மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-12: அரசன் கீர்த்தி பெறும் வழி

மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-12: அரசன் கீர்த்தி பெறும் வழி

துணிகரமான காரியங்களில் பிரவேசித்துத் தன் தோள் வலியின் மாண்பைக் காட்டுவது போல் மன்னனுக்கு மதிப்பளிக்கும் விஷயம் வேறில்லை. நம் காலத்தில் அரகான் சிற்றரசனும் ஸ்பெயின் அரசனுமான பெர்டினான்ட் (Ferdinand) இருக்கிறான். அவனை அநேகமாய்ப் புதிய அரசன் என்றே சொல்லலாம். ஏனெனில் சாமான்யமான அரசனாயிருந்தவன் கிறிஸ்தவ உலகிலேயே முதன்மையானவன் என்று சொல்லத்தக்க பேரும் புகழும் அடைந்திருக்கிறான. அவன் செயல்களெல்லாம் மிகப்பெருமை வாய்ந்தவையாயும், அவற்றிற்சில அபூர்வமானவையாகி இருக்கின்றன. தன் ஆட்சியின் ஆரம்பத்தில் க்ரானடாவைத் (Granada) தாக்கினான். அந்த துணிகரமான செயல்தான் அவனுடைய அரசாட்சிக்கு அஸ்திவாரம். முதலில் அவன் பிறர் காஸ்டில் (Castile) பிரபுக்களை இந்தக் காரியத்தைக் கைக்கொள்ளச் செய்து  அவர்கள் மனதுக்கு வேலை கொடுத்தான்,  யுத்தத்தைப் பற்றியே அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தால், புதிய மாறுதல்களைக் குறித்து அவர்கள் நினைப்பதற்கில்லாமல் போயிற்று. பெர்டினான்ட் அரசனுக்கு அவர்களறியாமலேயே அவர்களிடம் அதிகாரமும் கீர்த்தியும் கிடைத்தன. சர்ச், ஜெனங்கள், முதலியவர்களுடைய பணத்தை எடுத்துத் தன் சைனியங்களைப் பராமரிக்கலானான்.  அந்த நீடித்த யுத்தத்தின் பயனாய்த் தன் ராணுவ பலத்துக்கு அடிகோலிக் கொண்டான். அதுதான் பிற்காலத்தில் அவனுக்குப் பெரும் புகழ் தந்தது. மதவுணர்ச்சி என்ற சாக்கை வைத்துக் கொண்டு, இன்னும் பெரிய யுத்த முயற்சிகளை மேற்கொண்டதுடன் பக்தியின் பெயரால் பல கொடுமைகளை இழைத்துத் தன் ராஜ்யத்திலிருந்த மூர் (Moor) ஜாதியினரைக் கொள்ளையடித்து நாட்டை விட்டுத் துரத்தினான். இதைவிடத் துக்கரமானதும் விசித்திரமானதுமான வேறொரு திருஷ்டாந்தத்தைக் காண முடியாது. இதே சாக்கை வைத்துக் கொண்டு ஆப்பிரிக்கா மேல் படையெடுத்தான். இத்தாலியை ஆக்கிரமித்தான். சமீபத்தில் பிரான்ஸைத் தாக்கினான். இப்படி இடைவிடாமல் ஏதேனும் பெரிய முயற்சிகளில் இவன் ஈடுபட்டிருப்பது,  மக்களுடைய மனதை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது. இம்முயற்சிகளில் பலன் என்னாகும் என்று எதிரி பார்ப்பதிலேயே அவர்களுடைய நினைவு இருக்கிறது. இவ்வீரச் செயல்கள் ஒன்றின் மேல் ஒன்றாய்க் கிளம்பிக் கொண்டேயிருக்கிற படியால், ஜெனங்களுக்கு அரசனை எதிர்க்கலாமென்று நினைப்பதற்குக்கூட அவகாசமேயில்லை.
    

மிலன் நகரத்தைச் சேர்ந்த மெஸ்ஸர் பேர்னாபோவைப் (Messer bernabo) போல் உள்நாட்டு நிர்வாகத்திலும் தன் திறமையை நிரூபிப்பது அரசனுக்கு லாபகரமானது. நகர மாந்தர்களில் யாராவது ஒருவன் அசாதாரணமான நற்செய்கையோ அல்லது விபரீதமான கொடுஞ்செயலோ புரிந்தானென்று வைத்துக் கொள்வோம். அதற்குத் தக்கபடி அவனுக்கு அரசன் அளிக்கும் சன்மானம் அல்லது தண்டனை ராஜ்ய முழுவதும் அதே பேச்சாயிருக்கும்படி மிகவும் பெரிதாயிருக்க வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக அரசன் ஒவ்வொரு விஷயத்திலும் சிலாக்கியமானவன் என்று புகழப்பட வேண்டும்.
    

ஒரு அரசன் உண்மையான சிநேகிதன், அல்லது உண்மையான சத்ருவாயிருப்பதால், அதாவது ஒளிவு மறைவின்றிப் பட்டவர்த்தனமாகச் சிலருக்கு ஆதரவாயும், சிலருக்கு விரோதாயும் இருப்பதால், அதிகமாகக் கௌரவிக்கப்படுவான். இரண்டு மில்லாமல் நடுநிலைமையிலிருப்பதை விட இக்கொள்கை, அதிக லாபமுள்ளது. இரண்டு அயல் அரசர்கள் ஒருவரோடொருவர் அடிதடியில் இறங்கும் போது, ஜெயிக்கிறவன் அஞ்சக் கூடியவனாயிருந்தாலும் இருப்பான். இல்லாமலும் இருப்பான். எப்படியிருந்தாலும் இந்த அரசன் வெளிப்படையாக அவர்கள் சண்டையில் பிரவேசிக்க  வேண்டியதுதான்.  ஏனென்றால் வெற்றியடைந்தவன் அச்சுறுத்தக் கூடியவனாயிந்தால், இவன் பாடு ஆபத்தாகும். வெற்றி பெற்றவனுடைய பொறிக்குள் இவன் சிக்கிக் கொள்வான்.  இதைக் கண்டு தோற்றவன் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவான். இந்த ராஜாவுக்கு அடைக்கலமளிக்கவும், வரவேற்கவும் எவரும் முன்வர மாட்டார்கள். கஷ்ட காலத்தில் உதவிக்கு வராமல் சந்தேகப்படும்படியான நிலைமையிலிருந்தவனை, ஜெயித்தவன் சிநேகிதனாகப் பெற விரும்பமாட்டான். தனக்குப் பரிந்து கொண்டு யுத்தத்துக்கு வராததால், தோற்றவனும் அவனை வரவேற்க மாட்டான்.
    

ரோமர்களைத் துரத்துவதற்காக ஆன்டியாகஸ் ஏத்தோலியர்களால் கிரீஸ{க்கு அனுப்பப்பட்டான். அவன் ரோமர்களின் நண்பர்களான அக்கேயர்களிடம் பேச்சாளர்களை (Orators) வாக்கு வல்லமையுள்ள தூதர்களை) அனுப்பி அக்கேயர்களை நடு நிலைமை வகிக்கும் படி கேட்டுக்கொண்டான்.  ரோமர்களோ அவர்களைத் தங்கள் பக்கம் சேர்ந்து போர் புரியுமாறு வேண்டிக் கொண்டார்கள். இவ் விஷயம் அக்கேயர்களுடைய சபையில் எடுத்துக் கூறப்பட்டது. அங்கே ஆண்டியாகஸின் தூதன் அவர்களை நடு நிலைமை வகிக்கும்படி வேண்டினான். அதற்கு ரோமர்களுடைய ராய பாரி அக்கேயர்களை நோக்கி, எங்களுடைய சண்டையில் நீங்கள் தலை நுழைத்துக் கொள்ளக் கூடாதென்று சொல்லப்பட்டது. அது உண்மைக்குப் புறம்பானது. இதில் நீங்கள் தலையிடாமலிருந்தீர்களானால், எல்லா ஆதரவும் மதிப்பும் போய் ஜெயித்தவனுடைய பரிசு ஆகிவிடுவீர்கள் என்றான்.
    

எப்போதும் சிநேகிதனாயில்லாதவனே ஒருவனை நடு நிலைமையிலிருக்கும்படி கோருவான். நுண்பனாயிருப்பவன் தனக்குத் துணையாகக் கையில் ஆயுத மெடுத்துத் தன்னிடமிருக்கும் சிநேகத்தை நிரூபிக்கும் படியே கேட்பான். திடசித்தமில்லாத அரசர்கள் அவ்வப்போது நேரும் அபாயங்களினின்றும் தப்பினால் போதுமென்று நடுநிலைமை உபாயத்தைத்தான் சாதாரணமாகக் கடைப்பிடிப்பார்கள்.  அதனால் பெரும்பாலும் தீங்கே விளைகிறது. ஒரு அரசன் பஹிரங்கமாய் ஒருவன் பக்கம் சேர்ந்து, அப்படி சேர்ந்த கட்சிக்கு ஜெயம் கிடைத்ததாயின் ஜெயித்தவன் இவனிடம் இவன் செய்த உபகாரத்துக்காகக் கடமைப் பட்டவனாகிறான். ஜெயித்தவன் பலசாலியாயும் இந்த அரசன் அவனுடைய தயவில் இருப்பவனாயிருந்தாலும் பாதகமில்லை. இவனிடம் அவனுக்குச் சிநேகபந்தம் ஏற்பட்டுவிட்டதுமல்லாமல் இப்படிப்பட்ட உபகாரத்தை மறந்து, தீங்கிழைத்துத் துணியான். மனிதர்கள் அவ்வளவு நன்றிகெட்ட பதர்களல்லர்.  அதுவுமன்றி வெற்றி கிடைத்துவிட்டால், அதுவே எல்லாப் பாக்கியங்களையும் கொடுத்துவிடாது.  

ஜெயித்தவன் நியாயத்தையும் நீதியையும் மதித்துத்தான் ஆகவேண்டும். அப்படியின்றி இந்த அரசன் தோழமை கொண்டவன் தோற்றுப் போனால் அப்போதும் அவன் இவனைத் தன் நிழலில் வைத்துப் பாதுகாக்கிறான். முடித்த வரையில் உதவி செய்கிறான். மறுபடியும் அவன் தலையெடுத்தால் இவனைத் துணைவனாய்க் கொள்கிறான். இருவரில் எவன் ஜெயித்தாலும் பயமில்லை என்றால் அப்போதும் ஒரு கட்சியில் சேருவதுதான் இன்னும் புத்திசாலித்தனம். ஏனென்றால், இருவரில் ஒருவன் அடங்கிப் போவது இவனுக்கு லாபம், ஜெயிக்கிறவன் அது தெரியாமல் சண்டை போட்டுக் கொண்டு எதிரியை அழித்துத் தன் பலத்தைக் குறைத்துக் கொள்கிறான்.  அவர் தான் காப்பாற்றிவிட வேண்டியிருப்பவனை அழிக்கிறான். அம்முயற்சிக்குத் துணை புரிவது இந்த ராஜாவுக்கு நல்லது. இவன் சேரும் கட்சி ஜெயிக்காதென்று சொல்ல முடியாது.  வெற்றி கிடைத்தபின் ஜெயித்த மன்னன் இவன் கைக்குள் இருப்பான்.
    

ஒரு அரசன் நிர்ப்பந்தம் ஏற்பட்டாலன்றி தன்னிலும் பலசாலிகளுடன் சேர்ந்து கொண்டு ஒருவரை வருத்தக் கூடாது என்பதைக் கவனிக்க வேண்டும். ஏனென்றால் வலியவன் ஜெயித்தால் இவனை அடக்கி ஆள்வான். அரசர்கள் கூடிய மட்டும் ஒருவன் இஷ்டத்துக்குக் கட்டுபட்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும். வெனிஷியர்கள் பிரான்ஸுடன் சேர்ந்து மிலன் டியூக்கை எதிர்த்தார்கள்.  அந்தக் கூட்டுறவை அவர்கள் ஏற்காமலிருக்கலாம். அதனால் வெனிஷியர்களுக்கும் பெருநஷ்டம் விளைந்தது. ஆனால் போப்பும், ஸ்பெயினும் லாம்பார்டியைத் தாக்கச் சென்றபோது பிளாரன்டின்களுக்கு நேர்ந்தது போல் விலக்க முடியாத சந்தர்ப்பம் உண்டானால் மேற்குறித்தபடி ஒரு கட்சியில் சேர வேண்டும் எப்போதும் பத்திரமான முறைகளையே கையாளலாமென்று ஒரு ராஜாங்கமும் இறுமாப்படைய முடியாது. எல்லா முறைகளும் சந்தேகமானவை என்றே நினைப்பது நலம். இயற்கை விதிப்படி ஒரு கஷ்டத்தைத் தடுக்க முயன்றால் இன்னொன்றில் போய் மாட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது.  கஷ்டங்களின் இயல்பை அறிந்து இருப்பவற்றிற்குள் குறைந்த ஆபத்தைத்தரும் கஷ்டத்தைச் சுகமென்று கொள்வதுதான் புத்திமான்கள் சுபாவம்.
    

ஓரு அரசன் பிறருடை திறமையை ஈஸிப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் சாமர்த்திய சாலிகளுக்குப் பட்சபாதம் காண்பித்துக் கலைகளிற் சிறந்தோரைக் கௌரவிக்க வேண்டும். தன் குடிகளை வியாபாரம், விவசாயம், இன்னும் அவர்கள் கைக் கொள்ளும் எல்லாத தொழில்களையும், அமைதியுடன் பின்பற்றுவதற்கு ஊக்க மளிக்க வேண்டும்.  தன்வசமிருக்கும் நாட்டை பிறர் அபகரித்து விடக்கூடும் என்ற பயத்தால் நாட்டின் நலனை வளமுறச் செய்யாமல் இருந்து விடக்கூடாது.  மக்களும் வரிச்சுமைக்கு அஞ்சித் தத்தம் தொழில்களை ஆரம்பிக்காமலிருந்து விடலாகாது.  இத்தொழில்களை நலமுறச் செய்வோருக்கும், நாடு அல்லது நகர முன்னேற்றத்துக்காக உழைப்பவர்களுக்கும் பரிசுகள் வழங்க விடலாகாது. இதெல்லாம் தவிர வருஷம் முழுவதும் சௌகரியமான காலங்களில் திருவிழாக்களும் கண்காட்சிகளும் நிகழ்த்தி அதில் ஈடுபடச் செய்வதும்,  ஜனங்களுக்கு உற்சாக மூட்ட வேண்டியதும் அவசியம். ஒவ்வொரு நகரமும் சங்கங்களாகவும் (Guild) வகுப்புகளாகவும் (Classes) பிரிந்திருப்பதால், அரசன் இக்கூட்டங்களை நன்கு கவனித்து அடிக்கடி அவர்களோடு பழகித் தன் மனிதத் தன்மையையும் தாராள புத்தியையும் வெளிக் காண்பிக்க வேண்டும். தன் ராஜ தோரணையை மட்டும் எந்த சந்தர்ப்பத்திலும் நழுவவிட்டு விடக் கூடாது.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com