மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-10: வெறுப்பும், பகைமையும் தவிர்க்கத் தக்கவை

மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-10: வெறுப்பும், பகைமையும் தவிர்க்கத் தக்கவை


மிகவும் முக்கியமான குணங்களைப் பற்றிச் சொல்லயாகி விட்டதால் மற்றவற்றைக் குறித்துச் சுருக்கமாகவும் பொதுவாகவும் கூறுகிறேன். ஏற்கெனவே பலமுறை கூறப்பட்டபடி ஒரு அரசன் வெறுப்பையும் பகைமையையும் தவிர்க்கவேண்டும்.  அதில் வெற்றி பெற்றால் அவன் காரியம் முடிந்த மாதிரியாகும். அப்போது மற்ற தீக்குணங்களால் அபாயமிராது. பணப்பிசாசாயிருப்பதாலும் குடிகள் சொத்தையும் ஸ்திரீகளையும் அபகரிப்பதாலும், அவன் பகைக்கப்படுவான். அவற்றை அவன் செய்யாமலிருக்கவேண்டும்.  தங்கள் சொத்தும்  மானமும் தாக்கப்பாமலிருக்கும் வரை பொதுவாக மாந்தர்கள் திருப்தியுடன் வாழ்வார்கள். ஒரு சிலருடைய பேராசையைத்தான் அவன் எதிர்த்துப் போராடவேண்டிருக்கும். அவர்களை அடக்குவதற்குப் பல வழிகள்இருக்கின்றன.  அரசன் சஞ்சல புத்தியுடையவன், சிறு பிள்ளைத்தனமானவன், பேடி, மிருதுதன்மையுடையவன், திடசித்தமில்லாதவன் என்றெல்லாம் கருதப்பட்டால் வெறுக்கப்படுவான். அதை அவன் பெரியமலை போன்ற ஆபத்தினைக் கொள்ளவேண்டும். ஆகையால் அவன் செய்கைகளில் பெருமை,  உத்வேகம்,  கம்பீரம் பொறுமை, ராஜ்ய நிர்வாகத்தில் அவனுடைய வார்த்தை மாற்ற முடியாததாயிருக்க வேண்டும். ஒருவரும் தன்மை ஏமாற்றவாவது தன் செல்வாக்கை உபயோகித்துப் பார்க்கவாவது நினைக்கக் கூட முடியாதபடி அவன் தன் தீர்மானத்தை உறுதியுடன் பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.  

தன்னைப் பற்றி இவ்விதமான அபிப்பிராயத்தை உண்டாக்கும் அரசன் பெரும் புகழை அடைகிறான். இப்படிப்பட்ட கீர்த்திவந்தனான மன்னனுக்கு எதிராகச் சதிசெய்ய முயல்வது கடினம். அவன் சாமர்த்தியசாலி யென்றும்,  குடிகளுடைய மரியாதைக்கு உரியவனென்றும், எல்லோருக்கும் தெரிந்திருப்பதால்,  அவனை எளிதில் எவரும் தாக்க முன்வரமாட்டார்கள். அவனுக்கு இரண்டுவிதமான பயமிருக்க வேண்டும்: ஒன்று உள்ளேயே தன் குடிகளிடமும், இன்னொன்று வெளியில்  அயல் நாட்டரசர்களிடமும் அயல் நாட்டின் ஆக்கிரமிப்பலிருந்து நல்ல பகைபலமும் நல்ல சிநேகிதர்களும் இருந்தால்,  தற்காத்துக் கொள்ளலாம். நல்ல ஆயுத பலமிருந்தால் சிநேகிதர்களுக்கு குறைவில்லை. சதியாலோசனையால் பாதிக்கப்படாமலும், வெளியிலிருந்து தொந்தரவில்லாமலுமிருந்தால் உள்நாட்டு நிலைiமை அமைதியாகவே இருக்கும்.  நான் விவரித்துள்ளப்படி ஆட் புரிந்து வாழ்ந்துவந்தால்,  ஒரு வேளை வெளியரசர்கள் தாக்க முன்றால் கூட உறுதியுடனிருக்கும் மன்னன், ஸ்பார்ட்டா நாட்டு நபிஸ் (Nabis) போல ஒவ்வொரு அதிர்ச்சியையும் தாங்கக் கூடியவனாயிருப்பான். பிரஜைகள் வெளியில் தெரியாமல் இரகசியமாய் சதியாலோசனை செய்வார்களென்ற பயமிருப்பதால், அதைத் தடுப்பதற்காக அரசன் அவர்கள் தன்னிடம் வெறுப்பம் விரோதமும் கொள்ளாதபடி பக்குவமாய் நடந்து கொண்டு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். பொது ஜனங்களுடைய வெறுப்பை அடையாதிருத்தவே சதியாலோசனைக்குத் தக்க மருந்து. ஏனெனில் சதியாலோசனை செய்பவர்கள், அரசனைக் கொல்வதால் குடிகளுக்குத் திருப்தி யுண்டாகுமென்று நம்புகிறார்கள்.  ஜனங்கள் ஆத்திரமடைவார்களென்று தெரிந்தால் அப்படிப்பட்ட காரியத்தில் பிரவேசிக்கவே பயப்படுவார்கள்.  பிரவேசித்தால் அவர்களுக்கு எல்லையற்ற கஷ்டங்கள் நேரும். அனுபவத்தின் மூலமாய் நாம் பார்க்கிறபடி எத்தனையோ சதியாவோசனைக்காரர்கள் இருந்திருக்கிறார்கள்.  ஆனால் வெகு சிலரே காரியத்தை ஜெயித்திருக்கிறார்கள்.  அவர்களால் தனியாக ஒன்றும் செய்ய முடியாது.  

அதிருப்தியுடையவர்கள் தான்  அவனுக்குத் துணைபுரியக் கூடும். சதியாலோசனை செய்ய விரும்புகிறவன்,  தன் எண்ணத்தை அவர்களுக்குத் தெரிவித்துவிட்டால், அவர்களுக்குத் திருப்திபெறும்வழி உடனே தெரிந்துபோகிறது. ஏனெனில் அந்த ரகசியத்தை வெளியிடுவதால், அவர்கள் என்ன வேண்டுமோ அதைப் பெற வியலும். அதனால் நிச்சயமான பலன் கைமேல் கிடைக்கிறது. சதிகாரனுடைய யோசனைப்படி நடந்தால், லாபம் கிடைக்குமோ கிடைக்காதோ வென்பது சந்தேகம். அபாமும்கூட, சதியாலோசனை செய்பவனிடம் அவர்கள் அவ்வளவு  உண்மையுடன் நடந்து கொள்வதற்கு அவர்கள் அவனுடைய ஆப்த நண்பர்களாயிருக்க வேண்டும். இல்லையேல் அரசனுடைய கொடிய பகைவனாயிருக்க வேண்டும். சுருங்கச் சொல்லுமிடத்து சதிகாரன்பட்சத்தில் பயம் பொறாமை, சந்தேகம், தண்டனையின் திகில், முதலியவை  இருக்கின்றன. ராஜாவின் பட்சத்திலோ, ராஜாவின் மஹிமை, சட்டங்கள், சிநேகிதர்களுடையவும், ராஜ்யத்தினுடையவும் பாதுகாப்பு, முதலிய எல்லாவித ஜாக்கிரதைகளும் இருக்கின்றன.  இவ்வளவுடன் கூடக் குடிகளுடைய நல்லுணர்ச்சியும் சேர்ந்தால் சதிகாரனுக்குத் துணிச்சல் உண்டாவது துர்லபம். ஏனெனில் சாதாரணமாகச் சதியாலோசனைக்காரன் தன் சூழ்ச்சியை நிறைவேற்றுமுன் பயப்படுகிறான். ஜனங்களுடைய ஆதரவு இல்லாமல் இதில் பிரவேசிக்கிறவன் தன் சூழ்ச்சி நிறைவேறிய பிறரும் குடிகளுடைய கோபத்துக்குப் பயப்படவேண்டும். இவ்விதமாக அவனுக்கு அபயம் கிடைக்க ஏதுவில்லாமலே போகும்.

இதற்குக் கணக்கற்ற மேற்கொள்கள் கொடுக்கலாம்.  ஆனால் நமது தந்தையர்கள் ஞாபகத்துக்குள் நடந்த ஒரு விஷயத்தை மட்டுமே கூறுகிறேன். மெஸ்ஸர் ஆன்னிபேல் பெண்டிவோக்லி (Messe Annibale Bentivoglio) என்ற பொலோனாவின்(Bologna) அரசன் மெஸ்ஸர் ஆன்னிபேலுடைய மூதாதை) கன்னெஸ்கி (Canneschi) வம்சத்தினரால் சதி செய்து கொல்லப்பட்டான்.  அப்போது குழந்தையாயிருந்த மெஸ்ஸர் ஜியோவானியைத்(Messe Gtovanhni) தவிர அவனுக்கு வேறு கற்றத்தார் எவரும் இருக்கவில்லை.  இக்கொலைக்குப் பிறகு ஜனங்கள் ஆத்திரமடைந்து,  கண்னெஸ்கி குடும்பத்தார் அனைவரையும் தொலைந்து விட்டனர்.  இது அக்காலத்தில் பெண்டிவோக்லி குடும்பத்தாரிடம் மக்கள் கொண்டிருந்த நல்லெண்ணத்தால் நடந்தது.  அந்நல்லெண்ணத்தினால் ஆன்னிபேலுக்குப் பிறகு ராஜ்யத்தையாள ஒருவருமில்லாமற் போயும் பிளாரன்ஸில் இதுவரை ஒரு கொல்லனுடைய மகனென்று கருதப்பட்ட ஒருவன், பெண்டிவோக்லி குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று கேள்விப்பட்டு அவனை அழைத்துவந்து அவனிடம் ராஜ்ய நிர்வாகத்தை ஒப்புவித்தனர். மெஸ்ஸர் ஜியோவானிக்கு வயது வரும் வரையில் அவன் அங்கு அரசு புரிந்து வந்தான்.

ஆகையால், ஜனங்கள் திருப்தியுள்ளவர்களாயிருக்கும் வரையில், சதியாலோசனைக்காரர்களைப் பற்றி ராஜ்ய கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் குடிகள், எதிர்த்துக்கொண்டு துவேஷம் பாராட்டினால் அரசன் ஒவ்வொருவரிடத்திலும், ஒவ்வொரு விஷயத்திற்கும் பயப்பட வேண்டியதுதான்.  ஒழுக்கான ராஜயங்களும், அறிவாளியான ராஜாக்களும், பிரபுக்களை நம்பிக்கையிழந்து துணிச்சலாய்ப் போகும்படி விட்டுவிடாமலும், ஜனங்களைத் திருப்திப் படுத்தவும் கற்றுக் கொணடிருக்கிறார்கள். இது ஒரு அரசன் செய்ய வேண்டிய காரியங்களெல்லாவற்றிலும் மிக முக்கியமானது.

நம் காலத்தில் ஒழுங்காக நிர்வகிக்கப்படும் ராஜ்யங்களில் பிரான்ஸ் ஒன்று. அங்கே அரசனுடைய பத்திரத்துக்கும் சுதந்திரக்கும் பொறுப்பாக அநேக ஸ்தாபனங்களிருக்கின்றதைப் பார்க்கிறோம். பிரதானமான பாதுகாப்பு பார்லிமெண்டும் அதன் அதிகாரமும், ஏனெனில் அந்த ராஜயத்தை ஸ்தாபித்தவன் பிரபுக்கடைய பேராசையையும் அலட்சிய புத்தியையும் அறிந்தவனாகையால் பிரபுக்களைக் கட்டுப்பாட்டில்; வைப்பதற்குத் தன்னிடமும் கொஞ்சம் அதிகாரமிருக்க வேண்டுமென்றெண்ணினான். இன்னொரு பக்கம் ஜனங்கள் பிரபுக்களிடம் வெறுப்பும் பயமும் உடையவர்களாயிருப்பதை உணர்ந்து, அவர்களை வசப்படுத்த வேண்டியிருப்பதால் பார்லிமெண்டை அரசனுடைய நேரான கண்காணப்பில் வைக்கவில்லை. பிரபுக்களை ஆதரித்தால், ஜனங்களுக்கும் ஜனங்களிடம் தயவு காண்பித்தால், பிரபுக்களுக்கும் அரசன்மேல் அதிருப்தி உண்டாவதைத் தடுப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகையால் அரசனுடைய நேர்முகமான கட்டளைகளைச் செலுத்தாமல் மூன்றாவது மத்தியஸ்தனொருவனைப் பார்லிமென்டுக்குத் தலைவனாக வைத்து, அவன் மூலமமாகப் பெரிய மனிதர்களைக் கட்டுக்குள் வைத்துக் சாமான்யர்களைத் தட்டிக் கொடுத்து வரப்பட்டது. அரசனையும் அவன் ராஜயத்தையும் பாதுகாப்பத்றகு இதைவிடப் புத்திசாலித் தனமும் பத்திரமுள்ளதுமான சிறந்த ஏற்பாடு வேறெதுவுமில்லை. இதிலிருந்து  இன்னொரு நியமத்தையும் தெரிந்து கொள்ளலாம். ராஜாக்கள், பொது ஜனங்களுக்கு இஷ்டமில்லாத கடமைகளை மூன்றாவது மனிதர்களைச் செய்யவிட்டு நன்மைகளைத்  தானே நேரில் வழங்கவேண்டும். அரசர்கள் பிரபுக்களைக் கௌரவிக்க வேண்டும். ஆனால் பொது ஜனங்களால் வெறுக்கப் படக்கூடாது.

பல ரோமச் சக்கரவத்திகளின் வரலாறுகளில் என் அபிப்பிராயத்துக்கு எதிரிடையான உதாரணங்களிப்பதாய்ச் சிலருக்குத் தோன்றலாம். பெருந்தன்மையும் திடசித்தமும் உள்ள சிலர் ராஜ்யத்தை இழந்து பிரஜைகளால் சதியாலோசனை மூலம் கொல்லப்பட்டதை அவர்கள் எடுத்துக் காட்டலாம். இந்த ஆட்சேபணைகளுக்குப் பதிலாகச் சில சக்கரவர்த்திகளுடைய குணாதிசயங்களைப் பற்றி விவரிக்கிறேன். அவர்களுடைய அழிவுக்குக் காரணம் நான் கூறியவற்றிற்கு முரணான தன்று என்பதைக் காண்பிப்பதுமின்றி, இக்காலத்து நடவடிக்கைகளைப்பற்றி வாசிப்பவர்களும் இதைக் கவனித்தல் நலமெனக் கருதுகிறேன். துத்துவஞானி மார்க்கஸ்ஸிலிருந்து(Marcus) மாக்ஸிமினஸ் (Maximinus) வரையிலும் இருந்த எல்லாச் சக்கரவர்த்திகளையும் எடுத்துக் கொள்வோம். மார்க்கஸ்,  அவன் மகன் கம்மோடஸ் (Commodus) பெர்டினாக்ஸ் (Pertinax) ஜுலியானஸ் (Julianus) ஸெவரஸ் (Severus) அன்டாய்னஸ் (Antoinus) அவன் மகன் காரகல்லா (Caracalla) மாக்ரினஸ் (macrinus) ஹெலியோகபாலஸ் (Heliogabalus) அலெக்ஸாண்டர் (Alexander) மாக்ஸ்மினஸ் (Maximinus) முதலியவர்களைப் பற்றி யோசிப்போம்.  முதலில் குறிப்படத் தக்க விஷயம் யாதெனில் மற்ற அரசர்களுக்குப் பிரபுக்களுடைய பேராசையையும், குடிகளுடைய பதட்டத்தையும் சமாளிப்பது போதுமானதாயிருக்க  ரோமச் சக்கரவர்த்திகளுக்கு மூன்றாவது கஷ்டம் ஒன்றிருந்து. அவர்கள் தங்கள் போர்வீரர்களுடைய குரூரத்துக்கும், போர் ஆத்திரத்துக்கும் இடங்கொடுக்க வேண்டியிருந்தது. சிப்பாய்களுடைய அந்தத் தன்மைகள் பலருடைய நாசத்துக்குக் காரணமாயிருந்தன. 

ஜனங்கள், சிப்பாய்கள் இரு தரத்தாரையும் சந்தோஷப்படுத்த அரசனால் முடியாமற் போயிற்று. ஏனெனில் ஜனங்கள் அமைதியை விரும்புகிறவர்களாகையால் சாத்வீகமான அரசனை வேண்டுகிறார்கள். போர்வீரர்களோ வெனில் துடுக்கு, கடுரம், பணப் பேராசை, ஆகிய குணங்களையுடைய ராணுவமனப்பான்மை கொண்ட ராஜாவைத்தான் விரும்புகிறார்கள்.  தங்களுக்கு இரட்டிப்புச் சம்பளம் கிடைப்பதற்காக,  அரசன் இக்குணங்களை ஜனங்கள் மீது பிரயோகிக்க வேண்டுமெனறு அவர்கள் ஆவளுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய குரூரத்தனத்தை வெளிக்காண்பிப்தற்கும், பகாசுரப் பேராயையைத் தீர்த்துக் கொள்வதற்கும் பணம் அவசியமாயிருக்கிறது. போர் வீரர்கள், குடிகள் இவ்விரு திறத்தினரையும் கட்டில் வைத்து அமக்கியாளச் சக்தியில்லாத சக்கரவர்த்திகள் எல்லாரும் அழிவை அடைந்தார்கள்.  அவர்களின் அநேகர் புதியவர்கள்:  இவ்விரு கட்சிகளின் முரண்பாடுகளையும் அவர்களைத் திருப்தி செய்வதிலுள்ள கஷ்டங்களையும் பார்த்துவிட்டு இவ்விரண்டில் சிப்பாய்களைச் சந்தோஷப்படுத்துவதே நல்லதென்று கண்டு கொண்டு ஜனங்கள் துன்புறுத்தப்படுவதை அலட்சியமாக நினைத்தார்கள். அரசர்கள் ஏதாவது ஓரு பகுதியினரின் துவேஷத்தைப் பெற்றுத்தான் ஆகவேண்டியிருந்ததாகையால், அவர்கள் தேர்ந்தெடுத்த வழி அவசியமாகத்தான் இருந்தது. அரசர்கள் முதலிய பொது மக்களுடைய வெறுப்பை அடையாதிருக்க முயலவேண்டும். அது முடியாவிட்டால் இருப்பவற்றுக்குள் பல மிக்கவையான கட்சிகளின் துவேஷத்திலிருந்து தப்ப ஒவ்வொரு  மார்க்கத்தையும் கைக்கொள்ள வேண்டும்.

புதியவர்களான இந்தச் சக்கரவர்த்திகள் அசாதாரணமான ஆதரவை வேண்டியவர்களாயிருந்தமையால், ஜனங்களைவிட்டுப் போர் வீரர்களையே பெரிதும் சார்ந்திருக்கலானார்கள். இதனால் கிடைத்த பலன்கள், போர் வீரர்களிடையில் அவர்களுக்குத் தம் மதிப்பை எந்த மட்டும் காப்பற்றிக் கொள்ளத் தெரிகிறது என்பதைப் பொறுத்திருந்தன.  மார்க்கஸ், பெர்டினால்க்ஸ், அலெக்ஸாண்டர், அம்மூவரும் அடக்கமான வாழ்க்கையும் நியாயத்தில் ஆர்வமும், கொடுமையில் வெறுப்புமுடையவர்களாய்த் தயாநிதிகளாயும் சாந்தஸ்வரூபிகளாயும் திகழ்நதனர். அப்படியிருந்தும் மார்க்கஸ் தவிர மற்றவர்கள் துக்ககரமான முடிவை எய்தினர்.  தன் பதவிக்காகச் சிப்பாய்களுக்கோ ஜனங்களுக்கோ கடமைப்பட்டிராமல் பரம்பரை பார்த்தியதையால், அரசனானவன் ஆகையால் மார்க்கஸ் கௌரவமாயும் மதிப்புடனும் இருந்தான். அதுவும் தவிர, அவன் மக்களின் வணக்கத்தைப் பெறத்தக்க பல நற்குணங்களைப் பெற்றிருந்துடன்,  தான் இருக்கும் வரையில் இரண்டு கட்சிகளையும் வைக்கிற இடத்தில் வைத்து வந்தானாதலின் அவனை ஒருவரும் வெறுக்கவாவது அவமதிக்கவாவது இல்லை. பெர்டினாக்ஸ் சிப்பாய்களுடைய இஷ்டத்துக்கு விரோதமமாக அரசனானவன்,  கம்மோடஸின் கீழ் மனம் போனபடி நடந்து வந்த சிப்பாய்களுக்கும் பெர்டினாக்ஸின் கீழ் அடங்கிக் கௌரவமாயும் நாணயமாயும் வாழ்க்கை நடத்தப் பிடிக்கவில்லை. பெர்டினாக்ஸ் சிப்பாய்கள் தன்னை வெறுக்கும்படி செய்து கொண்டது மன்றி வயோதிகனாயுமிருந்தால்,  ஆட்சியின் தொடக்கத்திலேயே அழிந்துவிட்டான்.

இதிலிருந்து,  தீய செயல்களைப் போலவே நல்ல செய்கைகளாலும் துவேஷம் விளைகிறது என்று தெரிகிறது. ஆகையால் நான் முற்கூறியபடி ஒரு ராஜ்யத்தைப் பரிபாலிக்கும்  அரசனுக்குத் தீங்கு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிறது. அவனுடைய பதவி நிலைக்கும் பொருட்டு, அவனுக்கு அவசியமான கட்சி, பொது மக்கள், சைனியம், பிரபுக்கள், எவருடைய கட்சியாயினும் சரி, அது, கெட்ட தன்மைகளை உடையதாயிருந்தால் அதை அவனும் பின் பற்றிக் திருப்திப்படுத்த வேண்டும்.  அம்மாதிரி சந்தர்ப்பங்களில் நல்ல செயல்கள் ஆபத்தைத் தருபவை. ஆலெக்ஸாண்டர் சங்கதியைப் பார்ப்போம். அலெக்ஸாண்டர் உத்தம புருஷன். அவன் பெற்ற பல புகழுரைகளில் அவன் அரசாண்ட பதினான்கு வருஷங்களில் நியாயமான விசாரணையின்றி ஒருவருக்குக் கூட மரண தண்டனை விதித்ததில்லை. என்பதொன்று, இப்படியிருந்தும் சேனைகள் அவனைப் “பெண் தன்மை” உடையவனென்றும்,  தாயார் கட்டளைப்படி நடக்கிறவனென்றும் அலட்சியம் செய்து சூழ்ச்சியால் கொன்றுவிட்டார்கள்.

கம்மோடஸ்,  ஸெவரஸ், அன்டாய்னஸ், காரகல்லா, மாக்ஸிமனஸ் முதலியவர்கள் குரூரமும் பணத்தாசையும் மிக்கவர்கள். போர்வீரர்களைச் சந்தோஷப்படுத்துவதற்காக ஜனங்களை அவர்கள் படுத்தாதபாடு பாக்கி இல்லை.  ஸெவரஸ் தவிர மற்றெல்லோர் கதியும் தீமையாகவேவு முடிந்தது. ஸெவரஸ் அரிய திறமை வாய்ந்தவன். ஆகையால் ஜனங்களை வருத்தினாலும் பலமிக்க கட்சியினரான சிப்பாய்களுடைய நட்பைப் பெருக்கி வந்ததால், சந்தோஷமாக அரசாண்டுவர முடிந்தது.  அவனுடைய குணங்கள் சிப்பாய்கள், ஜனங்கள்,  இரு பிரிவினரும் சிலாகிக்கத் தக்கவையாய் இருந்தன.  ஜனங்கள் அவனுடைய தன்மைகளைக் கண்டு ஆச்சர்யமும் பிரமிப்பும் கொண்டவர்களாயிருந்தார்கள்.  சிப்பாய்கள் அளவற்ற மரியாதையும் திருப்தியும் காண்பித்தனர்.

இந்த ராஜாவின் செயல்கள் அருமையாயும் புதிய அரசன் கவனிக்கத் தக்கவையாயும் இருந்தன். சிங்கம், நரி இவற்றின் இயற்கைகளை அவன் எவ்வளவு நன்றாக அனுசரிக்கக் கூடியவனாக இருந்தான் என்பதைச் சுருக்கமாகச் கூறுகிறேன். ஜுலியானஸ் சக்கரவர்த்தியின் சோம்பேறித்தனத்தை யறிந்த ஸெவரஸ்,  ஸ்லாவோனியா வில் சேனைத் தலைமை வகித்த போது தன் போர் வீரர்களை, “ப்ரேடோரியன்” சைனிகன் ஒருவன் பெர்டினாக்ஸைக் கொன்றதற்காகப் பழி தீர்த்துக்கொள்ளுமாறு தூண்டிவிட்டான்.  சிம்மாசனத்தின் மீதிருந்த தன் நோக்கத்தை மறைத்துக் கொண்டு,  இந்த  சாக்கில் ரோமுக்குத் தன் சேனைகளை நடத்திச் சென்றான். அவன் புறப்படும் செய்தி ரோமுக்கு எட்டுமுன், அவன் அங்கே போய்ச் சேர்ந்தான்.  அவன் வந்தவுடனே ஸெனேட் பயந்து போய் அவனைச் சக்கரவர்த்தியாகத் தேர்ந்தெடுத்து ஜுலியானஸைக் கொன்றது. இந்த ஆரம்பத்துக்குப் பிறகு பூரண அதிகாரத்தை வகிப்பதற்கு இரண்டு கஷ்டங்களை அகற்ற வேண்டியிருந்தது. ஒன்று ஆசிய சைனியத்தின் தலைவனான நிக்ரினஸ் (Nigrinus) தன்னை சக்கரவர்த்தியென்று பிரகடனம் செய்து கொண்டிருந்தான். இன்னொன்று மேற்கே ஆர்பினஸ் (Albinus) சாம்ராஜ்யத்தின் மேல் கண் வைத்திருந்தான்.  இவ்விருவரையும் ஒருங்கே பகைத்துக் கொள்வது அபாயமென்று கண்ட ஸெவரஸ், நிக்ரினஸைத்தாக்கவும் ஆல்பினஸை ஏமாற்றவும் வேண்டியதென்று தீர்மானித்து, அதற்கொரு யுக்தி செய்தான். ஸெனேட்டால் சக்கரவர்த்தியாகத் தேர்நதெடுக்கப்பட்டிருக்கும் தான் அந்தக் கௌரவத்தை ஆல்பினஸுடன் பங்கீட்டுக் கொள்ள விரும்புவதாக ஒரு கடிதம் எழுதி,  ஆல்பினஸ{க்கு ஸீஸர் என்னும் பட்டத்தையும் வழங்கி, ஸெனேட்டின் அதிகாரத்துடன் ஆல்பினஸைத் தன் துணைவன் என்று பஹிரங்கம் செய்தான். இவையெல்லாம் உண்மையென்றே ஆல்பினஸ் நம்பினான். ஸேவரஸ் நிக்ரினஸைத் தோற்கடித்துக் கொன்று விட்டபின் கிழக்கே அமைதியைப் பரவச் செய்து ரோமுக்குத் திரும்பி வந்த ஆல்பினஸ் மீது தான் செய்த நன்றிகளை மறந்து தன்னைத் துரோக சிந்தையுடன் கொல்லப் பார்த்ததாக ஸெனேட் முன் குற்றஞ் சாட்டி,  செய்நன்றி  கொன்றதற்கே அவனைத் தண்டிக்கப் போவதாகத் தெரிவித்தான்.  பிறகு பிரான்ஸில் ஆல்பினஸை எதிர்த்து அவன் பதவி,  ஆவி, இரண்டையும் போக்கினான்.

ஸேவரஸின் நடவடிக்கைகளை ஆராய்வோர் அவன் பயங்கரமான சிங்கமாயும் தந்திரமுள்ள நரியாயும் இருந்ததைக் காண்பார்கள், அவனிடம் எல்லோம் பயபக்தியுடன் இருந்ததையும், சைனியம் அவனைத் துவேஷிக்காமலிருந்ததையும் அறிவார்கள்.  ஒரு புதிய அரசனாயிருந்து அவன் இவ்வளவு அதிகாரத்தையும் பெற்றதில் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் அவனுடைய பணத்தாசை ஜனங்கள் மனதில் விளைவித்திருக்கக் கூடிய வெறுப்பை  அவனுடைய பெரும் புகழ் எப்போதும் தடுத்து வந்தது. அவனுடைய மகன் அன்டாய்னஸும் மிகவும் கெட்டிக்காரன். ஜனங்களுடைய பாராட்டுதலையும் சிப்பாய்களுடைய அன்பையும் அடையக்கூடிய தன்மைகள் அவனிடமிருந்தன. அவன் ராணுவ மனப்பாங்குள்ளவன்.  கடுமையான கஷ்டங்களைச் சகிக்க வல்லவன்.  நல்ல உணவு முதலிய சுகசௌக்கியங்களை லட்சியம் செய்யாதவன்.  இக்காரணங்களினாலும் போர்வீரர்கள் அவனை நேசித்தனர்.  இருந்தாலும் அவனுடைய குரூரமும் முரட்டுத்தனமும் கண்டும் கேட்டுமிராதவை. அவன் பல தனிமனிதர்களைக் கொலை தண்டனைக்குள்ளாக்கியது மின்றி,  ரோமிலும் அலெக்ஸாண்டிரியாவிலும் திரளான ஜனங்களைக் கொல்வித்ததால் உலகம் அவனை வெறுக்கலாயிற்று. அவனைச் சேர்ந்தவர்களே அவனிடம் அஞ்சினர். குடைசியில் அவன் தன் சேனைகளின் மத்திலேயே ஒரு ரோம சைனிகளால் கொன்று வீழ்த்தப்பட்டான். அம்மாதிரி துணிந்து ஒருவன் கொல்வதைத் தடுக்க அரசர்களால் முடியாது. உயிருக்குத் துணிந்த எவனும்  அதைச் செய்யக் கூடும். ஆனால் அரசன் இதைப்பற்றி அதிகமாய்ப்  பயப்படவேண்டியதில்லை. அம்மாதிரி உயிரைத் துரும்பாக மதிப்பவர்கள் இருப்பது மிகவும் அருமை. அன்டாய்னஸ் மாதிரி தனக்கு உபயோகமாயிருப்பவர்களையும், தன்னுடைய உத்தியோகஸ்தர்களையும் வருத்தாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அன்டாய்னஸ் தன்னைக்கொன்ற ரோம வீரனுடைய சகோதரனைக் கொலைபுரியச் செய்திருந்தான். அப்படியிருக்கையில் அவ்வீரனை நாள் தோறும் பயமுறுத்திக் கொண்டே தன் மெய்க்காப்பாளர் கூட்டத்தில் வைத்துக் கொண்டு இருந்தது பெரிய முட்டாள்தனம்.

கம்மோடஸ் தன் ராஜ்யத்தைச் சுலபமாக ஆண்டு வந்திருக்கலாம்.  மார்க்கஸின் புதல்வனாகையால்,  பரம்பரை பாத்தியதையுடையவன்.  ஜனங்களையும் போர் வீரர்களையும் திருப்தி செய்யத் தன் தகப்பனாரைப் போலவே நடத்திருக்கலாம். ஆனால் குரூர சித்தமும் மிருக ஸ்வபாவமும் உடையவனாகையால், ஜனங்களைக் கொள்ளையடிப்பதற்காகப் போர்வீரர்களுடைய உதவியை நாடி, அவர்களுக்கு அளவற்ற சுயேச்சையை அளித்தான். தன் கௌரவத்தைக் காப்பற்றிக் கொள்ளாமல் அரங்கங்களில் கத்திச் சண்டைக்காரர்களுடன் சண்டை போடுவதும் இன்னும் பல அவமதிப்பான காரியங்களைச் செய்வதுமாக ராஜாவுடைய அந்தஸ்துக்குத் தகாத காரியங்களில் ஈடுபட்டுப் போர்வீரர்களுடைய அருவருப்பையும் அடைந்தான்.  ஒருபுறம் பகைமையும் மற்றொருபுறம் அவமதிப்பும் ஒன்று சேரவே சதியாலோசனையால் கொல்லப்பட்டான்.

இன்னும் மாக்ஸிமினஸைப்பற்றிச் சொல்ல வேண்யது பாக்கி இருக்கிறது. அவன் போர்புரிவதில் மிகுதியான உற்சாகம் கொண்டவன். அலெக்சாண்டருடைய “பெண் தன்மை”யைக்கண்டு சைனியங்கள் எரிச்சலடைந்திருந்தால், மாக்ஸிமினஸை சக்கரவர்த்தியாகத் தேர்ந்து கொண்டன. இரண்டு விஷயங்கள் அவனை துவேஷத்துக்கும் அலட்சியத்துக்கும் ஆளாக்கியபடியால் அவன்  வெகுகாலம் ஆளவில்லை. அவன் திரேஸில் (Thrace) இடையனாக இருந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகையால் அவனைக் கண்டால் அவர்களுக்கு இளப்பமாக இருந்தது. இன்னொரு காரணம் அவன் தனது ஆட்ச ஆரம்பித்த உடனே ரோமுக்குச் சென்று சிம்மாசத்தைக் கைப்பற்றிக் கொள்ளாமலிருந்துவிட்டான்.  குரூரத்துக்குப் பெயர் போனவனாயிருந்தான்.  ரோமிலும் சாம்ராஜ்யத்தின் மற்ற பாகங்களிலும் தன் ராணுவத் தலைவைர்கள் மூலம் பல கொடுமைகளைச் செய்தான். உலகம் முழுவதும் அவனுடைய தாழ்ந்த பிறப்பைக் கண்டு ஆத்திரமும், முரட்டுக் குணத்தைப் பார்த்து வெறுப்பும் அடைந்தது. முதலில் ஆப்பிரிக்காவும் பிறகு ஸெனேட்டும், ரோமர்களும் இத்தாலியின் மற்ற பாகங்களிலுள்ள மக்களும் அவனுக்கு விரோதமாகச் சதியாலோசனை செய்தனர். அவனுடைய சொந்தப் போர்வீரர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். அக்வீலியாயை(Aquileia) ஆக்கிரமித்து அபஜயடைந்தபோது, அவனுடைய கொடுமைகள் சகிக்க முடியாமற் போயின. கடுங்கோபங் கொண்ட படைகள் அவனுக்குப் பல விரோதிகளிருப்பதைக் கண்டு பயங்குறைந்தவர்களாய் அவனைக் கொலை செய்து விட்டனர்.

ஹெலியோகபாலஸ், மாகடரினஸ், ஜுலியானஸ் இவர்களைப் பற்றிக் கூற வேண்டியதில்லை. இவர்கள் மிகவும் வெறுக்கத்தக்கவர்களாயிருந்தால், விரைவில் ஒடுக்கப்பட்டுவிட்டனர். ஒன்றுமட்டும் கூறி இதை முடிக்கிறேன். இம்மன்னர்களைப்போல் போர் வீரர்களைஅசாதாரணமானவழிகளில் அளவுக்கு மிஞ்சித் திருப்தி  செய்ய வேண்டிய அவ்வளவு அவசியம் இந்தக் காலத்து அரசர்களுக்குக் கிடையாது. இப்போது போர் வீரர்களை மதித்து நடக்கவேண்டியது அவசியமாய் தான்  இருக்கிறதென்றாலும்,  அவர்களுடன் ஏதேனும் தகராறு வந்தால் அதை விரைவில் தீர்த்துக் கொள்ள வழி உண்டு. ஏனெனில் தகராறு வந்தால் சாம்ராஜ்யத்திலிருந்தததைப்போல் இந்த ராஜாக்களுடைய சைனியங்கள் நிர்வாகத்தோடும், மாகாணங்களின் பரிபாலனத்தோடும் இணைக்கப் பெரிதாக மதிக்கப்பட்டார்களென்றால், போர்வீரர்களாக இருந்தார்களென்பதால்தான். இக்காலத்தில் துருக்க அரசனையும் சூல்தானையும் ()கலீபாவையும்) தவிர மற்றெல்லோரும் சிப்பாய்களைக் காட்டிலும் குடிகளை அதிகமாகத் திருப்திப்படுத்த வேண்டியிருக்கிறது. ஏனெனில் இப்போது சிப்பாய்களைவிட மக்கள் அதிக வல்லமையுடையவர்கள் துருக்க அரசனைத் தவிர என்று எதற்குச் சொன்னேனென்றால் அவன் தன்னோடு எப்போதும் இரண்டாயிரம் காலாட்களையும் பதினையாயிரம் குதிரைப் படைகளையும், வைத்துக் கொண்டிருக்கிறான்.  அவனுடைய ராஜ்யத்தின் பத்திரமும் பலமும் அவர்கள் பொறுப்பிலிருக்கின்றன. அவர்களுடைய சிநேகத்தை நிலைநாட்டிக்கொள்வதற்காக மற்றெல்லா விஷயங்களையும் ஒத்திப்போட வேண்டியிருக்கிறது.  சூல்தானின் ராஜ்யமும் அப்படித்தான்.  ராஜ்யம் முழுவதும் சிப்பாய்கள் கைவசமேயிருப்பதால்,  ஜனங்களை மதிக்காமல் சிப்பாய்களுடைய நட்பையே பெரிதாகப் பாராட்டவேண்டிருக்கிறது. சூல்தானின் ராஜ்யம் மற்றெல்லா ராஜ்யங்களினின்றும் வேறுபட்டது. அது போப்பின் சமஸ்தானத்தை ஒத்தது. அதைப் பரம்பரையான ராஜ்யமென்றும் சொல்ல முடியாது. புதிய சமஸ்தானமென்றும் நினைக்க முடியாது. இறந்த அரசனுடைய மக்கள் அவனுடைய வாரிசுகளல்லர். அதிகாரம் பெற்றவர்களால் கிறிஸ்தவப் போப்மாரைப் போல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே அப்பதவிக்கு வருவார்கள். இந்த ஒழுங்குமுறை புராதனமானாதாகையால்,  அதைப் புதிய ராஜ்யமென்று சொல்ல முடியாது. புதிய ராஜ்யத்திலுள்ள கஷ்டங்களொன்றும் இதில் கிடையாது.  ராஜா புதியவனானாலும், சட்டங்கள் மிகப் பழையவையாயும் ஒழுங்கானவையாயும் இருப்பதால், பரம்பரையரசனைப் போலவே அவை அவனை வரவேற்றகின்றன.

நிற்க,  இதுவரை கூறிவந்தவற்றை ஆலோசிப்பவர்கள் இந்தச் சக்கவர்த்திகள் அழிந்ததற்குப் பகைமை அல்லது அவமதிப்புக் காரணமாயிருந்திருப்பதைக் காண்பார்கள்.  சிலர் ஒரு விதமாயும் மற்றும் சிலர் வேறு விதமாயும் நடந்து கொண்டனர். இரண்டு வழிகளிலும் அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமுமான முடிவுகள் நேர்ந்திருக்கின்றன. பெர்டினாக்ஸும் அலெக்ஸாண்டரும் புதிய அரசர்களாகையால், பரம்பரை மன்னனான மாக்கஸைப் பின்பற்ற முயன்றிருந்தால் அவர்கள் தீமையடைந்திருப்பார்கள். அமமாதிரியே  காரகல்லா, கம்மோமஸ், மாக்ஸிமினஸ், முதலியவர்கள் ஸெவரஸைப்போல் நடக்கப் பார்த்திருந்தால்,  நஷ்டமுண்டாயிருந்திருக்கும்.  அவனைப் பின்பற்றக் கூடிய யோக்கியதை அவர்களுக்குக் கிடையாது.  ஆகவே ஒரு புது சமஸ்மதானத்தில் ஒரு புது அரசன் மார்க்கஸின் செயல்களை அனுசரிக்கவியலாது.  ஸேவரஸைப்போல் நடப்பதும் அவசியமில்லை. ஆனால் ராஜ்யாதிகாரத்தை ஸ்தாபித்துக் கொள்வதற்கு ஸெவரஸ் மேற்கொண்ட உபாயங்களை அவனிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றாக நிலைத்துப்  பத்திரமாயிருக்கும் ராஜ்யத்தைப பரிபாலிப்பதற்குப் புகழத் தக்கவையும் சிரேஷ்டமானவையுமான முறைகளை மார்க்கஸைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com