வெள்ளிமணி

வேண்டியதை அருளும் வேம்படி விநாயகர்!

DIN

திருப்போரூர் என்று அழைக்கப்படும் சமராபுரி திருத்தலம், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூவகைச் சிறப்பும் பெற்று விளங்கும் ஊர். (சென்னையிலிருந்து சுமார் 42 கி.மீ. தூரத்தில் உள்ளது) இவ்வூரின் மலைமேல் ஸ்ரீகைலாச நாதர் அம்பாள் பாலாம்பிகையுடன் கோயில் கொண்டுள்ளார். மலையின் அடிவாரத்திற்கு அருகில் முருகப்பெருமான் ஆலயத்தில் மூலவர் சுயம்பு மூர்த்தியாய் உள்ளார். மூலவருக்கு புனுகு சட்டம் சார்த்தப்படுகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழும், ஸ்ரீமத்சிதம்பர சுவாமிகள் இயற்றிய திருப்போரூர் சந்நிதி முறை பாடல்களும் அனைவராலும் பேசப்படுகிறது. பல கல்வெட்டுக் குறிப்புகள் இதன் பழைமையை பறைசாற்றுகின்றன.
 திருப்போரூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்திற்கு செல்லும் முன்பு முதலில் ஸ்ரீ வேம்படி விநாயகரை (சுமார் 1 கி.மீ. தூரத்தில் ஆலயம் செல்லுவதற்கு முன் சாலை ஓரம் உள்ளது) வழிபட்ட பின்பு செல்ல வேண்டும் என்பது மரபு. "சாப விமோசனம் செய்த வேம்படி விநாயகர்' என்று இப்பெருமானின் சிறப்பை எழுதிய புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் இயற்றிய தலபுராணம் குறிப்பிடுகிறது.
 முன்பொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் தங்களில் யார் அதிக பலவான் என்னும் சர்ச்சையினால் ஒருவருக்கொருவர் நெடுங்காலம் யுத்தம் புரிந்து வந்தனர். தேவர்கள் தோற்றுவிட, அசுரர்களின் ஆதிக்கம் ஓங்கிற்று. திருமாலிடம் சென்று முறையிட்ட தேவர்களை காக்கும் பொருட்டு அசுரர்களின் கொட்டத்தை அடக்க தானே களத்தில் இறங்கி அசுரர்களை அழிக்கத் தொடங்கினார். கலக்கமடைந்த மீதமுள்ள அசுரர்கள் ஓட ஆரம்பித்தனர். அவர்களை மகா விஷ்ணு விடாமல் துரத்த, பிருகு முனிவர் ஆசிரமத்தை அடைந்து முனிபத்தினியிடம் மன்றாடி அடைக்கலம் ஆயினர். அவர்களை வெளியேற உதவும்படி, திருமால் ரிஷிபத்தினியிடம் கூற, அபயம் அடைந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று அவர் மறுத்துவிட்டார். வேறுவழியின்றி மகாவிஷ்ணு தனது சக்ராயுதத்தை ஏவ, அது முனிபத்தினியின் கழுத்தை அறுத்து வீழ்த்தி விட்டது. இதனை அறிந்து அங்கு வந்த பிருகு முனிவர் கடுங்கோபங்கொண்டு மகாவிஷ்ணுவை நோக்கி "நீ உனது தாய்க்கு சமமாக எண்ண வேண்டியவளை "ஹத்தி' செய்ததால் பத்து ஜனனம் எடுக்கக் கடவீர்' என சாபமிட்டார். பின் திருமகளை நோக்கி "உன் கணவனின் மார்பில் தயை எதுவும் இன்றி மரம்போல் நின்றாய், அதனால் நீயும் "கசப்பு வேப்பமரமாகக் கடவாய்" என்று சாபமிட்டார். பின் சுக்ராச்சாரியாரை வருவித்து மிருத சஞ்சீவினி மந்திரத்தால் அறுந்து போன கழுத்தை சேர்த்து தன் பத்தினியை உயிர்பெறச் செய்தார்.
 பிருகு முனிவரின் சாபத்தினால், இத்தலத்தில் வேப்பமரமாய் இருந்த திருமகளுக்கு மூஷிக வாகனன் ஆன விநாயகர் தரிசனம் கொடுத்து இழந்த அனைத்தையும் திருமகள் திரும்பப் பெறச் செய்து சாபவிமோசனமும் அளித்தாராம். இன்றும் வேம்படி ஆலயத்தின் பின்புறம் இரண்டு பழைமையான வேப்பமரங்கள் உள்ளன.
 - வசந்தா சுரேஷ்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT