உலகம்

கொரிய மாநாடு: ஏவுகணை சோதனை தளத்தை மூட வட கொரியா ஒப்புதல்

DIN


வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையே புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சர்ச்சைக்குரிய தனது ஏவுகணை சோதனை தளத்தை சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் மூட வட கொரியா ஒப்புக்கொண்டது.
மேலும், தென் கொரியத் தலைநகர் சியோலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப் பயணம் மேற்கொள்ளவும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் சம்மதம் தெரிவித்தார்.
இதுகுறித்து, பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜே-இன் கூறியதாவது:
அதிபர் கிம் ஜோங்-உனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்கும் இலக்கை முன்னெடுத்துச் செல்ல இருவரும் ஒப்புக் கொண்டோம்.
மேலும், வட கொரியாவின் டாங்சாங்-ரீ பகுதியில் அமைந்துள்ள ஏவுகணை சோதனை மையத்தை சர்வதேசப் பார்வையாளர்கள் முன்னிலையில் நிரந்தரமாக மூடுவதற்கு அதிபர் கிம் ஜோங்-உன் சம்மதம் தெரிவித்துள்ளார். 
அத்துடன், இந்த ஆண்டுக்குள் தென் கொரியத் தலைநகர் சியோலுக்கு வருகை தரவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
அவரது வருகை, இரு கொரிய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவில் ஒரு மைல்கல்லாக அமையும்.
அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் தற்போது ஏற்பட்டுள்ள சுணக்கம் விரைவில் நீங்கி, அதிபர் கிம்முக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் புதிய உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று நம்புகிறேன்.
அணு ஆயுதங்களைக் கைவிடும் வட கொரியாவின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப அமெரிக்காவும் செயல்பட்டால், தனது யாங்பியான் அணு ஆயுத மையத்தையும் மூட வட கொரியா முன்வரும் என்றார் அவர்.
பேச்சுவார்த்தை தொடர்பாக கிம் ஜோங்-உன் கூறியதாவது:
தென் கொரிய அதிபர் மூன் ஜே-இனுடன் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்பாடு, கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் மிகப் பெரிய முன்னேற்றமாகும்.
அந்த ஒப்பந்தம், கொரிய ஒருங்கிணைப்பு குறித்து இரு நாட்டு மக்களின் மனங்களில் கொழுந்து விட்டெரியும் வேட்கைக்கு புதிய நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றார் அவர்.
இந்த உடன்படிக்கையில், கொரிய போரால் பிரிந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் சந்தித்துக் கொள்வதற்கான நிரந்தர மையத்தை அமைப்பது, இரு நாடுகளுக்கும் இடையே ரயில் பாதை மற்றும் சாலை இணைப்புகளை ஏற்படுத்துவது, 2032-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இரு நாடுகளும் இணைந்து பங்கேற்பது போன்ற பல்வேறு நல்லிணக்க அம்சங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் முறை: புதன்கிழமை ஒப்புக்கொள்ளப்பட்டபடி அதிபர் கிம் ஜோங்-உன் சியோல் சென்றால், 1950-53 ஆண்டுகளில் நடைபெற்ற கொரியப் போருக்குப் பிறகு தென் கொரியத் தலைநகர் செல்லும் முதல் வட கொரிய அதிபர் என்ற வரலாற்றுச் சிறப்பை அவர் பெறுவார்.
டிரம்ப் வரவேற்பு: பியாங்கியோங்கில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் கூறியுள்ளதாவது:
வட - தென் கொரிய அதிபர்கள் புதன்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில், தனது அணு ஆயுத மையங்களில் சோதனை நடத்தவும், இறுதிக்கட்ட பேச்சுவாத்தைக்கு உடன்படவும் வட கொரியா சம்மதித்துள்ளது. 
இது மிகவும் உற்சாகமளிப்பதாக உள்ளது என்று அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதிவரை தொடர்ந்து நடத்தி வந்தது.
இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.
இந்தச் சூழலில், தென் கொரியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புகள் இரண்டு முறை நடைபெற்றது.


இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பையும் கிம் ஜோங்-உன் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது உள்ளிட்ட 4 அம்ச தீர்மானத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
எனினும், அந்த ஒப்பந்த அம்சங்ககளை நிறைவேற்றுவதில் வட கொரியா முனைப்பு காட்டவில்லை என்று அமெரிக்காவும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மிரட்டல் பாணியை கையாள்வதாக வட கொரியாவும் ஒன்றின் மீது ஒன்று குற்றம் சாட்டி வந்ததால், இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்தச் சூழலில், 3-ஆவது கொரிய மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் வட கொரிய தலைநகர் பியாங்கியோங்குக்கு செவ்வாய்க்கிழமை வந்தார்.
சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தென் கொரிய அதிபர் ஒருவர் வட கொரியா வந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அதையடுத்து, அவருக்கும், அதிபர் கிம் ஜோங்-உனுக்கும் இடையே தற்போது நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தையில், இந்த உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT