உலகம்

ரசாயன ஆயுதக் கண்காணிப்பு அமைப்பில் இணையம் மூலம் ஊடுருவ ரஷியா முயற்சி: நெதர்லாந்து குற்றச்சாட்டு

DIN

சர்வதேச ரசாயன ஆயுதக் கண்காணிப்பு அமைப்பில் (ஓபிசிடபிள்யூ) இணையதளம் மூலம் ஊடுருவ ரஷியா முயன்றதாக, அந்த அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள நெதர்லாந்து குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், கிழக்கு உக்ரைன் பகுதியில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான விசாரணையிலும் ஊடுருவ முயன்றதாக அந்த நாடு குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் நெதர்லாந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் அங்க் பைலவெல்ட் வியாழக்கிழமை கூறியதாவது:
ஓபிசிடபிள்யூ அமைப்பின் தகவல் சேமிப்பகங்களில் ரஷியா ராணுவத்தின் உளவுப் பிரிவான ஜிஆர்யூ, இணையதளம் மூலம் ஊடுருவி தகவல்களைத் திருட முயன்றது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்த தகவல் திருட்டு முயற்சியை, நெதர்லாந்து அதிகாரிகள் முறியடித்தனர். அதனைத் தொடர்ந்து, ரஷியத் தூதரகத்தைச் சேர்ந்த 4 ராணுவ உளவுப் பிரிவு அதிகாரிகள் நெதர்லாந்திலிருந்து உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதே போல், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் பகுதியில் எம்ஹெச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான விசாரணையிலும் இணையதளம் மூலம் ஊடுருவ ரஷிய உளவுத் துறை முயன்று வருகிறது.
எனவே, அந்த ஊடுருவலைத் தடுப்பதற்காக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக, மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வருகிறோம் என்றார் அவர்.
பிரிட்டன் கண்டனம்: இதுகுறித்து நெதர்லாந்துக்கான பிரிட்டன் தூதர் பீட்டர் வில்ஸன் கூறுகையில், பிற நாடுகளில் அத்துமீறி தீய செயல்களை மேற்கொள்ள ரஷிய உளவுத் துறையை இனியும் அனுமதிக்கக் கூடாது என்று கடுமையாகத் தெரிவித்தார்.
பிரிட்டனின் சாலிஸ்பரி நகரில், அந்த நாட்டுக்காக முன்னர் வேவு பார்த்த முன்னாள் ரஷிய உளவாளி செர்கெய் ஸ்க்ரிபால் மீதும், அவரது மகள் மீதும் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட நச்சுத் தாக்குதலை ரஷிய ராணுவத்தின் உளவுப் பிரிவுதான் நடத்தியது என்று பிரிட்டன் குற்றம் சாட்டி வருகிறது.
அந்தத் தாக்குதல் குறித்து ஓபிசிடபிள்யூ அமைப்பு விசாரணை நடத்தி வரும் சூழலில், அந்த அமைப்பில் ஊடுருவ ரஷிய முயன்றதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

"கற்பனை கதை!'

சர்வதேச ரசாயன ஆயுதக் கண்காணிப்பு அமைப்பில் இணையதளம் மூலம் ஊடுருவ முயன்றதாக தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை ரஷியா மறுத்துள்ளது.
இதுகுறித்து, ரஷிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஸகாரோவா வியாழக்கிழமை கூறியதாவது:
ஓபிசிடபிள்யூ அமைப்பின் மீதான ஊடுருவல் குறித்து எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, வெறும் கற்பனைக் கதையே ஆகும். ஏற்கனவே, நச்சுத் தாக்குதல் குறித்த கதையுடன் இந்த ஊடுருவல் கதையை இணைத்து, ரஷியாவுக்கு எதிரான கருத்தை உருவாக்க மேற்கொள்ளப்படும் சதிவேலையே இது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT