மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-9: அரசன் நம்பிக்கைக்குரியவனாக இருக்கும் வழி

மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-9: அரசன் நம்பிக்கைக்குரியவனாக இருக்கும் வழி

குரூரமும் கருணையும்: அன்பு பெறுதலும் அஞ்சப்படுதலும்


அரசன் கருணாமூர்த்தி என்று சொல்லப்படவெண்டுமேயன்றிக் குரூர சித்தமுடையவன் என்று பெயர் வர இடந்தரலாகாது. ஆனால் அவன் தன் கருணையைத் துர்விநியோகம் செய்யாமலிக்க வேண்டும்.  ஸீஸர்  போர்ஜியா குரூரமானவனென்று கருதப்பட்டான். ஆனால் அவனுடைய அந்தக் குணம் ரோமானாவில் ஒழுங்கு ஒற்றுமை, அமைதி, விசுவாசம்,முதலியவற்றை நிலவச் செய்தது. நன்றாக யோசிக்குமிடத்துக் குரூச் நெஞ்சர்களென்ற நிந்தையைத் தவிர்ப்பதற்காகப் பிஸ்டோயாவை (Pistoia) நாசமாக்கிவிட்ட பிளாரன்டின்களை விட, ஸீஸர் போர்ஜியா எவ்வளவோ தயையுடையவன் என்று ஏற்படும். ஆகவே ஒரு ராஜா தன் குடிகளை ஒற்றுமையுடனும் உண்மையுடனும் இருக்கச் செய்வதன் பொருட்டுத்தான் குரூரமானவன் என்ற வகைச் சொல்லை ஏற்கத் தயங்கலாகாது. சில உதாரணங்களின் படி பார்க்கப்போனால்,  அதிகமான இளகிய தன்மையினால் ஒழுங்கீனங்களை வளர விட்டு அதிலிருந்து இரத்தக்கிளறி, கொள்ளை,  போன்ற கொடுமைகளை நிகழவிட்டுவிடுகிறவர்களை  விட அவனே அதிகக் கருணையுடையவன்.

ஏனெனில் கொள்ளை முதலிய கொடுமைகள் ஜனசமூகத்துக்கே பாதகம் விளைவிப்பவை. அரசன் அளிக்கும் மரண தண்டனைகள் தனி மனிதர்களைத்தான் பாதிப்பவை. ஒரு புதிய அரசன் குரூரநெஞ்சனென்ற அபக்கியாதியினின்றும் தப்புவதரிது. புதிய ராஜ்யங்கள் ஆபத்துக்கள் நிறைந்தவை.  அதனால்தான வர்ஜில் (Virgil) டிடோ (Dido) வாயிலாகக் கூறுகிறான்:

Res dura, et regni novritas me ialia, cogunt 
Molri, et late fines custode theri

அரசன் பிறரை நம்புவதிலும், தான் நடந்து கொள்வதிலும் எச்சரிக்கையுடனிருக்க வேண்டும்.  தன் நிழலைக் கண்டே அஞ்சக் கூடாது. பகுத்தறிவுடனும், மனுஷ்யத் தன்மையுடனும் நிதானமாய் முன் செல்ல வேண்டும்.  அதிகத் தன்னம்பிக்கையினால் ஜாக்கிரத்தையும் அவநம்பிக்கை மேலிட்டால் பொறுமையையும் இழக்காமலிருப்பதற்கு அது தான் வழி. இதிலிருந்து ஒரு அரசன் தன் குடிகளுடைய அன்பைப் பெறுதல் நல்லதா அல்லது அவர்களால் அஞ்சக் கூடியவனாயிருப்பது சிறந்ததா என்ற கேள்வி எழுகின்றது.  இதற்குப் பதில் அன்பு,  அச்சம் இரண்டும் இருக்க வேண்டியதுதான் என்பதேயாகும். ஆனால் அவையிரண்டும் சேர்ந்திருப்பதரிது. இரண்டிலொன்றுதான் கிடைக்குமென்றால் அன்பைவிட அச்சந்தான் பத்திரமுடையது.  ஏனெனில் மனிதர்கள் பொதுவாக நன்றியற்றவர்கள்,  வாய்ப் பேச்சு வீரர்கள், கபடிகள், ஆபத்தில் மாட்டிக்கொள்ள விரும்பாதவர்கள், பேராசைக்காரர்கள்,  என்றெல்லாம் சொல்லப்படுகிறார்கள்,  தங்களுக்கு நன்மை கிடைத்துக் கொண்டிருக்கும் வரையில் நன்றி செய்கிறவனுக்கு அவர்கள் சொந்தம்,  தங்கள் உடல், பொருள், ஆவி, சுதந்திரம், மக்கள் யாவற்றையும் அவனுக்காகத் தியாகம் செய்வதாகக் கூறுவார்கள். தியாகம் செய்ய வேண்டிய அவசியம் மாத்திரம் வெகு தூரத்திலிருக்க வேண்டும்.  அந்த அவசியம் நேர்ந்து விட்டால், கலகத்துக்கு ஆரம்பிப்பார்கள். அவர்கள் சொல்லையே நம்பி முன்னேற்பாடுகள் வேறெதுவும் செய்யாமலிருந்தால், அரசன் அழிந்து போகவேண்டியதுதான். பெருந்தன்மையால் அடையப்பெறாமல், தான் தானம் செய்வதால் கிட்டும் நட்பு வேண்டிப் பெற்றதல்ல, விலைக்கு வாங்கப்பட்டது தான். ஒரு அற்பச் சாக்குக் கூட அந் நட்பை அவனுக்கு தவறாமற் செய்து விடும். மனிதன் தன் அன்புக்குரியவனாக நடந்த கொள்ளும் ஒருவனை மனஸ்தாபப் படுத்த அவ்வளவாய்த் தயங்க மாட்டான். ஆனால் அச்சுறுத்கக் கூடியவனைப் பகைத்துக் கொள்ளப் பயன்படுவான். அன்பானது சங்கிலி போன்ற தொடர்ச்சியான பல உபகாரங்களினால் இயங்குகிறது. மனிதன் சுய நலக்காரனாகையால், தனக்குக் காரியம் ஆகவேண்டியிருக்கும் போது அந்தச் சங்கிலியை அறுத்தெறிந்து விடுவான்.  ஆனால் அச்சமோ,  தண்டனை என்ற திகிலினாற் பாதுகாக்கப்படுகிறது.  அந்தப் பயம் விடுவதேயில்லை.

அரசன்  அஞ்சக் கூடிய தன்மையுடையவனாயிருப்பது அவசியந்தான் எனினும் ஜனங்களுடைய அன்பு இல்லாவிட்டாலும் அவர்களுக்கு வெறுப்புண்டாகாத விதமாய் அவர்களுடைய அச்சத்தைப் பெற வேண்டும். அச்சமும் வெறுப்பின்மையும் ஒன்றாயிருக்க முடியும். ஜனங்களுடைய ஆஸ்தி விஷயத்திலும் ஸ்திரீகள் விஷயத்திலும் தலையிடாமலிருப்பவன் எப்போதும் அச்சத்தையும் துவேஷமின்மையையும் பெறக் கூடும். எவனுடைய உயிரையாவது அரசன் கொள்ள நினைத்தால் அதற்கு ஏதாவது நியாயமும் காரணமும் காட்டிவிட வேண்டும். ஆனால் பிறர் சொத்தில் மட்டும் கை வைக்கவே கூடாது.  மக்கள் தங்கள் சொத்தை உயிரைக் காட்டிலும் அதிகமாக மதிக்கிறார்கள் அவர்கள் தங்கள் பிதாவின் மரணத்தைக் கூட மறந்து விடுவார்கள். ஆனால் அவர்களால் பிதுரார்ஜிதத்தை இழப்பதை மறக்க முடியாது. அஸ்திகளைப் பிடுங்குவதற்கு காரணங்கள் ஏராளமாக அகப்பட்டுக் கொண்டே இருக்கும். கொள்ளை யடித்து லாபம் பெற விரும்புவோருக்கு அயலார் சொத்தை அபகரிப்பதற்கு ஏதாவது சாக்குக் கிடைத்தபடியிருக்கும்.  உயிரைப் போக்குவதற்குக் காரணங்கள் அபூர்வமாய்க் கிடைப்பது மன்றி அவை எளிதில் மறைந்து போகும்.

ராஜா தன் பட்டாளத்தில் கணக்கற்ற போர் வீரர்களைத் தன் கட்டுக்குள் அடக்கி வைக்க வேண்டியிருக்கிற சமயத்தில், தன் குரூரத் தன்மையை வெளிக் காட்டத் தயங்கக் கூடாது. பொல்லாதவன் என்ற பேர் இல்லாவிட்டால், அத்தனை சிப்பாய்களை அடக்கியாண்டு அவர்கள் ஒற்றுமையுடன் தங்கள் கடமைகளைக் கவனிக்கும் படி செய்வது கஷ்டம். ஹான்னிபாலிடம்(Hannibal) பல ஜாதியினரைக் கொண்டபிரும்மாண்டமான சைனியம் இருந்தது. வெளிநாடுகளிற் சென்று யுத்தம் புரிந்தது என்றாலும் போர் வீரர்கள் தங்களுக்குள் ஒரு போதும் ஒற்றுமையிழக்கவேயில்லை. அரசனிடமும் ஒரு விதமான மன வேற்றுமையும் கொள்ள வில்லை. நல்ல காலத்திலும் கெட்ட காலத்திலும் ஒரே மாதிரியாக ஐக்கியத்துடனும் அரசனிடம் விசுவாசத்துடனும் நடந்து கொண்டார்கள்.  இதற்கு அவனுடைய மிருகத்தனமான குரூரணம் தவிர வேறொரு காரணமும் இருக்க முடியாது. பல சிறந்த குணங்களுடன் கடுஞ் சித்தமும்  கொண்டிருந்ததால்தான், சிப்பாய்கள் அவனை வணக்கத்துடனும் அச்சத்துடனும் நோக்கினர்.  மற்றக் குணங்கள் மட்டும் அந்தப் பலனையளிக்கப் போதுமானவையாயிருந்திரா. இது ஹான்னிபால் செய்த பிரக்யாதி பெற்ற செயல்களிலொன்றாகக் கருதப்படுகிறது. அவனை பற்றி எழுதியவர்கள் யோசனையின்றி அவனுடைய அருஞ்செயல்களை ஒரு பக்கம் கொண்டாடிவிட்டு மற்றொரு பக்கம் அவ்வருஞ்செயலுக்கு ஆதாரமான தன்மையைப் பற்றிக் குறை கூறுகிறார்கள்.


குவிண்டஸ் பேபியஸ் மாக்ஸிமஸ்

மற்ற குணங்கள் மட்டும் பிரயோஜனப்பட்டிரா என்பதற்கு, ஸிபியோவின் திருஷ்டாந்தம் இருக்கிறது. அவன் காலத்துக்கு மட்டுமல்ல, நமது ஞாபகத்துக்குப் பட்ட எல்லா சமயங்களுக்கும் அவ்வுதாரணம் ஏற்றது.  அவன் தன் போர் வீரர்களிடம் அளவுக்கு மீறிய அன்பு காட்டி,  ராணுவ விதிகளுக்கு  மிஞ்சின சுயேச்சையை அளித்ததால்,  அவனுடைய பட்டாளங்கள் ஸ்பெயினில் அவனையே எதிர்த்துக் கொண்டு கலகம் செய்தன.  ஸெனேட்டில் பேபியஸ் மாக்ஸிமஸ் (Fabius maximus)  அவனை ரோம ராணுவத்தைக் கெடுத்தவன் என்று நிந்தித்தான். லாக்ரி (Locri) நகரத்தை ஸிபியோவின் உத்தியோகஸ்தர்களிலொருவன் பாழ்படுத்திவிட்டான். அதற்கு அந்த உத்தியோகஸ்தன் ஒரு தண்டனையும் அடையவில்லை. இதற்கு காரணம் ஸ்பியோவின் இளகிய மனந்தான் ஸெனேட்டில் ஸிபியோவுக்குப் பரிந்து பேசிய  ஒருவன் “அநேகம் பேர்களுக்கு, தாம் தவறிழைக்காமலிருக்கத்தான் தெரியும். பிறருடைய தவறைத் திருத்தத் தெரியாது என்றான். ஸிபியோ சாம்ராஜ்யத்தினுடைய அதிகாரத்தின் கீழிருந்து இந்த மனப்பான்மையை வைத்துக் கொண்டிருந்தால்,  அவனுடைய கியாதிக்குக் களங்க முண்டாயிருந்திருக்கும்.  ஸெனேட்டின் கீழிருந்ததால், இந்தத் தீங்கு தரும் குணம் மறைக்கப்பட்டது மன்றி,  அது அவனுக்கு ஒரு கீர்த்தியாயும் மாறியது. முடிவாக,  அச்சம்,  அன்பு இவற்றைப் பற்றி யோசித்தால்,  மனிதர்கள் தாங்களாக இஷ்டப்பட்டு அன்பு பாராட்டுகிறார்கள். அரசனுடைய இஷ்டப்படி பயப்படுகிறார்கள். புத்திமானான அரசன் தன் சக்தியால் செய்யக் கூடியதைச் செய்ய வேண்டுமே தவிர, பிறருடைய இஷ்டத்துக்குள் இருப்பதை நம்பிக் கொண்டிருக்கக் கூடாது.  ஏற்கெனவே எடுத்துக் கூறப்பட்டப்படி ஜனங்களுடைய  துவேஷத்தை மட்டும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஏற்படுகிறது.

அரசன் நம்பிக்கைக்குரியவனாக இருக்கும் வழி

ராஜாவானவன் கள்ளங்கபடமின்றி வெள்ளை நெஞ்சம் படைத்தவனாய், நம்பிக்கைக்குரியவனாயிருப்பது எவ்வளவு மெச்சத்தகுந்த விஷயம் என்பது எல்லாரும் அறிந்தது தான். ஆயினும் நம் நாட்களில் அனுபவத்தின் படி பார்ப்போமாயின் உண்மையுடைமைக்கு அவ்வளவாய்க் கவலைப்படாமல் கபடத்தால் மக்கள் மனதைக் கலக்கவல்லவர்களே அரிய காரியங்களைச் செய்து முடித்திருக்கிறார்களென்றும் அவர்கள் ஜெயித்திருக்கிறார்களென்றும் தெரியவரும். போரில் இருவகை உண்டு.  ஒன்று தர்ம நியாயத்துக் கிணங்கியது. மற்றது பலாத்கார முறை. முதல் முறை மனிதர்களுக்குரியது. இரண்டாவது மிருகங்களுடையது. முதல் முறை அடிக்கடி போதிய பலனை அளிக்காமல் போவதால், இரண்டாம் வழியை மேற்கொள்ள வேண்டி வருகிறது.  ஆகவே ஒரு ராஜ்ய மிருகத்தின் வழி, மனிதனுடைய வழி இரண்டையும் உபயோகிக்கத் தெரிந்து கொள்வது அவசியமாக இருக்கின்றது. பழைய கிரந்த கர்த்தகாக்கள் இதை மறைமுகமாக, அரசர்களுக்குக் கற்பித்ததார்கள். ஆகிலஸும் இன்னும் பலரும் சிரான் (Chiron) என்னும் குதிரை முகமும் மனிதவுடலும் உடைய மனித மிருகத்திடம் ஒப்புவிக்கப்பட்டு அதன் கட்டுக்குட்பட்டுக் கல்வி பயின்று வந்தார்களென்று அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.  இந்த மனித மிருகத்தின் கதை ஒரு அரசன் இவ்விருவியல்களையும் உபயோகிக்கத் தெரிந்தவனாயிருக்க வேண்டுமென்றதையும், ஒன்றில்லாவிட்டால் ஒன்று நிலைக்காது என்பதையும் குறிப்பாகக் காட்டுகிறது.

இவ்விதம் மிருங்களைப்போல்  நடக்கத் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதால், அரசன் நரியையும் சிங்கத்தையும் பின்பற்ற வேண்டும். சிங்கத்துக்குப் பொறியிலிருந்து தப்பித்துக் கொள்ளத் தெரியாது. நர்க்கு ஒநாயிடமிருந்த தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாது. அரசன் பொறிகளை அறிந்து கொள்ள நரியாகவும், ஒநாய்களைப் பயமுறுத்துவதற்குச் சிங்கமாயும் இருக்க வேண்டும். சிங்கமாக மட்டும் இருக்க விரும்புவோர், இதை அறிகிறதில்லை. ஆகையால் புத்திமானான அரசன் உண்மையுடையமையால் தன் நலம் கெடும் போலிருந்தால் உண்மையுடையவனாக இருக்கக் கூடாது. விசுவாசத்தை எந்தக் காரணத்துக்காகக் கைக் கொண்டானோ அந்தக் காரணங்கள் இனி இல்லாவிட்டால் விசுவாசத்தைக் கை விட்டுவிட வேண்டும்.  நம்பிக்கையாக நடக்க வேண்டியதில்லை.  மனிதர்களெல்லாரும் நல்லவர்களாயிருந்தால் இந்த உபதேசம் நல்லதல்லதான்..

ஆனால் அவர்கள் கெட்டவர்களாயும்  விசுவாசமற்றவர்களாயுமிருப்பதால் அவர்களிடம் நம்பிக்கைக்குரியவனாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. தன் வாக்குறுதியை சட்ட பூர்வமான காரணங்கள் கிடைக்கத் தவறியதில்லை. இதற்குச் சமீபகாலத்துத் திருஷ்டாந்தங்கள் எவ்வளவோ இருக்கின்றன.  நம்பிக்கைக்குப் பாத்திரமில்லாத மன்னர்களால் சமாதான உடன் படிக்கமைகள் எவ்வளவோ தரம் மீறப்பட்டன. எவ்வளவு வாக்குறுதிகள் அர்த்தமற்றுப் போயின என்பதையும்,  நரியைப் போன்றவர்களே எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றலுடையவர்களா இருந்திருப்பதையும் நிரூப்பிக்கலாம். இந்தக் குணத்தை நன்றாக மறைக்கும் சாமர்த்தியம் மட்டும் கட்டாயம் சூதுவாது தெரியாமல் தற்காலத்துத் தேவைகள் கிடைத்தால் போது மென்ற மனவியல்புள்ளவர்களாயிருப்பதால்எதையும் நம்பி விடுகிறார்கள். ஏமாற்ற விரும்புவோருக்கு எப்போதும் ஏமாந்தவர்கள் கிடைப்பார்கள்.

தற்காலத்தில் திருஷ்டாந்தம் ஒன்று மட்டும் கூறுகிறேன். ஆறாவது அலெக்ஸாண்டர் மக்களை ஏமாற்றுவதும், ஏமாற்றும் சந்தர்ப்பத்தைத் தேடுவதும், இதுவே வேலையாக இருந்தான். வாக்குறுதிகளைத் தாரளாமாக வாரி வீசுவதிலும்,  தன் பேச்சை உறுதி செய்ய சத்தியம் செய்வதிலும் அவனைவிடச் சூரன் கிடையாது.  ஏமாற்றும் கலையில் பண்டிதனாகையால் அவனுடைய ஏமாற்றுதல் எப்போதும் பலனளித்து வந்தது. ஆதலால் ஒரு அரசனுக்கு நான் குறிப்பிட்ட நல்ல குணங்களெல்லாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இருப்பது போன்ற பாவனை மிக அவசியம் அந்தக் குணங்கள் நிஜமாகவே இருந்து அவற்றின்படியே எப்போதும் நடப்பது அபாயமென்று கூட நான் கூறத் துணிவேன். ஆனால் அவை இருப்பது போன்ற தோற்றம் உபயோகமானது. கருணையுடையவனாயும், விசுவாசமுள்ளவனாயும் தாயாசீலனாயும், கபடமில்லாதவனாகவும் மத விசுவாசமுள்ளவனாயும் காட்டிக் கொள்வதும் உண்மையாகவே அப்படியிருப்பதும் நல்லதுதான்.  ஆனால் அவசியமானபோது நேர்மாறான குணங்களை மேற்கொள்ளும்  மனவியல்பு இருக்க வேண்டும்.  ஒரு அரசன், சிறப்பாகப் புதிய அரசன், நல்ல குணங்களெல்லாவற்றையும் அனுசரிப்பதென்பது முடியாத காரியம். தன் ராஜ்யத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவன் அடிக்கடி நம்பிக்கை, தர்மம், மனிதத் தன்மை, மதம் முதலியவற்றிற்கு விரோதமாக நடக்க நேரிடும். ஆகவே அவனுக்குச் சமயோசிதமாய்  அதிர்ஷ்ட சக்கரத்தின் சுழற்சிக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளும் மனப்பான்மை வேண்டும். முடியுமானால் நேரான மார்க்கத்திலேயே செல்லலாம்.  கட்டாய  மேற்பட்டால், சந்து பொந்துகள் மூலமாயும் போகத் தெரியவேண்டும் தீமை இழைக்கவும் தயாராயிருக்க வேண்டும்.

ஒரு அரசன் மேற் சொன்ன ஐந்து குணங்களும் பொருந்தியிராத ஒரு வார்த்தை கூடத் தன் வாயினின்றும்ட வெளிவராமற் காக்க வேண்டும். தயை, கபடமின்மை, பக்தி, முதலியவையே உருவெடுத்தாற்போல் தென்பட வேண்டும். இதைவிட முக்கியமானது வேறொன்றுமில்லை. ஏனெனில் கையால் ஸ்பரிசிப்பதைவிடக் கண்ணால் பார்ப்பதைக் கொண்டு தான் மனிதர்களுடைய தன்மை நிதானிக்கப்படுகிறது. கண்ணாற் பார்ப்பது எல்லோராலும் கூடும். ஸ்பரிசிப்பது வெகு சிலருக்கே முடியும். அரசன் தென்படும் மாதிரி எலலோருக்கும் தெரிகிறது. அவனுடைய உண்மை சுபாவத்தை வெகு சிலரே அனுபவித்தறிகிறார்கள்.  அந்தச் சிலர் ராஜாங்கத்தின் பாதுகாப்பையுடைய பெரும்பாலரை எதிரிட்டுக் கொள்ளத் துணியமாட்டார்கள். மக்களுடைய,  அதிலும் அதற்குமேல் அப்பீலில்லை என்கிற அரசனுடைய செய்கைகளுக்கு முடி நன்றாயிருந்தால், முறைகள் குறை கூறப்படமாட்டா. ஒரு அரசன் ராஜ்யத்தை ஜெயித்து அதைப் பரிபாலிப்பதில் சிரத்தை கொள்ளட்டும். அதற்காக அவன் கையாளும் சாதனங்கள் கௌரவமானவை என்றே எல்லோராலும் புகழப்படும்.  ஏனென்றாலும் சாமான்ய ஜனங்கள் ஒரு உத்தேசத்தின் வெளித் தோற்றத்தையும் விளைவையுமே பார்த்து மலைக்கிறார்கள். உலகத்தில் சாமான்ய ஜனங்களே அதிகம். பெரும்பாலானவர்கள் அரசனைச் சார்ந்து நிற்பதால்,  சாமான்யரல்லாத சிலர் தனியாக நின்று போகிறார்கள்.  தற்காலத்திய ராஜா ஒருவன்,  அவன் பெயரைக் குறிப்பிடாமலிருப்பது நலம், சதா சமாதானத்தையும் சத்தியத்தையும் உபதேசித்தவண்ணமிருக்கிறான். ஆனால் அவ்விரண்டிற்கும் அவன் பெரிய சத்ரு, அக்குணங்களை அவன் அனுஷ்டித்திருக்கும் பட்சத்தில் அதனால் பல சந்தர்ப்பங்களில் அவன் ராஜ்யம் பறிபோயிருந்திருக்கும்.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com