தீவிரம் குறைந்தது "மஞ்சள் அங்கி' போராட்டம்

பிரான்ஸில் அரசுக்கு எதிராக வார இறுதி நாள்களில் நடைபெற்று வரும் "மஞ்சள் அங்கி' போராட்டம், சனிக்கிழமை தீவிரம் குறைந்து காணப்பட்டது.
மஞ்சள் அங்கிப் போராட்டத்தையொட்டி, பாரீஸில் குவிந்த போராட்டக்காரர்கள்.
மஞ்சள் அங்கிப் போராட்டத்தையொட்டி, பாரீஸில் குவிந்த போராட்டக்காரர்கள்.

பிரான்ஸில் அரசுக்கு எதிராக வார இறுதி நாள்களில் நடைபெற்று வரும் "மஞ்சள் அங்கி' போராட்டம், சனிக்கிழமை தீவிரம் குறைந்து காணப்பட்டது.
போராட்டக்காரர்களின் சில கோரிக்கைகளை ஏற்று, வரி குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை அதிபர் மேக்ரான் அறிவித்துள்ளதும், ஸ்ட்ராஸ்பர்க் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலும் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை குறைந்ததற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஐந்து வாரங்களாக, பிரான்ஸ் முழுவதும் வார இறுதி நாள்களில் நடைபெற்று வரும் "மஞ்சள் அங்கி' போராட்டத்தில் சனிக்கிழமையும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
போராட்டத்தின்போது வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக, நாடு முழுவதும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
எனினும், பாரீஸிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் கடந்த வாரத்தைவிட மிகக் குறைவான போராட்டக்காரர்களையே காண முடிந்தது.
மேலும், கடந்த சில வாரங்களில் நடைபெற்றதைப் போல் பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் நிகழவில்லை. பெரும்பாலும் அமைதியான முறையிலேயே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
மதியம் 11 மணி நேர நிலவரப்படி, போராட்டம் தொடர்பாக பாரீஸில் 60 பேரை மட்டுமே போலீஸார் கைது செய்திருந்தனர். கடந்த வாரம் இதே நேரத்தில் 500 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இது மிகவும் குறைவான எண்ணிக்கையாகும்.
போராட்டத்தின்போது ஆங்காங்கே மோதல்களும், கண்ணீர் புகை குண்டு வீச்சுகளும் நடைபெற்றன. எனினும், கடந்த வாரம் நடைபெற்ற சம்பவங்களோடு ஒப்பிடுகையில் இது மிகவும் சொற்பான எண்ணிக்கையாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
காற்று மாசைக் குறைத்து, பருவ நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை மேக்ரான் அரசு அதிகரித்து வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டில் கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
எரிபொருள் விலையேற்றம் மட்டுமன்றி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்ப்பின் அடையாளமாக, ஒளிரும் மஞ்சள் மேலங்கியை அணிந்து கொண்டு பொதுமக்கள் நடத்தும் இந்தப் போராட்டம், "மஞ்சள் அங்கி' போராட்டம் என்றழைக்கப்படுகிறது.
வார இறுதி நாட்களில் நடைபெற்று வந்த இந்தப் போராட்டம், நான்காவது வாரமாக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் தீவிரமடைந்தது. அப்போது தீவைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றன. இதில், அதையடுத்து, நாடு முழுவதும் 1,700-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சூழலில், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் பல்வேறு சலுகைத் திட்டங்களை அதிபர் இமானுவல் மேக்ரன் அறிவித்தார்.
வரிகளை  பெருமளவு குறைப்பது, குறைந்தபட்ச ஊதியத்தில் 100 யூரோக்கள் (சுமார் ரூ.8,200) அதிகரிப்பது போன்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிவித்ததுடன், அத்தகைய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளும் வகையில், பொருளாதார - சமூக அவசர நிலையையையும் அவர் பிரகடனப்படுத்தினார்.
இந்தச் சூழலில், பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் அமைந்துள்ள புகழ் பெற்ற கிறிஸ்துமஸ் சந்தையில்  ஷெரீஃப் ஷேகத் (29) என்ற நபர் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றார்.
இதில் 4 பேர் உயிரிழந்தனர்; 
11 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேர் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இந்தச் சூழலில், தப்பியோடிய ஷெரீஃப் ஷேகத்தைப் பிடிப்பதற்காக நடைபெற்று வந்த தேடுதல் வேட்டையில், அவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். மேலும், அந்தத் தாக்குதலில் வேறு சிலருக்கும் தொடர்புள்ளதா என போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளர்.
இத்தகைய இக்கட்டான சூழலில், மஞ்சள் அங்கிப் போராட்டத்தை சனிக்கிழமை தீவிரப்படுத்த வேண்டாம் என்று போராட்டக்காரர்களை பிரான்ஸ் அரசு வியாழக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த காரணங்களால்தான், சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்கள் தீவிரம் குறைந்து காணப்பட்டதாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com