உலகம்

எதிர்ப்பு எதிரொலி: பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

DIN


ஐரோப்பிய யூனியனுடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே மேற்கொண்டுள்ள பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவுவதையடுத்து, அந்த ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பை அவர் ஒத்திவைத்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய (பிரெக்ஸிட்) பிறகு, அந்த அமைப்புக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான உறவு குறித்து இரு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு, எம்.பி.க்களிடையே கடும் எதிர்ப்பு நீடித்து வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற கீழவைக்கு பிரதமர் தெரசா மே செவ்வாய்க்கிழமை அனுப்பிய அவசரக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தற்போதுள்ள சூழலில், பிரெக்ஸிட் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்டால், அது பெரிய வாக்கு வித்தியாசத்தில் நிராகரிக்கப்படும்.
எனவே, எம்.பி.க்களின் கோரிக்கைப்படி ஐரோப்பிய யூனியனிடமிருந்து சில உத்தரவாதங்களைப் பெறும் வரை, அந்த வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்படுகிறது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வரும் ஜனவரி மாதம் 21-ஆம் தேதிக்கு முன்னதாக பிரெக்ஸிட் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று தெரசா மே-யின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது.
எனினும், ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தில் செயல்படும் ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ளதால், பிரிட்டன் தனது தனித்துவத்தையும், இறையாண்மையையும் இழந்துவிட்டதாக ஒரு சாரார் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பில், பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியேற பிரிட்டன் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வெளியேற்றத்துக்குப் பிறகு பிரிட்டனும், ஐரோப்பிய யூனியனும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த வரைவு ஒப்பந்தத்தை பிரதமர் தெரசா மே அண்மையில் வெளியிட்டார்.
அதில், ஐரோப்பிய யூனியனின் சட்டங்களைத் தொடர அனுமதிப்பது போன்ற சர்ச்சைக்குரிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளதற்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த ஒப்பந்தத்துக்கு கண்டனம் தெரிவித்து, பிரெக்ஸிட் விவகார அமைச்சரான டோமினிக் ராப் உள்பட இதுவரை 7 அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.
பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை ஏற்கச் செய்வதற்காக தெரசா மே தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகள் பலனளிக்காத நிலையில், அந்த ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பை அவர் தற்போது ஒத்திவைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT