இன்றைய அரசியல் தத்துவம்- 'பேபியனிஸம்'

இன்றைய அரசியல் தத்துவம்- 'பேபியனிஸம்'

இன்றைய அரசியல் தத்துவம்-2

(Modern Political Thought)

பேபியனிஸம் - (Fabianism)

பேபியனிஸக் கொள்கைகள் கூட்டுடைமைக் கொள்கையினைக் கொண்டுள்ளதே. இவர்களுடைய சோஷியலிசக் கொள்கைகள் மார்கஸீயக் கொள்கைகளின்றும் மாறுபட்டது. இவர்களினுடைய கொள்கைள் புரட்சிகளை விரும்புவதில்லை. இவர்களின் அடிப்படைக் கருத்தின்படி ஒரு சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளையும், கொடுமைகளையும் நீக்கி ஒரு சமூகத்திலுள்ள மக்கள் அனைவரும் இன்பமாக வாழ வேண்டுமென்பதேயாகும். இவர்களின் அரசியல் கருத்துப்படி குடியாட்சி முறையையும், கூட்டுடமைக் கொள்கைகளையும் உடைய பொருளாதாரச் செயல்களும் ஒரு சமூகத்தில் நன்மை விளைவிக்குமென்பதாகும். ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள், அவற்றைப் பகிர்ந்துகொள்ளும் முறை, மாற்றும் முறை அனைத்தும் நாட்டின் பொறுப்பிலேயே இருத்தல் வேண்டும். ஒரு நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் சரிசமமான உரிமைகள் அனைத்தும் அளிக்கவேண்டும் என்பதே இக்கொள்கையின் மையக் கருத்து.

பேபியனிஸக் நம்பிக்கையின்படி பரிமாண முறையும் (evalutionary Method) அரசியல் முறைமைக்குட்பட்ட முறைமையுமாகப் புரட்சிகள் இருக்க வேண்டுமென்பதாகும். இவர்களின் ஒரு சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றம், பத்திரிகைகளின் மூலமாகவும், மேடைப்பேச்சுகளின் மூலமாகவும் இருத்தல் வேண்டுமேயன்றி மற்றப் புரட்சிகளில் ஈடுபடுதல் கூடாது என்றே கருகின்றனர். இவர்களின் எண்ணம், தொழிலாளர் சமுதாயத்தை உயர்த்துமென்பதாகும். இவர்கள் வரி விதிகளையும் படிப்படியாக முன்னேறுகின்ற (Progressive Taxation) முறையிலேயே அமைக்கப்பட்டிருத்தல் வேண்டுமென்று கருதுகின்றார்கள். இவ்விதம் போடப்படும் வரி விகிதக் கொள்கைகளினால் ஒரு சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் குறைக்கப்படும் என்பது இவர்களது கருத்தாகும்.

இவர்கள் சிண்டிகலிசக் கொள்கையினர் கருத்துப்படி, நாட்டினை வெறுத்து ஒதுக்குபவர்கள் இல்லை. உண்மையாகக் கூறுவோமாயின் ஒரு நாட்டிலுள்ள சமூகத்தின் நல்ல நிலைமை, அந்நாடு அதனுடைய அரசாங்கத்தினாலேயே ஏற்படுத்த முடியும் என்பதே பேபியனிஸத்தின் கொள்கைகள். ஒரு நாட்டினுடைய அரசு மக்களாட்சியுள்ளதாகவும், நாடு, மக்கள் இவர்களுடைய கருவியாகவம் அந்நாட்டின் அரசு விளங்க வேண்டுமென்பதே இந்த பேபியனிஸத்தின் அடிப்படைக் கருத்து, இந்தக் கருத்தே இருபதாம் நூற்றாண்டு அரசியல்வாதிகளின் மனதில் மிக அழகாகப் பதிந்து, நாம் இன்று காணும் அரசியல் அமைப்புகளைப் பெற்றுள்ளோம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தொழிலாளர் குழுவாட்சி - (syndicalism)

சிண்டிகலிசம் பிரெஞ்சு நாட்டில் தோன்றி வளர ஆரம்பித்தது. அந்த இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்தது அந்த நாட்டில் ஏற்பட்ட புரட்சியும், அரசியல் ஏமாற்றமும் ஆகும். இதற்குப் பின்பு இந்த இயக்கம் இத்தாலி நாட்டில் பரவியது. தொழில் வளர்ச்சியும், தொழில் பரட்சியும் இந்த இயக்கதிற்கு வலுவூட்டின. பிரெஞ்சு நாட்டிலிருந்த தொழிலாளர் சங்கங்கள் இந்த இயக்கத்திற்கு உதவிபுரிந்தன. ஆங்கில நாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பிரெஞ்சு நாட்டுத் தொழிலாளர் சங்கங்கள் மிகவும் பலவீனமாக அமைந்திருந்தன. எந்தவிதமான முன்னேற்றத்திற்கும் உரிய வாய்ப்புகள் அங்கு இல்லை. இதன் விளைவாக அந்தத் தொழிலாளர் சங்கங்கள் புரட்சிகரமான பலாத்கார முறைகளை வெற்றிபெறும் பொருட்டுக் கையாண்டன. வரலாற்றின் அடிப்படையில் பிரெஞ்சு மக்கள் புரட்சிகளையே விரும்பிய காரணத்தினால் தொழிலாளிகளுக்கும், அரசியல் அறிஞர்களுக்குமிடையே வேறுபாடுகள் இருந்தன. சோஷியலிசத்தின் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் சிண்டிகலிசத்தின் இயக்கத்தில் இருந்தார்கள். முதலாளித்துவம் (Capitalism) கைப்பொம்மை அரசு என்ற எண்ணம் பரவலாக இருந்து வந்தது. அரசியலின் அடிப்படையில் சாராத கொள்கைகளைத் தொழிற் சங்கங்கள் கடைப்பிடிக்கவேண்டும் என்ற கருத்தும் நிலவி வந்தது. பல சோஷியலிசக் கொள்கைகளைக் கொண்ட எழுத்தாளரின் கருத்துகள் ஒன்றாகச் சேர்ந்து சிண்டிகலிசம் அல்லது தொழிலாளர் குழு ஆட்சி என்ற இயக்கத்தை ஆரம்பிப்பதற்குத தூண்டுகோலாக அமைந்தன.

சிண்டிகலிசத்திற்கு ஒரு தனிப்பட்ட அரசியல் கோட்பாடு ஒன்று இருந்தது. இந்தக் கோட்பாடுகள் அனைத்தும் தற்பெருமையின் அடிப்படையில் இருக்கின்றன. தடையில்லாத அ;ல்லது கட்டுப்பாடில்லாத நிலை இருந்தால் தான். முன்னேற்றம் சுலபமாக அமையும். தன்னுதவி முன்னேற்றததிற்கு மிகவும் இன்றியமையாதது. பகுத்தறிவைவிட உணர்ச்சி, எழுச்சி போன்றவை நல்ல வழிகாட்டிகளாக அமைய முடியும்.

சிண்டிகலிசம் ஒரு நாடு என்பதே இருக்கக்கூடாது என்ற கொள்கை உடையது. இவர்களது கருத்தின்படி ஒரு நாட்டினை நடத்துபவர்கள் முதலாளிகளே என்பது. அவ்விதம் அமையப் பெறும் அசின் மூலமாகத் தொழிலாளிகள் எவ்விதப் பயனும் அடைய முடியாது. மேலும் இவர்கள் சட்டமன்றம, அசியலமைப்பு, இவையனைத்தும் முறையற்றது என்றே கருதுகிறார்கள். தொழிலாளர்களுக்கு எந்த நாடும் தாய்நாடகாகவோ, சொந்த நாடாகவோ ஆக முடியாது. ஏனெனில் இவர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் ஊன்றுகோல்போல் இருப்பவர்கள். ஆகையால் உலக நாடுகளைனைத்திற்கும் தொழிலாளர்களை உயிர்போன்று கருதவேண்டும் என்பதே இவர்களது கருத்தாகும். அரசியல் கட்சிகள் சட்டமன்றங்கள், இவையனைத்தும் தொழிலாளருக்குச் சிறிதளவே உதவ முடியும். தொழிலாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் அரசாங்கம் ஒரு நாட்டில் அமைவது என்பது முடியாததாகும். வேலைநிறுத்தம் என்பது தொழிலாளர்களின் சிறந்த ஆயுதமாகும். இந்த ஆயுதத்தை உபயோகப்படுத்தியே முதலாளித்துவக் கொடுமைகளினின்றும் விடுபட இயலும் என்றும் எண்ணுகிறார்கள். வேலைநிறுத்தம் என்பது தொழிலாளர்களின் வளர்ச்சிக்காகவும், நல்வாழ்விற்காகவும், உயர்ந்த ஊதியத்திற்காகவும், அமைதல் வேண்டும். பொது வேலை நிறுத்தம் ஏற்படுமாயின் அது, ஒர் அரசாங்கத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

இவர்களுடைய கருத்தின்படி ஒரு நாட்டில் அரசியலை உண்டாக்க முடியாது. ஓரு நாட்டினுடைய உற்பத்தி, பங்கீடு, மாற்றம், அமைப்பு ஆகிய நான்கும் தொழிலாளர்களின் கையிலேயே இருத்தல் வேண்டும் என்று கருதுகிறார்கள். தொழிலாளர்கள் ஒரு நாட்டினுடைய வாணிகத்தையும், சமூகத்தையும், கட்டுப்படுத்தவேண்டும் என்று கருதுகிறார்கள். இவர்களுடைய கருத்து முறையற்றதாகவும், ஒருபக்கம் சார்ந்ததாகவும் உள்ளது. இவர்கள் தங்களுடைய சமூகம் எவ்வகையானது, எத்தகையது என்பதனை, ஒழுங்காக வகைப்படுத்தவில்லை. இவர்கள் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் உரிமை அளவிற்கு மீறியதாக உள்ளது. இவர்கள் வேலைநிறுத்தத்திற்கு மேற்கொள்ளும் விதிகள் அதிகப் புரட்சிகரமானது. இவ்வாறு செய்யப்படும் புரட்சியினால் வெற்றி கிட்டும் என்று எதிர்பார்ப்பது முறையற்றது. இதில் தோல்வியடைந்தால் தொழிலாளர்களின் நற்பழக்கங்கள் குறையும். இதனால் பொருளம் உயிரும் நாசமடையும். ஆகையால் சிண்டிகலிசக் கொள்கைகள் அவ்வளவு சிறந்ததாகக் கருதப்படவில்லை.

கூட்டுடமை (collectivism)

ஒரு சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனி மனிதனின் உரிமைக்குக் (Indivudualism) கொடுக்கப்பட்ட விதிகளுக்கு எதிராகத் தோன்றியதே இந்தக் கூட்டுடைமை (Collectivism) வாதமாகும். இந்த கலெக்டிவிசமும் ஒருவகை சோஷியலிசம் என்றே கூறப்படுகிறது. இது 19-ஆம் நாற்றாண்டில் தோன்றியது. இதனைச் சிறது விரிவுபடுத்திக் கூறுவோமாயின் கலெக்டிவிசம், சமூகத்தில் ஏற்பட்ட ஒரு மாறுதலாகவும், ஒரு பொருளாதாரப் புரட்சியாகவும், மக்களின் பொதுநல நோக்கமே எனக்குறிப்பிடலாம். இந்தக் கொள்கைகளைப் பரப்பியவர்களில் எட்வர்ட் பெர்ஸ்டீன் ( Edward Berstein) என்ற ஜெர்மானியரும், ஜீன் ஜார்ஸ் (Jean Juanrce) என்ற பிரெஞ்சு நாட்டவரும், கார்ல் பீரேண்டிங் (Krl Branting) என்ற ஸ்வீடன் நாட்டவரும், எட்வர்ட் அன்ஸில் (Edward Anseel) என்ற பெல்ஜியம் நாட்டவரும் முக்கியமானவர்கள் ஆவார்கள்.

இந்த கலெக்டிவிசக் கொள்கையின் மூலம், ஒரு நாடானது அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான நன்மையைக் கொண்டே செயலாற்ற வேண்டுமென்பதாகும். இது நாட்டினை அகற்றி விடவேண்டுமென்று கூறவில்லை. ஆனால் நாடானது, முதலாளித்துவம், தனியார் சொத்துரிமை, போட்டி முதலியமைகள் ஒரு சமூகத்தில் ஏற்படாமல் பாதுகாக்கவேண்டும் என்பதாகும். சமூகத்தில் தனியார் உரிமையை வலியுறுத்தியவர்களின் எண்ணப்படி ‘நாடு’ என்பது ஒரு தீயநோக்குடன் பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டு நோக்கு உடையவர்களான இவர்கள் நாட்டை ஒரு புனித இடமாகக் கருதுகிறார்கள். இவர்களின் கருத்துப்படி ஒரு நாடுதான் அதன் கண்ணுள்ள சமூகத்திற்கு வேண்டிய பல நல்ல காரியங்களைச்செய்ய முடியும் என்பதாகும்.

ஒரு நாட்டின் பரிபாலனம் கூட்டுமுறையில் நடந்தால்தான், அந்நாட்டில் வாழும் மக்கள் அனைவரும், சமூக. பொருளாதார, உயர் நோக்கு நிறைந்தவர்களாக இருக்கமுடியும். அப்படியின்றித் தனிப்பட்ட ஒருவரின் உரிமை அதிகமாக வலியுறுத்தப்பட்டால், பழைய அரசியல் தன்மையைக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அதாவது தனிமனிதனின் ஆதிக்கம், அல்லது மன்னராட்சி தோற்றுவிக்க ஏதுவாகும் என்றும் கூறலாம். ஆனால் கலெக்டிவிசம், மக்களின் பொதுநலமே கண்ணாகக் கொண்டுள்ளது.

முன்பு நாம் கூறியதுபோல் சோஷியலிசக் கொள்கைகள் அனைத்தும் கலெக்டிவிசக் கொள்கைகளுக்கு ஒப்பாகும். பேராசிரியர் ஈலி அவர்களின் கருத்துப்படி கலெக்டிவிசம் என்பது அந் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைச் சரிசமமாக அந்நாட்டு மக்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதே என்று விளக்குகிறார். பேராசியரிர் F.W. காக்கர் (F.W.Coker) என்பவர் தனது இன்றைய அரசியல் கோட்பாடு (Recent Political thought) என்னும் புத்தகத்தில் கலெக்டிவிசம் என்றால் என்ன? என்பதனை விளக்கியுள்ளார். அவரின் விளக்கத்தின்படி தொழிலாளர்களின் மதிப்பையும் ஒரு வகுப்புவாதத்தையும் ஒரு சமூகத்தில் தொழிலாளர்களால் ஏற்படுத்தப்படுகிறது என்பதே. மேலும் ஒரு சமூகத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் பெரும்பாலும் செல்வத்தைப்பொறுத்தேயுள்ளது. மேலும் இவ்வித வேற்றுமைகளை ஒரு சமூகத்திலிருந்து ஒழிப்பதே கலெக்டிவிசத்தின் முக்கிய நோக்கமாகும்.

கலெக்டிவிசத்தின் முக்கிய குறிக்கோளாகக் கூறப்படுவது:

(1) தனியார் உரிமையை அகற்றுவது

(2) பெரும்பாலான பெரிய தொழிற்சாலைகளையும் உற்பத்தி நிலையங்களையும் பொதுச்சொத்தாக்குதல், அல்லது அரசாங்கத்தின் கீழ்க்கொணர்தல்

(3) தொழிற்சாலைகளில் மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய வற்புறுத்துதல்

(4) தனியார் இலாபத்தை எடுத்து மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துதல்

(5) உற்பத்திக் வேண்டிய சாதனங்களைனைத்தையம் அரசாங்கத்தில் கீழ்க்கொணர்தல்.

இவ்வாறு கொணர்ந்த உற்பத்திகள் அந்நாட்டு அரசாங்கத்தால் அதிலுள்ள மக்களுக்குச் சமமாகப் பகிர்ந்து கொடுக்கப்படவேண்டும். மேலும் அவ்வாறு மாற்றப்பட்ட சமூகத்திலுள்ள தொழிலாளிகளுக்கு ஊதியம் அவரவர்கள் தொழிலுக்குத் தக்கவாறும் ஒரே தொழிலைச்சார்ந்த அனைத்துத் தொழிலாளர்களும் ஒரே மாதிரியான ஊதியமும் பெறவேண்டும். ‘கூட்டுத்தன்மைக் கொள்கை” ஒன்றினால் மட்டுந்தான் ஒரு சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளைப் படிப்படியாக அகற்றமுடியும்.

இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட சோஷியலிசத்தையே நாட்ட சோஷியலிசம் என்கிறர்கள். (State Socialism) இது சிண்டிகலிசம், வாணிகக்கழகச் சமதர்மம் (Guild Socialism) இவை இரண்டினின்றும் மாறுபட்டதாகும். இந்த கலெக்டிவிசக் கொள்கை ஏன்? இவற்றின் பலன்கள் என்னென்ன? என்று ஆராய்வோமாயின் இக்கொள்கை ஒன்றின் மூலமாகத்தான் ஒழுங்கான அரசியலமைப்பை ஏற்படுத்தமுடியும். ஒரு நாட்டில் வாழும் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை நீக்கமுடியும். தனியார் உரிமை, தனிச் சொத்து, தனியார் இலாபம் இவற்றினால் ஏற்படும் தீமைகளை நீக்க முடியும். நிலம், சுரங்கம், கனிப்பொருட்கள், இன்னும் இவை போன்ற மற்றும் பலவும் ஒருநாட்டின் இயற்கை வளமாகையால அது ஒரு சிலர் கையில் மட்டும் இருப்பது அவ்வளவு சிறந்தது அல்ல. இவைகள் மக்களனைவருக்கும் பயன்படுத்த வேண்டுமாயின் அந்நாடு கலெக்டிவிசக் கொள்கையுடையதாக இருக்க வேண்டும்.

கலெக்டிவிசக் கொள்கைகளைப் பலமுறைகளில் மக்களிடம் பரப்ப முடியும். முதலாவதாக அமைதியாகவும் படிப்படியாகவம் பரப்புவது. இரண்டாவதாக ஒரு நாடு, அதனுடைய அரசு இவை இரண்டும், இரண்டு கண்களெனத் திகழந்து செயல்படவேண்டும். மென்மையான புரட்சியை அடிப்படையாகக் கொண்டே இந்நோக்கினைப் பரப்புதல் வேண்டும். இந்த கலெக்டிவிசக் கொள்கைகளையுடையவர்கள் ஒரு கட்சியாக மாறி மக்கள் சபையில் முதலிடம் வகித்து அவர்களது நோக்கங்களைப் பரப்புதல் வேண்டும். இவ்வாறு பல உயர் நோக்கங்களைப் பரப்புதல் வேண்டும். இவ்வாறு பல உயர் நோக்கங்களையுடைய இந்த அரசியல் கொள்கையில் பல நன்மைகளும் பல தீமைகளும் உள்ளன.

இதனால் சமூகத்தில் ஏற்படும் நன்மைகளைக் கவனிப்போம்.

(1) அனைவரின் நன்மைக்காக செயலாற்றுகிறது.

(2) இது நடைமுறைக்கு ஒத்தாக உள்ளது. உற்பத்திப் பொருட்களைப் பொதுவுடைiயாகவும் மாற்றி மக்களனைவருக்கும் சரிசமமாகப் பகிர்ந்து கொடுப்பதை ஆதரிக்கிறது.

(3) இவர்களின் நோக்கு கம்யூனிசக் கொள்கைகளுக்கு முரணானது. புரட்சியை விட்டு அமைதியையே நாடுகிறது.

இத்தனைப் பெருமைகளையும் உடைய இந்தக் கலெக்டிவிசக் கொள்கைளில் பல தீமைகளும் உள்ளன.

(1) தனியார் பொருள்களை உற்பத்தி செய்யும்பொழுது உள்ள உற்சாகமும், அதிக உற்பத்தியும் கலெடிவிசம், ஏற்பட்ட பின்பு இராது.

(2) இதனால் நாடும் அரசும் அதிகப்பலம் பொருந்தியதாத மாறி மக்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறன்றது.

(3) இதன் மூலமாகப் படிப்படியாகச் சர்வாதிகார ஆட்சி தோன்ற ஆட்சி தோன்ற வழிவகுத்துக் கொடுக்கிறது.

இவ்வித முறையினால் கள்ளப்பணம், குறுக்குவழி, தனிச்சலுமைககள் இவை போன்ற இன்றும் பல தீயசக்திகள் வளர ஏதுவாகின்றன. சோஷியலிசக் கொள்கையால் உருவான நோக்கங்களையும் அதனுடைய நன்மை தீமைகளையும் ஆராய்ந்தோம். இனி நாம் பேபினிசம் மற்றும் சிண்டிகலிசம், அவைகளுக்கும் சோஷியலிசக் கொள்கைகளுக்கும் உள்ள தொடர்பினை பார்ப்போம்.

அகஸ்டஸ் கோமட் (Augustes comte)

(கி.பி.1798 - 1857)

அக்ஸ்டஸ் கோமட் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் அறிஞர்களுள் ஒருவராவர். இவர் சமூக வாழ்க்கையினைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது மக்களின் வாழ்க்கையை நன்றாகத் தெரிந்து கொள்வதேயாகும் என்று குறிப்பிடுகின்றார். இதனால் உயிரில்லாத பொருட்களைப் பற்றிப் படிக்கக் கூடிய விஞ்ஞான நூல்களிலிருந்து முற்றிலும் மாறுபடடதாகும். புனித சைமன் அவர்கள் வெளியிட்ட கொள்கையின் அடிப்படையில் இவர் தனது கருத்துகளை உருவாக்கியிருக்கிறார். சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு புதிய வழிவேண்டுமென்று கூறினார். இயற்கை உரிமைகள் மனிதனுக்கு வேண்டுவதல்ல, சமூக ஒப்பந்த கொள்கை மக்களின் முன்னேற்றத்திற்குப் பொருந்தாது. இறைவழி உரிமைக் கொள்கை (Divine Right Theory) தற்காலத்திற்குப் பொருந்தாது. எந்தக் கோட்பாடும் உண்மையும் அடிப்படையில் அமைய வேண்டும். ஒவ்வொரு கோட்பாடும் மூன்று சட்டங்களைக் கொண்டதாக அமைகின்றது. முதலாவது சட்டத்தில் கோட்பாடுகள் மதக் கொள்கையின் அடிப்படையில் உருவாகின்றன. இரண்டாவது சட்டத்தில் மறைநூல் அடிப்படையில் உருவாகின்றது. மூன்றாவது சட்டத்தில் விஞ்ஞான கண்ணோட்டத்திலமைகிறது. மற்ற அறிவு நூல்களைப் போல அரசியல் என்பது வரலாற்றின் அடிப்படையிலும் அமையவேண்டும். ஒர் அரசாங்கத்தினுடையத் தொண்டினை அது மக்களுக்குச் செய்யும் நன்மைகளின் மூலமாகவும் எந்த விதமான நாகரிகத்தை வளர்ப்பதற்கு உதவிபுரிகின்றது என்பதன் மூலமாகவும் அறியமுடியும். சமூக முன்னெற்றத்திற்கச் சில சட்ட திட்டங்கள் தேவை. அப்படிப்பட்டக் கட்டுப்பாடுகளிடையே உருவான பாடங்களே சமூக வாழ்க்கை நூலாகும். எந்த சமூகத்திற்கும் நல்ல நிலையும் முன்னேற்றமும் தேவை. நல்ல நிலையில சமூக வாழ்க்கை அறிவு நூல் பயன்படுத்தப்பட்டால் நல்ல முன்னேற்றத்தை மனிதன் காணமுடியும். சுருங்கக் கூறின், ‘கோமட் அவர்கள் மக்கள் உயிரில் பிரியும் காட்டினாரே தவிர அரசைப் பற்றிக் கவலைப்படவில்லை. கோமட் சமூகத்திற்கும், அரசாங்கத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கியுள்ளார். மனிதனுடைய சுயநலமே அவனுக்கு ஒரு தூண்டுகோலாக அமைகிறது. எந்தச் சமூகத்திலும் அடித்தளத்திலிருப்பது குடும்பமாகும். அரசாங்கம் எல்லா சமூகத்திற்கும் அவசியமானது. அதைப்போலவே சமூகமில்லா விட்டால் அரசாங்கமேது? அரசாங்கம் சட்டத்தையும் ஒழுக்கத்தையும் நிலைநாட்டும் காரணத்தினால் தான் சமூகம் நன்றாக இயங்க முடிகின்றது.

பலாத்காரம், ஒவ்வொரு சமூகத்தினுடைய அடிப்படையாக இருக்கிறது. அதே சமயத்தில் நன்னெறி, மதம், அறிவு போன்றவைகளும் ஒரு சமூகத்தை வளர்க்கின்றன. சமூக நூலிற்கும் உயிர் நூலுக்கும் ஒற்றுமை இருக்கின்றது. எடுத்துக் காட்டுக்கு உயிர் நூல் கொள்கைகளை இவர் கையாளுகின்றார். உயிருள்ளவைகள் மற்ற உலகத்திலிருப்பது போன்று சமூகம் உயிர் பெற்றதாக உலகத்தில் இருக்கின்றது. எடுத்துக் காட்டுக்கு உயிர் நூல் கொள்கைகளை இவர் கையாளுகின்றார். உயிருள்ளவைகள் மற்ற உலகத்திலிருப்பது போன்று சமூகம் உயர் பெற்றதாக உலகத்தில் இருக்கின்றது. ஒரே விஞ்ஞானத்தின் இரு பிரிவுகளக உயிர் நூலையும் சமூக நூலையும் கருதினார். தனிப்பட்ட மனிதனுடைய வாழ்ககை வரலாறும் பல மக்களைக் ஒன்றாகவே அமைகின்றது. ஜனநாயக வாழ்க்கையை இவர் ஆதரிக்கவில்லை. பெண்கள் வேலையாட்கள், ஆசிரியர்கள் ஆகியோர்க்குப் பொது வாழ்க்கையில் எந்தவிதமான பங்கும் இருக்க் கூடாதென்பது இவரது கருத்து. இந்த அரசியல் கோட்பாட்டில் எதேச்சாதிகாரத் தத்துவத்தையும், மக்கள் சுதந்திரமாக வாழ விரும்பும் கொள்கையினையும் ஒன்றாக இணைக்க விரும்பினார். விவசாயம், வணிகம், தொழில் ஆகியவைகளைப் பிரதிநிதிகளாகக் கொண்ட திறமை படைத்த குழுக்களால் அரசாங்கம் அமைய வேண்டுமென்றும் விரும்பினார்.

கோமட் வாழ்ந்த காலம் விஞ்ஞான வளர்ச்சிக் காலம். விஞ்ஞானத்தின் புதிய கண்டுபிடிப்புகள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டன. ஐரோப்பாவில் தொழிற் புரட்சி ஏற்பட்டதின் விளைவாக மக்கள் வாழ்க்கை மிகவும் வசதியாக இருந்தது. சமூகம் முன்னேறியதே தவிர அரசியல் கோட்பாடுகளோ, கருத்துகளோ முன்னேற்றமடையவில்லை. அரசாங்கத்தில் மாறுதல்கள் தேவை: இந்த மாறுதல்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் ஏற்படவேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் தான் கோமட் தன் அரசியல் கொள்கைகளை வகுத்துள்ளார். தன்னுடைய அரசியல் கோட்பாடுகளை விஞ்ஞானத்தின் அடிப்படையில் எழுதினார். உண்மையாக சமூகத்திற்கு என்ன தேவை என்பதைப்பற்றி ஆராய்ந்து கருத்துகளை வழங்கினார். விஞ்ஞான முறையை அரசியலில் கையாண்டார். மக்களின் அரசயில் அறிவைப் பரப்புவதற்கு கல்வி மிகவும் தேவை. அரசியல் ஒரு விஞ்ஞானமாக இல்லாமல் பயன்தரக் கூடிய ஒரு அறிவு நூலாக இவரது எழுத்துகளால் மாற்றப்பட முடிந்தது. மனித சமூகத்தின் விதிகளை நன்றாக ஆராய்ச்சி செய்து அரசியல் கொள்கைகளை வகுத்தார். ஆகவே 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த அரசியலறிஞர்களின் இவர் விஞ்ஞானத்தைக் கடைப்பிடித்து அரசியல் கோட்பாடுகளை இயற்றியவராவார்.

ஹெர்பர்ட் ஸ்பென்சர் - (Herbert Spencer)

(கி.பி. 1820 - 1903)

ஹெர்பர்ட் ஸ்பென்சர் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஒரு பெரிய அரசியல் தத்துவவாதியாவார். இவர் பல நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய அரசியல் கோட்பாட்டில் படிமுறை அரசியல் கோட்பாட்டையும் (Evolutionery theory) காணலாம். டார்வின் கொள்கையையும், பென்தம் கோட்பாட்டையும் இணைத்து தம் கோட்பாட்டை அமைத்தார். தனிப்பட்டவர்களுக்குச் சுதந்திரம் வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தும் பொருட்டுப் படிமுறைக் கொள்கையை அரசியலில் கையாண்டார். மக்களின் மகிழ்ச்சியே அரசியலில் முக்கியமான குறிக்கோள். அந்த மகிழ்ச்சியையடைவதற்கு மக்கள் சூழ்நிலையை நன்றாக அமைத்துக் கொள்ளவேண்டும். மனிதன் சுதந்திரமாக வாழ்ந்தால் தான் சூழ்நிலையிலுள்ள இன்பங்களை அனுபவிக்க முடியும். நன்னெறி அரசியலுக்கு மிகவும் இன்றியமையாதது. மனிதன் வாழும் சமூகம் உயிருள்ள பொருள் போன்று உள்ளது. எப்படி இயற்கையாய் உயிருள்ள பொருட்கள் அனைத்தும் நன்றாக இயங்குகின்றதோ அதைப் போன்றே அரசியல் வாழ்க்கையும் நன்றாக அமையவேண்டும். இதே கொள்கையைத் தாவர உலகத்திற்கும், மிருக உலகத்திற்கும், மனித உலகத்திற்கும் பொருத்திக் காட்ட முடியும். ஒரு சமூகத்தின் வாழ்க்கை வரலாறு எவ்வாறு அமைகிறதோ அதனைப் பொறுத்தே மக்களின் வாழ்க்கையும் அமையும். தற்கால வாழ்க்கையில் பல்வகைப்பட்ட பிரச்சனைகள் உள்ளன. அவற்றைத் தீர்ப்பதற்குத் தனிப்பட்ட செயல்கள் அரசு செய்ய வேண்டும். இருந்தபோதிலும்கூட இவரது அரசியல் கருத்துகளில் தெளிவு இல்லை. உதாரணமாக அரசுக்கும் அரசாங்கத்திற்குமுள்ள மாறுபாடுகளைக் குறிப்பிடவில்லை. ஓர் அரசோ அல்லது சமுதாயமோ நன்றாக இயங்க வேண்டுமென்றால் அடிப்படை அம்சங்கள் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி, வணிகத்தின் செழிப்பு, அரசியலில் வளம இவைகளைனைத்தும் ஒருங்கே அமையவேண்டும். மனித உடம்பில் நரம்புமண்டலம் எவ்வாறு செயல்படுகின்றதோ அதைப்போலவே பல்வகைப்பட்ட துறைகளும் சமூகத்தில் செயல் புரியவேண்டும்.

தனித்தன்மையைப் பற்றிச் சில விளக்கங்களை கூறியுள்ளார். தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் இயற்கையான் இயற்கை உரிமைகள் உண்டு. சமூக ஒப்பந்தக் கோட்பாடானது அரசியலதிகாரத்திற்கு வழிகாட்டுகிறது. ஒவ்வொருவருக்கும் சுதந்திரமும் நியாயமும் வழங்கப்படவேண்டும். அரசியல் கட்டுப்பாடற்ற வாணிகக் கோட்பாடடை இவர் அரசியலுக்கும் பயன்படுத்தினார். அரசாங்கத்திற்கு எந்தவிதமான முக்கிய பணியையும அவர் கொடுக்கவில்லை. அரசாங்கமானது சமுதாயத்திலுள்ள தடைகளைக் களைவதற்கேயுள்ளதைத் தவிர, தடைகளைப் போடுவதற்காக அல்ல. தனித்தன்மையும் தனிமனிதனின் வளர்ச்சிக்கும் அரசாங்கம் தன்னுடைய ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும். கடைசியில் தனிப்பட்டவர்கள் நல்லதொரு நிலையை அடைந்த பிறகு அரசாங்கம் தன்னுடைய ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும். கடைசியில் தனிப்பட்டவர்கள் நல்லதொரு நிலையை அடைந்த பிறகு அரசாங்கம் தேவைப்படாததாகும். அரசாங்கத்தின்மீது மிகவும் கடினமான கட்டுப்பாடுகளை ஸ்பென்சர் விதித்தார். தொழிலைத் தடை செய்யக்கூடாது. மதத்தில் தலையிடக்கூடாது, குடியேற்றங்கள் அமைப்பதில் முயற்சி செய்தல் கூடாது. கட்டாயக் கல்வி நாட்டில் இருக்கக் கூடாது. ஏழைகளுக்கு உதவி செய்யவேண்டிய அவசியம் இல்லை. பொது மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை. இப்படிப்பட்ட கருத்துக்களை இவர் தெரிவித்தத்ததற்குக் காரணம் அரசு தலையிட்டால் சமூக அமைப்புப் பாதிக்கப்படும். ஆகவே ஒர் அரசாங்கத்தின் வேலை என்னவென்றால் உயிர், சுதந்திரம் மகிழ்ச்சி இவைகளை மனிதன் பெறுவதற்கான வழிகளை செய்வதே. அரசுக்குத் தனிப்பட்ட முறையில் ஓர் உயிரோ, தனித் தன்மையோ இல்லை.

கடைசியில் அரசாங்கம் இருக்கக்கூடாது. சமூகத்தின் முக்கியக் குறிக்கோள் குழப்பத்தை உண்டாக்குவது. இப்படிப்பட்ட ஒரு நிலை இராணுவத்தை அடிப்படையாகக்கொண்ட அரசாங்கமாக இருந்தால் ஏற்படலாம். மனித சமூக வளர்ச்சியின் முதல் கட்டத்தில் போர் வைப்பட்டிருந்தாலும்கூட இப்பொழுது அது அவசியமில்லை. அரசாங்கம் மறையும்பொழுமு இந்தப் போரும் மறைந்துவிடும்.. சமூக வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ள நாடுகள் இங்கிலாந்தும் அமெரிக்காவும் என்று குறிப்பிடுகின்றார். மக்களைப் பிரதிநிதிகளாகக் கொண்ட அரசாங்கம் மேலும் மேலும் வளரும். செயற்குழு மக்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். அதிகாரப் பகிர்வு ஏற்படவேண்டும் என்று கூறிய அவர் தனித்தன்மை வேகமாகப் பரவும் என்பதனையும் கூறியுள்ளார்.

தொடரும்...

Lr. C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com