மீண்டும் அணுகுண்டு சோதனை?: வட கொரியா மறைமுக எச்சரிக்கை

அமெரிக்காவும், தென் கொரியாவும் கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொண்டால், தாங்கள் மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்துவதற்கு வாய்ப்புள்ளதாக வட கொரியா மறைமுக மிரட்டல் விடுத்துள்ளது.
சிங்கப்பூர் சந்திப்பின்போது, தாம் கையெழுத்திட்ட கூட்டறிக்கையை செய்தியாளர்களிடம் காட்டும் அதிபர் டிரம்ப். உடன் கிம் ஜோங்-உன் (கோப்புப் படம்).
சிங்கப்பூர் சந்திப்பின்போது, தாம் கையெழுத்திட்ட கூட்டறிக்கையை செய்தியாளர்களிடம் காட்டும் அதிபர் டிரம்ப். உடன் கிம் ஜோங்-உன் (கோப்புப் படம்).


அமெரிக்காவும், தென் கொரியாவும் கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொண்டால், தாங்கள் மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்துவதற்கு வாய்ப்புள்ளதாக வட கொரியா மறைமுக மிரட்டல் விடுத்துள்ளது.
மேலும், அத்தகைய ராணுவ பயிற்சி, தாங்கள் அணு ஆயுதங்களைக் கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையை பாதிக்கும் என்று அந்த நாடு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வட கொரிய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கொரிய தீபகற்பம் அருகே அமெரிக்காவும், தென் கொரியாவும் தங்களது வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சியை அடுத்த மாதம் மீண்டும் நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, அதிபர் கிம் ஜோங்-உன்னும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சிங்கப்பூரில் வெளியிட்ட கூட்டறிக்கைக்கு எதிரானதாகும்.
எங்களது எதிர்ப்பையும் மீறி அமெரிக்க - தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்றால், அது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
சிங்கப்பூர் கூட்டறிக்கையை அமெரிக்கா மீறினால், அதே அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள எங்களது வாக்குறுதிகளையும் நாங்கள் மீற வேண்டியிருக்கும் என்றார் அவர்.
ஐ.நா. தடையையும் மீறி அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதித்து வந்த வட கொரியா, அந்த ஆயுதங்களைக் கைவிடத் தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னும் சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் முறையாக நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த பேச்சுவார்த்தையின் முடிவில், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
மேலும், வட கொரியாவின் எதிர்ப்பை மீறி ஆண்டுதோறும் நடத்தி வந்த அமெரிக்க - தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சியை நிறுத்த அதிபர் டிரம்ப் ஒப்புக் கொண்டார்.
வட கொரியாவும், அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை இனி மேற்கொள்வதில்லை என்று உறுதி பூண்டது.
இந்த நிலையில், அதிபர் டிரம்ப்புக்கும், கிம் ஜோங்-உன்னுக்கும் இடையே வியத்நாம் தலைநகர் ஹனோயில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2-ஆவது சந்திப்பு தோல்வியில் முடிந்தது.
அதனைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் தேக்க நிலை ஏற்பட்டது.
எனினும், கடந்த மாதம் தென் கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அதிபர் டிரம்ப், எதிர்பாராத விதமாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கு அழைப்பு விடுத்து எல்லைப் பகுதியில் அவரைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சூழலிலும், சிங்கப்பூர் பேச்சவார்த்தையின்போது டிரம்ப் ஒப்புக்கொண்டதற்கு மாறாக அமெரிக்க - தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சி அடுத்த மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதற்குப் பதிலடியாக, அந்தப் பேச்சுவார்த்தையின்போது டிரம்ப்பிடம் அளித்த உறுதிமொழியை தாங்கள் மீறக்கூடும் என்று கூறியுள்ளதன் மூலம், தாங்கள் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்துவோம் என்று வட கொரியா மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com