கம்போடிய இன அழிப்பு வழக்கு: கமேர் ரூஜ் ஆட்சியாளர்கள் குற்றவாளிகளாக அறிவிப்பு

இன அழிப்பு வழக்கில் கம்போடிய முன்னாள் கமேர் ரூஜ் ஆட்சியாளர்களான நுவான் சேயா (92) மற்றும் கியேயு சம்பான் (87) ஆகியோரை அந்த நாட்டு சிறப்பு நீதிமன்றம்
நுவான் சேயா, கியேயு சம்பான்
நுவான் சேயா, கியேயு சம்பான்


இன அழிப்பு வழக்கில் கம்போடிய முன்னாள் கமேர் ரூஜ் ஆட்சியாளர்களான நுவான் சேயா (92) மற்றும் கியேயு சம்பான் (87) ஆகியோரை அந்த நாட்டு சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து கம்போடிய சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தீர்ப்பில் கூறியதாவது:
வியத்நாமைப் பூர்விகமாகக் கொண்ட சிறுபான்மை சாம் முஸ்லிம் இனத்தவர்களுக்கு எதிரான இன அழிப்பில், நுவான் மற்றும் கியேயு ஈடுபட்டது உறுதியாகியுள்ளது.
அந்தக் குற்றத்துக்காக அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.
ஏற்கெனவே, மற்றொரு வழக்கில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இரு தண்டனைகளையும் நுவான் மற்றும் கியேயு ஒரு சேர அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
கமேர் ரூஜ் ஆட்சியாளர்களின் எஞ்சியுள்ள இருவர் மீதான இன அழிப்புக் குற்றச்சாட்டுகள் சட்டரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இடதுசாரி ஆயுதக் குழுவான கமேர் ரூஜ், 1960-களிலிருந்தே கம்போடிய அரசுக்கு எதிரான கொரில்லா போரில் ஈடுபட்டு வந்தது. அந்த அமைப்புக்கு வடக்கு வியத்நாம் ராணுவம் உதவியளித்து வந்தது.
இந்த நிலையில், உள்நாட்டுப் போரில் வெற்றியடைந்த கமேர் ரூஜ், கடந்த 1975 முதல் 1979-ஆம் ஆண்டு வரை கம்போடியாவை ஆண்டது.
அப்போது, தங்களது சீர்திருத்தக் கொள்கைகளை மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணித்த கமேர் ரூஜ் ஆட்சியாளர்கள், மிகவும் கொடூரமான முறையில் நடந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகரங்களை விட்டு பொதுமக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்டதில் பலர் உயிரிழந்தனர். மேலும், அரசியல் எதிரிகளாகக் கருதப்பட்டவர்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர்.
முழுமையான தன்னிறைவு வேண்டி, உயிர்காக்கும் மருந்துகளின் இறக்குமதிக்குக் கூட தடை விதிக்கப்பட்டது. இதில் பல நோயாளிகள் உயிரிழந்தனர்.
வலுக்கட்டாயமான கூட்டு விவசாய முறை அமல்படுத்தப்பட்டதால் பஞ்சம் ஏற்பட்டு, பட்டினி சாவுகளும் அதிகரித்தன.
கடுமையான தேசியவாத மற்றும் இனவாதக் கொள்கைகளைக் கொண்ட கமேர் ரூஜ் ஆட்சியாளர்கள், சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் பௌத்த துறவிகளை படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், கம்போடியாவை வியத்நாம் கடந்த 1979-ஆம் ஆண்டில் கைப்பற்றிய பிறகு, கமேர் ரூஜ் அரசு அகற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து புதிய அரசுகளுக்கு எதிராக கமேர் ரூஜ் படையினர் தொடர்ந்து போராடி வந்தாலும், அரசின் பொதுமன்னிப்பு அறிவிப்புகளை ஏற்று கொஞ்சம் கொஞ்சமாக சரணடைந்தனர். கமேர் ரூஜ் இயக்கம் 1999-ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டது.
இந்த நிலையில், கமேர் ரூஜ் ஆட்சிக் காலத்து மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. ஆதரவுடன் கம்போடிய சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக நுவான் சேயாவுக்கும், கியேயு சம்பானுக்கும் அந்த நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது.
தற்போது, இனப் படுகொலை வழக்கிலும் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com