நவாஸ் ஷெரீஃபின் ஜாமீன் மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு

ஊழல் வழக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, அந்த நாட்டு
நவாஸ் ஷெரீஃபின் ஜாமீன் மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு


ஊழல் வழக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, அந்த நாட்டு உச்சநீதிமன்றம் வரும் 26-ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது.
அல்-அஜீஸா இரும்பாலை ஊழல் வழக்கில்,  நவாஸுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இதையடுத்து, அவர்  லாகூரிலுள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 25-ஆம் தேதி உத்தரவிட்டது.
நவாஸ் ஷெரீஃபின் உடல் நிலை மோசமாக இருப்பதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அவரது சார்பில் இந்த மாதம் 6-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை, தலைமை நீதிபதி சயீது கோஸா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அந்த மனு குறித்து விளக்கமளிக்குமாறு தேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பான விசாரணையை இந்த மாதம் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
நவாஸ் ஷெரீஃபுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து அதே நாளில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் நாளிதழ் தெரிவித்துள்ளது.
முன்னதாக, நவாஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் காவாஜா ஹாரிஸ், இருதய நோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட 17 வகை உடல் உபாதைகளால் நவாஸ் ஷெரீஃப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், சிறையில் அவரது உடல் நிலை மேலும் மோசமடையும் எனவும் அவர் கவலை தெரிவித்தார்.
சிறையில் நவாஸ் ஷெரீஃபுக்கு போதிய மருத்துவ வசதிகள் அளிப்பதில்லை என்று இம்ரான் கான் தலைமையிலான மத்திய அரசு மீது நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தச் சூழலில், அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 26-ஆம் தேதி வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com