திருக்கிறான். கோதையின் வைபவம், சூடிக்கொடுத்த நாச்சியார் வைபவம் கவிதை நயத்தோடு இயற்றப்பட்டுள்ளது. தனது தலைநகரில் கோதைக்கு ஒரு கோயிலே எடுத்திருக்கிறார்.
 கோயிலில் மேல்தளத்தில், கருவறையைச் சுற்றின் பக்கச் சுவர்களில் வண்ண ஓவியங்கள் உள்ளன. மேல்விதானத்திலும் ஓவியங்கள் இருந்திருக்கின்றன. அவை பெரும்பாலும் பூ வேலைப்பாடுகளும் கட்டங்களுமாகவே உள்ளன. பெரும்பகுதி சிதைந்து உள்ளன.
 இரு சுவர்களில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்களே சிறப்புடையவை. வைணவ புண்ணியத் தலங்களான திவ்யதேசங்களும் அவற்றின் உள்ளே உறைகின்ற பெருமாளின் உருவங்களும் இங்கே தீட்டப்பட்டு அவற்றின் பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் பெரும் பகுதி காலஓட்டத்தில் மங்கி மறைந்து உள்ளன. எஞ்சியவை தெய்வ திருவுருவங்களாகப் பெரும்பாலும் இருக்கின்றன. அஹோபிலம் நரசிம்மர் உருவம் ஒன்று தென்கிழக்கு மூலையில் இருப்பது அதிக சேதம் தவிர்த்து இருக்கிறது. தென்புறத்தில் கிழக்குச் சுவரில் திருமால் இரு தேவியருடன் நிற்பதும் ஸ்ரீதேவித் தாயார் அமர்ந்து இரு கரங்களிலும் தாமரை மலர் ஏந்தி வீற்றிருப்பதும் எழிலார்ந்தது. இவர்களின் கீழே இருமருங்கும் தம்பூரா ஏந்தி நிற்கும் அடியார்கள் விஜயநகர காலத்துக் குல்லாய் அணிந்திருக்கிறார்கள்.
 தென்புறச் சுவரில் ஓர் இடத்தில் அழகிய பெண்ணின் உருவம் கையிலே தாமரை ஏந்திக் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாம். அதற்கு அருகிலேயே காளை ஒன்றின் உருவமும் காணப்படுகின்றது. விஜயநகர காலத்தில் (16-ஆம் நூற்றாண்டில்) எந்த வகையான காளை இருந்தது என்று அறிந்துகொள்ள இது உதவுகிறது. இங்கு உள்ள கிளி, வேடர் முதலிய உருவங்களும் கருத்தைக் கவர்ந்து காணத்தக்கவைதான்.
 இத்தொகுப்பில் உள்ள விஷ்ணுவின் அவதாரத் திருக்காட்சி ஓவியங்களில் வராகர் உயர்ந்தவராய் இருகைகளையும் இடுப்பில் தாங்கியபடி கம்பீரமாய் திருமுகத்தை ஒருமுகமாய் திருப்பியபடி நிற்கிறார். வராகரின் இத்திருக்கோலத்தை கண்டு வணங்குபவராய் அத்திவரதர் காட்டப்பட்டுள்ளார். அத்தி மரத்திலிருந்து உதித்தவராய் நான்கு திருக்கைகளுடன் விளங்கும் பெருமாள் பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியபடியும், முன்னிரு கைகளில் அஞ்சலி முத்திரை காட்டியபடியும் மரத்தின் நடுவே காட்டப்பட்டுள்ளார். வராகரின் வலதுபுறத்தில் ஓங்கி உலகளந்த உத்தமனான திரிவிக்கிரமனின் திருவுரு வரையப்பட்டுள்ளது.
 மற்றொரு தொகுப்பில் அரச உருவம் ஒன்று இருகைகளையும் கூப்பி வணங்கிய நிலையில் காட்டப்பட்டுள்ளது. இவ்வரசனின் முறுக்கிய அழகான மீசையும், உடற்கட்டும், ஆடைக்கட்டும், அணிகலன்களும் அக்காலத்திய மன்னர்களின் திருவுருவத்தை பிரதிபலிக்கின்றது. மற்றுமொரு ஓவியத்தில் ரங்கநாதரின் நீட்டிய வலதுகையின் கீழ் முனிவர் ஒருவர் பத்மாசனத்தில் அமர்ந்து இருகைகளையும் அஞ்சலி முத்திரையில் வைத்துள்ளார். நீண்ட தாடி, மீசை கொண்டவராய் இம்முனிவர் வெள்ளை உடையும், உருத்திராக்கமும் தரித்தவராய், தலையில் ஜடாபந்தம் கொண்டுள்ளார்.
 அருகிலுள்ள மற்றொரு ஓவியக் காட்சியில் வைகுண்ட நாதராய் வீற்றிருந்த கோலத்தில் உள்ள பெருமாளை விசயநகர அரசர் ஒருவர் வலப்பக்கம் முடிந்த பெரிய கொண்டையுடன் இரு கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் நிற்கிறார். அரசரின் வலது கைக்கு அருகில் நீண்ட வேல் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. அரசனது நீண்ட வாளும் வேலின் அருகில் உள்ளது. திருமண் இட்டுக் கொண்டுள்ள இவ்வரச உருவம் நீண்ட மீசையுடன் வரையப்பட்டுள்ளது. தொடர்ந்துள்ள மற்றொரு ஓவியக் காட்சியில் பூரி ஜெகந்நாதரின் கோயில் கருவறையோடு உள்ள ஓவியம் காட்டப்பட்டிருப்பது சிறப்பு.
 கருவறையின் மேற்குத் திருச்சுற்றில் மேற்குச் சுவரில் அழிந்ததும் அழியாததுமான வில்லிபுத்தூர் கோதையின் உருவம் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரின் ரங்கமன்னாரும், கோதைப்பிராட்டியும், அருகில் பெரிய திருவடியான கருடனும், அழகிய விக்கிரகங்களாக எப்படி நிற்கின்றார்களோ, அதே போல இந்த ஓவியத்திலும் அலங்காரங்கள் காணப்படுகின்றன. கோதைப் பிராட்டியின் பக்கவாட்டில் முடிந்துள்ள கொண்டையும், நீண்ட மாலையும் இந்த ஓவியத்தில் அப்படியே காணப்படுகின்றன. நடுவில் ரங்கமன்னாரும் வலது புறத்தில் கோதையும், இடது புறத்தில் கருடனும் காட்சியளிக்கிறார்கள். இதற்கும் அருகில் பெரியாழ்வார் உருவமும், அவருக்குப் பொற்கிழி கிடைத்ததும், இவ்வூர் ஓவியத்தில் உள்ளது ஒரு சிறப்பாகும். இதன் பக்கத்தில் ஒரு ஜன்னல் இருக்கிறது. அதன் மேல் ஹயக்ரீவர் உருவம் இருக்கிறது. இவ்வோவியம் கண்டு இன்புறத்தக்கது. நம்மாழ்வாருடைய ஓவியமும், உடையவர் ஓவியமும் இங்கு உள்ளன.
 இக்கோயிலின் கொடிமரம், பலிபீடம் அடுத்து உள்ள முன் மண்டபத்தின் விதானத்தில் வரையப்பட்டுள்ள ஓவியம் அளவில் பெரியது. இவ்வோவியத்தில் கருடாரூடராய் விஷ்ணு காட்சியளிக்கிறார். இறைவனின் இருபுறமும் அரசர்களும் ஆழ்வார்களும் வணங்கியபடி நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளனர். இம்மண்டபத்தின் கூரை மற்றும், சுவர்ப்பகுதியில் பாகவதக் காட்சிகள் புனையப்பட்டுள்ளன. கிருஷ்ணலீலைகளின் காட்சியாக்கத்தில் இடம் பெற்றுள்ள மாந்தர்களை நோக்குகையில் அக்காலத்திய மக்களின் சமூக, வாழ்வியல் மற்றும் பண்பாட்டு நிலைகளை அவ்வோவியம் படம் பிடித்துக் காட்டுவதாய் உள்ளது.
 விஜயநகரப் பேரரசர்களில் கிருஷ்ணதேவராயருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் அச்சுதராயன் இப்பெருமாள் மீது அதீத பக்தி பூண்டவர் என அறிய முடிகிறது . ஆதலால் இந்த ஓவியங்கள் அவர் காலத்தே பொது ஆண்டு 1540- 1545 }க்குள் தீட்டப்பட்டிருத்தல் வேண்டும். இந்த ஓவியங்கள் நீலம், சிகப்பு , தங்க நிற மஞ்சள் ஆகிய இயற்கை மூலிகை வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுவரின் அல்லது மேல் கூறை விதானத்தின் மீது உள்ள வெள்ளைப் பரப்பின் மீது கோட்டோவியங்களாக வரையப்பட்டு அவற்றுக்கு உரிய இடங்களில் உரிய வண்ணங்கள் சரியான விகிதத்தில் சரியான முறையில் கூட்டப்பட்டுள்ளன. ஒவியங்கள் ஒவ்வொன்றும் கட்டம் கட்டி வரையப்பட்டுள்ளன.
 எவ்வளவு தான் வார்த்தைகளால் எடுத்துச் சொன்னாலும் கட்புல இன்பம் காணும்போது அடையும் இன்பம் வார்த்தைகளால் வருணிக்க முடியாது. வரதனை தரிசிக்கும்போது வண்ணமிகு காட்சிகளையும் தரிசித்து வாருங்கள்.
 - முனைவர் கோ . சசிகலா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT