ஒரு நாட்டிற்கு அங்கீகாரம் என்பது என்ன?

ஒரு நாட்டிற்கு அங்கீகாரம் என்பது என்ன?

ஒரு நாட்டிற்கு அங்கீகாரம் என்பது என்ன?

நாட்டின் அங்கீகாரம்
 (Recognition of state)

பொருள் விளக்கம்
    

சர்வதேசச் சட்டத்தில் செயல்படும் முக்கியமான நபர், நாடே என்பதால் ஒரு நாடு ஒருக்கிறது என்றோ இல்லை என்றோ மற்ற நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படுவது சர்வதேசச் சட்டத்தில் மிகப் பெரும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். ஏற்கனவே இருந்த நாடு இல்லாமல் போய்விட்டால், அந்நாட்டுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டிருந்த மற்ற நாடுகளின் நிலைப்பாட்டில் தவிர்க்க முடியாமல் மாற்றம் ஏற்படும்.  அதுபோல  புதிதாக ஒரு நாடு உருவாவதும் சர்வதேச உறவுகளின் மாற்றங்களை ஏற்படுத்தும்.  நாட்டின் அங்கீகாரம் என்பது, ஒரு நாட்டை சர்வதேச அரங்கில் ஒர் சட்ட நபராக மற்ற நாடுகள் ஏற்றுக் கொள்வதையே குறிக்கும். ஆனால் ஒரு நாடு மற்றொரு நாட்டை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ள மறுப்பதும் அந்நாட்டின் அரசியல் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டதாகும்.  அதாவது நாட்டின் அங்கீகாரம் என்பது முதன்மையாக சட்டக் கேள்வி அல்ல, அது ஒர் அரசியல் கேள்வியாகும்.

வரையறை
 (Definition)

    

ஒரு நாட்டை அங்கீகரிப்பது என்பது, அங்கீகரிக்கப்படும் நாடு, ஒரு நாட்டிற்குரிய குணங்களைக் கொண்டிருக்கிறது என்று அதை அங்கீகரிக்கும் நாடு ஏற்றுக் கொள்வது ஆகும் என்று கெல்சன் (Kelson) அங்கீகாரத்தை வரையறுக்கிறார். ஃபென்விக் (Fenwicke) ஒரு புதிய நாடு சர்வதேசச் சட்ட நபரத்துவத்தை (International Personality) அடைந்துவிட்டது என்று சர்வதேசச் சமுதாயம் முறைப்படி ஏற்றுக் கொள்வதே நாட்டின் அங்கீகாரம் என்கிறார்.

சர்வதேசச் சட்ட நிறுவனம் (Institute of International Law), நாட்டின் அங்கீகாரம் என்பது
(i) அரசியல் ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மனித சமுதாயத்தை கொண்டதாகவும்,
(ii) ஏற்கனவே இருக்கும் பிற நாடுகளில் இருந்து வேறுபட்டு தனித்து சுதந்திரமானதாகவும், 
(iii) சர்வதேசச் சட்டத்தின் கடப்பாடுகளை நிறைவேற்றும் தகுதியுடையதாகவும் இருக்கும்
(iv) ஓர் வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியை
(v) சர்வதேசச் சமுதாயத்தின் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளும்  தங்கள் எண்ணத்தை 
(vi) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள்
(vii) வெளிப்படுத்தும் சுயேச்சையான செயல் ஆகும்” – என்று வரையறுக்கின்றது.

ஓப்பன் ஹீய்ம் (Oppenheim), ஒரு நாட்டை சர்வதேச சமுதாயத்தின் உறுப்பினராக அங்கீகரிப்பதன் மூலம், ஏற்கனவே இருக்கும் நாடுகள் தங்களது கருத்தில் அப்புதிய நாடு, சர்வதேசச் சட்டம் கோரும் நாட்டுத் தகுதிக்குரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்கிறது என்பதை அறிவிக்கின்றன.
    

எனவே சர்வதேசச் சட்டத்தின் படி நாட்டின் தகுதிக்குரிய (Statehood), நிபந்தனைகளான (a) மக்கள் (b) ஒரு நிலப்பகுதி (c) ஒரு அரசாங்கம் மற்றும் (d) இறையாண்மை அல்லது மற்ற நாடுகளுடன் உறவுகளில் ஈடுபடும் தகுதி ஆகியவற்றை பூர்த்தி செய்யும் ஒரு அரசியல் சமுதாயம் மற்ற நாடுகளால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படலாம்.  ஆனால் சர்வதேசச் சட்டம், இந்நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டதை கண்டறியும் அளவுகோல் எதனையும் நிர்ணயிக்கவில்லை. அது அங்கீகரிக்கும் மற்ற நாடுகளின் முடிவிற்கே விடப்பட்டுள்ளது.  எனவே தான் நாட்டின் அங்கீகாரம் என்பது சட்டக் கேள்வியாக இல்லாமல் அரசியல் கேள்வியாக இருப்பதை நாம் காண்கிறோம்.

அங்கீகாரம் பற்றிய கொள்கைகள் (Theories of Recognition)
    

உண்மை நடப்பில் ஒரு நாட்டின அங்கீகாரத்திற்கும் அங்கீகாரம் பற்றிய கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.  ஒரு நாட்டை அங்கீகரிப்பதும் அங்கீகரிக்க மறுப்பதும் அந்தந்த நாடுகளின் உள்நாட்டு – சர்வதேச அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றன.  எனவே அங்கீகாரம் பற்றிய சட்டவியலறிஞர்களின் கொள்கைகள்  உண்மை நடப்பை ஆராய்வதாக இருக்கிறதேயன்றி உண்மை நடப்பை உருவாக்குவதாக இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அங்கீகாரம் பற்றி இரண்டு கொள்கைகள் சர்வதேசச் சட்டவியலாளர்கள் மத்தியில் நிலவுகின்றன.  ஆவை,
(1)    உருவாக்கும் கொள்கை 
(2)    விளம்புகைக் கொள்கை 

1.    உருவாக்கும் கொள்கை (Constitutive Theory)
    

இக்கொள்கையின்படி ஒரு நாடு உருவானதாக காரணமாக அங்கீகரிக்கப்படவில்லை. மாறாக சர்வதேசச் சமுதாயத்தால் ஒரு அரசியல் சமுதாயம் அங்கீகரிக்கபடுவதனாலேயே ஒரு நாடு உருவாகிறது.  அதாவது அங்கீகாரமே ஒரு நாட்டை உருவாக்குகிறது. எனவே இக்கொள்கை உருவாக்கும் கொள்கை என்பபடுகிறது.  இக்கொள்கையாளர்களில் ஷெகல், அன்ஸிடோலி,  ஒப்பன் ஹீய்ம் போன்றோர் முதன்மையானவர்களாவர்.
    

ஓப்பன் ஹீய்ம், அங்கீகாரத்தின் மூலமாக  மட்டுமே ஒரு அரசு சர்வதேச நபராக ஆகின்றது என்று கூறுகிறார்.  உருவாக்கும் கொள்கையின்படி, ஒரு அரசியல் குழுவின் நாட்டுத் தகுதியும் அது சர்வதேச ஒழுங்கமைப்பில் பங்கெடுத்துக் கொள்வதும், ஏற்கனவே இருக்கும் நாடுகளால் அங்கீகரிக்கப்படும் அளவிற்கு மட்டுமே சாத்தியமானதாகும். ஒரு நாடு அங்கீகரிக்குப்படும் வரை, அது சர்வதேசச் சட்டத்தின் கீழ் எவ்வித உரிமையையும் கோர முடியாது.

ஆன்ஸிடோலி, ஒரு அரசின் அங்கீகாரத்திற்கான முதல் உடன்படிக்கையின் மூலமாக மட்டுமே, அந்த அரசு சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்ட நபராக ஆகின்றது என்கிறார்.

விமர்சனம் உருவாக்கும் கொள்கை மீது பல்வேறு சட்ட அறிஞர்கள் விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். அவை:

(i) அங்கீகாரத்தின் மூலமாகவே நாடு உருவாக்கப்படுகிறது என்று கூறும் உருவாக்கும் கொள்கையால் நடைமுறையில் ஒரு சில அரசகளால் அங்கீகரிக்கப்பட்டு மற்ற அரசுகளால் அங்கீகரிக்கப்படாமல் இருக்கும் ஓர் அரசின் நிலையினை விளக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில் அந்த அரசு பகுதியளவு உருவாக்கப்பட்டும்  பகுதியளவு உருவாகாமலும் இருப்பதாகக் கூறமுடியுமா என்று கேள்வி எழுப்புகின்றனர்.
(ii) உருவாக்கும் கொள்கைப்படி, அங்கீகரிக்கப்படாத நாடு, உலக அரங்கில் உருவாகாத நாடே ஆகும். எனவே அந்நாட்டிற்கு எவ்வித உரிமையும் கடமையும் கிடையாது. ஆனால் உண்மை நடப்பில் அங்கீகரிக்கப்படாத நாட்டுடன் உடன்படிக்கைகள் மேற்கொள்ளவும்படுகின்றன. மக்கள் சீனம்
பெரும்பாலான நாடுகளால் அங்கீகரிக்கப்படாத நிலையிலும் ஐ.நா.சபை அந்நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
(iii) உருவாக்கும் கொள்கையின்படி, அங்கீகரிக்கும் உடன்படிக்கையின் மூலம் மட்டுமே ஒரு நாடு உருவாகிறது. அவ்வாறெனில் அந்த அங்கீகரிக்கும் உடன்படிக்கையில் ஒப்பிமிடும் போது அந்நாடு உருவாகவே இல்லை, அவ்வுடன்படிக்கை மூலமே உருவாகிறது.  ஆனால் சர்வதேச உடன்படிக்கைகள் நாடுகளுக்கு இடையில் மட்டுமே எட்டப்பட முடியும்.  அந்நிலையில் இன்று
அங்கீகரிக்கப்படாத நாட்டுடன் செய்து கொள்ளப்படும் அங்கீகாரத்திற்கான உடன்படிக்கை செல்லத்தக்க  உடன்படிக்கை ஆகுமா? செல்லாத ஒரு உடன்படிக்கையின் மூலம் ஒரு நாடு உருவாவதாக கூறமுடியுமா என்று கேள்வி எழுப்புகின்றனர்.
(iv) சர்வதேசச் சட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்படுவதற்கு முன் உள்ள செயல்களுக்கும் அங்கீகாரம் பொருத்தக் கூடியதாகும். உருவாக்கும் கொள்கையின்படி அங்கீகாரத்தின் மூலமாக மட்டுமே ஒரு நாடு உருவாகிறது எனில், அதற்கு முன் இல்லாத ஒரு நாட்டின் முந்திய செயல்களின் நிலைமை என்ன என்பதை உருவாக்கும் கொள்கை விளக்கவில்லை என்ற விமர்சனமும் முன் வைக்கப்படுகின்றது.

2.    விளம்புகைக் கொள்கை (Declaratory Theory)
    

விளம்புகைக் கொள்கையின்படி, ஒரு புதிய நாடு அல்லது ஒரு புதிய அரசாங்கத்தின் அதிகாரம் என்பது அது மற்ற நாடுகளால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பே உருவாகிவிடுகிறது. ஒரு நாடு உருவாவதற்கும் அங்கீகாரத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை.  ஏற்கனவே உருவாகிவிட்ட நாடு இருக்கின்றது என்பதை அறிவிப்பது அல்லது விளம்புகை செய்வது மட்டுமே அங்கீகாரம் ஆகும்.  எனவே இக்கொள்கை விளம்புகைக் கொள்கை என்பபடுகிறது.

விளம்புகைக் கொள்கையின்படி, நாட்டின் அங்கீகாரம் ஏற்கனவே இருக்கும் நாடு பற்றிய சாட்சியமே ஆகும்.  அதாவது அந்த நாடு சர்வதேச அரங்கில் இருக்கிறது என்பதற்கான ஆதார சாட்சியமே அங்கீகாரம் ஆகும் என இக்கொள்கை கூறுவதால் இதனை சாட்சியளிக்கும் கொள்கை (Evidentiary Theory) என்றும் கூறுவர்.

இக்கொள்கையின்படி, நாட்டின் அங்கீகாரம் என்பது சட்ட விதிப்படியான செயல் அல்ல, மாறாக அது ஓர் அரசியல் ரீதியிலான செயல் ஆகும். இதன் ஓரே நோக்கம், அங்கீகரிக்கப்படும் புதிய நாட்டுடன் அங்கீகரிக்கும் நாடுகள் தூதரக உறவை ஏற்படுத்திக் கொள்வது மட்டுமே என்று விளம்புகைக் கொள்கை கூறுகிறது. விளம்புகைக் கொள்கையாளர்களின், ஹால், வாங்கர், ப்ரெய்லி, பிட்கார்பெட் மற்றும் ஃபிஷர் ஆகியோர் முதன்மையானவர்கள் ஆவர்.

பேரா. ஹாலின் கூற்றுப்படி, ஒரு நாடு, நாட்டுக்கான தகுதிகளை அடைந்தவுடன் நாடுகளின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக உரிமையுடன் தானே ஆகிவிடுகிறது. மற்ற நாடுகளின் அங்கீகாரத்திற்காக அது காத்திருப்பதில்லை. பிட் கார்பட், ஒரு அரசியல் சமுதாயம் நாட்டிற்குரிய தகுதிகளைக் கொண்டிருக்கும் வரை, நாட்டிற்கான உரிமைகளையும், கடமைகளையும் அது பெறுவதற்கும் முறையான அங்கீகாரம் பெற வேண்டுமென்ற நிபந்தனை தேவையற்றது என்கிறார். எனவே தான் பிரெய்லி, ஒரு புதிய நாட்டிற்கு அங்கீகாரம் வழங்குவது என்பது அந்நாட்டை உருவாக்குவது அல்ல, மாறாக அந்நாடு பற்றி விளம்புகை செய்யும் செயலாகும் என்றார்.

சோவியத் யூனியனின் சர்வதேசச் சட்டமும் விளம்புகைக் கொள்கையினையே ஏற்கிறர். சோவியத் யூனியனின் பார்வையில், ஒரு நாட்டின் பிறப்பு என்பது அந்நாட்டின் உள் விதியின் செயல்பாடு ஆகுமே தவிர, சர்வதேசச் சட்ட விதியின் செயல்பாடு அல்ல: 

உருவாக்கும் கொள்கையும் விளம்புகை கொள்கையும் இணைந்ததே அங்கீகாரம் பற்றிய பொருத்தமான கொள்கை: 

மேலே கண்ட இரு கொள்கைகள் பற்றிய விவாதங்களில் இருந்து, ஒரு நாட்டின் அங்கீகாரம் என்பது ஒரே நேரத்தில் விளம்புகையாகவும் உருவாக்கும் தன்மையுடையதாகவும் இருக்கிறது என்று நாம் முடிவுக்கு வரலாம். ஸ்டார்க், “அங்கீகாரம் பற்றிய உண்மையான கொள்கை இவ்விரு கோட்பாடுகளுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது. வெவ்வேறு நாடுகளின், வெவ்வேறு பொருண்மைகளுக்கு இவ்விரண்டு கொள்கைகளில் ஏதேனுமொரு கொள்கை பொருந்துவதாக இருக்கும்” என்கிறார். உருவாக்கும் கொள்கையின் தீவிர ஆதரவாளரான ஒப்பன் ஹீய்மும் கூட, “அங்கீகாரம் என்பது ஏற்கனவே இருக்கும் பொருண்மை பற்றி விளம்புகை செய்கிறது.  ஆனால் அது உருவாக்கும் தன்மையதாக இருக்கிறது” என்று ஒப்புக்கொள்கிறார்.

எந்தவொரு நாடும் மற்ற நாடுகள் அங்கீகரித்தால் தான் நாடாக இருக்கும் என்பதில்லை. அங்கீகாரம் இல்லாவிட்டாலும் அது நாடாகவே இருக்கும். அதுபோல எந்தவொரு நாட்டிற்கும் புதிய நாடு எதனையும் அங்கீகரித்தே ஆக வேண்டும் என்ற கடமை எதுவும் கிடையாது. அதே சமயத்தில் எந்த ஒரு புதிய நாட்டிற்கும் மற்ற நாடுகளால் தான் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோரும் உரிமையும் கிடையாது.  நாடுகள் அவரவரது பொருளாதார-அரசியல் நலனை மனதில் கொண்டு புதிய நாட்டை அங்கீகாரம் செய்யவோ, அங்கீகரிக்க, மறுக்கவோ செய்கின்றன.  அதுபோல புதிதாக உருவான நாடுகளும்,  அந்தந்த நாடுகளில் பொருளாதார – அரசியல் நலனை மனதில் கொண்டு மற்ற நாடுகளின் அங்கீகாரம் வேண்டுமென்றோ அல்லது அங்கீகாரம் தேவையில்லை என்றோ முடிவுகள் எடுக்கின்றன.

அங்கீகாரம் செய்யும் முறைகளும் வகைகளும் (Modes and Kinds of recognition)
    

ஒரு புதிய நாட்டிற்கான அங்கீகாரம் இரண்டு முறைகளில் வழங்கப்படலாம். அவை, 1) நடப்புநிலை அங்கீகாரம் 2) சட்டநிலை அங்கீகாரம்   ஆகியனவாகும், தூதரக உறவுகள் மூலம் ஒரு புதிய நாட்டை அங்கீகரிக்கும் ஆகும்.  மாறாக நடப்புநிலை அங்கீகாரம் என்பது முறையான உடன்படிக்கையோ தூதரக உறவுகளோ இல்லாமல் நடைமுறைத் தேவைக்காக அதனை ஒரு நாடாகக் கருதிச் செயல்படுவது ஆகும்.

நடப்புநிலை அங்கீகாரம் (Defacto Recognition)
    

நீதிபதி லாப்டர்பாக்ட் (Lauterpacht), நடப்புநிலை அங்கீகாரம் என்பது, அங்கீகரிக்கும் நாடு, அங்கீகரிக்கப்படும் புதிய நாட்டுடன் தூதரக உறவை ஏற்படுத்த விரும்பாத போது வழங்கப்படும் அங்கீகாரமாகும் என்கிறார்.  அதனை தற்காலிக அங்கீகாரம் அல்லது அங்கீகாரத்தின் முதற்கட்டம் எனலாம்.  
 

ஜார்ஜ் ஸ்வர்ஷன்பெர்ஜர்

அதனால் தான் ஜார்ஜ் ஸ்வர்ஷன்பெர்ஜர் (Georg Schwarzenberger) ஏதேனுமொரு நாட்டிற்கு அங்கீகாரம் வழங்குவதை தாமதப்படுத்த வேண்டும் என்று ஒரு நாடு விரும்பினால், அது முதல் கட்டாக நடப்புநிலை அங்கீகாரத்தையே அந்நாட்டிற்கு வழங்கும் என்றார். ஒரு நாட்டிற்கு நடப்புநிலை அங்கீகாரம் மட்டும் வழங்குவதற்கான காரணம் அந்நாடு ஸ்திரமாமக நிலைக்குமா அல்லது குறுகிய காலத்தில் கவிழ்ந்து விடுமா?  அல்லது  அப்படியே நிலைத்தாலும் அந்நாட்டால் சர்வதேசக் கடப்பாடுகளை நிறைவேற்ற இயலுமா என்ற சந்தேகமே ஆகும்.

ஒப்பன்ஹீய்மின் கருத்துப்படி, ஒரு புதிய நாட்டின் அரசு, எந்தவொரு நாட்டிற்கும் கீழ்ப்படியாமல் சுதந்திரமானதாகவும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள நில எல்லைப்பகுதிக்குள் முழு அதிகாரம் செலுத்துவதாகவும் இருந்தாலும் கூட அங்கீகரிக்கும் நாட்டின் பார்வையில், அது போதுமாமன நிலைத்தன்மையை அடையவில்லை அல்லது சர்வதேசக் கடப்பாடுகளை நிறைவேற்றும் விருப்பமோ தகுதியோ அதற்கு இல்லை என்று கருதும் போதே அந்நாடு அல்லது அரசாங்கத்திற்கு நடப்புநிலை அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

நடப்புநிலை அங்கீகாரமே உட்கிடை அங்கீகாரம் அல்லது மறைமுக அங்கீகாரம் (Implied REcognition) என்று சட்டவியலாளர்களால் வகைப்படுத்தப்படுகிறது.

நடப்புநிலை அங்கீகாரத்தின் விளைவுகள் (Effect of Defacto Recognition)
    

நடப்புநிலை அங்கீகாரம் என்பது தற்காலிகமானதாகும். அப்புதிய நாடு நாட்டிற்குரிய தகுதிகள், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் போகும் போது நடப்புநிலை அங்கீகாரம் திருப்பப் பெறப்படலாம். ஆனால் சட்டநிலை அங்கீகாரத்தை அவ்வாறு இடையில் திரும்பப் பெற இயலாது என்பது பொதுவான விதியாகும்.  இந்த ஒரு வேறுபாட்டைத் தவிர மற்ற அனைத்து வகையிலும் சட்டநிலை அங்கீகாரத்திற்கு உரிய அனைத்து சட்ட விளைவுகளும் நடப்புநிலை அங்கீகாரத்திற்கும் உண்டு.

Luther-Vs-Sagor {(1921) 3 K.B.532) – என்ற வழக்கில் நடப்புநிலை அங்கீகாரம் பெற்ற நாட்டின் உள்விவகாரங்களில் அந்நாட்டின் செயல்கள் அனைத்தும் மற்ற நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது கட்டாயமாகும் என்று முடிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில், 1917 இல் ரஷ்யாவில் சோசலிசப் புரட்சி ஏற்பட்டு சோவியத் யூனியன் எனும் புதிய நாடு உதயமானது.  அந்நாட்டிற்கு இங்கிலாந்து நடப்பு நிலை அங்கீகாரம் வழங்கியிருந்தது.  இந்நிலையில் 1918 ஜீன் மாதத்தில் சோவியத் அரசாங்கம் மரக்கட்டைத் தொழில் உட்பட அனைத்துத் தொழில்களையும் சமுதாயம் முழுமைக்குமான பொதுச் சொத்து (Social Ownership) என்று அறிவித்தது.  அதில் வாதியின் மரக்கட்டைகளும் அடக்கம். 1920 ஆகஸ்ட் மாதத்தில் சோவியத் அரசாங்கத்தின் பிரதிநிதிகள், சில மரக்கட்டைகளை விற்பதற்கு  இவ்வழக்கின் பிரதிவாதியுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அவ்வொப்பந்தத்தின்படி பிரதிவாதி சோவியத் அரசாங்கத்திடமிருந்து மரங்களை வாங்கினார். ஆனால் வாதி, சோவியத் அரசாங்கத்திடமிருந்து பிரதிவாதி வாங்கிய மரக்கட்டைகள் அனைத்தும் தனக்குச் சொந்தமானவை என்பதால்  அவற்றை தன்னிடமே ஒப்படைக்க உத்திரவிடுமாறு கோரினார்.  பிரதிவாதியோ, சோவியத் யூனியன் இங்கிலாந்து அரசாங்கத்தால் அங்கீகரிக்ப்பட்ட நடப்புநிலை அரசாங்கம் ஆகும். எனவே, இறையாண்மை பெற்ற சோவியத் அரசின் சட்டத்தால் அம்மரங்கள் மீதிருந்த வாதியின் உரிமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது.  எனவே,  தான் வாங்கிய மரங்கள் சோவியத் அரசாங்கத்திற்குச் சொந்தமானவை என்று வாதிட்டார். ஆனால் வாதி நடப்புநிலை அங்கீகாரம் பெற்ற அரசாங்காத்தின் சட்டத்தை இங்கிலாந்தில் ஏற்றுக்கொள்ள  வேண்டியதில்லை என்று கூறினார்.  

ஆனால் நீதிமன்றம், ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் செய்யப்படும் செயல்களைப் பொறுத்த வரை நடப்புநிலைஅங்கீகாரத்திற்கும் சட்டநிலை அங்கீகாரத்திற்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது.  நடப்புநிலை அங்கீகாரம் பெற்ற நாட்டின் உள்நாட்டுச் சட்டங்களை, அந்நாட்டை அங்கீகாரம் செய்த நாடு மதிக்க   வேண்டும்.  எனவே சோவியத் அரசாங்கத்திடமிருந்து பிரதிவாதி வாங்கிய மரக்கட்டைகள் பிரதிவாதிக்கே சொந்தமானவை என்று கூறி வாதியின் வழக்கை தள்ளுப்படி செய்தது.

சட்டநிலை அங்கீகாரம் (Dejure Recognition)
    

அங்கீகரிக்கப்படும் நாட்டுக்கும் அங்கீகரிக்கும் நாட்டுக்கும் இடையே ஏற்படும் அங்கீகாரத்திற்கான உடன்படிக்கையின் மூலமாகவோ, முறையான அறிவிப்புடன் துவக்கப்படும் தூதரக உறவுகள் மூலமாகவோ வழங்கப்படும் அங்கீகாரமே சட்டநிலை அங்கீகாரம் எனப்படும்.  அங்கீகரிக்கும் நாட்டின் கருத்தில் அங்கீகரிக்கப்படும் நாடு அல்லது அதன் அரசாங்கம் நாட்டின் தகுதிக்குரிய அனைத்து முக்கியக் கூறுகளையும் அடைந்துவிட்டது:  மேலும் அது சர்வதேசச் சமுதாயத்தின் ஒரு உறுப்பினராக ஆவதற்குரிய தகுதியையும் பெற்றுள்ளது. எனும் போதே அந்நாட்டிற்கு சட்டநிலை அங்கீகாரம் வழங்கப்படும்.

பேரா. ஹெச்.ஏ. ஸ்மித் (H.A.Smith) இங்கிலாந்தின் நடைமுறையின் படி ஒரு நாட்டிற்கு சட்ட நிலை அங்கீகாரம் வழங்குவதற்கான முன்நிபந்தனைகளாக பின்வருவனவற்றை குறிப்பிடுகிறார். அவை,

(i)    புதிய நாடு, நிலையாகவும் நிரந்தரமாகவும் இருக்கும் என்பதற்கான நியாயாமான உத்தரவாதம்.
(iii)    அப்புதிய நாட்டின் அரசாங்கம் அதன் பொதுமக்களின் பொதுவான ஆதரவைப் பெற்றிருப்பது:
(iii)    அப்புதிய நாடு சர்வதேசக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான விருப்பத்தையும் தகுதியையும் கொண்டிருப்பது.

இம்மூன்று முன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நாட்டிற்கே சட்டநிலைஅங்கீகாரம் வழங்கப்படுவது சர்வதேச நடைமுறையாகும். ஒரு நாட்டிற்கு மற்றொரு நாடு சட்டநிலை அங்கீகாரம் வழங்கிவிட்டால் அதுவே இறுதியானதாகும்.  ஒரு முறை வழங்கப்பட்ட சட்டநிலை அங்கீகாரத்தை திரும்பப் பெற இயலாது.  சட்டநிலை அங்கீகாரத்தை ஒரு நாட்டிற்கு வழங்கப்பட்டு விட்டால் அவ்விரு நாடுகளும் தங்களுக்குள் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

சட்டநிலை அங்கீகாரமே வெளிப்படையான அங்கீகாரம் (Express Recogntion) என்று சட்டவியலாளர்களால் வகைப்படுத்தப்படுகிறது.

நடப்புநிலை அங்கீகாரம்-சட்டநிலை அங்கீகாரம்: வேறுபாடுகள் 
    

நடப்புநிலை அங்கீகாரத்திற்கும் சட்டநிலை அங்கீகாரத்திற்கும் இடையில் அவற்றின் சட்ட விளைவுகளைப் பொறுத்தவரை எவ்வித வேறுபாடும் கிடையாது.  ஆனால் தூதரக மரியாதைகள் உள்ளிட்ட சில மரபுகள் போன்று சிலவற்றில் இரண்டுக்கும் இடையே சில வேறுபாடுகள் இருக்கின்றன.
(1) சட்டநிலை அங்கீகாரம் இறுதியானது.  ஆனால் நடப்புநிலை அங்கீகாரம் தற்காலிகமானது.  எனவே நடப்புநிலை அங்கீகாரம் திரும்பப் பெறப்படலாம்.  ஆனால் சட்டநிலை அங்கீகாரத்தைத் திரும்பப் பெறமுடியாது என்கிறார் கெல்சன்
(2)    நடப்புநிலை அங்கீகாரம், சில நிபந்தனைகளுடன் வழங்கப்படலாம்.  ஆனால் சட்டநிலை அங்கீகாரம் நிபந்தனைகளற்ற முழு அங்கீகாரம் ஆகும்.
(3) நடப்புநிலைஅங்கீகாரத்தில் தூதரக உறவுகள் துவங்கப்பட வேண்டிய கட்டாயமில்லை.  சட்டநிலை அங்கீகாரத்தில் தூதரக உறவுகள் துவங்கப்பட வேண்டியது கட்டாயமாகும் என்கிறார் ஸ்வர்ஷன் பெர்ஜர்.
(4)  சட்டநிலை அங்கீகாரம் பெற்ற நாட்டின் அரசாங்கமே, அங்கீகாரம் வழங்கிய
நாட்டில் தன் முந்திய அரசாங்கத்திற்கு உரிமையுள்ள சொத்துக்களின் உரிமையைக் கோர முடியும். நடப்புநிலை அங்கீகாரம் பெற்ற நாடு அவ்வாறு கோரமுடியாது. (Emperor Haile Selassie Vs Cable and Wireless Ltd(1938)).
(5) சட்டநிலை அங்கீகாரம் பெற்ற நாடே அதன் முந்தய நாட்டு அரசின் இறங்குரிமையை  கோரமுடியும்: நடப்புநிலை அங்கீகாரம் பெற்ற, நாட்டிற்கு இறங்குரிமை கிடையாது.

சட்டநிலை அரசாங்கம் - நடப்புநிலை அரசாங்கம் : முரண்பாடு 

ஒரு புதிய நாட்டிற்கு நடப்புநிலை அங்கீகாரம் வழங்கப் பெற்றிருக்கும் போது அதன் நடப்புநிலை அரசாங்கமே (Defacto Govenment) அரசதிகாரத்தைச் செலுத்தும் அதிகார அமைப்பாக இருக்கும்.  அந்நாட்டில், அதற்கு முன்பு ஆட்சியதிகாரத்தில் இருந்த அரசாங்கமே சட்டநிலை அரசாங்கமாக  (Dejure Govenment)  இருந்தாலும் அதனிடம் அரசதிகாரத்தைச் செலுத்தும் அதிகாரம் இருக்காது. எனவே நடப்புநிலை அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் முந்திய சட்டநிலை அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் இடையே முரண்பாடு எழுந்தால், நடப்புநிலை அரசாங்கத்தின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதே இங்கிலாந்தின் சர்வதேசச் சட்ட நடைமுறையாகும். அதுவே பரவலாக உலக நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது.

Bank of Ethiia Vs National Bank of Egypt and Liguori (1937)-என்ற வழக்கில் அபிசீனியாவைக் (1936) கைப்பற்றிய இத்தாலிக்கு இங்கிலாந்து நடப்புநிலை அங்கீகாரம் வழங்கியது. அபிசீனியாவின் முந்தய ஆட்சியாளரான மன்னர், இங்கிலாந்திற்கு நாடு கடத்தப்பட்டார்.  எனினும் அம்மன்னரே அபிசீனியாவின் சட்டநிலை அரசாங்க அதிகாரமாகக் கருதப்பட்டார்.  இந்நிலையில் நடப்புநிலை அங்கீகாரம் பெற்ற இத்தாலிய அரசு அபிசீனியாவில் புதிய சட்டங்களை இயற்றியது. இப்புதிய சட்டங்கள், முந்தய சட்டநிலை அரசாங்கமாகிய மன்னரது பழைய சட்டங்களுடன் பலவகையிலும் முரண்பட்டவையாக இருந்தன. இம்முரண்பாட்டால் எழுந்த கேள்விக்கு பதிலளித்த நீதிமன்றம், சட்டநிலை ஆட்சியாளராக மன்னர் நீடிப்பது ஒரு கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதே.  ஆனால் அதே சமயம் நடப்புநிலை ஆட்சியாளரான இத்தாலி நாடு அபிசீனியா மீது கொண்டிருக்கும் முழு அதிகாரம் நடப்பில் இருக்கும் உண்மை நிலையாகும்.  எனவே சட்டநிலை அரசாங்கமான மன்னரின் சட்டத்தைக் காட்லும் நடப்புநிலை அரசாங்கமான இத்தாலி அரசின் சட்டங்களே மேலான வலிமை பெற்றவையாகும். என்று தீர்ப்பளித்தது.
               

The Arantzazu Mendi Vs The Government of Republican Spain (1939) A.C.256-என்ற வழக்கில் இதே நிலை ஏற்றுக்கொள்ளப்பட்டது.  ஸ்பெயின் நாட்டுக் கப்பலான அரன்ட்ஸாசு மெண்டி, பில்பே (Bilbao)யில் பதிவு செய்யப்பட்டது.  1936-1938 கால கட்டங்களில் நடைபெற்ற ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில், ஜெனரல் ப்ரான்கோ (General Franco) தலைமையிலான கிளர்ச்சிப் படை (insurgent) பில்பே உட்பட ஸ்பெயினின் ஒரு பகுதியை கைப்பற்றி விட்டனர். அப்பகுதியில் அமைக்கப்பட்ட புதிய ஸ்பெயின் தேசிய அரசாங்கத்திற்கு  இங்கிலாந்து நடப்புநிலை அங்கீகாரம் வழங்கியது. மீதமுள்ள பகுதியில் ஏற்கனவே சட்டநிலை அங்கீகாரம் பெற்றிருந்த ஸ்பெயின் குடியரசு அரசாங்கம் இருந்தது. கிளர்ச்சிக்காரர்களால் பில்பே கைப்பற்றப்பட்ட பின்னர், ஸ்பெயின் குடியரசு அரசாங்கம் அரன்ட்ஸாசு மெண்டி கப்பலை தாம் உடைமையில் எடுத்துக் கொள்வதாக அரசாணை  பிறப்பித்தது. இச்சமயத்தில் அக்கப்பல் ஆழ்கடலில் இருந்தது. பின்னர் அக்கப்பல் இங்கிலாந்தைச் சென்றடைந்த பின்னர் நீதிமன்றத்தின் நீதிப்பேராணை யின்படி அக்கப்பல் கடற்படைத் தளபதியால் சிறைபிடிக்கப்பட்டது. இதற்கிடையே 1938 மார்ச் மாத்தில் ஜெனரல் ப்ரான்கோ, அரன்ட்ஸாசு மெண்டி கப்பலையும் பிற கப்பல்களையும் கிளர்ச்சியாளர்களின் புதிய அரசாங்கம் உடைமையில் எடுத்துக் கொள்வதாக அரசாணை வெளியிட்டார் கப்பலின் உரிமையாளரும் அந்த அரசாணையை ஏற்றுக் கொண்டார். அதனடிப்படையில் இங்கிலாந்தில் அக்கப்பல் அந்த புதிய தேசிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.  ஆனால், ஸ்பெயின் குடியரசு அரசாங்கம் அக்கப்பலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கோரி இங்கிலாந்தின் கடலாண்மை நீதிமன்றத்தில் (Admiralty Court) அரன்ட்ஸாசு மெண்டி கப்பல் மீதும் ஸ்பெயின் தேசிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிபேயில் பதிவு செய்யப்பட்டது.  அக்கப்பல் அத்தேசிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கவும் பட்டுவிட்டது.  எனவே ஸ்பெயின் தேசிய அரசாங்கமோ, தான்நடப்புநிலை அங்கீகாரம் பெற்ற அயல்நாடு என்பதால் அயல்நாட்டு அரசாங்கத்திற்குரிய விலக்குரிமை (Immunity) இருப்பதால் தன் மீது இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கிட முடியாது என்று வாதிட்டது.  ஆனால் குடியரசு அரசாங்கமோ, தேசிய அரசாங்கம் ஸ்பெயினின் முழுப்பகுதியையும் கைப்பற்றவில்லை. ஒரு பகுதியில் மட்டும் உள்ள கிளர்ச்சி அரசாங்கம் முழுமைப்பெற்ற இறையாண்மை அல்ல. அதற்கு அயல்நாட்டிற்குரிய விலக்குரிமை கிடையாது என்று எதிர்வாதம் செய்தது.  முடிவில் நீதிமன்றம் கிளர்ச்சி அரசாங்கமான ஸ்பெயின் தேகிய அரசாங்கம் நடப்புநிலை அங்கீகாரம் பெற்ற இறையாண்மை அரசாங்கமாகும். எனவே அந்த அரசாங்கத்திற்கு விலக்குரிமை இருப்பதால் அதன் மீது அயல்நாட்டில் வழக்கிட முடியாது என்று தீர்ப்பளித்தது.

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com