பகைவரையும் நண்பராக்கும் வண்ண பண்டிகை!

அன்பின் உச்சத்திலிருந்த சதி தேவியை இழந்த சிவனார்; அவள் உடலை தூக்கிக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடுகிறார்.
பகைவரையும் நண்பராக்கும் வண்ண பண்டிகை!

அன்பின் உச்சத்திலிருந்த சதி தேவியை இழந்த சிவனார்; அவள் உடலை தூக்கிக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடுகிறார். நாராயணன் உலக நன்மை கருதி தன் சுதர்ஸன சக்கரத்தால் சதியின் உடலை சிறு சிறு துண்டுகளாக வெட்டுகிறார். அவளது உடல் துண்டானது இந்திய மண்ணின் பல பாகங்களில் விழுந்து 64 சக்தி பீடங்களாகின்றது. இதன் பின் உலகின் நாயகன் மஹாதேவன் யோக நித்திரையில் அமர்ந்து விடுகிறார். அதனால் அழிக்கும் தொழில் நின்று விடுகிறது. இவருக்காகவே பிறந்து வளர்ந்து வரும் சதி தேவியின் மறுபிறப்பான பார்வதி தேவி, இவரை அடைய தவம் இருக்கிறாள்.
 சிவனாரது நித்திரை கலைந்தால் தான் உலக இயக்கங்கள் சமனடையும் என்பதை உணர்ந்த அனைத்து தேவர்களும் மன்மதனின் உதவியை நாடினர். மன்மதனும் இதனால் சிவனாரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பது தெரிந்தும் இதற்கு உடன்பட்டான். சிவனின் யோகநித்திரையை கலைக்க காமன் தன் அம்பினை அவர் மீது பயன்படுத்தினான். அதன் விளைவாக தன் மூன்றாம் கண்ணினை திறந்த மஹாதேவரால் அந்த இடத்திலேயே எரிக்கப்பட்டான். ஆனால் மன்மத அம்பின் தாக்கத்தால் கட்டுண்ட மஹாதேவருக்கு; பார்வதி மீது காதல் பிறந்ததால் சிவனார் அவளை மணந்து தன் சுயநிலையை அடைந்தார். பின் ரதியின் வேண்டுகோளை ஏற்று மன்மதனை உயிர்ப்பித்தார். காமனை எரித்த இந்த நாளே நம் தமிழகத்தில் "காமன் பண்டிகையாக" கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காமதகனம் என்ற நிகழ்ச்சி கிராமங்களில் இரவு முழுவதும் கூத்துக் கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
 பண்டைய காலத்தில் ஆரம்பித்த இந்த விழா; காலத்திற்கேற்ப பலப்பல மாற்றங்களை ஏற்று இன்றும் தொடர்கிறது. தமிழ் பங்குனி என்றழைக்கப்படும் பல்குனி மாதத்தில் முழுநிலவன்று மாலை ஆரம்பித்து இரண்டு நாள்கள் நடைபெறும். அந்தந்த வருடத்தின் கடைசி பெளர்ணமி மற்றும் அடுத்து வரும் நாளில் வசந்த ருது ஆரம்பிப்பதால்; வெவ்வேறு காரணங்களுக்காக இந்த விழா வெவ்வேறு மாநிலங்களில் கொண்டாடினாலும், இந்த நாள் சந்தோஷத்தின் தொடக்க நாளாக (நல்ல தட்ப வெப்ப நிலை) உள்ளது.
 தென் இந்தியாவில் மாசி பெளர்ணமியில் காமன் பண்டிகை என்று தமிழகத்திலும், காம தகனம் என்று ஆந்திரத்திலும் பல பெயர்களில் கொண்டாடுகிறார்கள். பொதுவாக ஹோலி பண்டிகை என்பது வட இந்தியர்கள் ஒருவர் மீது ஒருவர் சாயப்பொடிகளை தூவிக் கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்துக் கொள்வார்கள் என்பதோடு அந்தப் பண்டிகையை பற்றி நாம் தெரிந்து கொண்டுள்ளோம். அதைத்தாண்டி மிக அருமையான சமுதாய நல்லிணக்கம் இந்த ஹோலி பண்டிகையில் உள்ளது.
 சக்தி வாய்ந்த புராதனமான சநாதன தர்மத்தின் பின்னணியைக் கொண்ட மிக முக்கியமான விழாவாகும் இந்த ஹோலி. காதல் நாயகன், மாயக்கண்ணனின் தொடர்புடைய மதுரா, பிருந்தாவன், பர்சனா மற்றும் நந்த்காவுன் ஆகிய ஊர்களில் கிருஷ்ணனை நினைத்து ரங்கபஞ்சமி என்று கொண்டாடுகிறார்கள். அந்த பக்கத்தில் ஒரு செவிவழிச்செய்தி சொல்கிறார்கள். மாயக்கண்ணன் தன் தாய் யசோதையிடம் தான் இவ்வளவு கருநிறமாக இருக்கின்றேனே; அனைத்து கோபிகைகளும், ராதை உள்பட செக்கச்செவேலென்று அழகாய் உள்ளார்களே; எனக்கு வெளியில் செல்ல கூச்சமாய் உள்ளது என்று கவலைப்பட்டான். தாயின் குணம் தான் தெரியுமே; தன் குழந்தை தான் உலகிலேயே அழகன் என்பார்கள்; அதற்கு யசோதையும் என்ன விதிவிலக்கா! கவலைப்படாதே கண்ணா; ஒன்று செய்வோம் அனைவர் மீதும் கலர் பொடியை தூவி விட்டால் உன்னைப்போல் அனைவரும் மாறிவிடுவார்கள் என்றாளாம் அந்த அன்னை. அப்படி ஆரம்பித்தது தான் இந்த கலர் பொடி தூவும் விழா.
 இன்னொரு செய்தியும் கூறுகிறார்கள். ஹிரண்யகசிபுவின் சகோதரி பெயர் ஹோலிகா; அவளுக்கு தீயின் தாக்கம் ஒன்றும் செய்யாது என்ற வரத்துடன் ஒரு கம்பளியையும் பெற்றாள். ஹிரண்யகசிபு, பிரஹலாதனை கொல்வதற்கு பல முயற்சியெடுத்தும் அவன் சாகாததால்; தன் சகோதரி ஹோலிகாவை அனுப்பி அவள் மடியில் அமர்த்திக் கொள்ளச்செய்து பிரஹலாதனை மட்டும் தீயினால் அழிக்க முயற்சித்தார்கள். அவளும் சென்று பிரஹலாதனை கட்டி அணைத்தாள். பிரஹலாதன் கண்ணை மூடிக்கொண்டு நாராயணனை தியானிக்க; அப்போது எறிந்த தீப்பிழம்பில் ஹோலிகா மாண்டாள். அவள் மாண்ட தினத்தை அவள் பெயரால் "ஹோலி" என்று கொண்டாடுகிறோம்.
 வட இந்திய கிராமங்களில் நம்மூர் போகிப் பண்டிகையைப் போல் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று ஊரையே சுத்தம் செய்வார்களாம். அப்போது வீட்டிலுள்ள, தெருவிலுள்ள பூச்சி பொட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபட, மஞ்சள், சுண்ணாம்பு, படிக்காரம் மற்றும் நோய் எதிர்ப்பு மூலிகைகளை ஓர் அண்டாவில் கலக்கி வரும் வண்ண நீரினை ஊரிலுள்ள அனைவர் மீதும் பீய்ச்சி அடிப்பார்கள். இது ஒரு விஷ முறிவு நடவடிக்கை. இந்த உள் நோக்கம் மறைந்து தற்போது கலர் பொடியினை ஒருவர் மீது ஒருவர் தெளித்துக் கொண்டு ஹோலி விழாவாக மறுவி விட்டதாக ஒரு சாரர் கூறுகின்றனர்.
 இந்த வருடம், 20.03.2019 புதன் அன்று மாலை ஆரம்பிக்கப்பட்டு 21.03. 2019 வியாழன் அன்று இந்த ஹோலிப்பண்டிகை மகிழ்ச்சியின் வெளிப்பாடாகக் கொண்டாடப்படுகிறது.
 - எஸ். எஸ். சீதாராமன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com