மத அரசியல்-10: இஸ்லாம் மதப் பிரிவுகள் 

மத அரசியல்-10: இஸ்லாம் மதப் பிரிவுகள் 

இஸ்லாம் மதத்தை மக்களிடையே பரப்பிய முகம்மது நபி, இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மதீனா நகரை தலைநகராகக் கொண்டு ஒரு இஸ்லாமியப் பேரரசை நிறுவினார். அந்தப் பேரரசை மிகத் திறம்பட ஆட்சி செய்த அவர்கள் 632-ம் ஆண்டு, ஜூன், 8 ஆம் நாள் காலமானார். அதன் பிறகு அந்த அரசை யார் நிர்வகிப்பது என்ற கேள்வி எழுந்தது. அப்போது அபூபக்கர் என்பவர், மற்ற முஸ்லிம்களால் முழுமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முகம்மது நபிக்கு மிகவும் பிரியமான நண்பரும், முகமது நபிக்கு பெண் கொடுத்த மாமனாரும் ஆவார். மேலும் முகம்மது நபியின் வாழ்நாளிலேயே, அனைத்து இடங்களிலும் அவருக்கு அடுத்த அதிகாரத்தில் இருந்தது இவரே ஆகும். இவரே முஸ்லிம்களின் முதல் கலீபா ஆவார். இவருக்குப் பிறகு உமர் என்பவர் இரண்டாவது கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஷிதீன் கலீபாக்கள் பேரரசு, உமய்யா கலீபாக்கள் பேரரசு போன்றவைகள் ஆட்சி செய்தது.

இதற்கிடையில், அதிருப்தி அடைந்த ஒரு கூட்டத்தினர் இவருக்குப் பிறகு முகம்மது நபியின் மருமகன்களில் ஒருவரான அலி என்பவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினர். இவர்கள் ஷீஆ அல் -அலி கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். ஆனால் அலியை விட மூத்தவரான முகம்மது நபியின் மற்றொரு மருமகன் உதுமான் என்பவர் அடுத்த கலீபாவாக வரவேண்டும் என்று பெரும்பான்மையான முஸ்லிம்கள் விரும்பினர். இதன் பேரில் சிலர் கூடி அலியின் சம்மதத்தோடு உதுமானை மூன்றாவது கலிபாவாக தேர்ந்தெடுத்தனர். பின்பு கடைசியாக உதுமானின் மறைவுக்குப் பிறகு அலி நான்காவது கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரது ஆட்சிக் காலத்தில் இவருக்கு எதிராக மிகப்பெரிய அதிருப்திக் கூட்டம் ஒன்று உருவாகியது. இவர்கள் காரிஜிய்யா கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் உதுமான், முகம்மது நபி அவர்களுக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை மக்களிடையே பரப்பினார். மேலும் முகம்மது நபி மிகவும் அதிகமாக உயர்த்தி இறைவனுக்கு சமமானவர் என்றும் கூறத் தொடங்கினர். இதனால் அதிருப்தி அடைந்த ஷீஆ அல்-அலி கூட்டத்தார் பதிலுக்கு அலியை மிகவும் அதிகமாக உயர்த்தி இறைவனுக்கு சமமானவர் என்றும் கூறத் தொடங்கினர். மேலும் முகம்மது நபியினை திட்டவும் தொடங்கினர். இதனால் கோபமுற்ற மற்ற, காரிஜிய்யா கூட்டத்தார் அல்லாதவர்களும் ஷீஆ அல்-அலி கூட்டத்தாரை வெறுக்கத் தொடங்கினர். இவர்கள் தங்களை காரிஜிய்யா மற்றும் ஷீஆ அல்-அலி கூட்டத்தாரிடம் இருந்து வேறுபடுத்தி உதாரண நபிவழி கூட்டம் என பொருள் படும்படி சன்னி முஸ்லிம் என அழைத்துக்கொண்டனர். இவ்வாறே சன்னி இஸ்லாம் பிரிவு தொடங்கியது.

சன்னி முஸ்லீம் (Sunni Islam)

 Great Mosque of Kairouan Panorama

உலகின் மொத்த இஸ்லாமிய மக்கள் தொகையில் 75 முதல் 90  கதவீதம் பேர் சன்னி முஸ்லீம்களாகவே உள்ளதால்,  இதுவே மிகப் பெரிய பிரிவாக அமைந்துள்ளது.  சுன்னத் என்பதில் அருந்து சன்னி என்னும் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது முகமதைப் பின்பற்றுதல் என்பது இதன் பொருளாகும். ஈராக் ஈரான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளைத் தவிர்த்து மற்ற அனைத்து இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளிலும் சன்னி முஸ்லீம்களே பெரும்பான்மையாக உள்ளனர்.

அல்லாஹ் ஒருவனே ஏக இறைவன், அவனால் அருளப்பட்டது குர்ஆன், அவனது இறுதித் தூதர் முஹம்மது நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படையை எல்லா பிரிவுகளும் இவைகளை ஏற்றுக் கொள்கின்றன. சன்னிகளுக்கும் ஷியாக்களுக்கும் அல்லாஹ் ஒருவனே; குர்ஆனும் ஒன்றே; இறுதித் தூதரும் ஒருவரே; மக்கா இறையில்லமும் (கஅபா) ஒன்றே.

ஆனால், தொழுகைக்கான அழைப்பில் (பாங்கு) சிறிய வித்தியாசம். 'அல்லாஹு அக்பர்' என்று தொடங்கும் பாங்கின் பொருள், இறைவன் மிகப் பெரியவன்! வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர வேறெவரும் இல்லை. முஹம்மது இறைவனின் தூதர். தொழ வாருங்கள். வெற்றி பெற வாருங்கள்' என்பது. இதில், ஷியாக்கள் மேலும் ஒரு வரியைச் சேர்த்துக் கொள்கிறார்கள். 'முஹம்மது நபி அல்லாஹ்வின் இறுதித்தூதர்; அவரது வாரிசு அலி' என்பதே அவ்வாசகம்.
 

ஷியா முஸ்லீம் பிரிவு (Shia Islam)

Imam Hussein Shrine in Karbala, Iraq

ஷியா முஸ்லீம் பிரிவு இஸ்லாமிய உட்பிரிவுகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.  இது உலகின் மொத்த இஸ்லாமிய மக்கள் தொகையில் 10 முதல் 20 சதவீதத்தைப் பெற்றுள்ளது.  ஈராக்,  ஈரான்,  ஓமன் ஆகிய நாடுகளில் ஷியா பிரிவினரே பெரும்பான்மையாகக் காணப்படுகின்றனர்.

இதில் இன்னும் அதிகமான உட்பிரிவுகளும் உள்ளன.  ஆவற்றில் பன்னிருவர் பிரிவு முதலிடத்தை வகிக்கிறது.  இதன் அநேக நடைமுறைகள் சன்னி முஸ்லீம்களின் நடைமுறைகளோடு ஒத்துப் போகின்றன.  மேலும், இஸ்மாலி,  செய்யதி போன்ற இன்னபிற பிரிவுகளும் உள்ளன.

ஐந்து வேளைத் தொழுகையை, மூன்று வேளைகளில் (இரண்டை ஒரே வேளையில்) தொழுது விடுகின்றனர் ஷியாக்கள். தொழுகையில், ஸஜ்தா எனும் சிரம் பணியும் நிலையில், 'காகே ஷிபா' எனப்படும் புனித கர்பலாவின் மண்ணால் செய்யப்பட்ட 'சில்' (ஓடு) ஒன்றை வைக்கிறார்கள். சன்னிகள் இவ்வாறு செய்வதில்லை. தமது வருவாயில் இரண்டரை சதவீதத்தை ஜகாத் (ஏழை வரி அல்லது கொடை) தர வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் விதிக்கப்பட்ட கடமை. பணக்காரர்களின் செல்வத்தில் ஏழைகளுக்கு உரிய பங்கு இது. ஷியா முஸ்லிம்கள், இந்த இரண்டரை சதவீத ஜக்காத்துடன், மொத்த ஆண்டு சேமிப்பில் 20 சதவீதத்தை கும்ஸ் ஆகத் தர வேண்டும்.

ஸூஃபி பிரிவு (Sufism)

ஈரான், எஸ்ஃபஹான் இல் உள்ள சூஃபி மசூதி

“ஸோஃபி’ என்பது கிரேக்க மொழிச் சொல்லாகும். எட்டாம் நூற்றாண்டில் கிரேக்கத் தத்துவ இயல் மொழி பெயர்க்கப் பட்ட பொழுது “ஸோஃபி” என்ற சொல் “தத்துவம்” என்ற பொருளில் அராபிய மொழியில் பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் “ஸூஃபி’ என உருமாறிவிட்டது

சூபிசம் என்பது முகமது நபி மறைந்து  இரண்ரு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்டது.  இக் கருத்துக்களை எகிப்தைச் சேர்ந்த தன் நூன் என்பவர் விளக்கினார். அத பி ஷேக் முகைதீ இப்னுவல் அரபி  என்பவர் விளக்கினார். இஸ்லாமிய ஆட்சியாளர்களின் பகட்டான ஆட்சி முறையை எதிர்த்து தாடங்கப்பட்டதே சூபிசம்.துறவறம், தவம்,  இசை ஆகியவற்றின் மூலமாகவே இறைவனை அடைய முடியும் என்பது இவர்களின் நம்பிக்கை.  இவ்வாறாக இறைவனை அடைந்தவர்கள் சூபிகள் என்று அழைக்கப்பட்டனர். 

சூஃபி விடுதலை பெறுவதற்கு 1. ஷரியத் 2. த்ரீக்கத் 3. மாரிபத் 4. ஹக்கத் என நான்கு படிகளைக் குறிப்பிடுகிறது.

அஃகுமதிய்யா முஸ்லிம் சமாஅத் (Ahmadiyya Muslim Community)

அஃகுமதிய்யா முஸ்லிம் சமாஅத் அல்லது சமாஅத் அஃகுமதிய்யா என்பது 1889 ஆம் ஆண்டில் அம்ரித்சரைச் சேர்ந்த மிர்சா குலாம் அகமது (1835-1908) என்பவரால் நிறுவப்பட்ட அகமதியா இயக்கத்தில் இருந்து உருவான இரண்டு பிரிவுகளில் ஒன்றாகும். நிறுவனரின் இறப்புக்குப் பின்னர் அகுமதிய்யா இயக்கம் இரண்டாகப் பிரிந்தது. மற்றைய சமூகம் இலாகூர் அகுமதிய்யா இயக்கம் என அழைக்கப்படுகிறது. இப்பிரிவினர் “காதியானிக்கள்” என்று பரவலாக அழைக்கப்பட்டாலும் இச்சொல் தங்களை இழிவு படுத்துவதாகக் கூறுகின்றனர். (காதியான் என்பது மிர்சா குலாம் அகமது பிறந்த ஊர்).

இவர்கள் மிர்சா குலாம் அகமதை இறைத்தூதர் எனக்கூறுவதால் மற்ற இசுலாமிய பிரிவுகளான சியா இசுலாம் சுன்னி இசுலாம் இவர்களை முசுலிம்களாக ஏற்றுக்கொள்வதில்லை. அகுமதிய்யா முசுலிம் சமூகத்திற்கு மிர்சா மசுரூர் அகமது என்பவர் இப்போது தலைவராக உள்ளார். இன்று இந்த இயக்கம் உலகளாவிய அளவில் 198 நாடுகளில் இவரது தலைமையின் கீழ் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சென்னை, சாத்தான்குளம், மேலப்பாளையம் போன்ற சுமார் 22 இடங்களில் இந்த இயக்கம் செயல்பட்டு வருகின்றது.

இபாதி

இசுலாத்தின் ஆரம்பகாலங்களில் தோன்றிய காரிசியாக்கள் எனப்படும் அடிப்படைவாத குழுவின் ஒரு பிரிவே இபாதி ஆகும். இவர்கள் இன்றளவும் ஓமன் நாட்டில் பெரும்பான்மையினராக உள்ளனர்.

குரானிசம் (Quranism)

நபிமொழி நூல்களின் வழிமுறைகளை தவிர்த்து, குரானின் கோட்பாடுகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு வாழ்பவர்கள் இவர்கள்.

யசானிசம் (Yazdânism)

12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக் அதி இப்னு முசாஃபிர் (Sheikh Adi ibn Musafir) என்பவரால் முன்னெடுக்கபட்ட வழிமுறை இது. குர்தியர்களின் தொன்ம நம்பிக்கைகள் மற்றும் சூபிசத்தின் கூருகள் ஆகியவற்றின் கலவையாக இது உள்ளது.
இசுலாம் தேசம் - இது ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க சமய மற்றும் பண்பாட்டு அமைப்பு ஆகும். அமெரிக்காவின் நிறவெறி மற்றும் கிறித்தவத்துக்கு எதிராக இது 20ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது.

ரோஹிங்கியா(Rohingya)

மியான்மரைப் பொறுத்தவரை ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவியுள்ளதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது . மியான்மரில் 4 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக சில புள்ளி விவரங்கள் கூறுகின்றது. அங்கு பிரதான மூன்று முஸ்லிம் பிரிவினர்கள் இருக்கின்றார்கள் .
01) பான்தாய்கள் ( பர்மிய பூர்வீகக் குடிகள் )
02) பஷுஷ் ( சீனா , தாய்லாந்து பூர்வீகத்தினர் )
03) ரோஹிங்கியா ( இந்தியா , பங்களா தேஷ் பூர்வீகத்தினர் )

தமிழக முஸ்லீம் பிரிவுகள்

லெப்பை

தென்னிந்தியக் கடற்கரைப்பிரதேசங்களில் வசிப்பவரான தமிழ்ப்பேசும் முகம்மதியர்

லெப்பை, தக்கினி முஸ்லிம், மரைக்காயர், ராவுத்தர், மாப்பிள்ளை, பட்டாணி, (பத்ஹான்கான்) காக்கா, சேட், சையது, ஷேக், பீர், தாவூத், அன்சாரி, நவாப் உள்ளிட்ட முஸ்லிம்கள் பிரிவுகள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருக்கின்றன.

நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள்

உலகின் மிகப் பழமையானதாக கருதப்படும் திருமறை- உதுமான் காலத்தது. சன்னி முஸ்லிம்கள் திருமறை மற்றும் முகம்மது நபியின் வழியை மட்டும் பின்பற்றுகின்றனர். திருமறையில் அல்லா கூறிய வாழ்க்கை, வழிபாடு, சட்ட முறைகள் மற்றும் முகம்மது நபியின் வழிகாட்டுதல் ஆகியவற்றை மற்றும் தங்கள் வாழ்க்கையில் மேற்கொள்கின்றனர். இவர்களின் நம்பிக்கைப் படி முகம்மதே நபி. அலி ஒரு ஸஹாபி (நபி தோழர்) மட்டுமே அன்றி வேறு எந்த தெய்வ சக்தியும் கொண்டவர் அல்லர். மேலும் முகம்மது நபி குடும்பத்தாருக்கும் தெய்வ சக்தி கிடையாது என்பது அவர்களின் கூற்றாகும்.
முஹம்மது நபிகளாருக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சியாளராக (கலீபா) யாரை ஏற்பது என்பதில்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, முஹம்மது நபிகளாரின் நெருங்கிய தோழரும், மாமனாருமான அபுபக்கரைத்தான் முதல் கலீபாவாக சன்னிகள் ஏற்கின்றனர். ஆனால், ஷியா பிரிவினரோ, முஹம்மது நபிகளின் மற்றொரு தோழரும் மருமகனுமான அலியே பெருமானாரின் வாரிசு என்கின்றனர். இதில் தொடங்கிய சர்ச்சை பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. முகலாய மன்னர் பாபர் டெல்லியில் நடைபெற்ற ஒரு போரில் தோல்வி அடைந்து மற்றொரு இசுலாமிய மன்னரிடம் உதவி கேட்டபோது, சன்னி பிரிவைச் சேர்ந்த பாபரை ஷியா பிரிவிற்கு மாறினால் தான் உதவுவேன் என்ற கூறிய வரலாறும் உள்ளது.

சன்னி-ஷியா முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டும் நிகழ்வு மொஹரம் ஆகும். ஷியாக்கள், மொஹரத்தைத் துக்க அனுஷ்டிப்பாக முக்கியத்துவம் தந்து கடைபிடிக்கிறார்கள். சென்னையில் மொஹரம் நாளில் மார்பில் கைகளால் ஓங்கி அடித்தபடி, தங்களை வருத்திக் கொண்டு ஊர்வலம் செல்வதைப் பலரும் பார்க்கலாம். இந்த ஊர்வலத்தை நடத்துவோர் ஷியா முஸ்லிம்கள் தான்.

தர்கா (Dargah)

தர்கா என்பது பொதுவாக சூஃபிச துறவிகளின் கல்லறைகளின் மீதே கட்டப்படுகிறது. இது மசூதி, பள்ளிகள், மருத்துவமனை போன்ற கட்டிடங்களைக்கொண்டே இருக்கும். இது ஒரு சூஃபிச வழிபாட்டு இடம் ஆகும்.

பள்ளிவாசல்/ மஸ்ஜித்/மசூதி (Mosque)

பள்ளிவாசல் என்பது, இஸ்லாமியர்களது வணக்கத் தலமாகும். தமிழில் இதனைப் பள்ளி என்றும் அழைப்பதுண்டு. சிலர் இதன் அரபி மொழிப் பெயரான மஸ்ஜித் என்பதையும் பயன்படுத்துகிறார்கள். மஸ்ஜித் என்பதன் தமிழ் திரிபு மசூதி ஆகும், பள்ளிவாசல்கள் பலவகையாக உள்ளன. தனியாருக்குரிய சிறிய பள்ளிவாசல்கள் முதல் பலவிதமான வசதிகளைக் கொண்ட பெரிய பொது பள்ளிவாசல்கள் வரை உள்ளன.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com