பொருநை போற்றுதும்! 33- டாக்டர் சுதா சேஷய்யன்

இயற்கையும் இலக்கணமும் பெயர் கொடுத்திருந்தாலும், அறக்கருத்துகளை இப்பெயர்களுக்குள் புகுத்தி, உள்ளூர்க் கதைகளை உருவாக்கி, வருங்காலத் தலைமுறைகளுக்கு வாழ்க்கைச் செய்திகளை
பொருநை போற்றுதும்! 33- டாக்டர் சுதா சேஷய்யன்

இயற்கையும் இலக்கணமும் பெயர் கொடுத்திருந்தாலும், அறக்கருத்துகளை இப்பெயர்களுக்குள் புகுத்தி, உள்ளூர்க் கதைகளை உருவாக்கி, வருங்காலத் தலைமுறைகளுக்கு வாழ்க்கைச் செய்திகளை வடிவமைத்துக் கொடுப்பதுதானே உயர் நாகரிகத்தின் அடையாளம்! காலம் காலமாகப் பண்பட்ட இத்தகைய மானுட நாகரிகத்தின் கதையொன்று, "தலை அணை' என்னும் பெயர் உருவானதற்குக் காரணமாக இப்பகுதிகளில் வழங்குகிறது.
 தலைஅணை பெயர்க்காரணம்
 முன்னொரு காலத்தில், கன்னியாகுமரி, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக வேணாடு என்னும் சிற்றரசு விளங்கியது. சில காலம், சேர நாட்டுப் பகுதியாகவும் சில காலம், பாண்டிய நாட்டுப் பகுதியாகவும் திகழ்ந்தது. இந்த வேணாட்டில், செல்வமும் செல்வாக்கும் பெற்றவர்களாக, எட்டு வீட்டில் பிள்ளைமார் என்னும் பிரிவினர் விளங்கினர். ஏதோவொரு காலகட்டத்தில், பாண்டிய மன்னர் ஒருவருக்கும் எட்டு வீட்டில் பிள்ளைமாருக்கும் பிணக்கு ஏற்பட்டதாம். பிணக்கு போராக மாற, பிள்ளைமார் பாண்டியனை விரட்ட, பொதிகையிலிருந்த தன்னுடைய கோட்டையில் ஒளிந்துகொண்ட பாண்டிய மன்னர், சுற்றிலும் பிள்ளைமார் சூழ்ந்துவிட்டனர் என்னும் அச்சத்தில், அவர்கள் கையில் சிக்காமலிருக்க, கோட்டைமீது நின்று, தன் தலையைத் தானே கொய்துகொண்டாராம். தலையும் உடலும் தாமிரவருணியில் வீழ்ந்தனவாம். தலை சரிந்த இடம் "தலை அணை' என்றும் உடல் மட்டும் (தலையில்லா முண்டம்) வீழ்ந்த இடம் "முண்டந்துறை' என்றும் அழைக்கப்படலாயினவாம். ஆட்சியும் அதிகாரமும் இருந்தாலும், மானுட வாழ்வும் தேகமும் நிலையில்லாதவை என்பதைப் புரியவைப்பதற்காக இப்படியொரு கதையைப் பொருநையாள் உலவவிட்டாளோ?
 ஆரம்பகாலங்களில் கல்பாறைகளும் கூழாங்கற்களுமாக இருந்த கோடை மேல் அழகியான் தடுப்பணையை, அவ்வப்போது வந்த மன்னர்களும் ஆட்சியாளர்களும் செப்பம் செய்து, வலு கூட்டியுள்ளனர். ஆயினும், காலப்போக்கில் மழை வெள்ளங்களால், அணை சேதப்பட்டது. 19- ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மிகுதியும் சிதைந்திருந்த இதன் பாறைத் தடுப்புகளை அகற்றிவிட்டு, புதியதாக ஓர் அணையைக் கட்டிவிடலாம் என்று திட்டம் தீட்டினார் கேப்டன் ஹார்ஸ்லி; 1854 -இல் செலவு மதிப்பீட்டையும் வரைந்து அரசுக்கு அனுப்பினார் (இதே 1854-55 -இல்தான், ஸ்ரீ வைகுண்ட அணைத் திட்டத்திற்கும் பாபநாச நீர்த்தேக்கத் திட்டத்திற்குமான முன்வரைவுகளையும் ஹார்ஸ்லி தயாரித்துக் கொடுத்தார்; இந்தக் காலகட்டத்தில், பொருநைக் கரையின் நீர் தொட்டு நடந்து, கிராமம் ஒவ்வொன்றுக்கும் இவர் பயணித்ததாகத் தெரிகிறது).
 அரசின் அனுமதி கிட்டாததால், பழைய கற்களுக்கு வலு சேர்ப்பதற்காகப் பெரும் கற்பாறைகள் வைக்கப்பட்டு, பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு தலை மதகுகள் அமைக்கப்பட்டு, 1084 அடி நீளத்திற்கு இந்த அணை செப்பனிடப்பட்டது. வெறும் தடுப்புச் சுவராக மட்டும் இல்லாமல், தடுப்புக்கு முன்பாக, நதி நீரைச் சேகரிக்கும் நீர்த்தேக்கமாகவும் இது செயல்படுகிறது.
 வடக்கு மற்றும் தெற்குக் கோடை மேல் அழகியான் கால்வாய்கள் இந்தத் தேக்கத்திலிருந்து பாய்கின்றன. இக்கால்வாய்களின் வழியாக, அம்பாசமுத்திரம் தாலுக்காவின் 17 குளங்கள் நிரம்பியதாக, மதராஸ் மாநிலத்தின் முக்கியமான பாசனத் திட்டங்கள் பற்றிய 1955 -ஆம் ஆண்டின் பொதுப்பணித் துறை பதிவு குறிக்கிறது. இன்றளவும்கூட, அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், மன்னார்கோவில், பிரம்மதேசம் பகுதிகளின் குளங்கள் பல, இக்கால்வாய்களின் நீர் வரத்தால் நிரம்புகின்றன; சுமார் 1400 ஹெக்டேர் பாசனப் பரப்பு பயனடைகிறது.
 நலம் பெருக்க ஒரு நதியுண்ணி
 தாமிரவருணிக்குக் குறுக்காக உள்ள அடுத்த தடுப்பணை, நதியுண்ணி அணைக்கட்டு. பண்டைய ஏழு அணைகளில் மிகவும் பழைமையானதாக இது கருதப்படுகிறது. அம்பாசமுத்திரத்திற்குச் சற்றே மேற்காக இருக்கிறது; சொல்லப்போனால், இந்த அணைக்கட்டு அமைந்திருக்கும் பகுதிக்கு மேல அம்பாசமுத்திரம் என்றே பெயர். அணைக்கட்டின் பெயரும் வித்தியாசமானதுதான் "நதி உண்ணி'. இதென்ன பெயர்? "நதியை உண்டுவிடுதல் அல்லது அருந்திவிடுதல்'. பொருநையின் வெள்ளப்போக்கு, இந்த இடம் வந்ததும், அணையால் தடுக்கப்படும்; மிகை நீர் கால்வாய்களில் பாய்ந்துவிடும்; இதனால், நதியின் நீர் குறைந்ததுபோன்ற தோற்றம் ஏற்படும். இவற்றையெல்லாம் கண்ட நம்முடைய முன்னோர், நதியின் நீரை இந்த அணைக்கட்டு அருந்திவிடுவதாகக் கொண்டு, "நதியுண்ணி' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
 மிகப் பழங்காலத்தில் பாண்டிய மன்னர்களால் இந்தத் தடுப்பணை அமைக்கப்பட்டது. 1759- ஆம் ஆண்டில், கான் சாஹேப் என்னும் முஹம்மது யூசுஃப் கான் (இவர்தான் மருதநாயகம் என்றும் அறியப்பட்டவர்), தன்னுடைய அறக்கொடையாக இதனைச் சீரமைத்துள்ளார். சிமெண்ட் பயன்படுத்தப்படாமல், பெரிய பெரிய கற்களால் அமைக்கப்பட்டுள்ள நதியுண்ணி அணைக்கட்டின் நீளம் 1680 அடி. பொருநையின் பாதையில் சற்றே சாய்வாக அமைந்திருக்கும் இந்த அணைக்கட்டின் வடக்குப் பகுதியிலிருந்து புறப்படும் நதியுண்ணிக் கால்வாய் வழியாக, மேல அம்பை, கீழ அம்பை, பிரம்மதேசம் பகுதிகளின் சுமார் 996 ஹெக்டேர்கள், நேரடி ஆயக்கட்டின் கீழ் வருகின்றன.
 வறண்டு கிடந்த அம்பைப் பகுதிக்கு விவசாய வாழ்வு கொடுத்தது நதியுண்ணிதான் என்றே வரலாற்றுப் பதிவுகள் செப்புகின்றன. சோழப் பேரரசர்களின் ஆட்சிக்காலத்தில் (10-11 - ஆம் நூற்றாண்டுகளில்), அம்பாசமுத்திரத்திற்குச் சற்றே வடக்கிலுள்ள பிரம்மதேசத்திற்குக் கிட்டிய முக்கியத்துவம் அம்பைக்குக் கிட்டவில்லை. ராஜ ராஜ சதுர்வேதி மங்கலமாக பிரம்மதேசம் உருவான காலத்தில், மழை நீரைத் தேக்கிய குளங்களால் பிரம்மதேசம் நீர் வளம் கொண்டிருந்ததாகவும், அதே சமயம் அம்பை வறண்டிருந்ததால், மக்களைக் குடியமர்த்துவதில் சங்கடங்கள் எழுந்ததாகவும் தெரிகிறது. இதே காலகட்டத்தில்தான் நதியுண்ணி அணை அமைக்கப்பட்டிருக்கவேண்டும். நதியுண்ணிக் கால்வாயின் நேரடிப் பாசனம் கிடைத்தபின்னர், முள்ளி நாட்டு இளங்கோக்குடி என்னும் பெயரில் வணிகர் குடியிருப்பாக இருந்த அம்பை, வேளாளப் பெருமக்கள் குடியமர்ந்த வேளாக்குறிச்சியாகவும், அம்பாசமுத்திரமாகவும் மாறியது.
 - தொடரும்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com