இந்தோனேஷிய விமான விபத்து ஏற்பட்டது எப்படி? கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

இந்தோனேஷியாவில் 189 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானத்தின் உடல் பகுதியைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தநிலையில், ஏர் லயன்
இந்தோனேஷிய விமான விபத்து ஏற்பட்டது எப்படி? கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

இந்தோனேஷியாவில் 189 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானத்தின் உடல் பகுதியைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தநிலையில், ஏர் லயன் விமானத்தின் ஒரு கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த லயன் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங்-737 மேக்ஸ் ரக விமானமொன்று தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து பங்க்கா பெலிதுங் மாகாணத் தலைநகர் பங்கால் பினாங் நகர விமான நிலையத்தை நோக்கி உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 5 மணி) புறப்பட்டது. 
இந்தியாவைச் சேர்ந்த விமானி பவ்ய சுனேஜா அந்த விமானத்தை ஓட்டிச் சென்றார்.

விமானம் புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே, மீண்டும் விமான நிலையம் திரும்புவதற்கு விமானி சுனேஜா அனுமதி கேட்டார். எனினும், அடுத்த 10 நிமிடங்களில் அந்த விமானம் கடலுக்குள் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணம் செய்த 178 பயணிகள், 2 பச்சிளங் குழந்தைகள், ஒரு சிறுவன், 2 விமானிகள், 6 பணியாளர்கள் என 189 பேர் உயிரிழந்தனர். இந்தோனேஷிய நிதித்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய 20 ஊழியர்களும் அந்த விமானத்தில் பயணம் செய்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

லயன் ஏர் விமானம் விழுந்து நொறுங்கிய கடல் பகுதியில் நூற்றுக்கணக்கான மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேடுதல் பணிகளில் மீட்கப்பட்ட கைகள், கால்கள் மற்றும் பிற மனித உடல் பாகங்களைக் கொண்ட 10 சவப் பைகளை மீட்புக் குழுவினர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அந்த உடல் பாகங்கள் யாருடையவை என்பதை அடையாளம் காண்பதற்காக, மரபணு சோதனைக்கு உள்படுத்தப்படும். அதற்காக, அவை விரைவில் தலைநகர் ஜகார்த்தாவுக்கு அனுப்பப்படும். கடலின் மேல் பகுதியில் கிடைத்த அனைத்து உடல் பாகங்கள் மற்றும் பொருள்கள் மீட்கப்பட்டுவிட்டன. கடலுக்குள் மூழ்கிய விமானத்தின் முக்கிய பகுதியைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுதவிர, விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் அடங்கிய மேலும் 14 பைகள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. மேலும், பயணிகளின் காலணிகள், பணப் பைகள், உடைகள் உள்ளிட்ட உடைமைகளையும், அடையாள அட்டை உள்ளிட்ட பொருள்களையும் மீட்புக் குழுவினர் மீட்டனர்.

115 அடி ஆழத்தில் விமானத்தின் முக்கிய பாகங்கள் கிடக்கக் கூடும் என மீட்புக் குழுவினர் தெரிவித்த நிலையில், விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில், ஏர் லயன் விமானத்தின் ஒரு கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது. ஆனால் அதில் காக்பிட் வாய்ஸ் ரெகார்டர் குறித்து நாங்கள் இன்னும் ஏதும் அறியவில்லை. ஆய்விற்குப் பின் தெரியவரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கருப்புப் பெட்டி கிடைத்துள்ளதால் விமானத்தின் விபத்திற்கான முழு விவரம் விரைவில் தெரிய வர வாய்ப்புள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com