பொருநை போற்றுதும்! 45 -  டாக்டர் சுதா சேஷய்யன் 

அத்தாழநல்லூரிலிருந்து சற்றே வடக்கு நோக்கி நகர்ந்தால், திருப்புடைமருதூரை அடைந்துவிடலாம்.
பொருநை போற்றுதும்! 45 -  டாக்டர் சுதா சேஷய்யன் 

மரத்தில் வெளிப்பட்ட மகேசனார்
 அத்தாழநல்லூரிலிருந்து சற்றே வடக்கு நோக்கி நகர்ந்தால், திருப்புடைமருதூரை அடைந்துவிடலாம். ரங்கசமுத்திரத்திற்கு எதிரே, அதாவது, பொருநையின் கிழக்குக் கரையில் திருப்புடைமருதூர். திருப்புடைமருதூரை வளைத்துக் கொண்டுதான், பொருநையாள் வலம் சுழிகிறாள்.
 புராண இதிஹாச, வேத வேதாந்த, இலக்கிய இலக்கண, கோயில் ஆகமப் பெருமைகள் பலவற்றையும் கொண்ட திருத்தலம் திருப்புடைமருதூர்.
 சின்னஞ்சிறு ஊராகத் தோற்றம் தருகிற இத்தலத்திற்கு, மருதபுரம், சுந்தரவனம், சிவபுரம், சிவநகரம், தென்கைலை, தெற்குக் காசி, தக்ஷிணகாசி, சுரேந்திரபுரி, ஜீவன்முக்திபுரம், தாரகேச்வரம், புடார்ஜுனம், கடைமருது, தலைமருது, மனுபுரம், நித்தியசபை போன்ற பற்பல திருநாமங்கள் உண்டு. ஊரின் மேற்குப்பக்கத்தில், அருள்மிகு கோமதியம்மன் சமேத அருள்மிகு நாறும்பூ நாதர் எழுந்தருளியிருக்கும் அற்புதத் தலம்.
 பிரம்மாவின் புத்திரர்களில் ஆதிமனு ஒருவர். மனிதகுலம் தோன்றுவதற்குக் காரணமான இவர், தன் மனைவி ஸாரங்கவல்லியுடன் பூலோகத்தில் இறைவனார் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் இடங்கள்தோறும் வழிபட்டுக் கொண்டே வந்தார். இவ்வாறே பொருநைக் கரையையும் அடைந்தார். பொருநைக் கரைக்கு வந்துவிட்டு, அகத்தியரை தரிசிக்காமல் இருக்கலாமா? ஆகவே, அகத்தியரையும் லோபாமுத்திரையையும் வணங்கி உபதேசம் பெற்றார்.
 தொடர்ந்து, பொருநையாள் வலம் சுழிக்கும் இப்பகுதிக்கு வந்தார். இப்பகுதியை நெருங்கும்போது, மருத மரம் ஒன்று கண்ணில் பட, அதன் அடியில் சிவலிங்கமும் புலப்பட, லக்ஷ்மியும் சரஸ்வதியும் பூமாதேவியும் தேவர்களும் வணங்கிக் கொண்டிருப்பதும் தென்பட்டது. "ஆஹா, இறைவனை நாமும் வணங்கலாம்' என்ற எண்ணத்துடன் ஓடோடி வந்த மனுவுக்கும் ஸாரங்கவல்லிக்கும் அதிர்ச்சியோ அதிர்ச்சி! கண்களில் புலப்பட்டவர்களோடுகூட, சிவலிங்கமும் மறைந்தது. "கடவுளின் கருணைக்கு அருகதை அற்றவன் ஆனேனோ' என்று ஆதங்கப்பட்ட ஆதிமனு, தன்னுடைய வேலை எடுத்தார். மருதமரத்தில் அதைச் செருகி, கூர் நுனியைத் தன்னைப் பார்க்கும்படிப் பதித்தார். வேல்நுனியில் பாய்ந்து தன்னையே மாய்த்துக்கொள்ள முனைந்தார்.
 அதே தருணம், "நில் மானவா' என்று அசரீரி ஒலிக்க, மனுவும் ஸாரங்கவல்லியும் பதைபதைத்து நோக்க... மருதமரத்திலிருந்து சிவனார் வெளிப்போந்தார். அர்ஜுன மரம் என்பது மருதத்தின் மற்றொரு பெயர். அர்ஜுனத்திலிருந்து வெளிப்பட்ட சிவனார் அர்ஜுனர் ஆனார். ஊருக்கும் மருதூர் என்றும் அர்ஜுனம் என்றும் பெயர்கள் தோன்றின. நதி நல்லாளின் கிழக்குக் கரையில், சிவனார் வெளிப்பட்ட மருதமரத்தின் கிழக்குப் பகுதியில், சுயம்புவாகத் தோன்றிய லிங்கேசருக்குக் கோயில் அமைத்து வழிபட்டார் மனு.
 பொருநைக் கரையின் புடைமருதூர்
 காலப்போக்கில், இந்தக் கோயில் மண்மேடிட்டு சிதிலமாகி மறைந்தது. சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சேர மன்னர் ஒருவர் (வீரமார்த்தாண்ட மகாராஜா என்கிறார்கள்; 18 -ஆம் நூற்றாண்டின் அனுஷம் திருநாள் மகாராஜாவான ஸ்ரீ பத்மநாபதாச வாஞ்சிபால ஸ்ரீ அனுஷம் திருநாள் மார்த்தாண்ட வர்ம குலசேகரப் பெருமாள் மகாராஜா அல்ல இவர்; வெகு வெகு காலத்திற்கு முன்னர் வாழ்ந்த ஆதிமார்த்தாண்டராக இருக்கவேண்டும்) காட்டுப் பகுதியில் வேட்டையாடியபடி வந்தார். மான் ஒன்றை இவர் விரட்டிவர, மரப் பொந்து ஒன்றுக்குள் சென்று மான் மறைந்தது. மரத்தின் பொந்துப் பகுதியில் கோடரியால் இவர் வெட்ட, ரத்தம் பீறிட்டுக் கிளம்ப... மானை வெட்டிவிட்டோம் என்றெண்ணிய அரசர், இன்னும் வேகமாக வெட்ட... கோடரியின் காயத்தோடு காட்சி கொடுத்தார் லிங்கஸ்வரூபரான சிவனார்! பொந்துக்குள் மான் மறைந்த மரம் மருதமரமேதான்!
 ஆதிமனுவும் பின்னர் ஆதிமார்த்தாண்டரும் கட்டிய கோயில்கள் காலப்போக்கில் சிதிலமடைந்து. விட்டன. 680 வாக்கில் அரிகேசரி மாறவர்ம நின்றசீர் நெடுமாற பாண்டிய மன்னர், இத்திருக்கோயிலைப் புதுப்பித்துத் திருப்பணி செய்துள்ளார். தொடர்ந்து, பல்வேறு சோழ, சேர, பாண்டிய, விஜயநகர மன்னர்களும் அவ்வப்போது திருப்பணிகளை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டுவித்த கட்டுமான அழகுகளை இன்றும் இக்கோயிலில் காணலாம்.
 "ஸ்ரீ புடார்ஜுனர்' என்றே போற்றப்பெறுகிற இந்தச் சிவனாரை, வேத வியாசர் உள்ளிட்ட பற்பல மகான்கள் வழிபட்டுள்ளனர்.
 மோக்ஷ ஸ்தானம் முமுக்ஷþணாம் போகஸ்தானம் போகினாம்
 உமாதேஹார்த ஸம்பூதம் புடார்ஜுனம் உபாஸ்மஹே
 - என்று போற்றுகிறார் வியாசர் (ஞானவழியை நாடும் ஞானிகளுக்கு முக்தியையும் லெளகீக இன்பங்களை நாடுபவர்களுக்கு இகலோகச் செல்வங்களையும் வழங்குபவரும், உமாதேவியின் வடிவத்தின் பாதியாகக் காட்சி தருபவருமான புடார்ஜுனரை வழிபடுகிறேன்). "புடம்' என்னும் வடமொழிச் சொல்லுக்கு "மடிப்பு' என்று பொருள் கூறலாம். மரமானது தனக்குள்ளேயே மடிந்துகொள்வதுதானே "பொந்து' என்றழைக்கப்படுகிறது. தாவரவியலில், "டெர்மினேலியா அர்ஜுனா' என்றழைக்கப்படுகிற மருத மரம், மென்மையான தண்டுப்பகுதியையும் படர்ந்து பரவிச் சரிகிற கிளைகளையும் கொண்டிருக்கும். இம்மரத்தின் மலர்கள் வெள்ளை நிறத்தில், சரங்களாகத் தொங்கும். வேதங்கள் மரங்களாகிப் பாதுகாக்கின்றன என்னும் நம்பிக்கையின்படி, மருதம் என்பது ருக் வேதம், மா என்பது யஜுர் வேதம், வெண்ணாவல் என்பது ஸாம வேதம் ஆகும்.
 - தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com