பொருநை போற்றுதும்! 32 - டாக்டர் சுதா சேஷய்யன்

பற்பல ஆண்டுகளுக்கு முன்னர், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு வெளியிட்ட வேளாண் கையேடு, தென்னிந்தியாவைக் குறித்து இவ்வாறு தெரிவிக்கிறது
பொருநை போற்றுதும்! 32 - டாக்டர் சுதா சேஷய்யன்

பற்பல ஆண்டுகளுக்கு முன்னர், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு வெளியிட்ட வேளாண் கையேடு, தென்னிந்தியாவைக் குறித்து இவ்வாறு தெரிவிக்கிறது: அக்டோபர் முதல் டிசம்பர் வரையான மாதங்களில், வடகிழக்குப் பருவக் காற்றால் சிறிதளவு மழை பெற்றாலும், தெற்கு தக்காணம் என்பது ஒரு பகுதிப் பாலைவனம்.
 வேகம் தடுத்த வெள்ளத் தடைகள்
 திருநெல்வேலி ஜில்லாவின் (அப்போதைய திருநெல்வேலி ஜில்லா -- இப்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள்) கிழக்குப் பகுதிகள் வடகிழக்குப் பருவக்காற்றின் மழையைப் பெற்றாலும், பொதிகை மலைப் பகுதிகள் தென்மேற்குப் பருவக்காற்றின் பலனைப் பெறுவது, இந்த ஜில்லாவின் சிறப்பு. தென்மேற்குப் பருவக்காற்றின் மழை வரத்தானது, பொருநையில் பாயும். நதிப்பாய்வுதான் இந்தப் பகுதியின் விவசாயத்திற்குப் பிரதானம் என்பதையுணர்ந்த ஆட்சியாளர்கள், பொருநையின் குறுக்கே ஆங்காங்கே அணைத் தடுப்புகளை ஏற்படுத்தி, நதி நீரைப் பயன் கொண்டனர்.
 ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து கிழக்குக் கடற்கரை வரையான 20 மைல் தொலைவுக்கான நிலங்களுக்கு நீர் தருவதற்கு வழி தேடினார், மாவட்டக் குடியியல் பொறியாளராகப் பணியாற்றிய கேப்டன் எல்.எச்.ஹார்ஸ்லி. 1855- இல் ஹார்ஸ்லி தீட்டிய திட்டம், பற்பல தடங்கல்களுக்குப் பின்னர், 1868-இல், ஸ்ரீ வைகுண்டம் அணைக்கட்டுத் திட்டமாக உருப்பெற்றது. இன்னும் பல தடங்கல்களைக் கண்டு, மொத்தம் 18 லட்சத்து 97ஆயிரம் ரூபாய் செலவினத்தில் 1889- இல் இந்த அணைக்கட்டு கட்டி முடிக்கப்பட்டது. (ஸ்ரீவைகுண்டம் திட்டம் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும், இப்பகுதிகளின் நீர்த்தேவைகள் முழுமையாக நிறைவேறவில்லை என்பதால்தான், மலைமீதே நீர்த்தேக்கம் உருவாக்கவேண்டும் என்னும் எண்ணம் உருவாகி, அதன் விளைவாக எழுந்ததே பாபநாசம் நீர்த்தேக்கத் திட்டம் – இதை நாம் ஏற்கெனவே கண்டிருக்கிறோம்.)
 பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் திருநெல்வேலி ஜில்லாவுக்கு வழங்கப்பட்ட நன்மைகளில் ஒன்று என்றே ஸ்ரீ வைகுண்டம் அணைக்கட்டு வர்ணிக்கப்படுகிறது. ஆனால், இதற்கு முன்னதாகவே, திருநெல்வேலிச் சீமையின் பாண்டிய, நாயக்க, நவாப் ஆட்சியாளர்களும், ஜமீன்தார்களும், உள்ளூர் செல்வந்தர்களும், பொருநைக்கும் சிற்றாற்றுக்கும் குறுக்கே சில அணைத்தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். பாவநாசத்திலிருந்து ஸ்ரீ வைகுண்டம் வரை, பண்டைய ஆட்சியாளர்களால் இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட அணைக்கட்டுகள் ஏழு. எந்தெந்த அணையினை யார் யார் கட்டினார்கள் என்பதற்கான தனி விவரங்கள் இல்லையாயினும், அனைவருமே அவ்வப்போது மராமத்துப் பணிகளை மேற்கொண்டு வேளாண் மேலாண்மைக்கு உதவியுள்ளனர். ஒவ்வொரு அணைக்கட்டிலிருந்தும் கால்வாய்கள் வழியாகவும் குளங்கள் வழியாகவும் நீரானது வயல்களுக்குக் கொண்டு செல்லப்படும் வகையில் இவை அமைக்கப்பட்டன.
 ஏற்றம் தருவதற்கான ஏழு அணைகள்
 பாவநாசத்திலிருந்து தொடங்கி, பழைமைமிக்க இந்த அணைகள் ஏழினையும் ஒவ்வொன்றாகக் காண்போம். அணைகளை நெருங்குவதற்கு முன்னதாக ஒரு சொல். பெரிய பெரிய அணைகளை மனதில் வைத்துக்கொண்டு, இவற்றையும் அந்த அளவில் எதிர்பார்க்கக்கூடாது. நான்கு அல்லது ஐந்தடி உயரத்திலிருந்து நீர் விழும் அளவுக்குக் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் இவை. மழை வெள்ள நீர் பாய்ந்தோடிவிடாமல், அதனைத் தடுத்து, வேகத்தைக் குறைத்து, கால்வாய்களிலும் மடைகளிலும் திருப்பி விடுவதற்கு வசதியாகவும், நீரை மடைமாற்றிக் குளங்களில் தேக்கி வைத்துப் பயன்படுத்துவதற்காகவும் கட்டப்பட்ட தடுப்புச்சுவர்கள் எனலாம். ஆகவேதான், இவற்றுக்கு, "அணை', "நீர்த்தேக்கம்' போன்ற வகை வகையான பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அணைக்கட்டு என்றவுடன் உயரமும் பிரம்மாண்டமும் கொண்ட சுவர்களை எதிர்பார்த்துச் செல்பவர்கள், "குட்டையாக இருக்கும் இதுவா அணை?' என்பார்கள். "அணை' என்பது தடுப்பு; "கட்டு' என்பது கட்டப்படுவது; "அணைக்கட்டு' என்பது தடுப்புக்காகக் கட்டப்படும் கட்டுமானம்.
 இந்த ஏழினுள், முதலாவதான தலை அணை, பாவநாசம் திருக்கோயிலுக்கு அருகிலே அமைந்துள்ளது. 17-18 -ஆம் நூற்றாண்டுகளில் இந்தப் பகுதி எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்துகொண்டால், இந்தத் தலை அணையின் முக்கியத்துவம் புரியும். பாவநாசம் அருவியிலிருந்து கீழே விழுந்து, சம தரையைப் பொருநையாள் தொட்டாள் (நினைவில் கொள்ளுங்கள், அப்போது பாபநாசம் அப்பர் டேம், லோயர் டேம் கட்டுமானங்கள் கிடையாது), இல்லையா? இவ்வாறு தரையைத் தொட்டவுடன், குறுகலான மலையிடுக்குகளுக்குள் புகுந்து பாறைப்பாதையில் ஓடினாள். மலையும் தரையும் சேரும் இடம் என்பதால், இந்தப் பகுதியில் சிறிய சிறிய பாறைகள் தனித்தனியாகவும் ஒன்றையொன்றுத் தொட்டுக்கொண்ட சங்கிலித் தொடர்களாகவும் கிடந்தன. பொருநையாளின் வெள்ள வேகத்தை இந்தப் பாறைகளே ஓரளவுக்குக் கட்டுப்படுத்திவிடும் என்பதை உணர்ந்த நம்முடைய முன்னோர், பாறைகளுக்கு மேலும் வலு சேர்த்தனர். எப்படி? தனித்தனிப் பாறைகளையும் கற்களையும் கொண்டு வந்து இடுக்குகளில் வைத்து, தடுப்புச் சுவர் போல் உருவாக்கினர்.
 வெள்ளம் பெருக்கெடுத்தால் அதிவேகமாக ஓடிவரும் கூடுதல் நீரை வயல் பகுதிகளுக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் பயன்பாட்டுக்காக மடைமாற்ற இன்னொன்றையும் தொடர்ந்துவந்தவர்கள் செய்தனர். நதியின் பக்கவாட்டில் இருந்த பாறைகளிலும் தடுப்புப் பாறைகளில் சிலவற்றிலும் துவாரங்கள் செய்தனர். இந்த துவாரங்களில் பனை மரக் கம்பங்களைச் செருகினர். குறுக்குக் கம்பங்களுக்கு அருகே மரங்களை நட்டு வளர்த்து, சிறு சிறு காடுகளை உருவாக்கினர். அதாவது, நதியின் இரு மருங்கிலும் ஆங்காங்கே குறுங்காடுகள். இதனால், இந்த இடங்களில் நதியின் வேகம் மட்டுப்படும். மரங்களைச் சுற்றிலும் நீர் சேகரமாகிச் சுழலும். இங்கிருந்து கால்வாய்களை வெட்டிவிட்டு, மண்டியிட்டுச் சுழலும் நீரைக் கால்வாய்களுக்குள் மடைமாற்றினர். மரங்கள் இருப்பதால், நதி நீர் நிலத்துக்குள்ளும் இறங்கும்; நிலத்தடி நீர் சேகரமாகும்; உடனடித் தேவைகளைத் தாண்டி, எதிர்காலத் தேவைகளுக்கு உதவும்.
 இயற்கையாக அமைத்த எழில் தடுப்பு
 இவ்வாறு இயற்கையோடு இணைந்து அமைக்கப்பட்ட இந்த அணைக்குத் தலை அணை என்று ஏன் பெயர் வந்தது? பொருநையாள் தரையைத் தொட்டவுடன் அமைந்த முதல் தடுப்பு இது. ஆகவே, "முதல்' என்னும் பொருள்படும்படியாகத் தலை அணை. பொதிகை மலைகளையே பொருநையாளின் கேசமாகவும் பாவநாசம் தொடங்கிப் புன்னைக்காயல் வரையான நிலப்பகுதியை இவளின் உடலாகவும் உருவகித்த இவளின் புதல்வர்களுக்கு, இது தாயின் தலைப் பகுதியில் அமைந்த தடுப்பு; இவளின் பாசத்தைப் பிரதிபலிக்கும் தடுப்பு; ஆகவேயும், இது தலை அணை.
 தலை அணைக்குக் "கோடை மேல் அழகியான்' அணை என்றும் பெயருண்டு. பனைமரக் குறுக்குக் கம்பங்களும் அவற்றைச் சூழ்ந்த குறுங்காடுகளும் சுழித்து மண்டியிடும் நீருமாகப் பச்சை பசேல் என்று எத்தனை அழகு கொஞ்சியிருக்கும்! கோடை காலத்தில், வெயிலின் வெளிச்சம் பட்டுப் பொருநையாள் பளபளத்திருப்பாள்; இவளின் நீரோசை நட்டுவாங்கத்திற்குப் பச்சை மரங்கள் தங்களின் கிளைக் கரங்களை ஆட்டி ஆட்டி அபிநயத்திருக்கும்; இந்த நாட்டிய நாடகத்தில் மயங்கி, விலங்குகளும் பறவைகளும் பரவசமாகியிருக்கும்; பாபவிநாசப் பெருமான்கூட ஆனந்தத் தாண்டவம் ஆடியிருந்திருப்பார். கோடை காலத்திலும் கொள்ளை எழிலோடு காட்சியளித்த அழகைக் கண்ட தமிழ் மக்கள், "கோடை மேல் அழகியான்' என்றே இப்பகுதிக்கு புகழ்ப்
 பெயர் சூட்டிப் பூரித்தனர்.
 - தொடரும்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com