அரசுத் துறைகள் முடக்கம் குறித்து "மிக முக்கிய' அறிவிப்பு: டிரம்ப் உறுதி

அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கம் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
அரசுத் துறைகள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்தி வெள்ளை மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்.
அரசுத் துறைகள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்தி வெள்ளை மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்.

அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கம் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப நிதி ஒதுக்கீடு செய்வதில் அவருக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருக்கும் கருத்து வேறுபாடு நீடித்து வருவதால் கடந்த 4 வாரங்களாக முக்கிய அரசுத் துறைகள் முடக்கப்பட்டுள்ளன.
இதனால், லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மெக்ஸிகோ எல்லைப் பகுதி பிரச்னை குறித்தும், அரசுத் துறைகள் முடக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்தும் சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு (இந்திய நேரப்படி ஜன. 20) மிக முக்கியமான அறிவிப்பை வெளியிடுவேன்.
வெள்ளை மாளிகையிலிருந்து நான் வெளியிடும் அந்த அறிவிப்பை அனைவரும் உடனடியாகத் தெரிந்துகொள்ளலாம் என்று தனது பதிவில் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் அகதிகள் வருவதைத் தடுக்கும் வகையில், எல்லை நெடுகிலும் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினரோ, அவ்வாறு சுவர் எழுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், பல்வேறு முக்கிய அரசுத் துறைகளுக்கான பட்ஜெட் காலம் கடந்த மாதம் 22-ஆம் தேதியோடு முடிவுக்கு வந்தது.
அதையடுத்து, அந்தத் துறைகளுக்கு புதிதாக நிதி ஒதுக்கீடு செய்வதற்கான பட்ஜெட் மசோதாவை நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அந்த பட்ஜெட்டில், மெக்ஸிகோ எல்லைச் சுவர் எழுப்புவதற்காக 570 கோடி டாலர் (சுமார் ரூ.45,125 கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
எனினும், அதற்கு ஜனநாயகக் கட்சியினர் மிகப் பிடிவாதமாக மறுப்பு தெரிவித்து வருகின்றனர். 
அவர்கள் கூறுவது போல், எல்லைச் சுவருக்கு நிதி ஒதுக்கீடு இல்லாத பட்ஜெட்டை ஏற்பதற்கு அதிபர் டிரம்ப்பும் தயாராக இல்லை.
இதுதொடர்பாக தொடர்ந்து பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றும், ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இதன் காரணமாக, பல்வேறு முக்கிய அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் அவை கடந்த மாதம் 22-ஆம் தேதியிலிருந்து முடக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிக நாள்களுக்கு நீடித்து வரும் இந்த அரசுத் துறைமுடக்கத்தின் விளைவாக, 8 லட்சம் அரசு ஊழியர்கள்  ஊதியமில்லாமல் பணியாற்றவோ, கட்டாய விடுப்பில் செல்லவோ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த இக்கட்டான சூழலில், இந்த விவகாரம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக டிரம்ப் கூறியுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com