மேலவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள்

மேலவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள்

முன்னுரை

மேலவையின் உறுப்பினர் எண்ணிக்கை காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருந்தது. 1952-53 காலகட்டத்தில் 72-ஆக இருந்தது. அக்டோபர் 1, 1953-ல் ஆந்திர மாநிலம் பிரிந்து போனதால் 51 ஆகக் குறைந்தது. 1956-ல் 50 ஆகக் குறைந்த உறுப்பினர் எண்ணிக்கை 1957-ல் மீண்டும் உயர்ந்து 63 ஆனது. அதன் பின்னர் 1986-ல் மேலவை கலைக்கப்படும் வருடம் உறுப்பினர் எண்ணிக்கை 63 ஆகவே இருந்தது. உறுப்பினர்களுள் கீழவையும் உள்ளாட்சி அமைப்புகளும் தலா 21 பேரைத் தேர்ந்தெடுத்தன. ஆசிரியர்களும், பட்டதாரிகளும் 6 பேரைத் தேர்ந்தெடுத்தனர். மீதமுள்ள 9 பேர் அமைச்சரவையின் பரிந்துரைக்கேற்ப ஆளுநரால் நியமிக்கப்பட்டனர். மேலவை தன்னிச்சையாகச் சட்டங்களை இயற்றும் உரிமை பெற்றிருக்கவில்லை. கீழவையால் நிறைவேற்றப்பட்ட சட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் உரிமை மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. இரு அவைகளுக்கும் முரண்பாடு ஏற்படுமெனில் கீழவையின் முடிவே இறுதியானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1969-ல் சென்னை மாநிலம் “தமிழ் நாடு” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டபோது, மேலவையின் பெயரும் ”தமிழ்நாடு லெஜிஸ்லேட்டிவ் கௌன்சில்” என்று மாற்றப்பட்டது.

மேலவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மேலவை உறுப்பினர்கள் இரண்டு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 1952-ல் ராஜகோபாலாச்சாரி, ஆளுநர் ஸ்ரீ பிரகாசாவால் மேலவைக்கு நியமனம் செய்யப்பட்டு முதல்வரானார். 1967-ல் முதல்வராகப் பதவியேற்ற C.N. அண்ணாதுரை முதல்வரான பின் மேலவைக்கு கீழவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலவை கலைப்பு

எம்ஜிஆர் தமிழ்த் திரைப்பட நடிகையான வெண்ணிற ஆடை நிர்மலாவை அதிமுக சார்பில் மேலவைக்கு நியமனம் செய்ய முடிவு செய்தார். ஏ.பி. சாந்தி என்ற இயற்பெயர் கொண்ட நிர்மலா ஏப்ரல் 23, 1986-ல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிர்மலா முன்பு ஒருமுறை திவாலானவர். இந்திய அரசியலமைப்பின் 102-(1)c பிரிவின் படி திவாலான ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகவோ மாநில சட்டமன்றங்களின் உறுப்பினராகவோ ஆக முடியாது. ஏப்ரல் 21-ம் தேதி, எஸ்.கே. சுந்தரம் என்ற வழக்கறிஞர் இதனைக் குறிப்பிட்டு நிர்மலாவின் நியமனத்தை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்தார். நிர்மலாவின் கடன்களை அடைப்பதற்காக எம்ஜிஆர் அதிமுக கட்சி நிதியிலிருந்து ரூ. 4,65,000 கடனாக நிர்மலாவுக்கு அளித்தார். இதன்மூலம் நிர்மலாவின் திவால் நிலையை மாற்ற முயன்றார். சென்னை மாநில நகரங்கள் திவால் சட்டம் 1909-ன் 31-ம் பிரிவின் படி, கடன்களை முழுமையாக அடைத்துவிட்ட ஒருவரின் திவால் நிலை நீக்கிக் கொள்ளப்பட வேண்டுமென நிர்மலாவின் வழக்கறிஞர் சுப்ரமணியம் பிச்சை வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்ற நீதிபதி, நிர்மலா திவாலானவர் அல்ல என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு நிர்மாலாவின் நியமனத்தை செல்லும்படியாக்கியது. ஆனால் திடீரென நிர்மலா தனது வேட்புமனுவை திருப்பிப் பெற்றுக் கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து சென்னை ஆளுநர் சுந்தர்லால் குராணா முதல்வர் எம்ஜிஆரிடம் எப்படி திவாலான ஒருவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று விளக்கம் கேட்டார். இதனால் கோபம் கொண்ட எம்ஜிஆர் மேலவையைக் கலைக்க உத்தரவிட்டார். சட்டப்பேரவை மேலவையை கலைக்க மே 14-ம் தேதி கீழவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை (நீக்கம்) சட்டம், 1986-ல் நிறைவேற்றப்பட்டு, ஆகஸ்ட் 30, 1986-ல் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. நவம்பர் 1, 1986-ல் இந்தச் சட்டம் அமலுக்கு வந்து சட்டப்பேரவை மேலவை கலைக்கப்பட்டது.

மேலவை மீட்டுருவாக்கமும் கைவிடலும்

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தேர்தல் அறிக்கையில் கலைக்கப்பட்ட மேலவையை மீண்டும் அமைப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் 1989, 1996 தேர்தல்களில் திமுக வெற்றி பெற்ற போதும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அப்போதெல்லாம் மேலவையை மீண்டும் கொண்டு வருவதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் போதிய ஆதரவில்லாததால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. திமுக அரசுகளைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிமுக அரசுகள் திமுக வின் தீர்மானங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டன. 2006-ல் மு. கருணாநிதி ஐந்தாவது முறையாகத் தமிழக முதல்வரான பின் அதற்கான பணிகள் தொடங்கின. மே 24, 2006-ல் தமிழக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் ஆளுநர் உரையில் மேலவையை மீண்டும் கொண்டுவர சட்டதிருத்தம் கொண்டு வரப்படும் என்ற குறிப்பு இடம் பெற்றிருந்தது. நான்காண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 12, 2010-ல் தமிழக சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மே 4, 2010-ல் தமிழ்நாடு சட்டப்பேரவை மேலவைச் சட்டம், 2010-ஐ நடுவண் அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. அடுத்த இரு நாட்களில் அந்தச் சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 30 செப்டம்பர் 2010 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் மேலவை தொகுதிகள் பட்டியலை வெளியிட்டார். மேலவையை மீண்டும் அமைப்பதற்கான பணிகள் நடந்தன. ஆனால் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெ. ஜெயலலிதா தமிழக முதல்வரான பின்னர், இம்மீட்டுருவாக்கம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com