18 நவம்பர் 2018

வேண்டாம் என்றாலும் நம்முடன் வர்த்தகம் செய்யத் துடிக்கும் இந்தியா: ட்ரம்ப் கிண்டல் 

DIN | Published: 11th September 2018 02:35 PM

 

நியூயார்க்: வேண்டாம் என்றாலும் நம்முடன் வர்த்தகம் செய்ய இந்தியா துடிக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிண்டல் செய்துள்ளார். 

அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. 

இதன் காரணமாக இந்நாடுகளுடன் போட்டி போட்டு பொருட்களுக்கு வரிவிதிக்கும் வகையிலும் அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது வேறொரு வகையில் உலகளாவிய வர்த்தகப் போராகவும் மாறியுள்ளது.

இந்நிலையில் வேண்டாம் என்றாலும் நம்முடன் வர்த்தகம் செய்ய இந்தியா துடிக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிண்டல் செய்துள்ளார். 
 
இதுதொடர்பாக வாஷிங்டனில் நடந்த தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில்  ட்ரம்ப் பேசியதாவது:

இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து நல்லுறவைப் பேணி வருகிறது. ஆனாலும் வர்த்தக செயல்பாடுகளில் அமெரிக்காவின் உரிமையை நாங்கள் இனி விட்டுக் கொடுப்பதில்லை. பல ஆண்டுகளாக அவர்களுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டு விட்டது. இனி அதைத் தொடர்வதாக இல்லை. 

குறிப்பாக அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு நாங்கள் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளோம். ஆனாலும், அவர்கள் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யவே விரும்புகிறார்கள். வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கிக் கொள்வதற்காக இந்தியாவில் இருந்து சமீபத்தில் கூட பேசினார்கள். ஆனால் நாம் அவசரப்படவில்லை. பொறுமையாக கவனித்து வருகிறோம். 

முந்தைய ஆட்சியாளர்களின் காலத்தில் வேண்டுமானால் பல நாடுகளிடமும், அமெரிக்கா தனது உரிமையை விட்டுக் கொடுத்திருக்கலாம். இனி அந்த சூழல் இல்லை. மற்ற நாடுகளின் சாதுர்யங்கள் எதுவும் ட்ரம்பிடம் பலிக்காது.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags : india USA trade agreement restrictions trump இந்தியா அமெரிக்கா இறக்குமதி வர்த்தகம் ட்ரம்ப்

More from the section

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார் அதிபர் சிறீசேனா: சபாநாயகர் புறக்கணிப்பு
மாலத்தீவுடன் நெருங்கிய நட்புறவு: பிரதமர் மோடி விருப்பம்
ரோஹிங்கயாக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்: ஐ.நா. கண்டனம்
எங்கள் ஆதரவாளர்களின் தகவல்களை ராஜபட்ச அரசுக்கு வழங்க வேண்டாம்: முகநூல் நிறுவனத்துக்கு ரணில் கட்சி கோரிக்கை
கஷோகி படுகொலை சவூதி இளவரசர் மீது சிஐஏ குற்றச்சாட்டு?