பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தம் செயலுக்கு வரும்: தெரசா மே திட்டவட்டம்

ஐரோப்பிய யூனியனிடமிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான (பிரெக்ஸிட்) வரைவு ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் என அந்த
வானொலியில் பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் தெரசா மே.
வானொலியில் பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் தெரசா மே.


ஐரோப்பிய யூனியனிடமிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான (பிரெக்ஸிட்) வரைவு ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் என அந்த நாட்டுப் பிரதமர் தெரசா மே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அந்த வரைவு ஒப்பந்தத்துக்கு அவரது கட்சியிலிருந்தே பலத்த எதிர்ப்பு எழுந்து, பல அமைச்சர்கள் ராஜிநாமா செய்துள்ள நிலையில் அவர் இவ்வாறு உறுதியுடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து லண்டனின் எல்பிசி வானொலியில் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பிரெக்ஸிட்டை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றுவதுதான் எனது பணியாகும். அந்தப் பணியைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான வரைவு ஒப்பந்தத்தில் பிரிட்டனுக்கு அதிகபட்ச நலன்கள் கிடைப்பதற்கான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை உறுதியாக நம்புகிறேன்.
சில எம்.பி.க்கள் பிரெக்ஸிட்டால் தங்களது தொகுதிகளில் ஏற்படக்கூடிய தாக்கத்தை மனதில் கொண்டு, அவர்களது கடமையைச் செய்கிறார்கள்.
பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் ஐரோப்பிய யூனியனின் சட்டதிட்டங்கள் தொடர்வதற்கு அனுமதித்துள்ளதால் அந்த அமைப்பிடம் சரணாகதி அடைந்துவிட்டதாக அர்த்தமில்லை.
அந்த ஒப்பந்தத்தின் மூலம் சட்டத்தின் கட்டுப்பாடு நமது கைகளுக்குத்தான் வருகிறது. நமது எல்லையும் பலப்படுத்தப்படுகிறது. ஒற்றை சந்தை முறையில் தாராள வர்த்தகப் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
இத்தகைய முன்னேற்றங்களை வலியுறுத்திதான் பிரிட்டன் மக்கள் வாக்களித்தனர். அவர்களது உத்தரவைத்தான் நான் நிறைவேற்றுகிறேன் என்றார் தெரசா மே.
ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது.
எனினும், ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தில் செயல்படும் ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ளதால், பிரிட்டன் தனது தனித்துவத்தையும், இறையாண்மையையும் இழந்துவிட்டதாக ஒரு சாரார் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பில், பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியேற பிரிட்டன் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வெளியேற்றத்துக்குப் பிறகு பிரிட்டனும், ஐரோப்பிய யூனியனும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த வரைவு ஒப்பந்தத்தை பிரதமர் தெரசா மே அண்மையில் வெளியிட்டார்.
அதில், ஐரோப்பிய யூனியனின் சட்டங்களைத் தொடர அனுமதிப்பது போன்ற சர்ச்சைக்குரிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளதற்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த ஒப்பந்தத்துக்கு கண்டனம் தெரிவித்து, பிரெக்ஸிட் விவகார அமைச்சரான டோமினிக் ராப் உள்பட பல அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.
மேலும், தெரசா மே-வுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் எம்.பி.க்கள் இறங்கியுள்ளனர். 
இத்தகைய சூழலில், வரைவு ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதில் உள்ள தனது உறுதிப்பாட்டை தெரசா மே தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com