பாகிஸ்தானுக்கு ரூ.11ஆயிரம் கோடி பாதுகாப்பு நிதியை நிறுத்தி வைத்தது அமெரிக்கா

அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு அளிக்க இருந்த சுமார் ரூ.11ஆயிரம் கோடி பாதுகாப்பு நிதியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது
பாகிஸ்தானுக்கு ரூ.11ஆயிரம் கோடி பாதுகாப்பு நிதியை நிறுத்தி வைத்தது அமெரிக்கா


அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு அளிக்க இருந்த சுமார் ரூ.11ஆயிரம் கோடி பாதுகாப்பு நிதியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது என்று அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், பாகிஸ்தான் மீது அமெரிக்கா கடும் அதிருப்தியில் உள்ளதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் அளித்து அமெரிக்காவை பாகிஸ்தான் சோதித்துவிட்டது என்று டிரம்ப் சில தினங்களுக்கு முன்பு அதிருப்தி தெரிவித்திருந்தார்.
மேலும், பயங்கரவாதத்தை ஒடுக்க எங்களுக்கு உதவி செய்யாத பாகிஸ்தானுக்கு நாங்களும் நிதியுதவி அளிக்க மாட்டோம்; பயங்கரவாதத்துக்கு எதிராக அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கும் வரை பாதுகாப்புக்கான நிதியுதவி அளிக்கப்படமாட்டாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மின்னஞ்சல் மூலம், அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித்தொடர்பாளர் ராப் மன்னிங் அளித்த பதிலில், பாகிஸ்தானுக்கு அளிக்க இருந்த சுமார் ரூ.11ஆயிரம் கோடி நிதி ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதிபர் டிரம்பின் உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மத்திய ஆசியா ஆகியவற்றுக்கான அமெரிக்க பாதுகாப்புத் துறை துணை செயலராக இருந்த டேவிட் சிட்னி கூறியதாவது:
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கப்படவில்லை. அந்நாட்டுக்கு எதிரான அதிருப்தியை அமெரிக்கா கடுமையாக வெளிப்படுத்திவிட்டது. இருப்பினும், அண்டை நாடுகளுக்கு எதிரான வன்முறைகளை தூண்டிவரும் அமைப்புகளை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரித்து வருகிறது.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஒத்துழைப்பு அளிப்பதாக பாகிஸ்தான் உயரதிகாரிகள் உறுதி அளித்திருப்பினும், தீவிர ஒத்துழைப்பை அந்நாட்டு அளிக்கவில்லை. எனவே, அதிபர் டிரம்ப் அதிருப்தி அடைந்துவிட்டார். தலிபான், லஷ்கர்-ஏ-தொய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா பல முறை அதிருப்தி தெரிவித்துவிட்டது. தலிபான் பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு வெடிப்பொருள்களை எடுத்துச் செல்கின்றனர். தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால்தான் ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பும். இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபடும் அமைப்புகளை ஒடுக்கினால், பெரும் பொருளாதார பலன்களை அந்நாட்டு அரசிடம் இருந்து பாகிஸ்தான் அறுவடை செய்யும் என்று டேவிட் சிட்னி தெரிவித்தார்.
அமெரிக்க வெளியுறவுத் துறையிலும், தேசியப் பாதுகாப்பு கவுன்சிலிலும் டேவிட் சிட்னி பதவி வகித்திருக்கிறார்.
ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தின் தற்காலிக தலைவராகவும் இவர் பதவி வகித்திருக்கிறார்.
இதற்கிடையே, அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எந்த உதவியும் செய்ததில்லை என்று அதிபர் டிரம்ப் கூறுவதை ஏற்க முடியாது என்று அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் ஹுசைன் ஹக்கானி தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு அளிக்க இருந்த 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா ரத்து செய்தது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com