அமைதிப் பேச்சு: இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அழைப்பு

அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா அழைப்பு விடுத்துள்ளார்.


அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவுடனான எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி பாஜ்வா புதன்கிழமை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பாகிஸ்தான் வீரர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தலைமை அதிகாரிகள் அடிக்கடி மிரட்டலும் விடுத்து வருகின்றனர்.
பாகிஸ்தான் ராணுவம் சிறந்த தொழில்முறை மற்றும் தீவிர போரிடும் திறன் கொண்டது. அத்தகைய பாகிஸ்தான் ராணுவம், தாய்நாட்டை பாதுகாக்க எப்போதும் தயார் நிலையில் உள்ளது. இதை புரிந்து கொண்டு, பேச்சுவார்த்தை மூலம் அமைதி மற்றும் வளர்ச்சியை இந்தியா ஏற்படுத்த முயன்றால் நன்றாக இருக்கும் என்றார் அவர்.
அப்போது எல்லைப் பகுதி நிலவரம் குறித்து பாஜ்வாவிடம் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.
ஒரு மாதத்தில் எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆய்வு நடத்துவது இது 2ஆவது முறையாகும். இதற்கு முன்பு, எல்லையில் உள்ள சர்பீர் மற்றும் பாண்டு செக்டார் பகுதிகளில் பாஜ்வா ஆய்வு நடத்தினார்.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றதும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார். இந்த அழைப்பை ஏற்று, அமெரிக்காவின் நியூயார்க்கில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சந்தித்துப் பேசுவார் என்று இந்தியா அறிவித்தது. இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் காவல்துறையினர் 3 பேரை கடத்திச் சென்று பயங்கரவாதிகள் கொலை செய்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து, பாகிஸ்தானுடன் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com