நாட்டின் இறங்குரிமை என்பதென்ன…..?

நாட்டின் இறங்குரிமை என்பதென்ன…..?

நாட்டின் இறங்குரிமை என்பதென்ன…..?
(Succession of State)

வரையறை

    ஒரு நாடு அல்லது அதன் அரசாங்கம் மாற்றப்பட்டு மற்றொரு புதிய நாடு அல்லது அரசாங்கம் உருவாக்கப்படும் போது முந்தய நாடு அல்லது அரசாங்கத்தின் உரிமைகளும் புதிய நாடு அல்லது அரசாங்கத்திற்கு இறங்குரிமையின் மூலம் வந்தடைவதே நாட்டின் இறங்குரிமை எனப்படும்.  ஒரு நாட்டின் இறங்குரிமை பற்றிய சூழ்நிலை எழும்போது,  அதன் காரணமாக அந்நாடு அல்லது நாடுகளின் சர்வதேச உரிமைகள் மற்றும் கடப்பாடுகளில் அது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதே சர்வதேசச் சட்டத்திற்கு முக்கியமானதாகும்.  ஓப்பன்ஹீய்ம், “ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சர்வதேச நபர்கள், மற்றொரு சர்வதேச நபரின் நிலைமைகளில் ஏற்பட்ட சில மாற்றங்களின் காரணமாக அம்மற்றொரு சர்வதேச நபரின் இடத்தை அடைந்து கொள்ளும் போது சர்வதேச நபரின் (நாட்டின்) இறங்குரிமை ஏற்படுகிறது” என்கிறார்.

“நாட்டின் இறங்குரிமை” என்பது பொருத்தமற்ற பெயர் (Succession of State is Misnomer)     

    “நாட்டின் இறங்குரிமை” என்னும் கருத்தாக்கம் ரோமானிய சட்டத்தில் இருந்து ஹீயூகோ க்ரோஷயஸ்-ஆல்(HugoGrotius) என்பவரால் எடுத்தாளப்பட்டதாகும். ரோமானிய சட்டத்திலும் அதன் வழியாக பொதுச் சட்டத்திலும் ஒரு நபர் இறந்துவிட்டால் அவரது உரிமைகளும் கடமைகளும் அவரது வாரிசுகளுக்கு இறங்குரிமையின் மூலம் வந்தடையும். 
 


அல்பெரிகோ ஜென்டிலிஸ்

இந்த இறங்குரிமை பற்றிய கருத்தாக்கமே இத்தாலியைச் சேர்ந்த சர்வதேசச் சட்டவியலாளர் அல்பெரிகோ ஜென்டிலி (AlbericoGentili) போன்றோரால் பயன்படுத்தப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு நாட்டின் இறையாண்மைக்குப் பதிலாக இன்னொரு நாட்டின் இறையாண்மை இடம் மாறும் நாட்டின் இறங்குரிமையில், ஒரு நபரின் இறப்பிற்குப் பின் ஏற்படும் இறங்குரிமையைப் போல், உரிமைகளும் கடமைகளும் புதிய இறையாண்மைக்கு முழுமையாக இறங்குவதில்லை. புதிய நாட்டின் இறையாண்மையின் நலன் அல்லது சர்வதேசச் சூழ்நிலைகளின் நெருக்கடியைப் பொறுத்து முந்தய நாட்டின் சில உரிமைகளை எடுத்துக் கொள்ளவும் சில கடப்பாடுகளை ஏற்றுக் கொள்ளவும் மற்றவற்றை நிராகரிக்கவும் செய்கின்றது. எனவே உள்நாட்டுச் சட்டத்தில் தனிநபரின் இறங்குரிமையைப் போல் சர்வதேசச் சட்டத்தில் நாட்டின் இறங்குரிமையும் முழுமையாக நடக்கிறது என்பது போன்ற தவறான அர்த்தத்தைக் கொடுக்கும் “நாட்டின் இறங்குரிமை” என்று பெயரில் அழைப்பது பொருத்த மற்றதே ஆகும்.
    ஓப்பன்ஹீய்ம், “நாடுகளின் நடைமுறைகளை வைத்துப் பார்க்கும் போது, சர்வதேசச் சட்டத்தின்படி பொதுவான இறங்குரிமை நடப்பதில்லை. ஒரு சர்வதேச நபர் இல்லாமல் போவதோடு, அதன் உரிமைகளும் கடமைகளும் அந்நபரோடு சேர்நதே இல்லாமல் போய்விடுகின்றன.  ஆனால், முந்தய அரசின் உரிமைகள் மற்றும் கடமைகளில் எதுவுமே இறங்குரிமை ஆகவில்லை என்பதும் தவறானதே” என்கிறார்.

வகைகள்   
நாட்டின் இறங்குரிமைகள் பொதுவாக இரண்டு வகைப்படும். அவை:
1. முழு இறங்குரிமை 
2. பகுதி இறங்குரிமை

முழு இறங்குரிமை (Universal Succession)
    ஒரு நாடு முழுமையாக அழிந்து மற்றொரு நாடு அல்லது நாடுகள் உருவாவது முழு இறங்குரிமை ஆகும். முழு இறங்குரிமை பின் வரும் இரண்டு சூழ்நிலைகளில் எழலாம்:
1. ஒரு நாடு மற்றொரு நாட்டால் அடிமைப்படுத்தப்படுவதன் மூலமாகவோ அல்லது மற்றொரு நாட்டுடன் இணைக்கப்படுவதன் மூலமாகலோ அந்நாடு மற்றொரு நாட்டால் முழுமையாக உள்வாங்கப்படும் போதும்.
2. ஒரு நாடு பல பகுதிகளாக சிதறி ஒவ்வொரு பகுதியும் தனித்தனி நாடுகளாக ஆகும் போது அல்லது ஒவ்வொரு பகுதியும் சுற்றியுள்ள பிற நாடுகளுடன் இணைக்கப்படும் போதும்.

பகுதி இறங்குரிமை (Partial Succession)
    ஒரு நாட்டின் ஏதேனுமொரு பகுதி மட்டும் புரிந்து புதிய நாடாவது பகுதி இறங்குரிமை எனப்படும். பகுதி இறங்குரிமை பின்வரும் மூன்று சூழ்நிலைகளில் எழலாம் :
1. ஒரு நாட்டின் ஒரு பகுதி மக்கள் கிளர்ச்சி செய்து அந்நாட்டின் இருந்து பிரிந்து புதிய நாடாக ஆவது.  உதாரணமாக இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து தனிநாடு ஆனதையும் பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிந்து தனிநாடு ஆனதையும் குறிப்பிடலாம்.
2. ஒரு நாட்டின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு மற்றொரு நாட்டின் பகுதியுடன் சேர்க்கப்படுவது.
3. ஒரு இறையாண்மை பெற்ற அரசு தன் விருப்பத்தின் பேரில் கூட்டாட்சி (Federal) அமைப்பில் இணைவதன் மூலம் தனது சுதந்திரத்தின் ஒரு பகுதியை இழப்பது அல்லது ஒரு நாடு மற்றொரு நாட்டின் மேலாதிக்கத்தை (Suzerainty) இழப்பது அல்லது மற்றொரு நாட்டின் பாதுகாப்பிலிருக்கும் நாடாக  (Proctorate) ஆவது.

நாட்டின் இறங்குரிமை பற்றிய கொள்கைகள் (Theories of State Succession)
    பேராசிரியர். டேனியல் பேட்ரிக் ஓ’ கானல் (Daniel Patrick O’Connell) நாட்டின் இறங்குரிமை பற்றிய கொள்கைகளை நான்கு வகையாகப் பிரிக்கிறார்.  அவை:
1.    தொடர்ச்சி பற்றிய கொள்கைகள்
2.    எதிர்மறை கொள்கைகள்
3.    சர்வதேசச் சட்டவிதிக் கொள்கைகள்
4.    இறங்குரிமை பற்றிய கம்யூனிசக் கொள்கை

தொடர்ச்சி பற்றிய கொள்கைகள்  (Theories of Continuity)
    தொடர்ச்சிக் கொள்கையின்படி, நிலப்பகுதியை பிரித்தல்  மூலம் அல்லது புரட்சியின்மூலம் அல்லது ஆட்சியாளரின் இறப்பின் மூலம் ஆட்சி மாற்றம் அல்லது நாட்டின் இறையாண்மை மாற்றம் நிகழ்ந்தாலும் அதனால் ஒரு உரிமையோ கடமையோ இடம் மாறுவதில்லை.  மாறாக அந்த உரிமைக்கும் கடமைக்கும் உட்பட்ட சர்வதேச உரிமைகளும் கடப்பாடுகளும் இடைவிடாமல் தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கின்றன. இக்கொள்கை, 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

எதிர்மறை கொள்கைகள் (Negative Theories)
    எதிர்மறைக் கொள்கையின்படி,    ஒரு நாடு இன்னொரு நாட்டைக் கைப்பற்றி இணைத்துக் கொள்ளும் போது அல்லது புரட்சியின் மூலம் ஒரு நாட்டின் இறையாண்மை மாற்றப்படும் போது, முந்தய அரசின் இறையாண்மை முற்றாக ஒழிக்கப்படுகிறது. அதன் மூலம் ஒரு இறையாண்மை வெளியேற்றப்படுவதற்கும் மற்றொரு புதிய இறையாண்மை உருவாக்கப்படுவதற்கும் இடையே ஒரு இடைவெளி உண்டாக்கப்படுகிறது. இறங்குரிமை அடைந்திருக்கும் புதிய நாடு, முந்தய நாட்டிடம் இருந்து இறையாண்மையை மாற்றிப் பெறவில்லை. மாறாக, அது தன் சொந்த விருப்பத்தின் பேரில் அல்லது பலத்தின் மூலம் புதிய நாட்டின் நிலப்பகுதியை பெற்றுள்ளது. எனவே முந்தய அரசின் இறையாண்மையிலிருந்து எதுவும் இந்தப் புதிய நாட்டிற்கு வந்து சேரவில்லை. அதாவது இறங்குரிமையே நடக்கவில்லை என்பதே எதிர்மறைக் கொள்கையாகும். இக்கொள்கை 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் துவக்க காலம் வரை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

சர்வதேசச் சட்டவிதிக் கொள்கைகள் (Theories of Importing International Law)

    சர்வதேசச் சட்டவிதிக் கொள்கையின் படி, நாடுகளின் நேர்மறையான நடைமுறைகளின் அடிப்படையில் சர்வதேசச் சட்டம், இறங்குரிமை பெற்ற புதிய நாடு, அதன் முந்தய நாட்டின் கடப்பாடுகள் சிலவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று கூறுவதுடன், முந்தய நாட்டின் உரிமைகள் சிலவற்றை அப்புதிய நாட்டிற்கு வழங்கவும் செய்கிறது.  இக்கொள்கையே நடைமுறையில் சர்வதேசச் சட்டக் கொள்கையாக இருக்கின்றது.  ஆனாலும் இது முழுமையாக நாட்டின் இறங்குரிமை பற்றிய எல்லாப் பிரச்னைகளையும் தீர்ப்பதாக இல்லை. எனவே இன்றைய சர்வதேசச் சட்டத்தில் நாட்டின் இறங்குரிமை பற்றிய சட்டவிதிகள் வளர்ந்து வரும் ஒன்றாகவே இருக்கின்றன.

நாட்டின் இறங்குரிமையிலிருந்து உருவாகும் உரிமைகளும் கடமைகளும் (Communist Theory of State Succession)
    இக்கொள்கையின் படி, பழைய நாடு அல்லது அரசு அளித்த பொருளாதார மற்றும் அரசியல் உறுதி மொழிகளை இறங்குரிமை பெற்ற புதிய நாடு நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை. மக்களின் அனுமதியின்றி முந்தய அரசு ஏற்படுத்திய உடன்படிக்கைகளை மக்களின் ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்ட புதிய அரசு மதித்து நடக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.

நாட்டின் இறங்குரிமையிலிருந்து உருவாகும் உரிமைகளும் கடமைகளும்
 (Rights and Duty arising out of State Succession)

    நாட்டின் இறங்குரிமை பற்றி சர்வதேசச் சட்டம் அக்கறை கொள்வதன் காரணமே, இறங்குரிமையிலிருந்து உருவாகும் சர்வதேச உரிமைகளும் சர்வதேசக் கடமைகளுமே ஆகும். அதுபோல, நாட்டின் இறங்குரிமையின் சட்டவிளைவே அந்த இறங்குரிமையிலிருந்து உருவாகும் உரிமைகளும் கடமைகளுமே ஆகும். எனவே நாட்டின் இறங்குரிமையின் மூலம் உருவாகும் உரிமைகளையும் கடமைகளையும் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
1.    நாட்டின் இறங்குரிமையும் உடன்படிக்கைகளும்
2.    நாட்டின் இறங்குரிமையும் அரசியல் உரிமைகளும் கடமைகளும்
3.    நாட்டின் இறங்குரிமையும் உரிமைகளும் ஒப்பந்தப் பொறுப்பு நிலையும்
4.    பொதுச் சொத்துரிமை மற்றும் பொது நிதிகுறித்த இறங்குரிமை
5.    இறங்குரிமையும் பொதுக கடனகளும்
6.    இறங்குரிமையும் தீங்கியல் பொறுப்பு நிலையும்
7.    இறங்குரிமையும் உள்நாட்டுச் சட்டங்களும்
8.    இறங்குரிமையும் நாட்டுரிமையும்
9.    இறங்குரிமையும் ஐ.நா.உறுப்பினர் தகுதியும்

1. நாட்டின் இறங்குரிமையும் உடன்படிக்கைகளும் (Succession and Treaties)
    சர்வதேசச் சட்டத்தின் ஆரம்ப காலங்களில் இருந்து புதிதாக உருவான நாடு, அதன் முந்தய நாட்டரசு ஏற்படுத்திய உடன்படிக்கைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றே கூறப்பட்டு வந்தது. ஆனால், ஏகாதிபத்திய நாடுகளின் காலனிகளாக இருந்து, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் புதிதாக விடுதலையடைந்த நாடுகள் யாவும் அவற்றின் முந்தய காலனி அரசுகள்ஏற்படுத்திய உடன்படிக்கைகள் எதுவும் தம்மைக் கட்டுப்படுத்தாது என்று அறிவித்தன. அவை “வில்லங்கமில்லா நாடு” மற்றும் “நகரும் உடன்படிக்கை எல்லைகள்” ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டன.

வில்லங்கமில்லா நாடு  (Clean State)
    “வில்லங்கமில்லா நாடு” விதியின்படி, புதிதாக விடுதலை பெற்ற நாடுகள், அவற்றின் முந்தய காலனி அரசுகள் ஏற்படுத்திய கடப்பாடுகள் மற்றும் பொறுப்புகளால் கட்டுப்படுத்தப்பட்டவையல்ல.  எனவே புதிதாக விடுதலை அடைந்த நாடுகள் அவற்றை நிறைவேற்ற வேண்டியதோ அவற்றின் படி நடக்க வேண்டியதோ அவசியமில்லை.  இவ்விதி 1978 ஆம் ஆண்டு உடன்படிக்கைகள் தொடர்பான நாடுகளின் இறங்குரிமை பற்றிய மாநாட்டில் ஏற்கப்பட்டது.

நகரும் உடன்படிக்கை எல்லைகள் (Moving treaty Frontiers)
    இவ்விதியின் படி, ஒரு நாட்டின் நிலப்பகுதி என்பது ஏற்கனவே இருந்த நாட்டுடன் தொடர்புடையதாகும். அப்பழைய நாட்டுடன் சட்டப்படியான தொடர்புகளை உடையது என்ற அடிப்படையில் புதிதாக விடுதலை அடைந்த நாடுகள் பழைய நாட்டின் பலதரப்பு உடன்படிக்கைகளில் உரிமை கோரலாம்.  இவ்விதியும் 1978 ஆம் ஆண்டு வியன்னா மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

உடன்படிக்கைகள் தொடர்பான நாட்டின் இறங்குரிமை பற்றிய வியன்னா மாநாடு, 1978 (Vienna Convention on Succession of States in Respect of Treaties,1978)
    புதிதாக உருவான நாடுகுள் மீதான உடன்படிக்கைகள் தொடர்பான இறங்குரிமை பற்றிய விரிவான விதிகள் 1978, ஆகஸ்ட் 23 இல் வியன்னா மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.  இருப்பினும் அம்மாநாட்டு விதிகள் 1996 நவம்பர் 6 அன்றே செயலுக்கு வந்நதன.

உடன்படிக்கைகள் தொடர்பான நாட்டின் இறங்குரிமை பற்றிய வியன்னா மாநாட்டின் முக்கியமான விதிகள் பின்வருமாறு:
a) இம்மாநாடு, நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கைகள் தொடர்பான நாடுகளின் இறங்குரிமையின் விளைவுகளுக்குப் பொருந்தக் கூடியதாகும் (ஷரத்து 1).
b) முந்தய நாடும் இறங்குரிமை வெறும் புதிய நாடும், பழைய உடன்படிக்கைகளின் பலன்கள் புதிய நாட்டிற்கு கிடைக்கும் வகையில் உடன்பாடு செய்து கொள்ளலாம்.  அவ்வாறு உடன்பாடு செய்து கொண்டிருந்தாலும், பழைய உடன்படிக்கையின் தரப்பினராக உள்ள மற்று நாடுகளைப்  பொறுத்த வரை, முந்தய அரசின் உடன்பாடு உறங்குரிமை பெறும் புதிய நாட்டைக் கட்டுப்படுத்தாது.  (ஷரத்து 9).

c) எல்லை மேலாண்மை (Boundary Regimes)  
 ஒரு நாடு  அழிந்து புதிய நாடு இறங்குரிமை பெறுவது, a) முந்தய நாட்டுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் மூலம் வரையறுக்கப்பட்ட நாட்டின் எல்லைகள் (b) ஒரு உடன்படிக்கையின் மூலம் ஏற்படுத்தப்பட்ட எல்லை மேலாண்மை ஏற்பாடுகள் அல்லது எல்லை தொடர்பான உரிமைகள் மற்றும் கடப்பாடுகள் ஆக்pயவற்றை எவ்விதத்திலும் பாதிக்காது. ஏனெனில் புதிய நாடுகள் உருவாகும் போது அண்டை நாடுகளுடனான பழைய எல்லைப் பிரச்னைகளையும் புதுப்பிப்பது அப்பிராந்தியத்தில் குழப்பத்தையே உருவாக்கும் எனவே வில்லங்கமில்லா நாடு எனும் விதி எல்லை தொடர்பான உடன்படிக்கைகளுக்குப் பொருந்தாது (ஷரத்து 11).
d) ஒரு நாட்டின் ஓரு பகுதி மட்டும் பிரிந்து புதிய நாடாக இறங்குரிமை பெறும் போது, முந்தய நாட்டு அரசு ஏற்படுத்திய உடன்படிக்கைகளின் செயல்பாடு புதிய நாட்டினைப் பொறுத்த வரை நின்று Nபுhய்விடும் (ஷரத்து 15).
e) புதிதாக விடுதலை அடைந்த நாடுகள் இறங்குரிமை பெறும் அதே நாளில் அவற்றின்அரசுகள் ஏற்படுத்திய உடன்படிக்கைகள் செயலில் இருந்தாலும்,  அவ்வுடன்படிக்கைகள் அப்புதிய நாடுகளைக் கட்டுப்படுத்தாது (ஷரத்து 16).
f) இருதரப்பு உடன்படிக்கை (Bilateral Treaty) :  நாடுகளின் இறங்குரிமையின் போது செயலில் இருக்கும் இருதரப்பு உடன்படிக்கைகளைப் பொறுத்த வரை இறங்குரிமை பெறும் புதிய நாடு. (i) வெளிப்டையாக ஒப்புக் கொண்டால் அல்லது (ii) தன் நடவடிக்கையின் மூலம் ஒப்புக் கொண்டால் மட்டுமே அவ்வுடன்படிக்கைகள் புதிய நாட்டைக் கட்டுப்படுத்தும் (ஷரத்து 24).
g) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் ஒன்று சேர்ந்து இறங்குரிமை பெறும் புதிய நாடு ஒன்றை உருவாக்கும் போது, இணைந்த நாடுகளில் ஏதேனுமொரு நாடு மற்ற நாடுகளுடன் ஏற்படுத்திய உடன்படிக்கை செயலில் இருந்தால், புதிதாக உருவான நாடும் அந்த உடன்படிக்கையின் மற்றொரு தரப்பு நாடும் தனியே ஒப்புக் கொண்டால் ஒழிய அவ்வுடன்படிக்கை புதிதாக உருவான நாட்டைக் கட்டுப்படுத்தாது (ஷரத்து 31).

1. பலதரப்பு உடன்படிக்கை (Multilateral Treaty)
  புதிதாக விடுதலை பெற்ற நாடுகள், உருவாகும் போது செயலில் இருக்கும் பலதரப்பு உடன்படிக்கையில் தமது முந்தய அரசின் இடத்தில் இறங்குரிமை பெற்ற நாடாக தாம் இருக்கப் போவதாக தனது விருப்பத்தை அறிவித்து அப்பலதரப்பு உடன்படிக்கையின் தரப்பினராகலாம்.  உடன்படிக்கையின் தன்மையைப் பொறுத்து மற்ற தரப்பு நாடுகளின் சம்மதம் தேவையெனில் அத்தகைய சம்மதத்தை புதிய நாடு பெற வேண்டும்.
    

விமர்சனம்: 1978 ஆம் ஆண்டு வியன்னா மாநாடு, புதிதாக விடுதலை அடைந்த நாடுகளுக்கு பல சலுகைகளை வழங்குவதாகவும், புதிதாக உருவாகும் மற்ற நாடுகளுக்கு பாரபட்சம் காட்டுவதாகவும் கடும் விமர்சனங்கள்  இருந்து வருகின்றன.  எனவே தான் 1978 ஆம் ஆண்டின் மாநாட்டு விதிகள் 19896 ஆம் ஆண்டில் தான் செயலுக்கு  வந்துள்ளன. அத்துடன் இதுவரை 21 நாடுகளே இம்மாநாட்டை ஏற்புறுதி (ratification) செய்துள்ளன.  இன்னமும் 15 நாடுகள் ஏற்புறுதி செய்யாமல் இருக்கின்றன.

    ஆனால் உடன்படிக்கைகள் தொடர்பான நாட்டின் இறங்குரிமை பற்றிய 1978 ஆம் ஆண்டு வியன்னா மாநாட்டு விதிகள் புதிதாக வடுதலையடைந்த நாடுகளை திருப்திப்படுத்துவதற்காக மட்டும் நிறைவேற்றப்படவில்லை.  இரண்டாம் உலகப் போருக்குப் பின் மாறிய சர்வதேச அரசியல் - பொருளாதார சூழ்நிலைகளின் தேவைக்காகவே இம்மாநாட்டு விதிகள் ஏற்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

2.நாட்டின் இறங்குரிமையும் அரசியல் உரிமைகளும் கடமைகளும் (Succesion and Political Rights and Duties)

ஒரு நாடு புதிதாக உருவாகி இறங்குரிமை பெறும் போது, அதன் முந்திய அரசின் அரசியல் கடமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் எதுவும் புதிய அரசுக்கு இறங்குரிமை ஆவதில்லை.  அழிந்து போன நாட்டின் சர்வதேசத் தகுநிலையிலிருந்தோ அல்லது அதன் அரசியல் உடனபடிக்கையிலிருந்தோ உருவாகும் உரிமைகள் மற்றும் கடமைகள் எதுவும் புதிதாக உருவான நாட்டிற்கு இறங்கி வராது என்று ஒப்பன்ஹீய்ம் கூறுகிறார்.  அவர் மேலும் , முந்தய நாட்டு அரசு ஏற்படுத்திய ராணுவக் கூட்டு உடன்படிக்கைகள் அல்லது இசைவுத் தீர்வு உடன்படிக்கைகள் அல்லது நடுநிலையாக்க உடன்படிக்கைகள் அனைத்தும் அந்நாடு இல்லாமல் போனவுடன் தாமும் இல்லாமல் போய்விடும் என்கிறார்.

3.நாட்டின் இறங்குரிமையும் உரிமைகளும் ஒப்பந்தப் பொறுப்பு நிலையும் (Succession and Contractual Rights and Liability)
    புதிதாக இறங்குரிமை பெறும் நாடு, அதன் முந்தய அரசின் ஒப்பந்தங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதே பரவலாக சட்டவியலாளர்களால் கொள்ளப்படும் கருத்து ஆகும்.  விதிவிலக்காக (West Rand Central Gold mining Co.Ltd-Vs-king) (1905) 2KB 391 – என்ற வழக்கில் இங்கிலாந்து நீதிமன்றம், புதிதாக இறங்குரிமை பெறும் நாடு,  தனது முந்தய அரசு ஒப்புக் கொண்ட நிதிப் பொறுப்பு நிலையை தான் ஏற்க வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு முழு உரிமை பெற்றுள்ளது என்று தீர்ப்பளித்துள்ளது. ஆனால்முந்தய ஆட்சியாளரின் தனிப்பட்ட ஒப்பந்தங்கள் முந்தய நாட்டின் அழிவுடன் இல்லாமல் போய்விடக் கூடியதாகும்.

Premchibar-Vs-Union of India, AIR 19566 SC 422 – என்ற வழக்கில் போர்ச்சுகீசிய ஆள்நிலஎல்லை 1961 இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.  இறங்குரிமை பெற்ற இந்தியா, அதற்குமுன் போர்ச்சுகீசிய அரசு அந்த ஆள்நில எல்லையில் இருந்தவொரு குடிமகனுக்கு வழங்கிய இறக்குமதி உரிமம் ஒன்றைப் புதுப்பிக்க மறுத்தது.  வழக்கை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்றம், இறங்குரிமையின் போது நாட்டின் குடிமக்கள் முந்தய அரசு வழங்கிய ஒப்பந்த உரிமையுடன் செல்வதில்லை. எனவே முந்தய போர்ச்சுகீசிய அரசு வழங்கிய இறக்குமதி உரிமத்தைப் புதுப்பிக்க மறுப்பதற்கு, இந்திய அரசுக்கு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தது.

4. பொதுச் சொத்துரிமை மற்றும் பொது நிதி குறித்த இறங்குரிமை (Succession to Public Property and Public Fund)
    இறங்குரிமை பெறும் புதிய நாடே, அதன் முந்தைய நாட்டின் பொதுச் சொத்துக்கள் மற்றும் பொது நிதியை அடைந்து கொள்ளும் உரிமை உடையதாகும். முந்தய நாடடின் நிலம், நதிகள், சாலைகள், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் யாவும் இறங்குரிமை பெறும் புரிய நாட்டுக்கே சொந்தமானவையாகும். ஆனால் தனிநபர்களின் சொத்துரிமைகளை நாட்டின் இறங்குரிமை எவ்விதத்திலும் பாதிக்காது என்று German Settlements in Poland, (PCIJ)(1923),Series B.No.6 - எனும் வழக்கில் சர்வதேச நிரந்தர நீதிமன்றம் கருத்துரை வழங்கியுள்ளது.

5.  இறங்குரிமையும் பொதுக் கடன்களும் (Succession and Public Debts)
    புதிதாக இறங்குரிமை பெறும் நாடு, அதன் முந்தய அரசு வாங்கிய பொதுக் கடன்களுக்கான பொறுப்பு நிலை பற்றி பல்வேறு முரண்பட்ட கருத்துக்களே சர்வதேசச் சட்டத்தில் நிலவுகின்றன. அது குறித்த கருத்துக்களை பின்வருமாறு தொகுக்கலாம்.
a) முந்தய அரசின் பொதுக் கடன்களை செலுத்துவதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதா, இல்லையா என்பது இறங்குரிமை பெறும் புதிய நாட்டின் விருப்பத்தைப் பொறுத்தது அதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்று பொதுவாக சட்டவியலாளர்கள் கருத்துக் தெரிவிக்கின்றனர்.
b) நாட்டின் இறங்குரிமை எப்படி இருந்தாலும் ஒரு நாட்டிற்கு கடன் கொடுத்த கடனாளரின் (Creditor) நிலையைப் பாதுகாக்க வேண்டியது தகைமை நெறிக் (Equity) கோட்பாட்டிற்கு உகந்ததாகும். எனவே சர்வதேசச் சட்டம் முந்தய அரசு வாங்கிய பொதுக் கடன் மூலம், இறங்குரிமை பெறும் புதிய நாடு பலன் பெற்றிருந்தால் அக்கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு அப்புதிய நாட்டிற்கு உண்டு என்கிறது.
c) அது போல ஒரு நாட்டின் ஒரு பகுதி பிரிந்து புதிய  நாடாகும் போது அப்பொதுக் கடனில் அதற்கேற்ப விகிதாசாரத்தில் கடன் பொறுப்பை புதிய நாடு ஏற்க வேண்டும்.
இருப்பினும், ஒரு நாட்டின் அரசு மக்களின் அனுமதி பெறாமலும், மக்கள் நலனுக்காக இல்லாமல்  அல்லது மக்கள் நலத்திட்டம் என்ற பெயரில் அரசியல் வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள், ஒப்பந்தக்காரர்கள் லாபம் அடைவதற்காக வாங்கிய சர்வதேசக் கடன் பொறுப்புகளை, இறங்குரிமை பெறும் புதிய நாட்டின் தலையில் கட்டுவதும் தகைநெறிக் கோட்பாட்டின் படி தவறான ஒன்றாகும் எனும் நிலையும் சர்வதேசச் சட்டத்தில் நிலவுகிறது.
    நாட்டின் சொத்து, கருவூலம் மற்றும் கடன்களின் இறங்குரிமை பற்றிய வியன்னா மாநாடு, 1983 (Vienna Convention on Succession of States Property, Achieves and Debts) 1983-ம் ஆண்டு ஏப்ரல் 8 அன்று கையெழுத்திடப்பட்டது. அதில் இறங்குரிமை பெறும் நாட்டின் பொதுக்கடன் பொறுப்புகள் பற்றி பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், அம்மாநாடு இன்று வரை செயலுக்கு வரவில்லை. ஏனெனில், அது செயலுக்கு வருவதற்கு குறைந்த பட்சம் 15 நாடுகள் ஏற்புறுதி செய்ய வேண்டும். ஆனால் இதுவரை 7 நாடுகளே ஏற்புறுதி செய்துள்ளன.

6. இறங்குரிமை தீங்கியல் பொறுப்பு நிலையும் (Succession and Tortious liability)
    முந்தைய அரசின் தீங்கியல் செயலுக்கு இறங்குரிமை பெறும் புதிய நாட்டைப் பொறுப்புக்குள்ளாக்க முடியாது. Robert E Brown கோருரிமை (Claim) வழக்கில் (1925) தென்னாப்பிரிக்க குடியரசு அமெரிக்க குடிமகனாகிய பிரௌனின்  சுரங்கம் தோண்டும் உரிமையைப் பறித்தது. தென்னாப்பிரிக்க குடியரசின் நிலப்பகுதியை பிரிட்டன் கைப்பற்றிய பிறகு அமெரிக்க அரசாங்கம் தன் குடிமகன் பிரவுனின் சார்பாக பிரிட்டன் மீது வழக்குத் தொடர்ந்து. ஆனால் பிரௌனின் சுரங்கம் தோண்டும் உரிமையை தென்னாப்பிரிக்க அரசு பறித்தது அவர் மீது இழைக்கப்பட்ட தீங்கியல் குற்றம் என்று ஒப்புக் கொண்ட நீதிமன்றம் தென்னாப்பிரிக்க அரசின் தீங்கியல் செயலுக்கு, அதன் இறங்குரிமை பெற்ற புதிய அரசாகிய பிரிட்டனைப் பொறுப்புக்குள்ளாக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.

7. இறங்குரிமையும் உள்நாட்டச் சட்டங்களும் (Succession and Municipal laws)
    குடிமை சட்டங்கள் (Civil Laws) அதாவது குடிமக்களின் உரிமைகள் தொடர்பான சட்டங்களைப் பொறுத்த வரை முந்தய நாடடின் சட்டங்களே அதன் இறங்குரிமை பெறும் புதிய நாட்டிலும் தொடரும். நாட்டின் இறங்குரிமையோ சர்வதேசச் தகுநிலையில் ஏற்படும் மாற்றங்களோ குடிமக்களை எவ்விதத்திலும் பாதிக்காது. ஒரு நாட்டின் உரிமை இன்னொரு நாட்டிற்கு பிரித்துக் கொடுக்கப்படுவதால், அதன் குடிமக்களின் சொத்துகளும் பிரித்துக் கொடுக்கப்படுவதில்லை.
    German Settlements in Poland, (PCIJ)(1923),Series B.No.6 என்ற வழக்கில் உள்நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களின் மூலம் அடைந்த தனிநபர் உரிமைகள், நாட்டின் இறையாண்மை மாறுவதால் எவ்வித மாற்றமும் அடையாது என்று கருத்துரைக்கப்பட்டது.

8. இறங்குரிமையும் நாட்டுரிமையும் (Succession and Nationality)
    ஒரு நாடு ஆக்கிரமிப்பின் மூலமாகவோ இணைப்பின் மூலமாகவோ அல்லது பிரிவினையின் மூலமாகவோ இறங்குரிமை பெறும் புதிய நாடாக உருவாகும் போது அப்புதிய நாட்டின் குடிமக்கள் அதன் முந்தய நாட்டின் குடியுரிமையை (Citizenship) இழந்துவிடுவர். அதனால் அந்நாட்டின் நாட்டுரிமையையும் இழந்து விடுவர். எனவே அவர்கள் பழைய நாட்டிற்கே திரும்பிச் சென்று பழைய தேசத்தவராக இருக்க விரும்புகின்றனரா அல்லது புதிய நாட்டின் குடியுரிமை பெற்று புதிய நாட்டுரிமையுடன் இத்தேசத்தவராக  இருக்க விரும்புகின்றனரா என முடிவு செய்ய அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அவர்கள் விரும்பும் நாட்டின் குடியுரிமைப் பெற்று அந்த நாட்டின் நாட்டுரிமையைப் பெறலாம். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இருநாட்டு குடிமக்களுக்கும் அத்தகைய வாய்ப்பும் கால அவகாசமும் அளிக்கப்பட்டது. (Virendra Singh-Vs-State of U.P., AIR 1954 SC447)

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com