மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-8: அரசர்களுடைய புகழ்ச்சி, அல்லது இகழ்ச்சிக்குரிய விஷயங்கள்

மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-8: அரசர்களுடைய புகழ்ச்சி, அல்லது இகழ்ச்சிக்குரிய விஷயங்கள்

அரசர்களுடைய புகழ்ச்சி,  அல்லது இகழ்ச்சிக்குரிய விஷயங்கள்

ஒரு அரசன் தன் குடிகளிடமும் நண்பர்களிடமும் நடந்து கொள்ள வேண்டிய விதிமுகைள் என்ன என்பதைப் பற்றிக் கூற வேண்டியிருக்கிறது.  இதைக் குறித்து ஏற்கனவே பலர்  எழுதி யிருக்கிறார்கள் என்பதால்,  நான் எழுதப்புகுவது அதிகப்பிரசங்கித்தனமென்று நினைக்கப்படுமென்று அஞ்சுகிறேன். மேலும் இவ்விஷயத்தில் என்னுடைய கொள்கைகள் அவர்களுடையவற்றிற்கு மாறுபட்டவை. ஆனால் விஷயங்களை மனதில் வாங்கிக் கொள்ளும் சக்தியுடையவர்களுக்கு உபயோகமான சிலவற்றைச் சொல்லவேண்டுமென்பது என் உத்தேசமாகையால், வெறும் கற்பனை உலகத்தில் சஞ்சரிக்காமல், விஷயங்களின் நிஜஸ்வரூபத்தை விளக்கிக் காட்டிவிடுவது தான் நியாயமென்று தோன்றுகிறது.  

பலர், உண்மையாகக் கண்டிராதவையும் இல்லாதவையுமான ராஜ்யங்களையும் குடியரசுகளையும் மனோராஜ்யத்தில் காண்கிறார்கள். நாம் வாழ்கின்ற விதத்துக்கும் வாழவேண்டிய விதத்துக்கும் சம்பந்தமேயில்லை. காரியம் ஆகவேண்டியதைப் பார்க்காமல், செய்யவேண்டிய விதிப்படி நடத்தப் பார்க்கிறவன், தன் மேன்மைக்குப் பதிலாக அழிவுக்கு வழிதேடவே கற்றுக்கொள்வான். ஒவ்வொரு வேலையிலும் நன்மையையே கடைப்பிடிக்க விரும்புகிறவன், நல்லவர்களாயில்லாத பலர் நடுவில் நஷ்டமடைவான் ஆகையால் பத்திரமாயிருக்க விரும்பும் அரசன் நல்லவனாயில்லாத பலர் நடுவில் நஷ்டமடைவான். ஆகையால் பத்திரமாயிருக்க விரும்பும் அரசன் நல்லவனாயிராமலிருப்பது எப்படி என்பதைக்கற்டதுமன்றி, அந்த ஞானத்தை அவசியத்துக்குத் தக்கவாறு பயன்படுத்தவும் படுத்தாமலிக்கவும் படித்துக் கொள்ள வேண்டும்.

கற்பனை அரசர்களை குறிக்கும் விஷயங்களை ஒரு புறம்  தள்ளி விட்டு, நிஜமான ராஜாவைப் பற்றிப் பேசுவோம். மிக உன்னத ஸ்தானத்திலிருப்பவர்கள், முக்கியமான அரசர்கள் புகழ்ச்சி அல்லது இகழ்ச்சியைத் தரும் தன்மைகளாலேயே, பிராபல்யமடைந்திருக்கிறார்கள். இங்ஙனமாக ஒருவன் உதாரகுணமுடையவன் என்றும் மற்றொருவன் கருமி என்றும் கருதப்படுகிறான்.  ஒருவன் கொடையாளி மற்றொருவன் பணப்பேய். ஒருவன் பொய்யன், மற்றவன் சத்திய சந்தன். ஒருவன் சங்கோஜி, கோழை மற்றவன் பயங்கமும் ஆவேசமும் பொருந்தியவன்:  ஒருவன் தயையே உருவெடுத்தவன்,  மற்றவன் திமிர்யதார்த்தவாதி,  ஒருவன் வெள்ளை மனதுடையவன்,  மற்றவன் கபடி: ஒருவன் கல் நெஞ்சன், மற்றவன் சரளமானவன்: ஒருவன் கம்பீரமுடையவன், மற்றவன் சில்லரை புத்தியுள்ளவன்: ஒருவன் மதவிசுவாசமுடையவன், மற்றவன் நிரீசுவரவாதி.  இப்படிப் பற்பல விதமாக மதிக்கப்படுகிறார்கள்.  

மேற்குறித்தவற்றில் நல்ல குணங்களெல்லாம் பொருந்தப்பெறுவது ராஜாவுக்குக் கீர்த்தியைக் கொடுக்குமென்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் எல்லா நற்குணங்களும் பொருந்தப் பெறுவதும், அவற்றை நடைமுறையில் அனுசரிப்பதும் முடியாத காரியம். மனிதனுடைய நிலைமை அதற்கிடங்கொடாது.  ஆகையால் அவன் தன் பகுத்தறிவை உபயோகித்துத் தன் தீயகுணங்களைப் பற்றி வம்புப்பேச்சுக் கிளம்பி,  அதிகாரம் தன் கையை விட்டுப் போய்விடாத படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். விடாப் பிடியாகப் பிடித்துக் கொள்வது நலம். முடியாவிட்டால் அவற்றைப் பயப்படாமல் மேற் கொள்ளலாம். தீயகுணங்கள் ராஜ்யத்தின் பாதுகாப்புக்கு அவசியமானவையாயிருக்கும். அத்தகைய குணங்களால் வரும் வம்பையும் அபக்கியாதியையும் அரசன் காதில் போட்டுக் கொள்ளக் கூடாது. நன்றாக யோசித்துப் பார்த்தால், நாம் நல்லவையென்று நினைக்கும் சில தன்மைகள் அவற்றை அனுசரிப்போருக்கு நஷ்டத்தை உண்டாக்குகின்றன. தீயவையென மதிக்கும் குணங்களோ, ஒருவனுக்குப் பத்திரத்தையும் ஷேமத்தையும் தருகின்றன.


உதாரகுணமும் கருமித்தனமும்

முதலில் உதாரகுணத்தையும் கருமித்தனத்தையும் எடுத்துக் கொள்வோம். தாராள மனதுடையவன் என்று சொல்லப்படுவது நல்லது தான்.  ஆனால் உலகம் எதைத் தாராளம் என்று கருதுகிறதோ,  அம்மாதிரி  தாராளகுணம் மனிதனுக்கு ஹானியைக் கொடுக்கும், விதிப்படி அக்குணத்தை அனுசரித்தால், ஒருவன் செய்யும் தர்மம் வெளியில் தெரியாது. தர்மம் செய்கிறவனுக்கு அதற்கு எதிரிடையான குணத்தையே கற்பித்து மக்கள் இகழ்வார்கள்.  கொடையாளி என்று கொண்டாடப்பட விரும்புகிறவன்,  தன் கொடையை வெளிப்படையாக, டம்பமாகக் காண்பிக்க வேண்டியிருக்கிறது. ஆகையால் அக்குணமுடைய அரசன் தனக்குக் கியாதி கிடைப்பதற்காகத் தன் வசமுள்ள பொருளையெல்லாம் விரயமாக்க நேரிடும். கடைசியில் தர்மசாலியென்ற பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஜனங்கள் மீது பளுவான வரிகளைச் சுமத்தவும், பணம் கிடைப்பதற்காக எதுவேண்டுமானாலும் செய்யவும் வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.  இதனால் ஜனங்கள் அவனை வெறுக்க ஆரம்பிப்பார்கள்.  அவனுடைய உதாரகுணத்தால் பலருக்குத் தீங்கும் சிலருக்கே நன்மையும் கிடைத்திருப்பதால், அரசனுடைய கைப்பணமெல்லாம் செலவழிந்த பிறகு அவனை ஒருவரும் மதிக்கமாட்டார்கள். முதலில் தேசத்தில் சிறு தொந்தரவுகள் நேர ஆரம்பித்து, பிறகு ஒவ்வொரு சமாசாரமும் அரசனுக்கு ஆபத்தில் வந்து முடியும். அரசன் இதையறிந்து தன் போக்கை மாற்றிக் கொள்ளப் பார்ப்பானாயின்,  கஞ்சன் என்ற பெயர் வந்து சேரும்.

உதாரகுணத்தை இரகசியமாக அனுஷ்டித்துப் பயனில்லை என்று கூறினேன். பஹிரங்கமாக அனுசரித்தாலும் அபாயமாக இருக்கிறது. ஆகையால் அரசன் புத்திசாலியாயிருந்தால், கிருபணன் என்று சொல்லப்படுவதை ஆட்சேபிக்ககூடாது. நாளடைவில், அவன் செட்டாயிருப்பதால் ராஜ்யத்திலிருந்து சாதாரணமாய்க் கிடைக்கும் வரிப்பணம் செலவுக்குப் போதுமானதாயிருப்பதையும், தன்னைத் தாக்குவோரைத் தடுக்கும் வல்லமை பெற்றவனாயிருத்தலையும், ஜனங்கள் தலையில் மேன் மேலும் வரிகளைச் சுமத்தாமலே பிறநாடுகளில் படையெடுப்புகளை நடத்தும் சாமர்த்தியமுடையவனாயிருப்பதையும் பார்க்கும் போது, ஜனங்கள் அவனைத் தாராள மனப்பாங்குடையவன் என்று சொல்லக் தொடங்குவார்கள்.  

ஏனெனில் அவன் எண்ணற்றவர்களுக்கு, அவர்களுடைய பணத்தை வரியின் பெயரால் அபகரிக்காமலிருப்பதால் தாராள மனதுடையவனாகத் தோற்றுவான். மிகச்சிலர், தங்களுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை யென்றால் அவனைக் கருமி என்று ஏசுவார்கள்.  நம் காலத்தில் கஞ்சன் என்று சொல்லப்படுகிறவர்களைக் தவர வேறுயாகும் காரியங்களைச் சாதித்திருக்கக் காணோம். மற்றவர்கள் நஷ்டந்தான் அடைந்திருக்கிறார்கள். இரண்டாவது ஜீலியஸ் போப் ஸ்தானத்துக்கு வருவதற்காக உதாரகுணத்தை உபயோகித்துக் கொண்டானவானாலும், பிறகு யுத்தத்தில் ஈடுபட விரும்பியதால், அந்தக் கியாதியை நிலைநாட்டிக் கொள்வதில் அக்கறைகொள்ளவில்லை. பிரான்ஸின் தற்போதைய மன்னன் புதியவரி ஒன்றும் போடாமலேயே பல யுத்தங்களை நடத்தியிருக்கிறான்  அவன் இதுகாறும் செட்டாயிருந்ததன் மூலம் அவனுடைய அதிகப்படி செலவுகள் சரிப்படுத்தப்பட்டன. ஸ்பெயினை இப்போது  ஆளும் அரசன் தாராளமானவனென மதிக்கப்படுகிறவனாயிருந்தால், இவ்வளவு யுத்தங்களை ஆரம்பித்து வெற்றியடைந்திருக்க முடியாது.

இக்காரணங்கள் பற்றி, அதாவது தன் ஜனங்களைக் கொள்ளையடிக்காதிருக்க விரும்பினால், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், ஏழ்மையையும் அவமதிப்பையும்  தவிர்க்க விரும்பினால், பணப்பேராசை உடையவனாகும் படியான கட்டாயம் ஏற்படக்கூடாதென்றால், அரசன் தன்னை யாரும் கஞ்சன் என்று சொல்லவதைப் பற்றிக் கவலைப்படலாகாது. இக்குணம் அவனுடைய அரசாட்சிக்குத் துணைபுரியும் தீக்குணங்களில் ஒன்று. ஸீஸர் தாராள சித்தையால் சாம்ராஜ்யத்தைப் பெற்றான். இன்னும் பலர் தாராளமாயிருப்பதாலோ, அல்லது அவ்வாறு நினைக்கப்படுதலாலோ பெரிய ஸ்தானங்களுக்கு வந்தார்கள் என்று சிலர் வாதாடலாம். ஏற்கனவே ராஜாவாயிருப்பவனுக்கு உதாரகுணம் உதவாதே தவிர ராஜபதவியை அடையும் பாதையிலிருப்பவனுக்குத் தர்மசீலனென்று அப்பெயரெடுக்கவேண்டியது அவசியம்.  ரோமில் அதிகாரம் செலுத்த முயற்சித்தவர்களில் ஸீஸர் ஒருவன். ஆனால், அவன் அந்த அதிகாரத்தைப் பெற்ற பிறகு, உயிருடனிருந்து தன் செலவுகளைக் குறைத்துக் கொள்ளாமலிருந்தால், சாம்ராஜ்யமே அழிந்து போயிருக்கும்,  இன்னும்,  சைனிய பலத்தைக் கொண்டு பெரிய காரியங்களைச் சாதித்திருக்கிற அநேக அரசர்கள் உதாரகுண சீலர்களென்று புகழப்பட்டிருக்கிறார்களென்றும் சிலர் நினைக்கலாம். 

ராஜாவானவன், தன் சொத்து, குடிகளுடைய சொத்து, அல்லது அன்னியருடைய பணத்தைச் செலவு செய்வான்,  சொந்தப் பணமானால் செட்டாகச் செலவிட வேண்டும், மற்றவையானால் மிகவும் தாராளமாயிருக்கத் தவறக்கூடாது. கொள்ளையடித்துக் கொண்டும், அயலான் பணத்தைக் கையாண்டு கொண்டும் படைகளுடன் முன்னேறிக் கொண்டும் இருக்கும் அரசன் கட்டாயம் தாராளமாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் போர் வீரர்கள் அவனைப் பின் தொடரமாட்டார்கள், ஸைரஸ், ஸீஸர், அலெக்ஸாண்டர், முதலியவர்களைப் போல் மற்றவர்களுடைய பணத்தை மிகவும் தாராளமாக வாரியிறைக்கலாம். பிறர் பணத்தை விரயம் செய்வதால் அவன் மதிப்புக் குறைவதற்குப் பதிலாக மேம்படும். சொந்த சொத்து செலவழிந்தால் தான் கஷ்டம்.  தர்மகுணத்தைப் போல் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் தன்மை வேறெதற்குமில்லை. ஏனென்றால், மேன்மேலும் தாராளமாயிருந்தால், அத்தன்மையை உபயோகிக்கும் சக்தி குறைந்து  போகிறது. ஜனங்கள் அவனை ஏழை யென்று அலட்சியம் செய்து  அருவருக்கிறார்கள். தரித்திரத்திலிருந்து தப்ப விரும்பினாலோ பணப் பிசாசு என்று தூற்றுகிறார்கள். ஜனங்களுடைய பகைமையும் வெறுப்பும் மிகவும் ஜாக்கிரதையுடன் தவிர்க்கப் பட வேண்டியவை. தாராள சிந்தையானது அரசனை இவ்விரண்டிலொன்றில் கொண்டு போய்விடும். ஆகையால் கிருபணன் என்று பெயர் வாங்கி, வெறும் அவமதிப்பை மட்டும் பெறுவது, பணப்பேயெனப் பெயரெடுத்து அவமதிப்பு, பகைமை இரண்டையும் அடைவதை விட எவ்வளவோ மேலானது.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com