உலகம்

யேமன் போர்: 24 மணி நேரத்தில் 149 பேர் பலி

தினமணி

யேமனில் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரைக் கைப்பற்றுவதற்காக நடைபெற்று வரும் தீவிர சண்டையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 149 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இதுகுறித்து யேமன் ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹோடைடா நகரைக் கைப்பற்றுவதற்காக நடைபெற்று வரும் சண்டையில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்தன.
 மேலும், ஹோடைடா நகர மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், இந்தச் சண்டையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஹூதி கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த 110 பேரும், அரசு ஆதரவுப் படையைச் சேர்ந்த 32 பேரும் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இந்தத் தகவலை, சவூதி தலைமையிலான அரசுப் படையினரும் உறுதி செய்தனர்.
 யேமனில் 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி புரிந்த வந்த அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் போராட்டம் வெடித்தது. அதனைத் தொடர்ந்து சலே பதவி விலகினாலும், அவருக்குப் பிறகு அதிபர் பொறுப்பேற்ற மன்சூர் ஹாதியால் உறுதியான ஆட்சியைத் தர முடியவில்லை.
 இதன் காரணமாக, அல்-காய்தா பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்ததுடன், அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கை மேலோங்கியது.
 யேமனின் தெற்குப் பகுதியில் சன்னி பிரிவினர் பெரும்பான்மை வகித்தாலும், வடக்குப் பகுதியில் பெரும்பான்மையாகத் திகழும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி பழங்குடியனர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசை எதிர்த்துப் போராடி வந்தனர்.
 இந்த நிலையில், புதிய அதிபராக மன்சூர் ஹாதி பதவியேற்றதற்குப் பிறகு ஹூதி கிளர்ச்சியாளர்கள் யேமனில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியதுடன், தலைநகர் சனாவை கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றினர்.
 ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானின் உதவியுடன் அவர்கள் தலைநகரைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
 அதையடுத்து, அதிபர் மன்சூர் ஹாதி தெற்குப் பகுதியில் அமைந்துள்ள யேமனின் இரண்டாவது பெரிய நகரமான ஏடனுக்குத் தப்பிச் சென்றார்.
 அந்த நகரையும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சுற்றிவளைத்ததைத் தொடர்ந்து, அவர் சன்னி பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார்.
 இந்தநிலையில், யேமனிலுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி அரேபிய கூட்டுப் படை கடந்த 2015-ஆம் ஆண்டு விமானத் தாக்குதலைத் தொடங்கியது.
 அதிலிருந்து யேமன் உள்நாட்டுச் சண்டை தீவிரமடைந்து, ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி தவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான ஹோடைடாவை மீட்பதற்காக சவூதி வான்வழித் தாக்குதலின் உதவியுடன் அரசுப் படை இந்த மாதம் 1-ஆம் தேதி முதல் கிளர்ச்சியாளர்களுடன் சண்டையில் ஈடுபட்டு வருகிறது.
 இதில், இரு தரப்பிலும் இதுவரை சுமார் 600 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

SCROLL FOR NEXT