ஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்

நடுத்தர தொலைவு ஏவுகணையை அண்மையில் சோதித்துப் பார்த்ததை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.
ஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்


நடுத்தர தொலைவு ஏவுகணையை அண்மையில் சோதித்துப் பார்த்ததை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, 
ஃபர்ஸ் செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
நடுத்தர தொலைவு ஏவுகணையை செலுத்தி ஈரான் இந்த மாதம் 1-ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டதாக வெளியான தகவல் உண்மை என அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.
ஈரான் தனது ஏவுகணை பரிசோதனைகளைத் தொடரும் எனவும், அண்மையில் நடந்துள்ள சோதனை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் ஈரான் ராணுவத்தின் வான்மண்டலப் பிரிவு தளபதி அமீரலி ஹாஜிஸாதே கூறினார்.
இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது, இந்த விவகாரம் அந்த நாட்டை மிகவும் கவலையடையச் செய்துள்ளது என்பதைக் காட்டுகிறது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டன.
ஒபாமா அதிபராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியின் பலனாக உருவான இந்த ஒப்பந்தம், ஈரானை அணு ஆயுதங்கள் தயாரிக்காமல் தடுப்பதற்கு போதுமானதாக இல்லை என்று டொனால்ட் டிரம்ப் விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில், அந்த ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக டிரம்ப் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார். மேலும், அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக விலக்கிக் கொள்ளப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் முழுவீச்சில் அமல்படுத்தினார்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டதை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com