மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-5: ராஜியங்களுடைய பலத்தை அளவிடுவதன் அவசியம்

மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-5: ராஜியங்களுடைய பலத்தை அளவிடுவதன் அவசியம்

"சிவிக் ராஜ்யங்கள்"  (பிரஜைகளின் ராஜ்யங்கள்)

குற்றம், கொடுமை, முதலியவற்றை மேற்கொள்ளாமல் சகோதர பிரஜைகளின் ஆதரவால் கிடைக்கும் ராஜ்யத்தை "சிவிக்" (Civic) ராஜ்யம் எனலாம். சிவிக் ராஜ்யத்தை அடைவதற்கு வெறும் அதிர்ஷ்டமும் யோக்கியதையும் மட்டும் போதாது. தந்திரம் கலந்திருக்க வேண்டும். பொது ஜனங்களின் ஆதரவால், அல்லது பிரபுக்களின் தயவால் இவ்வகை ராஜ்ஜியத்தைப் பெறலாம். ஒவ்வொரு நகரத்திலும் இவ்விரு கட்சிகளும் உண்டு. ஜனங்கள் பிரபுக்களுடைய ஆதிக்கத்தை ஒழிக்க விரும்புவார்கள். பிரபுக்கள் ஜனங்களை அடக்கியாளப் பார்ப்பார்கள். முரண்பட்ட கட்சிகளிலிருந்து பின்வரும் மூன்று விஷயங்களிலொன்று எழுகின்றது.  பூர்ண அதிகாரமுடைய அரசாங்கம் (Absolute Government) சுதந்திரம் (Liberty) அல்லது எதேச்சை (Licence) முதலில் கூறியது சமயத்துக் கேற்றபடி மக்களாலோ அல்லது பிரபுக்களாலோ ஏற்படுகிறது. 

பிரபுக்கள் ஜனங்களை இனி தங்களால் அடக்க முடியாது என்று கண்டவுடன் ஒன்று சேர்ந்து தங்களிலொருவனை ராஜாவாக நியமித்து, அவனுடைய அதிகாரத்தின் நிழலில் தங்கள் காரியங்களை நடத்திக் கொள்கிறார்கள் ஜனங்கள் பிரபுக்களை எதிர்க்க முடியாமற் போனால், தங்களுள் ஒருவனை அரசனாக்கி அவனுடைய அதிகாரத்தின் பலத்தால் காப்பாற்றப்பட விரும்புகிறார்கள்.  பொது ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனைவிடப் பிரபுக்களால் நியமிக்கப்பட்டவனுக்குத் தன் பலத்தைக் காத்துக் கொள்வது கடினம்.  ஏனெனில் தங்களை ராஜாவுக்குச் சமானமென்று நினைத்துக் கொண்டிருக்கும் பிரபுக்கள், அவனைச் சூழ்ந்து கொண்டிருப்பதால், ராஜா தன் இஷ்டப்படி அதிகாரம் செலுத்தவும் உத்திரவிடவும் முடிவதில்லை. ஆனால் பொது ஜனங்களுடைய விருப்பத்தின் மேல் அரசனானவன் தனி கௌரவத்துடன் இருக்கிறான். அவன் ஆணையைச் சிரமேற்கொள்ளாவர்கள் வெகு சிலரே.  அதுவும்  தவிரப் பிறரைத் துன்புறுத்தாமல் நியாயமாய் நடந்து பிரபுக்களைத் திருப்தி செய்வது கஷ்டம். இவ்வகையில் குடிகளை எளிதில் சந்தோஷப்படுத்தலாம். ஜனங்களுடைய லட்சியங்கள் பிரபுக்களுடைய உத்தேசங்களைவிட நாணயமானவை, கௌரவமுள்ளவை.  

பிரபுக்களுக்குப் பிறரை அடக்கி ஆளுவதில் ஆசை. ஜனங்கள் தங்களை ஒருவரும் ஒடுக்காமலிருந்தால் போதும் என்கிறார்கள். ஜனங்களுடைய விரோதத்திலிந்து தப்புவதற்கு அரசன் பாதுகாப்பு முறைகளைக் கையாள முடியாது, ஏனெனில் அவர்கள் தொகை அதிகம். பிரபுக்கள் சிலரேயாதலின், அவர்களுடையது துவேஷத்துக்குத் தடுப்பு முறைகளை உபயோக்கிகலாம். ஜனங்களுடைய விரோதம் மிஞ்சிப் போனால், அரசனைப் கைவிட்டு விடுவதைவிட அதிகமாய்ப் போகாது. பகைவர்களான பிரபுக்கள் அரசனை கைவிடுவது மன்றி எதிர்க்கவும் துணிவார்கள். அவர்களுக்குத் தூரதிருஷ்டியும் தந்திரமும் அதிகமாகையால், ஜெயிக்கும் கட்சி எதுவென்று பார்த்துக் கொண்டிருந்து அதில் சேர்ந்து தப்பித்துக் கொள்வார்கள். அரசன் அதே ஜனங்களுடன் வசித்தாகவேண்டும். அதே பிரபுக்களுடன் இருந்தாக வேண்டியதில்லை. பிரபுக்களை அரசன் மனம்போல் ஆக்கவும் அழிக்கவும் வழியண்டு. அவர்களுடைய அந்தஸ்தை உயர்த்தலாம் அல்லது ஒழித்து விடலாம்.

என்னுடைய வாதத்தை விளக்குவதற்காக ஒன்று கூறுகிறேன். பிரபுக்களைப் பற்றி இருவகையாக யோசித்து காரியம் செய்ய வேண்டும். அவர்களைச் சகலத்துக்கும் அரசனையே சார்ந்திருக்கும் படியாக வைக்க வேண்டும். அரசனுடைய நன்மை தீமைகள் அவர்களைப் பாதிக்க வேண்டும். அப்படி யில்லாவிட்டால் அவர்களைக் கிட்டவே சேர்க்கக் கூடாது. அரசனிடம் கட்டுப்பட்டு நடக்கும் பிரபுக்களுக்குள், பணத்தாசை பிடித்திராதவர்களாயிந்தால், அவர்களைக் கௌரவித்து அன்பு பாராட்ட வேண்டும்.  அரசனிடம்  ஒட்டாமல் தூர நிற்பவர்களை இருவிதமாகப் பிரிக்காலம்.  சங்கோஜத்தினாலும், தைரியத் குறைவாலும் அவர்கள் அப்படியிருக்கலாம். அப்படியானால் அவர்களை, முக்கியமாய் அறிவாளிகளாயிருப்பவர்களை, அரசன் உபயோகித்துக் கொள்ள வேண்டும்.  காலம் எப்படி மாறினாலும் அவர்களிடம் அஞ்சவேண்டியதில்லை.

ஆனால் பிரபுக்கள் வேறு அக்கறைகளுடையவர்களாய், வேண்டுமென்றே தங்கள் பேராசையின் காரணமாய் அரசனிடம் நெருங்காமல் ஒதுங்கிப் போனால் அது அவர்கள் அரசனுடைய  நலத்தை விடத் தங்கள் நன்மையையே பெரிதாகக் கருதுகிறார்களென்பதற்கு அடையாளம். அப்படிப்பட்டவர்களிடம் அரசன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதிர்ஷ்டம் மாறினால், அவர்கள் அரசனைக் கெடுக்கத் தயாராயிருப்பார்கள்.

மக்கள் ஆதரவால் மன்னனானவன் மக்கள் நட்பை வளர்க்க வேண்டும்.  மக்கள், தாம், துன்புறுத்தப் படாமலிருந்தால் போதுமென்றிருப்பவர்களாகையால், அவர்களது சிநேகத்தைப் பாதுகாப்பது எளிது.  ஜனங்களின் இஷ்டத்துக்கு எதிராக பிரபுக்களால் ராஜாவாக்கப்பட்டவனும் ஜனங்களின் நல்லுறவைப் பெற முயலுவது அவசியம். குடிகளை அன்புடன் ஆண்டுவந்தால், அதுவும் சுலபந்தான். தீமை கிடைக்குமென்று எதிர்பார்த்த இடத்தில் நன்மை கிடைத்தால், நன்றி செய்தவனிடம் மட்டற்ற  விசுவாசத்துடனிருப்பது மனித இயற்கையாதலால், ஜனங்கள் தாங்களே தேர்ந்தெடுத்திருக்கக் கூடியவனிடம் இருப்பதைவிட இம்மன்னனிடம் அதிக நல்லுணர்ச்சியுடனிருப்பார்கள் சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு ராஜா பல விதங்களில் அவர்கள் மனதைக் கவரலாம். அதற்கென்று தனியாக ஒன்றும் விதி கிடையாது. முடிவாக நான் சொல்வது இதுதான். ஜனங்களுடைய நட்பைப் பெறுவது மன்னனுக்கு இன்றியமையாதது. இல்லையேல் கஷ்டகாலத்தில் சகாயம் கையிருப்பில் இராது.

ஸ்பார்த்தர்களுடைய ராஜாவான நபிஸ் (Nabis) கிரீஸினுடையவும் வெற்றி வெறிகொண்ட ரோமர்களுடைய,  தாக்குதலை எதிர்த்துத் தற்காத்துக் கொண்டான்.  ஆபத்து நேர்ந்த காலத்தில் மக்களுடைய உதவி கிடைக்குமென்ற தைரியம் அவனுக்குப் போதுமானதாயிருந்தது. பொது மக்கள் விரோத பாவத்துடனிருந்தால், அந்த ஆபத்தைச் சமாளித்திருக்க முடியாது. “மக்கள் மேல் நம்பிக்கை வைக்கிறவன் மணல் மேல் கோட்டை கட்டுகிறான்” என்ற பழமொழி இருப்பதுண்மையே,  சாதாரண மனிதனுக்கு அது சரிதான்.  சாமானிய மனிதனொருவன் தன்னை விரோதிகளாவது மாஜிஸ்ட்ரேட்டாவது ஹிம்ஸித்தால் பொது மக்கள் வந்து விடுவிப்பார்களென்று நம்பிக்கை கொள்வானாயின் ரோமில் க்ராக்சி (Grachi) பிளாரன்ஸில் மெஸ்ஸர் ஜியார் ஜியே ஸ்காலியையும் (Messer Giorgio Scali) போல் ஏமாந்து தான் போவான். ஆனால் அஞ்சா நெஞ்சினனாயும், அதிகாரம் செய்யக் கூடியவனாயும் துரதிர்ஷ்டம் நேருங்கால் மனங் கலங்காதவனாயும், மற்ற ஏற்பாடுகளை அலட்சியம் செய்யாதவனாயும், தன் வீரத்தினாலும், வழிகளாலும் ஜனங்களை உற்சாகப் படுத்தக் கூடியவனாயும் இருக்கும் ஒரு ராஜா மக்கள் மீது நம்பிக்கை வைப்பானாகில் அவன் ஏமாற்றமடையமாட்டான்.  தன் அஸ்திவாரம் பலமானது என்பதைக் காண்பான்.

சாதாரணமாக இந்த ராஜ்யங்களில் அரசன் நகர மாந்தர்களின் பிரதிநிதி என்ற ஸ்தானத்திலிருந்து முழு அதிகாரமும் உடைய அரசனாய் மாறும் போது தான் அபாயம் ஏற்படுகிறது. ராஜாக்கள் தாங்களே நேரிலாவது அல்லது மாஜிஸ்ட்ரேட்டுகள் மூலமாயாவது ஆட்சி புரிகிறார்கள். பின் கூறப்பட்ட விதமாயின் ராஜாவின் நிலைமை பலஹீனமும் அபாயமும் உடையதாகும். அரசன் மாஜிஸ்ட்ரேட்டுகளில் தயவில் இருப்பதால் கஷ்ட காலம் வந்த போது, அவர்கள் சௌகரியமாக அரசனை எதிர்க்வும் கூடும். அல்லது அவனுடைய ஆணையை நிறைவேற்றாமலிருந்து அவனை ராஜ்யத்தையே இழக்கும் படி செய்யவும் கூடும். அம்மாதிரி சமயங்களில் அரசனுக்கு நம்பத்தகுந்த துணைவர்கள் கிடைப்பதரிது. ஏனெனில் ஜனங்கள் மாஜிஸ்ரேட்டின் கட்டளைகளுக்கே பணிந்து பழகிவிட்டதால் திடீரென்று ராஜாவுடைய நேர்முகமான உத்தரவுகளை ஏற்கத்தயாராயிருக்க மாட்டார்கள். ராஜாவுக்குத் தன் முழு அதிகாரத்தையும் அமுலுக்குக் கொண்டுவரச் சமயம் போதாமலிருக்கும். அப்படிப்பட்ட அரசன், சமாதான சமயத்தில், மக்களுக்கு நல்ல அரசாட்சி வேண்டிய சமயத்தில் அவர்கள் இருக்கும் மாதிரியைக் கண்டு தைரியம்  கொண்டுவிடலாகாது.  ஏனெனில் அப்போது ஜனங்கள் அரசனுக்காக எதுவும் செய்யச் சித்தமாயிருப்பவர்களைப் போலக் காணப்படுவார்கள். அவனுக்காக உயிரைக் கொடுக்கவும் முன்வருவார்கள். ஆனால் அந்த அவசியம் மட்டும் கிட்டத்தில் இல்லாமலிருக்க வேண்டும். கஷ்ட காலத்தில், ராஜாங்கத்துக்கு மக்களுடைய ஒத்தாசை வேண்டியிருக்கும் சமயத்தில் வெகு சிலரே உதவி சித்தமாயிருப்பார்கள். இந்த அனுபவம் ஒரே தடவை வருவதாகையால்,  மிகவும் அபாயகரமானது.  ஆகையால் புத்திமானான அரசன் எப்போதும் எந்த நிலையிலும் ஜனங்களுக்குத் தன் அரசாட்சி இன்றியமையாததாக இருக்கும்படியான வழியைச் செய்து கொண்டால் மக்கள் அவனிடம் உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள்.

ராஜியங்களுடைய பலத்தை   அளவிடுவதன் அவசியம்

இந்த ராஜ்யங்களைப் பற்றி ஆராயுங்கால் இன்னொரு அம்சத்தைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அரசன் அவசியமானபோது தனியாகத் தன்னைக் காத்துக் கொள்ளும் வல்லமையுள்ளவனா அல்லது எப்போதும் பிறருடைய உதவியை எதிர்பார்ப்பவனா என்று பார்க்க வேண்டும்.  ஏராளமான தனமும் மனிதக் கட்டும் சேனா பலமும் உடையவர்கள், தனியாகத் தற்காப்புச் செய்து கொள்ளக் கூடியவர்கள். பிறரைப் போரில் எதிர்க்கும் ஆற்றலின்றித் தம் நகரங்களின் மதில்களுக்குள்ளேயே இருந்து தற்காப்பில் ஈடுபட்டிருப்போருக்கு அயலாருடைய சகாயம் அவசியம் வேண்டும். முதற் கூறியதைப் பற்றி ஏற்கனவே விவரித்தாயிற்று. சமயம் வரும்போது மறுபடியும் அதைப் பற்றிக் கவனிப்போம்.  இரண்டாவது கூறியதைக் குறிக்கும் அதிகமாக ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.  அரசன் தன் நகரத்தில் போதுமான உணவுப் பொருள்களைக் காப்பாற்றி வைத்துக் கொண்டு நகரத்தை கூடுமானவரையில் பலப்படுத்திக் கொளவதுடன் அடுத்திரும் நாடுகளில் அக்கரை கொள்ளாமலிருக்க வேண்டும். தன் நகரத்தை உறுதியாகப் பலப்படுத்திக் கொண்டு ஜனங்களுடைய ஆட்சியை இதுவரை நான் சொன்னது போலவும் இனி கூறப்போகிறதைப் போலவும் நடத்திக் கொண்டுவரும் ராஜாவை எவரும் எதிர்ப்பதற்குத் தயங்குவார்கள். கஷ்டங்கள் வரும் என்று தெரிந்த விஷயங்களில் பிரவேசிப்பதற்கு மனிதர்கள் இஷ்டப்படுகிறதில்லை. நகரத்தை உறுதியாகத் தற்காத்துக் கொண்டும், ஜனங்களின் வெறுப்புக்கு ஆளாகாமலும் இருக்கும் ராஜாவைத் தாக்குவது எளிதாகத் தோன்றும்.
    

ஜெர்மனியிலுள்ள நகரங்கள் பூர்ண சுதந்திரமுடையவை. சுற்றிலும் நாடுகள் நிறைய கிடையாது. நகரவாசிகள் தங்களுக்கிஷ்டமுள்ள போது, சக்கரவாத்திக்குக் கீழ்ப்படிவார்கள். சக்கரவர்த்தியிடமோ இன்னும் அங்குள்ள வேறு அரசர்களிடமோ அவர்களுக்குப் பயங்கிடையாது. அந்நகரங்கள் பலப்படுத்தப் பட்டிருப்பதைப் பார்த்தால் அவற்றைப் பணியவைப்பது கஷ்டமானதும் சலிக்கவைப்பதுமான முயற்சி என்று தோன்றும். ஏனெனில் அந்நகரங்களிலெல்லாம் கோட்டை, கொத்தளங்கள், அகழிகள், பீரங்கி, குதிரைப்படை முதலியவை ஏராளமாயிருப்பதுடன் ஒரு வருஷத்துக்குப் போதுமான  உணவுப் பொருள்களும் விறகும் எப்போதும் கைவசம் இருக்கும். மேலும் தாழ்ந்த வகுப்போருக்கு ஒரு வருஷத்துக்கு வேலை கொடுக்கப் போதிய சாதனங்களும் இருக்கின்றன. சர்க்காருக்கும் நஷ்டமில்லாமல், நகரத்தின் ஜீவநாடிகள் போல் இயங்கும் தொழில்களிலும் ஏழை ஜனங்கள் வழக்கமாய்ச் செய்து பிழைக்கும் கைத்தொழில்களிலும் அவர்களுக்கு வேலை கொடுத்துத் திருப்தி செய்யக்கூடும். ராணுவ சம்பந்தமான தேகாப்பியாசங்கள் இன்னும் அங்கே மிக்க மதிப்பைப் பெற்றவையாயர் இருக்கின்றன. அந்த அப்பியாசங்களைத் தொடர்ந்து நடத்த எவ்வளவோ  விதிகளும் ஏற்பாடுகளும் உள்ளன. 

ஆகையால் நகரமும் வலிவுடன் இருந்து ஜனங்களாலும் துவேஷிக்கப்படாமலிக்கும் ஒரு அரசனைத் தாக்குவது அரிது. அப்படித் தாக்கினால் எதிரி அவமானமடைந்து பின் வாங்க நேரிடும். ஏனெனில் ஒரு வருஷம் போர்வீரர்களைச் சும்மா வைத்துக் கொண்டு முற்றுகை செய்ய முயன்று கொண்டிருப்பது கஷ்டம். நடுவில் எத்தனையோ விஷயங்கள் மாறக்கூடும்ட. நகரத்துக்கு வெளியிலுள்ள தங்கள் சொத்துக்கள் நாசமாக்கப்படுவதைக் கண்டு ஜனங்கள் பொறுமையிழந்து விடுவார்களென்றும், நீடித்த முற்றுகையின் கஷ்டங்களும், சுயநலமும் அவர்கள் தங்கள் ராஜபக்தியை மறந்துவிடச் செய்யுமென்றும் சிலர் நினைக்கக்கூடும். ஆனால் வல்லமையும் துணிவும் வாய்ந்த ஒரு அரசன் அந்த நிலைமைக்கு இடங்கொடான். சில சமயம் ஜனங்களை, அவர்களுடைய துன்பங்கள் நிலையானவையல்லவென்று நம்பிக்கையூட்டி அவர்களை உத்சாகப்படுத்தியும், சில சமயம் பகைவனுடைய குரூரச் செயல்களை எடுத்துக்காட்டி, அவர்களுடைய மனதில் பதியச் செய்தும், துணிச்சலாயிருப்பவர்களைச் சாதுர்யமாகக் கைக்குள் போட்டுக் கொண்டும், அரசன் அக்கஷ்டங்களைச் சமாளிக்கிறான். அதுவுமின்றி எதிரிகள் முதலிலேயே நாட்டைப் பாழ்படுத்துவதில் முனைகிறார்கள். ஜனங்கள் தற்காப்பில் ஆவலும் ஆவேசமும் கொண்டிருக்கும் போதே இதுவும் நிகழ்வதால், அரசனுக்குப் பயம்தரும் ஏதுக்கள் இன்னும் குறைந்து போகின்றன. சில நாட்களுக்குப் பின்னர் ஜனங்களுடைய ஆவேசம் அடங்கி, எதிரிகளுடைய நாசவேலைகளெல்லாம் முடிந்து, மக்கள் தீங்குகளையெல்லாம் அனுபவித்தான பிறகு, இனி அவற்றைச் சரிப்படுத்த வழியில்லை யென்பதைக் கண்டபிறகும் அவர்கள் அரசனுடன் இன்னும் அதிகமாகப் பிணைந்து நிற்கிறார்கள். அரசனுடைய பாதுகாப்பிற்காகத் தாங்கள் வீடுகளை அக்கினிக்கிரையாகக் கொடுத்தும், தங்கள் சொத்துக்களைப் பறிகொடுத்தும் தியாகம் செய்தவர்களான மக்கள் தங்களிடம் ராஜா தாட்சண்யப்பட்டவன் என்று நினைக்கிறார்கள்.

தமக்கு நன்றி செய்தவர்களுக்குத் தாம் எவ்வாறு கடமைப்பட்டவர்களோ, அவ்வாறே தம்மிடம் உபகாரத்தைப் பெற்றவரிடத்தும் தம்மைக் கட்டுப்பட்டவராக நினைப்பது மனித இயல்பு ஆகையால் பகுத்தறிவுள்ள அரசன் முற்றுகையின் ஆரம்பத்திலும் சரி, முற்றுகை நிகழ்ந்து கொண்டிருக்கும் போதும் சரி, மக்களுடைய மனோதிடத்தை நிலைக்கச் செய்வதில் சிரமப்படமாட்டான்.  தற்காப்பிற்குரிய சௌகரியங்களும் சாதனங்களும் மட்டும் குறைவின்றி அமைந்திருக்க வேண்டும்.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com