புதினுடனான சந்திப்பு குறித்து அதிக எதிர்பார்ப்புகள் இல்லை: டிரம்ப்

பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் ரஷிய அதிபர் விளாதிமிர் புதினை சந்திக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஸ்காட்லாண்டில் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கும் டிரம்ப்.
ஸ்காட்லாண்டில் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கும் டிரம்ப்.

பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் ரஷிய அதிபர் விளாதிமிர் புதினை சந்திக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்காட்லாண்டில் "சிபிஎஸ் நியூஸ்' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் நடக்கவிருக்கும் சந்திப்பில், பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளுடன் நான் கலந்து கொள்ளப்போவதில்லை.
எனினும், அந்தச் சந்திப்பில் கசப்பான அனுபவங்கள் எதுவும் ஏற்படாது; மேலும் ஒரு சில நல்ல முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கிறேன்.
கடந்த 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு செய்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள 12 ரஷிய ராணுவ உளவு அதிகாரிகளை அமெரிக்காவிடம் ஒப்படைக்குமாறு நான் புதினிடம் கோர மாட்டேன்.
எனினும், அந்த விவகாரம் குறித்து அவருடன் நிச்சயம் விவாதிப்பேன்.
எனது பதவிக்காலத்தில் நான் ரஷியாவிடம் மிகக் கடுமையாகத்தான் நடந்து வருகிறேன். எனினும், "நியாயமற்ற' ஊடகங்கள் அதனை ஒப்புக் கொள்வதில்லை என்றார் அவர்.
அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாகவும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் மக்களின் கருத்தைத் திரட்டும் வகையிலான நடவடிக்கையில் ரஷியா ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த மத்திய அரசின் சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் முல்லரின் பரிந்துரையின் பேரில், அதிபர் தேர்தலின்போது சமூக வலைதளங்களின் மூலம் "குறிப்பிட்ட' கட்சி வேட்பாளர் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களைப் பரப்பியதாக 13 ரஷியர்கள் மீது கடந்த பிப்ரவரி மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தேர்தல் சமயத்தில் இணையதளம் வழியாக ஊடுருவி, அப்போதைய அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் பிரசார அலுவலகம் மற்றும் அவர் சார்ந்த ஜனநாயகக் கட்சியின் அலுவலக ஆவணங்களையும், மின் அஞ்சல்களையும் திருடியதாக ரஷியாவின் "ஜிஆர்யூ' உளவுப் பிரிவைச் சேர்ந்த 12 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
அதையடுத்து, விளாதிமீர் புதினுடன் ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் திங்கள்கிழமை (ஜூலை 16) நடைபெறும் சந்திப்பை டிரம்ப் ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
எனினும், திட்டமிட்டப்படி அந்த சந்திப்பு நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் மாளிகை திட்டவட்டமாகத் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com