உலகம்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு இடைக்காலத் தடை

DIN


இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டதற்கு, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளுக்கும் டிசம்பர் 7-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைச் சட்டவிரோதமான நடவடிக்கையாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி, சிறீசேனாவால் பதவிநீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி, முக்கிய எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கிம், இலங்கை தேர்தல் ஆணைய உறுப்பினரும் பேராசிரியருமான ரத்னஜீவன் ஹூலே உள்ளிட்டோர் சார்பில் 13 மனுக்கள் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
எதிர் மனுக்கள்: அந்த மனுக்களின் மீது திங்கள்கிழமை விசாரணை தொடங்கிய நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்தது சரியான நடவடிக்கையே, எனவே எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி சிறீசேனாவின் ஆதரவாளர்களான பேராசிரியர் ஜி.எல்.பெரிஸ், அமைச்சர் உதய கம்மன்பிலா, வாசுதேவ நானயக்கரா உள்ளிட்டோர் சார்பில் 5 எதிர்மனுக்கள் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் குவிப்பு: இந்நிலையில், இந்த மனுக்கள் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நளின் பெரேரா தலைமையில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது. முக்கியமான விசாரணை என்பதால், அசம்பாவிதங்களைத் தடுக்கும் பொருட்டு உச்ச நீதிமன்ற வளாகம் முழுவதும் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
விசாரணையின்போது, சிறீசேனா தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஜெயந்த ஜெயசூர்யா, அரசியலமைப்புச் சட்டத்தில் அதிபருக்கான உரிமைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. அந்த அரசியலமைப்புச் சட்ட விதிகளை அடிப்படையாகக் கொண்டே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்க் கட்சிகளின் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
தேர்தல் பணிகளுக்கும் தடை: இதனைக் கேட்ட நீதிபதிகள், நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபர் சிறீசேனாவின் உத்தரவுக்கு டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதிப்பதாகவும், அதிபரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனுக்கள் மீதான விசாரணை டிசம்பர் மாதம் 4,5 மற்றும் 6-ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும், அதற்குப் பிறகு இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
வரும் ஜனவரி 5-ஆம் தேதி நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெறும் என்று சிறீசேனா அறிவித்திருந்த நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர்.
பின்னணி: 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்குக் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அப்போதைய அதிபர் மஹிந்த ராஜபட்ச தோல்வியடைந்தார். அந்தத் தேர்தலில் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் சிறீசேனா வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, சுதந்திரா கட்சியில் இருந்து ராஜபட்சவை சிறீசேனா ஓரங்கட்டினார். ரணிலின் கட்சியும், சிறீசேனாவின் கட்சியும் கூட்டணி சேர்ந்து, இலங்கையில் ஆட்சியமைத்தன. ரணில் பிரதமராகப் பதவியேற்றார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ராஜபட்சவின் ஆதரவாளர்களால் தொடங்கப்பட்ட இலங்கை மக்கள் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இதனால் அதிபர் சிறீசேனாவுக்கும், பிரதமர் ரணிலுக்கும் இடையே அண்மைக் காலமாகக் கடுமையான கருத்து மோதல்கள் உருவாகின. 
அதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி இலங்கை பிரதமர் ரணிலை அப்பதவியிலிருந்து நீக்கிய சிறீசேனா, முன்னாள் அதிபர் ராஜபட்சவை பிரதமராக நியமித்து, அவருக்குப் பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். அதன்பின்னர், ராஜபட்ச பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான உறுப்பினர்களைத் திரட்டும் உள்நோக்கத்துடன், நாடாளுமன்றத்தை நவம்பர் மாதம் 16-ஆம் தேதி வரை முடக்கியும் சிறீசேனா உத்தரவிட்டார். 
இது உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு சர்ச்சைகளையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. ரணிலும் தான் பிரதமராகவே நீடிப்பதாக அறிவித்தது அந்நாட்டு அரசியல் களத்தில் குழப்பத்தை மேலும் அதிகரித்தது. நாடாளுமன்றத் தலைவர் கரு ஜெயசூர்யாவும் அரசியலமைப்புச் சட்டப்படி ரணிலே பிரதமர் என்று அறிவித்தார்.
இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்ட ரணில் கட்சியும், சிறீசேனா-ராஜபட்ச கூட்டணியும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசுவதில் முனைப்பு காட்டினர். முக்கியமாக ராஜபட்ச தரப்பு பல கோடி ரூபாய்களை அளித்தும், பதவி ஆசை காட்டியும் ஏறத்தாழ 9-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளிலிருந்து விலைக்கு வாங்கியதாகக் கூறப்பட்டது.
இதனிடையே, உள்நாட்டில் எழுந்த நெருக்கடி, சர்வதேச நாடுகளின் நிர்பந்தம் ஆகியவற்றின் காரணமாக, நாடாளுமன்றம் நவம்பர் 14-ஆம் தேதி கூட்டப்படுவதாக அதிபர் சிறீசேனா அறிவித்தார். அதேநேரத்தில், ராஜபட்ச-சிறீசேனா கூட்டணியால் போதிய பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதை அறிந்துகொண்டு, வரும் 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பதவிக்காலம் இருந்த நாடாளுமன்றத்தைக் கலைத்து கடந்த 9-ஆம் தேதி நள்ளிரவு சிறீசேனா உத்தரவிட்டார். 
மேலும், நாடாளுமன்றத்துக்கு வரும் ஜனவரி மாதம் 5-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் சிறீசேனா அறிவித்தார். இது தொடர்பான அறிவிக்கை அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

நாடாளுமன்றத்தை கூட்ட உத்தரவு


இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, புதன்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்ட அவைத் தலைவர் கரு ஜெயசூரியா உத்தரவிட்டுள்ளார்.

மக்களுக்கு கிடைத்த வெற்றி 
ரணில் விக்ரமசிங்க: இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இதன் மூலம் இலங்கை மக்களின் இறையாண்மையை மீண்டும் நிலைநாட்டுவோம்.

இறுதி முடிவு அல்ல
ராஜபட்சவின் மகனும் எம்.பி.யுமான நமல் ராஜபட்ச: இடைக்கால உத்தரவையே, உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இது, இறுதி முடிவு அல்ல.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT