சர்வதேச சட்டம்

சர்வதேச சட்டம்

சர்வதேச சட்டம்

(International law)

நாடுகள் ஒன்றையொன்று சார்ந்து வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் பொருளாதார நெருக்கடி, இன்னொரு நாட்டின் வேலைவாய்ப்பை பறிக்கிறது. உலகிலுள்ள மனித சமுதாயம் அரசியல் ரீதியாக நாடுகளால் பிரிக்கப்பட்டுள்ளதால், அடிப்படையில் அது நாடுகளின் சமுதாயமாகவே இருக்கின்றது.

நாடுகளுக்கிடையிலான சர்வதேச உறவுகளைப் பராமரிக்க வேண்டியது உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அவசியமாகும். அத்தகைய உறவுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளை கொண்டதே சர்வதேச சட்டமாகும்.

ஜெரமி பெந்தாம்

”International law” என்ற சொற்றொடரை முதலில் பயன்படுத்தியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெரமி பெந்தாம் (Jeremy Bentham) ஆவார். அதே அர்த்ததிலேயே சர்வதேச சட்டத்தை ப்ளாக்ஸ்டோன் (Blockstone) எனும் சட்டவியலாளர் ”நாடுகளின் சட்டம்” எனப் பொருள்படும் “Law of Nations’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார்.

பொது சர்வதேசச் சட்டம் மற்றும் தனி சர்வதேசச் சட்டம்

(Public International law and Private International Law)

சர்வதேசச் சட்டத்தில் பொது சர்வதேசச் சட்டம் என்றோ தனி சர்வதேச சட்டம் என்றோ தனியாக எதுவும் இல்லை. நாடுகளுக்கிடையிலான உறவை ஒழுக்குபடுத்தும், சர்வதேச உடன்படிக்கைகள், வழக்காறுகள், மரபுகள் போன்றவையே சர்வதேசச் சட்டமாகும். இது தவிர, ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டின் குடி மக்களுக்கும் அயல்நாட்டு குடி மக்களுக்கும் இடையிலான உறவுகளை ஒழுங்குபடுத்தும் உள்நாட்டுச் சட்டங்கள் உள்ளன.

இரண்டு நாட்டின் வெவ்வேறு சட்ட அமைப்பிற்கு உட்பட்ட இரண்டு நாட்டு குடி மக்களுக்கிடையில் எழும் வழக்குகளில் எந்த நாட்டின் சட்டம் என்பதை தீர்மானிப்பதற்கு இந்தச் சட்டங்களின் விதிகளே பயன்படுகின்றன. இச்சட்ட விதிகள், உள்நாட்டின் பிற சட்டங்களுக்கும் அயல்நாட்டின் சட்டங்களுக்கும் இடையே எழும்  முரண்பாடுகளைக் களைய உதவும் விதி முறைகளியும் சட்டக் கோட்பாடுகளையும் கொண்டவையாகும். எனவே இச்சட்டவிதிகள் பொதுச் சட்ட கோட்பாடுகளையும் கொண்டவையாகும். இதனடிப்படையில், இவை பொதுச் சட்டநாடுகளில் (Common Law Countires) சட்டங்களின் முரண்பாடு (Conflict of Laws) என்றே அழைக்கப்படுகிறது.

குடிமைச் சட்ட நாடுகளில் (Civil Law Countries) இதை தனி சர்வதேச சட்டம் என்று அழைக்கின்றனர். பொது சர்வதேசச் சட்டம் என்பது நாடுகளின் அரசுகளுக்கு இடையிலான உறவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமாகும். தனி சர்வதேசச் சட்டம் என்பது ஒரு நாட்டின் குடிமக்களுக்கும் பிற நாடுகளின் குடிமக்களுக்கும் இடையிலான உறவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமாகும். ஆனால் நடைமுறையில் பொதுச் சட்டம் ஒன்றே சர்வதேசச் சட்டமெனலாம்.

சர்வதேச சட்டம் வரையறை

ஓப்பன்ஹீம்

ஓப்பன்ஹீம் (Oppenheim) “நாகரிகமடைந்த நாடுகள், தங்களுக்கு இடையிலான உறவுகளில் சட்டப்படி தங்களைக் கட்டுப்படுத்தக் கூடியது என்று கருதுகின்ற வழக்காறுகளும் உடன்படிக்கை விதிகளும் அடங்கிய தொகுப்பிற்கு வழங்கப்படும் பெயரே சர்வதேசச் சட்டம்’ என்கிறார். ஓப்பன்ஹீமின் வரையறை பல விமர்சனங்களுக்குள்ளானது.

கெல்சன் (Kelson) “நாடுகளுக்கிடையிலான நடத்தைகளை ஒழுங்குபடுத்துகின்ற  விதிகளை உள்ளடக்கிய தொகுப்பே சர்வதேசச் சட்டம் என்கிறார். பேராசிரியர் கிரேயும்(Gray) கிட்டத்தட்ட இதே வரையறையினை வழங்குகிறார்.

லாரன்ஸ் (Lawrence) “தங்களுக்கிடையிலான ப்ரஸ்பர நடவடிக்கைகளில் நாகரீகமடைந்த நாடுகளின் பொது அமைப்பின் நடத்தைகளைத் தீர்மானிக்கும் விதிகளை உள்ளடக்கிய தொகுப்பே சர்வதேசச் சட்டம் என்கிறார்.

சோவியத் சோசலிச வரையறை

விஷின்ன்ஸ்கி

விஷின்ன்ஸ்கி (Vyshinsky) “நாடுகளுக்கிடையேயான போராட்டம் மற்றும் ஒத்துழைப்பின் போக்கில் அவற்றுக்கிடையிலான உறவுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் அந்நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவதாகவும் நாடுகள் தனியாகவும் கூட்டாகவும் செயல்படுத்தும் அச்சுறுத்தலால் நடைமுறைப் படுத்தப்படுவதாகவும் இருக்கின்ற ஒட்டுமொத்த விதிகளே” சர்வதேச சட்டம் என்கிறார்.

க்ரிஷ்போவ்ஸ்கி (Grzybowski) “சர்வதேச சட்டம் என்பது, நாடுகளுக்கிடையேயான போராட்டம் மற்றும் ஒத்துழைப்பின் போக்கில் அவற்றுக்கிடையிலான உறவுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் அந்நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் விருப்பத்தை வெளிப்படுத்துகின்ற நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கைகளின் அடிப்படையில் வளர்ச்சியடைந்ததாகவும் அவசியம் ஏற்படும் போது நாடுகள் தனியாகவும் கூட்டாகவும் கொடுக்கும் அழுத்தத்தின் மூலம் நிறைவேற்றப்படுவதுமான விதிகளின் ஒட்டுமொத்தமேயாகும்.

ஃபென்விக் (Fenwick) எனும் சட்டவியலாளர்  ”சர்வதேசச் சட்டம் என்பதை பரந்த பொருளில் , சர்வதேச சமுதாயத்தின் உறுப்பினர்களுக்கு இடையிலான பரஸ்பர உறவுகளில், அவர்களைக் கட்டுப்படுத்துகின்ற பொதுக் கோட்பாடுகளையும் குறிப்பான விதிகளையும் உள்ளடக்கிய தொகுப்பாக வரையறுக்கிறார்.

(Starke) ஸ்டார்க் “சர்வதேச சட்டம் என்பது நாடுகள் தாங்கள் கடைபிடிக்கக் கடமைப்படவர்கள் என்று கருதுவதால் தங்களுக்கு இடையிலான உறவுகளில் பொதுவாக கடைபிடிக்கின்ற கோட்பாடுகளையும் நடத்தை விதிகளையும் பெரும் பகுதியாக கொண்டிருக்கும் சட்டத்தொகுப்பே என்கிறார்.

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com