தனியுரிமைப் பொருளாதார மண்டலம்

தனியுரிமைப் பொருளாதார மண்டலம்

தனியுரிமைப் பொருளாதார மண்டலம் மற்றும் ஆழ்கடல்களின் சுதந்திரங்கள், சுதந்திரங்கள் மீதான வரம்புகள், உயர் வளங்களை பாதுகாத்தல்,  மாசுபாட்டைத் தடுத்தல்,  நிலங்களால் சூழப்பட்ட  நாடுகளின் ஆழ்கடல் உரிமை

தனியுரிமைப் பொருளாதார மண்டலம்
(Exclusive Economic Zone)

    
கரையோர நாட்டின் தனியுரிமைப் பொருளாதார மண்டலமாக ஒரு குறிப்பிட்ட பகுதி அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 20 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே எழத் தொடங்கியது.  அதற்கான முதல் குரல் கென்யா நாட்டில் எழுப்பப்பட்டது. 1971 ஜனவரியில் கொழும்புவில் நடைபெற்ற ஆசிய – ஆப்பிரிக்க சட்டக் கலந்தாய்வுக் குழுக் கூட்டத்தில் முதன் முதலாக கென்யா இக்கோரிக்கையை எழுப்பியது. அதன் பிறகு 1972 ஜனவரியில் லாகோஸில் நடைபெற்ற அக்குழுவின்  கூட்டத்தில் அதற்கான  செயல்திட்ட அறிக்கையை கென்யா சமர்ப்பித்தது.  அதன் பிறகு 1972 இல ஜெனிவாவில் நடைபெற்ற ஐ. நா. கடலடித்தளக் குழுவின் கூட்டத்தில் கென்யா, தனியுரிமையைப் பொருளாதார மண்டலம் பற்றிய வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது.  
    கென்யாவின் தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக தனியுரிமைப் பொருளாதார மண்டலம் பற்றிய கோரிக்கை மேலும் பல நாடுகளால் எழுப்பப்பட்டது. முடிவில் 1982 ஆம் ஆண்டு கடல் சட்டம் பற்றிய ஐ.நா. மாமநாட்டில் தனியுரிமைப் பொருளாதார மண்டலம் பற்றிய கருத்தாக்கம் சர்வதேசச் சட்டத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது. அத்துடன் அம்மாநாடு தனியுரிமைப் பொருளாதார மண்டலமாமக அறிவிக்கப்பட்ட கடல் பகுதியின் மீது கரையோர நாட்டிற்கும் மற்ற உலக நாடுகளுக்கும் உள்ள உரிமைகள் மற்றும் கடமைகளையும் வரையறுத்தது.
    ஷரத்து 55 இன்படி, தனியுரிமைப் பொருளாதார மண்டலம் என்பது, எல்லையோரக் கடலை அடுத்து, அதனை ஒட்டி அமைந்திருக்கும் கடல் பகுதியாகும். ஷரத்து 57 இன்படி, தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தின் அகலம், எல்லையோரக் கடலின் அகலம் அளக்கப்படும் அடி எல்லைக் கோட்டில் இருந்து  200 கடல் மைல்களுக்கும் மேற்படக்  கூடாது.  

கரையோர நாட்டின் உரிமைகளும் கடமைகளும்
(i) தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தின் கடலடித்தளத்திலும் கடலடி மண்ணிலும் அதன் மேலுள்ள தண்ணீரிலும் இருக்கும் உயிருள்ள உயிரற்ற இயற்கை வளங்களை ஆராய்ந்து கண்டறிவதற்கும் சுரண்டி எடுப்பதற்கும் அவற்றைப்பாதுகாப்பதற்கும் மேலாண்மை செய்வதற்கும் கரையோர நாட்டிற்கு இறையாண்மை உரிமை உண்டு.
(ii) அத்துடன் தனியுரிமைப் பொருளாதார மண்டத்தில் ஒடும் கடல் நீரோட்டம் மற்றும் காற்றில் இருந்து ஆற்றலை உற்பத்தி செய்வது போன்ற  பொருளாதார நடவடிக்கைகளை அம்மண்டலத்தில் மேற்கொள்ளவும் கரையோர நாட்டிற்கு இறையாண்மை உரிமை உண்டு.
(iii) அம்மண்டலப் பகுதியில் செயற்கைத் தீவுகளை அமைப்பது, கட்டிட அமைப்புகளை நிர்மாணிப்பது, கடல் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது,  கடல் புறச் சூழலைப் பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் கரையோர நாட்டிற்கு அதிகாரவரம்பு உண்டு.
(iv) ஆனால் தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தில் கரையோர நாட்டிற்கு இருக்கும் உரிமைகளைச் செயல்படுத்தும் போது, அமமண்டலத்தில் மற்ற நாடுகளுக்கு இருக்கும் உரிமைகளுக்கு ஊறு விளைவிக்காமல்   இருக்க  வேண்டிய கடமையும் கரையோர நாட்டிற்கு உண்டு.

மற்ற நாடுகளின் உரிமைகளும் கடமைகளும்
(i) ஒரு நாட்டின் தனியுரிமைப்பொருளாதார மண்டலத்தில் மற்ற கரையோர நாடுகளுக்கும் நிலங்களால் சூழப்பட்ட நாடுகளுக்கும் பின்வரும் உரிமைகள் உண்டு.
(a) மண்டலக் கடல் பகுதி வழியான கப்பல் போக்குவரத்துக்கும் வான் வழிப் போக்குவரத்துக்கும் உள்ள உரிமை
(b) கடலடித் தகவல் தொடர்பு வடங்களும் குழாய்களும் பதித்துக் கொள்ளும் உரிமை
(c) மேலே கண்டவாறு கப்பல், விமானம், கடலடி வடங்களையும் குழாய்களையும் பதிப்பது போன்ற உரிமைகளைச் செயல்படுத்துவது தொடர்பாக சர்வதேசக் கடல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பிற செயல்களைச் செய்யும் உரிமைகள்
(ii) அதே சமயத்தில் ஒரு நாட்டின் தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தில் தமக்கிருக்கும் உரிமைகளைச் செயல்படுத்தும் போது மற்ற நாடுகள், அதன் கரையோர நாட்டிற்கு அம்மண்டலத்தில் இருக்கும் உரிமைகளுக்கு ஊறு விளைவிக்காமல் நடப்பதுடன், அக்கரையோர நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு முறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டியது மற்ற நாடுகளின் கடமையாகும்.

தனியுரிமைப் பொருளாதார மண்டலமும் எல்லையோரக் கடலை அடுத்த மண்டலமும் 
1. எல்லையோரக் கடலை அடுத்த மண்டலத்தின் அகலம், எல்லையோரக் கடலின் அகலத்தை அளக்கும் அடி எல்லைக் கோட்டில் இருந்து 24 கடல் மைல்களுக்கு மேற்படக் கூடாது.
ஆனால் தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தின் அகரம் மேலே கண்ட அடி எல்லைக் கோட்டில் இருந்து   200 கடல் மைல்கள் வரை இருக்கலாம்.
2. எல்லையோரக்  கடலை அடுத்த மண்டலமும் தனியுரிமைப் பொருளாதார மண்டலமும் எல்லையோரக் கடல் முடிவடையும் இடத்தில் இருந்தே தொடங்குகின்றன.  ஆனால், எல்லையோரக் கடலை அடுத்த மண்டலம் அடுத்த 12 கடல் மைல்களில் அதாவது அடி எல்லைக் கோட்டில் இருந்து 24 வது கடல் மைல்களுடன் முடிந்து விடும். மாறாக தனியுரிமைப் பொருளாதார மண்டலம் அதனையும் தாண்டி 200 கடல் மைல்கள் தூரம் வரை நீளக் கூடியதாகும்.  எனவே தனியுரிமைப் பொருளாதார மண்டலம் என்பது எல்லையோரக் கடலை அடுத்த மண்டலத்தையும் உள்ளடக்கியதாகும்.
3. எல்லையோரக் கடலை அடுத்த மண்டத்திலும் தனியுரிமைப் பொருளாதார மண்டலத்திலும் கரையோர நாட்டிற்கு இறையாண்மை அதிகாரம் கிடையாது. ஆனால் எல்லையோரக் கடலை அடுத்த மண்டலப் பகுதியில், கரையோர நாட்டின் சுங்கம், பாதுகாப்பு, குடியேற்றம் போன்றவை தொடர்பான காவல் அதிகாரம் கரையோர நாட்டிற்கு உண்டு.  ஆனால் தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தின் கடலடித் தளத்திலும் கடலடி மண்ணிலும் மேற்பரப்பில் உள்ள நீரிலும் இருக்கும் உயிருள்ள, உயிரற்ற இயற்கை வளங்களை அகழ்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே கரையொர நாட்டிற்கு உண்டு.

தனியுரிமைப் பொருளாதார மண்டலமும் கண்டத்திட்டும் 
1. தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தின் அகலம் எல்லையோரக் கடலை அளக்கும் அடி எல்லைக் கோட்டில் இருந்து 200 கடல் மைல்கள் தூரத்துடன் முடிவடைந்து விடக் கூடியதாகும். அதாவது தனியுரிமைப் பொருளாதார மண்டலம் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்படக் கூடியதாகும். இது எல்லா நாடுகளைப் பொறுத்த வரையிலும் 200 கடல் மைல்களுக்கும் மேற்படாது.
    ஆனால் கண்டத்திட்டு, கரையோர நாட்டின் நிலப்பகுதியின் தொடர்ச்சி கடலுக்குள் இயற்கையாகச் சரிந்து நீண்டு செல்லும்  இயற்கை அமைப்பு அமைந்திருக்கும் விதத்தைப் பொறுத்து ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடக் கூடியதாகும். சில நாடுகளுக்கு 200 கடல் மைல்கள் தூரத்ததிற்கு உள்ளேயே அந்நாட்டின் கண்டத்திட்டு முடிந்து விடலாம். அப்போது அந்நாட்டின் கண்டத்திட்டு 200 கடல் மைல்கள் வரை இருப்பதாகக் கருதிக் கொள்ளப்படும். வேறு சில நாடுகளுக்கு 200 கடல் மைல்களுக்கு மேலும் கண்டத்திட்டு நீளக் கூடும்.  அப்போது 200 கடல் மைல்களுக்கு மேல் உள்ள கண்டத்திட்டுப் பகுதியில் இயற்கை வளங்களை அகழ்ந்தெடுப்பதற்கு சர்வதேசச் சட்டம் சில  நிபந்தனைகளை விதிக்கக் கூடும்.
2. தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தில் உள்ள கடல் பகுதியில் இருக்கும் உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை வளங்களின் மீது கரையோர நாட்டிற்கு இறையாண்மை உரிமை உண்டு.
    ஆனால் கண்டத்திட்டின் கடலடித்தளம் மற்றும் கடலடி மண்ணில் உள்ள உயிரற்ற இயற்கை வளங்கள் மீது மட்டுமே நாட்டிற்கு இறையாண்மை உரிமை உள்ளது.
    Libyan Arab Jamaliriya –Malta Case(1985)-என்ற கண்டத்திட்டு வழக்கில் சர்வதேச நீதிமன்றம் தனியுரிமைப்  பொருளாதார  மண்டலத்தையும் கண்டத்திட்டையும் ஒப்பீடு செய்துள்ளது. கண்டத்திட்டும் தனியுரிமைப் பொருளாதார மண்டலமும் 1982 ஆம் ஆண்டு ஐ.நா. மாநாட்டு விதிகளில் ஒன்றுக்கொன்று  தொடர்புடைய நிறுவனங்களாகக் கருதப்படும் நவீன சர்வதேசச் சட்டத்தின் ஒரு அங்கமாக ஆகியுள்ளன.  ஒரு கரையோர நாடு தனது கண்டத்திட்டின் மீது கொண்டிருக்கும் உரிமைகளானது,  அதன் தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தின் கடலடித் தளம் மற்றும் கடலடி மண்ணில் உள்ள உரிமைகளையும் உள்ளடக்கியதே ஆகும். இதன் பொருள் கண்டத்திட்டு, தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தால் விழங்கப்பட்டு விட்டது என்பதல்ல.  மாறாக கண்டத்திட்டுக்கும் தனியுரிமைப் பொருளாதார மண்டலத்திற்கும் இடையிலான பொதுவான அம்சம், கடற்கரையில் இருந்து அளக்கப்படும் தூரம் (200 கடல் மைல்கள் ) ஆகும் என்று சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆழ்கடல்கள் பற்றிய சர்வதேசச் சட்டம்
(International Law on high Seas)

ஆழ்கடல்:  வரையறை
    ஆழ்கடல் என்பது எந்த நாட்டின் தனிப்பட்ட அதிகாரவரம்பிற்கும் கட்டுப்படாமல், பரந்து விரிந்து கிடக்கும்  திறந்த கடல் பரப்பையே குறிக்கும். எனவே கரையோர நாட்டின் அதிகாரவரம்பிற்குப்பட்ட எல்லையோரக் கடல், நீரிணைகள், வளைகுடாக்கள், விரிகுடாக்கள் ஆகியன ஆழ்கடலின் தொடர்ச்சியாக இருந்தாலும் அவை ஆழ்கடலின் ஒரு பகுதியாக ஆகாது.
    அதனால்  தான் ஒப்பன்ஹீய்ம், “எல்லையோரக் கடல்களையும் எல்லையோர நீரிணைகளையும், வளைகுடாக்களையும், விரிகுடாக்களையும் தவிர்த்து பூமி உருண்டை முழுவதும் உள்ள உப்பு நீரைக் கொண்டிருக்கும் தொடர்ச்சியான பகுதியே திறந்த கடல் (Open Sea) அல்லது ஆழ்கடல் எனப்படும்” என்று வரையறுக்கிறார். அதாவது எல்லையோரக் கடல், உள்நாட்டு நீர்நிலைகள் ஆகியவற்றைத் தவிர்த்த கடலின் அனைத்துப் பகுதியும் ஆழ்கடல்களே ஆகும்.
    இதனை அடியொற்றியே 1958 ஆம் ஆண்டு ஜெனிவா மாநாடு ஆழ்கடல் என்பதை வரையறுத்தது. ஆனால் அதன் பின்வந்த எல்லையோரக் கடலை அடுத்த மண்டலம் மற்றும் தனியுரிமைப் பொருளாதார மண்டலம் போன்ற கருத்தாக்கங்கள் ஆழ்கடலின் எல்லைகளை சுருக்கிவிட்டன.  எனவே  ஆழ்கடல் பற்றிய பழைய வரையறை பயனற்றதாகி விட்டது. அதன் விளைவாக 1982 ஆம் ஆண்டு கடல் சட்டம் பற்றிய ஐ.நா. மாநாடு (ஷரத்து 86 ), தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தில் சேராத, எல்லையோரக் கடலில் அல்லது ஒரு நாட்டின் உள்நாட்டு நீர்நிலையில் அல்லது ஒரு தீவுக் கூட்ட நாட்டின் தீவுக்கூட்ட நீர் நிலையில் சேராத கடலின் அனைத்துப் பகுதியும் ஆழ்கடல் ஆகும் என்பதாக வரையறுத்தது.

ஆழ்கடலின் சுதந்திரத்திற்கு க்ரோஷியஸ் அளித்த பங்களிப்பு    
    மிகப் பழங்காலத்திலும் மத்திய காலத்தின் முதற் பாதியிலும் ஆழ்கடல் அனைவருக்கும் பொதுவானதாகத் திறந்து விடப்பட்டிருந்தது. மத்திய காலத்தின் பிற்பாதியில் இருந்து ஒவ்வொரு நாடும் தனக்கருகில் உள்ள ஆழ்கடல்களின் மீது இறையாண்மை அதிகாரத்தை வலியுறுத்தி நிலைநாட்டின. பல நூற்றாண்டுகளாக அத்தகை இறையாண்மை அதிகாரம் ஆழ்கடலின் மீது நிலைநாட்டப்பட்ட தன் விளைவாக ஆழ்கடல்கள் அந்தந்த கரைரோ நாடுகளின் கப்பல்கள்  அந்த நாட்டின் கடற்படையின் அனுமதியின்றி ஆழ்கடலைக் கடந்து செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டது.
    16 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளிலும் 17 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட உற்பத்திப் பெருக்கம் சர்வதேசக் கடல் வாணிபத்திற்கு வித்திட்டது. அதன் விளைவாக கடல் வாணிபத்தில் முன்னணியில் இருந்த பிரிட்டன் போன்ற நாடுகள், ஆழ்கடல் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று கோரத் துவங்கின. முதன் முதலில் 1580 இல் இங்கிலாந்து மாகராணி எலிசபெத், ஸ்பெயின் தூதருக்கு எழுதிய கடிதத்தில் அவர் ஆழ்கடலின் சுதந்திரத்தை வலியுறுத்தினார். பின்னர் 1609 இல் சட்டவியல் அறிஞர் க்ரோஷ்யஸ், அதே கருத்தை வலியுறுத்தினார். அவர் ஆழ்கடலை எவரும் உடைமையில் வைத்திருக்க முடியாது. எனவே ஆழ்கடல் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதாகத் திறந்து விடப்பட வேண்டும் என்றார் க்ரோஷியஸைத் தொடர்ந்து சட்டவியலாளர்கள் பலரும் ஆழ்கடலின் சுதந்திரத்தை வலியுறுத்தினர். காலப்போக்கில் பல நாடுகள் கடல் வாணிபத்தில் ஈடுபடத் தொடங்கியதும் அனைத்து நாடுகளும் பரஸ்பரம் தங்களது நலனை முன்னிட்டு ஆழ்கடல் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என்பதை ஏற்றுக் கொண்டனர். பேராசிரியர் ஹால் (Hall) கூறியதைப் போல், ஆழ்கடலின் சுதந்திரம் என்பது கரையோர நாடுகளின் பரஸ்பர நலன்களை முன்னிட்டு வளர்ச்சியடைந்த கருத்தாக்கமாகும். ஆழ்கடலின் சுதந்திரம் என்பது அனைத்து நாடுகளுக்கும் நன்மை தரக்கூடிய பொதுவான சுதந்திரமாகும்.
    இன்று ஆழ்கடலின் சுதந்திரம் சர்வதேசச் சட்டத்தில் நிலை நாட்டப்பட்ட வழக்காறாகவும், 1958 ஆம் ஆண்டு ஜெனிவா மாநாடு 1982 ஆம் ஆண்டு கடல் சட்டம் பற்றிய ஐ.நா. மாநாடு ஆகியவற்றில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேசச் சட்டமாகவும் நிலை பெற்றுவிட்டது.  1982 ஆம் ஆண்டு ஐ. நா. மாநாடு ஷரத்து 87 இல் ஆழ்கடல்கள், கரையோர நாடு அல்லது நிலங்களால் சூழப்பட்ட நாடு என அனைத்து நாடுகளுக்காகவும் திறந்து விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடல்களின் சுதந்திரங்கள் (Freedom of the High Seas)    
                     அங்கீகரிக்கப்பட்ட ஆழ்கடலின் சுதந்திரங்கள் நாடுகளுக்கு ஆழ்கடலின் மீது சில உரிமைகளை வழங்குகின்றன. அதே சமயத்தில் அத்தகைய சுதந்திரங்களின் மீது விதிக்கப்படும் கட்டுப்பாட்டு நிபந்தனைகள் நாடுகள் மீது சில கடமைகளையும் பொறுப்புகளையும் சுமத்துகின்றன.     
பின்வருவன ஆழ்கடல்களின் சுதந்திரங்களாக சர்வதேச வழக்காறுகளாலும் 1982 ஆம் ஆண்டு ஐ. நா. மாநாட்டு விதிகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
1) ஆழ்கடல்களின் எந்தவொரு பகுதியையும் எந்தவொரு நாடும் தனது இறையாண்மை அதிகாரத்திற்கு உட்பட்டதாக ஆக்க முடியாது (ஷரத்து 89).
2) ஆழ்கடல் அல்லது திறந்த கடலின் எப்பகுதியின் மீதும் எந்தவொரு  நாட்டிற்கும் தமது சட்டமியற்றும்,  நிர்வாகம் அல்லது காவல் அதிகாரத்தை செயல்படுத்தும் உரிமை கிடையாது.
3) ஏந்தவொரு நாட்டிற்கும் ஆழ்கடலின் எந்தவொரு பகுதியையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் உரிமை கிடையாது.
4) கடல் போக்குவரத்து  சுதந்திரம் (Freedom of Navigation): கடலோர நாடாகவோ நிலங்களால் சூழப்பட்ட நாடாகவோ இருந்தாலும் அனைத்து நாடுகளுக்கும் தங்களது நாட்டு தேசியக் கொடியைத் தாங்கிய கப்பலை ஆழ்கடலில் செலுத்துவதற்கு உரிமை உண்டு (ஷரத்து 90).
5) ஆழ்கடலில் செல்லும் தேசியக் கொடிக்குரிய நாடே அக்கப்பலின் நிர்வாக, தொழில் நுட்ப மற்றும் சமூக விஷயங்களில் அதிகார வரம்பையும் கட்டுப்பாட்டையும் செலுத்த முடியும். அருகிலிருக்கும் கரையோர நாட்டிற்கோ வேறு நாடுகளுக்கோ ஆழ்கடலில் செல்லும் கப்பல் மீது அதிகாரவரம்பு கிடையாது  (ஷரத்து 94 (1). அதுபோல ஆழ்கடலில் செல்லும் போர்க் கப்பல்கள் மீதும் அதன் தேசியக் கொடிக்கு உரிய நாட்டிற்கு மட்டுடே அதிகாரவரம்பு உண்டு (ஷரத்து 95). அவ்வாறே அரசுக்குச் சொந்தமான வணிக நோக்கமல்லாத அரசுப் பணிகளில் இருக்கும் கப்பகளுக்கும் அவை ஆழ்கடலில் செல்லும் போது அதன் தேசியக் கொடிக்குரிய நாட்டைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் அதிகாரவரம்பில் இருந்தும் காப்பு விலக்கு உண்டு (ஷரத்து 96).
6) விமானப் போக்குவரத்து சுதந்திரம் (Freedom of Over flight):  அனைத்து நாடுகளின் விமானங்களும் ஆழ்கடலுக்கு மேல் உள்ள வான் பரப்பின்வழியே பறந்து செல்வதற்கு முழு சுதந்திரம் உண்டு ( ஷரத்து 87 )
7) அனைத்து நாடுகளுக்கும் அதன் குடிமக்களுக்கும் ஆழ்கடலின் அடியில் வடங்களையும் எண்ணைய்க குழாய்களையும் கொண்டு செல்வதற்கு உரிமை உண்டு  (ஷரத்து 116).
8) ஆழ்கடலில் செயற்கைத் தீவுகளை உருவாக்கவும் சர்வதேசச் சட்டம் அனுமதிக்கும் பிற கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் சுதந்திரம் உண்டு.
9) அனைத்து நாடுகளுக்கும் அதன்குடிமக்களுக்கும் ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்கான உரிமை உண்டு.
10) ஆழ்கடலில் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் அனைத்து நாடுகளுக்கும் சுதந்திரம் உண்டு.

ஆழ்கடலின் சுதந்திரங்கள் மீதான வரம்புகள் (limitations on High Seas) 
1. ஆழ்கடலில் செல்லுத் தனியார் அல்லது அரசுக் கப்பல்கள் உள்ளிட்ட அனைத்துக் கப்பல்களும் அவற்றின் தேசியக் கொடிக்குரிய நாட்டின் அதிகாரவரம்பிற்கும் பாதுகாப்பிற்கும் உட்பட்டதாகும் என்பதை ஏற்கனவே கண்டோம்.  அதே சமயம்,  அத்தேசியக் கொடிக்குரிய நாட்டின் உரிய அனுமதி அல்லது அதிகாரம் இல்லாமல் அக்கொடி எந்ததொரு கப்பலிலும் பயன்படுத்தபப்படக் கூடாது. ஒரு கப்பலுக்கும் அக்கப்பலில் பறக்க விடப்பட்டிருக்கும் தேசியக் கொடிக்குரிய நாட்டிற்கும் இடையே உண்மையான தொடர்பு இருக்க வேண்டும்.  ஒவ்வொரு நாடும் கப்பலை பதிவு செய்வதற்கும் தன் நாட்டு தேசியக் கொடியை அக்கப்பலில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதற்கும் உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும்.  ஒரு நாட்டின் அனுமதியின்றி அந்நாட்டின் தேசியக் கொடி ஏதேனுமொரு கப்பலில் பயன்படுத்தப்பட்டால் அக்கப்பலை கைப்பற்றுவதற்கும் பறிமுதல் செய்வதற்கும்.  அத்தேசியக் கொடிக்குரிய நாட்டிற்கு அதிகாரம் உண்டு. 
2. ஆய்வு செய்யும் உரிமை (Right of Visit):   பொதுவாக ஒரு கப்பல் அதன் தேசியக் கொடிக்குரிய நாட்டின் அதிகாரவரம்பிற்கு மட்டுமே கட்டுப்பட்டதாகும்.   ஆனால் ஆழ்கடலில் செல்லும் ஒரு கப்பல், அடிமை வியாபாரத்தில் ஈடுபடுகிறது அல்லது  கடற்கொள்கையில் ஈடுபடுகிறது  என்று சந்தேகம் ஏற்படுமானால் அல்லது ஒரு கப்பல் எந்த நாட்டின் தேசியக் கொடியும் இல்லாமல் செல்லுமானால், அக்கப்பலில் ஏறி தேடவும் ஆய்வு செய்யவும் தேவைப்பட்டால் அதில் உள்ளவர்களைக் கை செய்யவும் எந்த நாட்டின்  போர்க் கப்பலுக்கும் அதிகாரம் உண்டு.
3.    துரத்திப் பிடிக்கும் உரிமை  (Right of Pursuit):  ஒரு அயல் நாட்டுக்  கப்பல்  ஒரு கடலோர நாட்டின் எல்லையோரக் கடலில் இருக்கும் போது அந்நாட்டின் சட்டங்களையும் ஒழுங்கு முறைகளையும் மீறினால்  அக்கடலோர நாடு, அக்கப்பலைத் துரத்திச் சென்று ஆழ்கடலில் வைத்துக் கூட கைது செய்யலாம். கடலோர நாட்டிற்கு இருக்கும் இவ்வுரிமை “துரத்திப் பிடிக்கும் உரிமை” எனப்படும்.  பொதுவாக ஆழ்கடலில் ஒரு கப்பலின் கொடிக்கு உரிய  நாட்டிற்கு மட்டுமே அக்கப்பல் மீது அதிகாரவரம்பு உண்டு.  இருந்தாலும் துரத்திப் பிடிக்கும் உரிமையை செயல்படுத்தும் போது கடலோர நாட்டிற்கு வேற்று நாட்டுக் கப்பலையும் ஆழ்கடலில் வைத்துப் பிடிப்பதற்குச் சர்வதேசச் சட்டம் அனுமதி வழங்குகிறது.
    1982 ஆம் ஆண்டு கடல் சட்டம் பற்றிய ஐ. நா. மாநாட்டு விதிகள், ஷரத்து 111 இல துரத்திப் பிடிக்கும் உரிமையை ஒரு கடலோர நாடு செயல்படுத்துவதில் உள்;ள நிபந்தனைகள் பற்றிக் கூறுகின்றது  இதன்படி,
(i)    சட்டத்தை  மீறய அயல் நாட்டுக் கப்பல்,  அக்கடலோர நாட்டின் எல்லையோரக் கடல் அல்லது தீவுக் கூட்ட நாடுகளின் கடல் அல்லது எல்லையோரக் கடலை அடுத்த மண்டலத்தில்  இருக்கும் போதே அக்கப்பலைத் துரத்துதல் துவங்கியிருக்க வேண்டும்.
(ii)    அவ்வாறு துவங்கிய துரத்துதல்,  தொடர்ச்சியானதாகவும் இடையறுக்கப்படாமலும் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்.
(iii)    துரத்திச் செல்லும் கப்பல்துரத்தப்படும் கப்பலை நிறுத்துமாறு அடையாள ஒளி அல்லது ஒலிகளை எச்சரிக்கையாகக் கொடுக்க வேண்டும்.
(iv)    துரத்திச் செல்லும் கப்பல்,  போர்க் கப்பலாகவோ ரோந்துக் கப்பராகவோ தான் இருக்க வேண்டும். தனியார் அல்லது வணிகக் கப்பலுக்குத் துரத்திப் பிடிக்கும் உரிமை கிடையாது.
(v)    துரத்திப் பிடிக்கும் உரிமை போர்க் கப்பல்களுக்கு மட்டுமின்றி கடலோர நாட்டின் போர் விமானங்களுக்கும் உண்டு.  எனவே, மேலே கண்ட நிபந்தனைகள் போர் விமானங்களுக்கும் பொருந்தக் கூடியதாகும்.
(vi)    துரத்தப்படும் அயல் நாட்டுக் கப்பல் ஆழ்கடலில் பிடிபடாமல் தன் நாட்டுக் கடல் எல்லைக்குள் அல்லது துரத்தும் நாடு அல்லாத வேறொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்து விட்டால் அத்துரத்திப் பிடிக்கும் உரிமை முடிவுக்கு வந்து விடும்.
(vii)    துரத்தப்படும் அயல் நாட்டுக் கப்பல்,  கடலோர நாட்டின் வருவாய் அல்லது மீன்பிடி அல்லது பிற நலன்களைப் பாதிக்கும் சட்டங்களை மீறியதற்காகத் துரத்தப்படலாம்.
(viii)    ஆனால் தவறுதலாக அல்லது காரணமின்றி  துரத்திச் செல்லப்பட்டு ஒரு அயல் நாட்டுக்கப்பல் ஆழ்கடலில் நிறுத்தப்படுவதால் அல்லது கைது செய்யப்படுவதால் ஏற்படும் இழப்பு  அல்லது சேதத்தை துரத்திச் சென்ற நாட்டிடம் ஈடு செய்ய வேண்டும்.
4.    ஒரு அயல் நாட்டுக் கப்பல்,  கடலோர நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்படுமானால்,  அக்கடலோர நாடு அந்த அயல் நாட்டுக்கப்பல் ஆழ்கடலில் இருந்தாலும் அதன் மீது தனது அதிகாரவரம்பைச் செலுத்தலாம். 
5.    போர்க் காலங்களில் போரில் ஈடுபட்டிருக்கும் நாடு ஒன்று, தடை செய்யப்பட்ட பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதைத் தடுப்பதற்காக ஆழ்கடலில் செல்லும் நடுநிலை வகிக்கும் நாட்டின் கப்பல்களையும்  சோதனையிலாம்.
6.    அனைத்து  நாடுகளும் 1910 ஆம் ஆண்டு பிரஸ்ஸல்ஸ் மாநாடு போன்ற கடல் போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்த சர்வதேச வழக்காறுகள், சர்வதேசச் சட்டம், சர்வதேச மாநாடுகள் போன்றவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளன.
    இருப்பினும் ஆழ்கடலின் ஒரு பகுதியை அணு ஆயுதச் சோதனைக்காக ஒதுக்கி எச்சரிக்கைப் பகுதியாக அறிவிக்கலாமா என்பது இன்னமும்முடிவு செய்யப்படாத ஒன்றாக இருந்து வருகிறது.  சில நாடுகள் தற்காப்பிற்காக அவ்வாறு அறிவிக்கலாம் என்கின்றன:  வேறு சில நாடுகள்அவ்வாறு அறிவிக்கக் கூடாது என்கின்றன.

ஆழ்கடலின் உயர் வளங்களை பாதுகாத்தல்
(Conservation of Living resources of High Seas)   
 
    1958 ஆம் ஆண்டு ஆழ்கடல்களின் மீன்பிடி மற்றும் உயிர் வளங்களை பாதுகாத்தல் பற்றிய மாநாடு பின்வரும் விதிமுறைகளை வகுத்துள்ளது: 
1. கடலோர நாடுகளின் நலன்கள், உரிமைகள்,  சர்வதேச உடன்படிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்ட கடப்பாடுகள் ஆகியவற்றுக்கு உட்பட்டு அனைத்து நாடுகளும் ஆழ்கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்கலாம்.
2. ஆழ்கடலின் ஒரு பகுதியில் மற்ற நாட்டு குடிமகன்கள் எவரும் மீன்பிடிக்காமல்ஒரு நாட்டின் குடிமக்கள் மட்டும் மீன் பிடித்துக் கொண்டிருந்தால், அந்நாடே அப்பகுதியின் மீன்வளம் உள்ளிட்ட உயிர் வளங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளின் குடிமக்கள் அந்த ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பது வழக்கமாயின், சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளும் ஒரு பொதுவான உடன்படிக்கையின் மூலம் அப்பகுதியின் உயிர் வளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. கடலோர நாட்டின் எல்லையோரக் கடலை அடுத்து இருக்கும் ஆழ்கடலோர உயர் வளங்களின்  உற்பத்தித்   திறனைப் பராமரிப்பதில் அக்கடலோர நாட்டிற்கு தனிப்பட்ட நலன்கள் உண்டு.

ஆழ்கடலின் மாசுபாட்டைத் தடுத்தல் (Prevention of Pollution in high Seas)
    ஆழ்கடல்  அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என்பது போல் ஆழ்கடலை மாசின்றிப் பாதுகாப்பதும் அனைத்து நாடுகளின் பொதுவான கடமையாகும். ஆழ்கடலை மாசுபடுத்துவதில் மிக முக்கியமானது எண்ணெய் மாசுபாடே (Oil Pollution)  ஆகும்.  1969 நவம்பா 29 இல்; பிரஸ்ஸல்ஸில் இது தொடர்பாக இரண்டு மாநாட்டு விதிகள் ஏற்கப்பட்டன.  அவற்றில் ஒன்று ஆழ்கடலில் எண்ணெய் மாசுபாட்டைத் தடுப்பதற்கானதாகவும், மற்றொன்று எண்ணெய் மாசுபாட்டினால் ஏற்படும் பாதிப்பிற்கான உரிமையியல் பொறுப்பு தொடர்பானதாகவும் இருந்தது.
    முதல் விதி, ஆழ்கடலில் மாசுபாட்டை ஏற்படுத்துவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அதற்கருகில் உள்ள கடலோர நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்கிறது.  இரண்டாது விதி, ஆழ்கடலில் எண்ணெய் மாசுபாட்டால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்ய வேண்டிய முழுப் பொறுப்புநிலை அதை ஏறப்டுத்திய எண்ணெய்க் கப்பலின்  உரிமையாளரையே சேர்ந்தது என்று கூறுகிறது.

நிலங்களால்  சூழப்பட்ட  நாடுகளின் ஆழ்கடல் உரிமை (Rights of Land Locked states in High Seas) 
                                         கடற்கரையே இல்லாத நாடே நிலங்களால் சூழப்பட்ட நாடு என்று 1982 ஐ.நா. கடல் சட்ட மாநாடு ஷரத்து 124 வரையறுக்கின்றது. உலக நாடுகளில்30 நாடுகள் நிலங்களால் சூழப்பட்டுள்ள நாடுகளாகும். இவற்றில் 14 நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் ஆகும். இந்தியாவின் அருகில் உள்ள நேபாளம் நாற்புறமும் நிலங்களால் சூழப்பட்ட நாடாகும். ஆந்நாட்டிற்கு 1950 ஜீலை 31 ம் நாள் ஒப்பமிடப்பட்ட இந்தியா – நேபாள உடன்படிக்கையின் மூலம் இந்தியாவின் வழியாக கடலை அடைவதற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆழ்கடலும் அதன் ஆதார வளங்களும் கடலோர நாடுகளுக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல. அவை மனித குலம் முழுமைக்கும் பொதுவானதாகும் என்பதே சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையாகும். ஆனால் நான்கு புறம் மற்ற நாடுகளால் சூழப்பட்டிருக்கும் ஒரு நாடு, ஆழ்கடலில் தனக்கிருக்கும் உரிமையை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்பது ஒரு நடைமுறைக் கேள்வியாகும். இந்த நடைமுறைச் சிக்கலைத் தீர்க்கவே 1982 ஆம் ஆண்டு ஐ.நா. மாநாடு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.  இதன்படி:
(i) ஆழ்கடலகளின் சுதந்திரங்களையும் ஆழ்கடலில் மனித குலத்திற்கு இருக்கும் பொது உரிமைகளையும் செயல்படுத்துவதற்காக கடலில் சென்று வருவதற்கு நிலங்களால் சூழப்பட்ட நாடுகளுக்கு எல்லா உரிமையும் உண்டு.
(ii) கடலுக்குச் சென்று வருவதற்காக நிலங்களால் சூழப்பட்ட ஒரு நாடு, கடலுக்கும் அந்நாட்டிற்கும் இடையிலுள்ள நாட்டின் (Transit state) வழியே அனைத்து வகை போக்குவரத்தையும் பயன்படுத்தலாம்.
(iii) அவ்வாறு நிலங்களால் சூழப்பட்ட ஒரு நாடு,  கடலை அடைவதற்காக இடையிலுள்ள நாட்டின் வழியே போது, அதற்கு நுழைவு வரி, கலால் வரி அல்லது அது போன்ற பிற வரிகள் எதையும் அந்த இடையிலுள்ள நாடு விதிக்கக் கூடாது. ஆனால் தனிப்பட்ட சேவை ஏதேனும் வழங்கப்பட்டால் அதற்குரிய சேவைக் கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம்.
(iv) நிலங்களால் சூழப்பட்ட நாட்டின் தேசியக் கொடியைக் கொண்டிருக்கும் கப்பலும் மற்ற அயல் நாட்டு கப்பல்களைப் போலவே துறைமுகங்களில் சமமாக நடத்தப்பட வேண்டும்.

சர்வதேசக் கடலடித்தள அதிகார அமைப்பு  (International Sea-bed Authority) 
                            சர்வதேசக் கடலடித்தளப் பகுதி (International Sea-bed Area) யில் நடைபெறும் நடவடிக்கைகளை – குறிப்பாக கடலடித்தளப் பகுதியில்உள்ள இயற்கை வளங்களை நிர்வகிப்பதை – கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்பே கடலடித்தள அதிகார அமைப்பாகும்.  1982 ஆம் ஆண்டு கடல் சட்டம் பற்றிய ஐ.நா. மாநாடு, ஷரத்து 156 இன்படி சர்வதேசக் கடலடித்தள அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அம்மாநாட்டின் அனைத்து உறுப்பு நாடுகளும் இந்த அதிகார அமைப்பின் உறுப்பினர்களாவர். அதன் தலைமையகம்  ஜமைக்காவில் உள்ளது. 

சர்வதேசக் கடலடித்தளப் பகுதி என்பது, கடலோர நாடுகளின் தேசிய அதிகாரவரம்பு முடியும் இடத்தில் இருந்து தொடங்கும் ஆழ்கடலின் கடலடித்தளம், கடலின் தரை மற்றும் கடலடி மண் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். கடலோர நாடுகளின் தேசிய அதிகாரவரம்பானது, அந்நாடுகளின்   கண்டத்திட்டு முடிவடையும் வெளி விளிம்புடன் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  மேலே கண்ட வரையறைக்குட்பட்ட சர்வதேசக் கடலடித்தளப் பகுதியில் உள்ள இயற்கை வளங்களைக் கட்டுப்படுத்தி நிர்வகிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதே சர்வதேசக் கடலடித்தள அதிகார அமைப்பு ஆகும்.

சர்வதேசக் கடலடித்தள அதிகார அமைப்பின்  அங்கங்கள் (Organs)
                      1982 ஆம் ஆண்டு ஐ. நா. மாநாட்டில் ஏற்றுக்  கொள்ளப்பட்டதற்கிணங்க சர்வதேசக் கடலடித்தள அதிகார அமைப்பு பின்வரும் அங்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.  அவை:  1) பேரவை (Assembly),  2) செயற்குழு (Council), 3) செயலகம் (Secretariat), 4) நிறுவனம் (Enterprise) ஆகியனவாகும். இவற்றில் பேரவை, செயற்குழு மற்றும் செயலகம் ஆகிய மூன்றும் முக்கிய அங்கங்களாகும். கடலடித்தளப் பகுதியில் உள்ள இயற்கை வளங்களை கடலடித்தள அதிகார அமைப்பே அகழ்ந்தெடுத்து வணிகப்படுத்துவதற்காக, இந்த அமைப்பின் ஒர் அங்கமாக வணிக நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

பேரவையே கடலடித்தள அதிகார அமைப்பின் கொள்கைகளை உருவாக்கும் முதன்மை அங்கமாகும். பேரவையில் 1982 ஆம் ஆண்டு ஐ.நா. மாநாட்டின் உறுப்பு நாடுகள் அனைத்தும் உறுப்பினகளாகும்.  சேயற்குழு, பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட 36 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கிறது.  செயற்குழு தனது அதிகாரத்தின் கீழ் (i) பொருளாதாரத் திட்ட ஆணையம் (Economic Planning Commission) மற்றும் (ii) தொழில் நுட்ப ஆணையம்  (Technical Commission) ஆகிய துணை அமைப்புகளை உருவாக்கிக் கொண்டுள்ளது.  செயலகம் என்பது ஒரு பொதுச் செயலாளரையும் தேவையான அலுவலகப் பணியாளர்களையும் கொண்டு இயங்குகிறது. ஆதன் பொதுச் செயலாளரைப் பேரவையே தேர்ந்தெடுத்து நியமிக்கிறது. அவரே கடலடித்தள அதிகார அமைப்பின் தலைமை நிர்வாகி ஆவார்.  இவை தவிர சர்வதேசக் கடல் சட்டத்  தீர்ப்பாயத்தில் ஒரு பிரிவாக கடலடித்தளத் தகராறுகள் தீர்வு மையம் (Sea-bed Disputes Chamber) ஒன்றும்  உருவாக்கப்பட்டுள்ளது.

கடலடித்தள வளங்களின் மேலாண்மையும் பகிர்ந்தளிப்பும் (Management and Distribution of Sea Bed resources)
         கடலடித்தளப் பகுதியில் உள்ள கனிம வளங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை மேலாண்மை செய்வதும், அவ்வளங்களை அல்லது அவ்வளங்களில் இருந்து கிடைக்கும் பொருளாதாரப் பலன்களை உறுப்பு நாடுகளிடையே பகிர்ந்தளிப்பதுமே கடலடித்தள அதிகார அமைப்பின்  முக்கியப் பணியும் நோக்கமும் ஆகும்.  இந்த அதிகார அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளும் இறையாண்மை சமத்துவம் பெற்ற – சமமான நாடுகளாகும்.  எனவே கடலடித்தளப் பகுதியில் கிடைக்கும் இயற்கை வளங்கள் அல்லது அதன் மூலம் கிடைக்கும் பொருளாதாரப் பலன்கள், உறுப்பு நாடுகளிடையே சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் கடலடித்தள அதிகார அமைப்பு செயல்படுகிறது.

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com