நாடுகளுக்கிடையிலான தூதாண்மை உறவுகள், முகவர்களின் உரிமைகள், தனியுரிமைகள் மற்றும் காப்புவிலக்குகள் 

நாடுகளுக்கிடையிலான தூதாண்மை உறவுகள், முகவர்களின் உரிமைகள், தனியுரிமைகள் மற்றும் காப்புவிலக்குகள் 

தூதாண்மை உறவுகள் (Diplomatic Relations)

    மிகப் பழங்காலம் முதல் நாடுகள் தங்களுக்கிடையிலான உறவை தூதர்கள் மூலமாகப் பராமரித்து வந்துள்ளன. ஒரு நாட்டின் மன்னர் தனது நட்பு நாட்டின் அரசவையில் நிரந்தரமாக தனது தூதுவப் பிரதிநிதியை அமர்த்துவதும், பகை நாட்டு மன்னரிடம் போர் பற்றியும் சமாதானம் பற்றியும் கருத்தப் பரிமாற்றங்கள் செய்வதற்குத் தூதர்களை அனுப்புவதும் அக்காலம் தொட்டே நடைமுறையில் இருந்துள்ளன. தூதர்களின் குணங்கள் மற்றும் கடமைகளை பற்றி அர்த்த சாஸ்திரம், திருக்குறள் போன்ற அக்காலத்திய நீதி நூல்கள் மன்னரின் ஆட்சி நிர்வாகத்திற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. ஆனால் இன்றைய காலத்தில் நாடைமுறையில் இருக்கும் தூதரக உறவுகள் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் முன்னேறிய நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளன. நவீன தூதாண்மை உறவுகள் பற்றிய நடைமுறைகளையும் கடமைகளையும் வியன்னா மாநாடு போன்ற சர்வதேச மாநாடுகளும் உடன்படிக்கைகளும் ஒழுங்குபடுத்துகின்றன. 

தூதாண்மை உறவுகள் பற்றிய வியன்னா மாநாடு, 1961
(Vienna convention on diplomatic relations 1961)

    தூதாண்மை உறவுகள் பற்றிய வியன்னா மாநாடு 18 ,ஏப்ரல், 1961 அன்று சுதந்திரமான நாடுகளுக்கு இடையில் தூதரக உறவுகளை ஏற்படுத்துவது, பராமரிப்பது, முடிவுக்குக் கொண்டு வருவது ஆகியன பற்றிய விரிவான 53-ஷரத்துக்களைக் கொண்ட விதிமுறைகளை வகுத்துள்ளது. இம்மாநாடு, நூறாண்டுகளாக நடைமுறையில் இருந்து தூதரக உறவுகள் பற்றிய வழக்காறுகளை நவீன காலத்திற்கேற்பத் நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, சர்வதேச அளவில் தூதாண்மை உறவுகள் ஒழுங்குபடுத்துகிறது.
                 தூதாண்மை உறவுகள் பற்றிய  வியன்னா மாநாடு, நாடுகளின் அயல்நாட்டு உறவுகள் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. ஒரு நாட்டில் இருக்கும் அயல்நாட்டுத் தூதுவர் தான் இருக்கும் நாட்டின் தலையீடு இல்லாமல் தன் நாட்டுக்கான தனது கடமையை நிறைவேற்றுவதற்கு இம்மாநாடே அடிப்படையாகும். குறிப்பாக இந்த மாநாடு பின்வரும் முக்கியக் கூறுகளைக் கொண்டது.

(i) அயல்நாட்டுத் தூதாண்மை  முகவர்களை நியமிப்பதற்கான விதிமுறைகள்.
(ii) தூதரக வளாகத்தின் மீறப்பட முடியாத புனிதம் பாதுகாக்கப்பட வேண்டும்.
(iii) தூதுவப் பிரதிநிதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உள்நாட்டின் குற்றவியல் நீதிமன்றம் அதிகாரவரம்பிலிருந்தும் கைது அல்லது பாதுகாவலில் வைக்கும் நடைமுறைகளில் இருந்தும் காப்பு விலக்கு.
(iv) தூதண்மை முகவர், தன்னை அனுப்பிய நாட்டுடன் மேற்கொள்ளும் அனைத்த வகையான தூதரக கடிதங்கள் அல்லது ஆவணங்கள் அடங்கிய பைகள் திறக்கப்படாமலும் சோதனையிடப்படாமலும் அனுமதிக்கப்பட வேண்டும்.
(v) மிகச் சில விதிவிலக்குகளுடன் உள்நாட்டின் உரிமையியல் மற்றும் நிர்வாக அதிகாரவரம்பில் இருந்து காப்பு விலக்கு.
(vi) தூதாண்மை முகவர்கள் தங்களை வரவேற்றிருக்கும் நாட்டின் உள்நாட்டுச் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்

    வியன்னா மாநாட்டில் வெளிப்படையாகச் சொல்லப்படாத விஷயங்கள் அணைத்தும் தூதாண்மை உறவுகள் பற்றிய வழக்காறுகளின் படியே நிர்ணயிக்கப்பட வேண்டும் என இதன் முடிவுரை தெளிவுபடுத்துகிறது. 

தூதாண்மை முகவர்களின் வகைப்பாடு (Classification)
                                 நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகள் தூதாண்மை முகவர்கள் அல்லது தூதவப் பிரதிநிதிகள் மூலமாக நடைபெறுகின்றன. நாடுகளுக்கு இடையிலான உறவுகள் அடிப்படையில் அரசியல் உறவுகள் என்றும் வணிக உறவுகள் என்றும் இரு வகைகளாக உள்ளன. இவற்றில் தூதாண்மை உறவுகள் என்பது அரசியல் உறவுகளையே குறிக்கின்றன. எனவே இங்கு தூதாண்மை முகவர்களின் வகைப்பாடு என்பது அரசியல் தூதாண்மை முகவர்களின் வகைப்பாடே ஆகும். வணிக உறவுகளைப் பராமரிக்கம் வணிக முகவர்கள்  பற்றி தனியே விவாதிக்கப்பட்டுள்ளது.

    1961 ஆம் ஆண்டு வியன்னா மாநாடு, தூதாண்மை முகவர்களை வரும் மூன்று வகையாக வகைப் படுத்துகின்றது.

1) தூதர்கள் மற்றும் தூதுவப் பிரதிநிதிகள் (Ambassadars and Legates)
                             தூதர்களும் தூதுவப் பிரதிநிதிகளும் முதல் நிலையில் உள்ள தூதாண்மை முகவர்களாவர். அவர்கள் ஒரு முழுமையான இறையாண்மை அரசின் முழு அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் ஆவர். அவர்கள் தங்களை அனுப்பும் நாட்டின் தூதர்காளக இருப்பர். இவர்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக குறுகிய காலத்திற்கு அனுப்பப்படுவதில்லை. மாறாக அனுப்பும் நாட்டு அரசிடமிருந்து மறு உத்தரவு வரும்வரை, நிரந்தரமாக அந்நாட்டின் தூதரகப் பணியாற்றுவார்கள். ஐக்கிய நாடுகள் சபையில் நாடுகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக நியமிக்கப்படும் நிரந்தரப் பிரதிநிதிகளும்  தூதர்களே ஆவர். தூதுவப் பிரதிநிதி எனப்படுவர், வாட்டிகனின் பிரதிநிதியாக போப் - ஆல் நியமிக்கப்படும் தூதாண்மை முகவராவார். 

2. அமைச்சரவையின் முழு அதிகாரம் பெற்ற முகவர்கள் மற்றும் சிறப்புத் தூதுவர்கள்(Ministries pleni-potentiary and Envoys Extraordinary)
    அமைச்சரவையின் முழு அதிகாரம் பெற்ற முகவர்களும் சிறப்புத் தூதுவர்களும் இரண்டாம் நிலைத் தூதாண்மை முகவர்கள் ஆவர் முதல் நிலை தூதாண்மை முகவர்களான தூதர்கள், த}துவப் பிரதிநிதிகளுடன் ஒப்பிடும் போது இவர்கள் குறைவான தனியுரிமைகளும் காப்புவிலக்கும் உடையவர்களாவர்.

3. வெளியுறவுப் பொறுப்புத் தூதர் (Charge d’ Affaires)
    தூதாண்மை முகவர்களில் கடைசி நிலையில் உள்ளவர் வெளியுறவுப் பொறுப்புத் தூதர்களாவர். ஏனெனில் அவர்கள் ஒரு நாட்டின் தலைமையால் நேரடியாக நியமிக்கப்படுவதில்லை. மாறாக அவர்கள் வெளியுறவு அமைச்சர்களால் நியமிக்கப்படுபவர்களாவர். உரிமைகள், தகுநிலை ஆகியவற்றைப் பொறுத்த வரை இவர்கள் முன்னிரண்டு தூதாண்மை முகவர்களைக் காட்டிலும் குறைந்தவர்களாகவே கருதப்படுகின்றனர்.
    இருப்பினும், முந்தய வழக்கம், மரியாதை மரபுகளைத் தவிர மேலே கண்ட மூன்று வகையான தூதாண்மை முகவர்களுக்கு இடையே எந்த வேறுபாடும் கிடையாது என்று வியன்னா மாநாட்டின் ஷரத்து 14(2) கூறுகின்றது. நடைமுறையில் அவர்களின் தனியுரிமைகள், காப்பு விலக்கு போன்றவற்றில் இம்மூன்று வகையினருக்கும் இடையே எந்த வேறுபாடும் காட்டப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

தூதாண்மை முகவர்களின் நியமனம் 
    வியன்னா மாநாட்டில் ஏற்கப்பட்ட விதிகளின்படி ஒரு நாட்டிற்கு தூதாண்மை முகவரை அனுப்பம் நாடு, அவரை வரவேற்கும் நாடு அவரை ஏற்க சம்மதிக்கிறது என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் தூதரை நியமித்த பிறகு அவரை வரவேற்கும் நாடு அவரை ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டால் நாடுகளுக்கு இடையிலான உறவை அது அதிகம் பாதிக்கும். தன் நாட்டிற்கு அனுப்பப்படும் தூதுவரை ஏற்க மறுக்கும் நாடு அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. 

    ஒரு நாட்டின் தூதராக நியமிக்கப்படுபவரின் நியமனம், நம்பிக்கைப் பத்திரம் (letter of Credence) எனும் அரசு ஆவணத்தின் மூலம் அவரை வரவேற்கும் நாட்டிற்கு அறிவிக்கப்டும். அத்துடன் தூதராக நியமிக்கப்பட்டவர் தன்னுடன், ஏதேனும் குறிப்பிட்ட பேச்சு வார்த்தை குறித்த அல்லது பிற குறிப்பான எழுத்து மூலமான வழிகாட்டுதல்கள் அடங்கிய ஆவணங்களையும் எடுத்துச் செல்வார். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே நபரை தங்களது தூதராக மற்றொரு நாட்டிற்கு நியமிக்கலாம். ஆனால் அத்தகைய நியமனத்தை அவரை வரவேற்கும் நாடு ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவ்வாறு நியமிக்க முடியும். 

தூதாண்மை முகவர்களின் பணிகள்  
    வியன்னா மாநாட்டில் ஏற்கப்பட்ட விதிகளில், ஷரத்து 3 இன்படி, பின்வருவன தூதாண்மை முகவர்களின் பணிகளுள் சிலவாகும். 
(i) தன்னை வரவேற்றிருக்கும் நாட்டில் தன்னை அனுப்பிய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது.
(ii) சர்வதேசச் சட்டம் அனுமதிக்கும் வரம்பிற்கு உட்பட்டு தன்னை வரவேற்றிருக்கும் நாட்டில் தன் நாட்டு நலன்களையும் தன் நாட்டுக் குடிமக்களின் நலன்களையும் பாதுகாப்பது.
(iii) தன்னை அனுப்பிய நாட்டின் சார்பாக, தன்னை வரவேற்றிருக்கும் நாட்டின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது.
(iv) தன்னை வரவேற்றிருக்கும் நாட்டின் நிலவரம் மற்றும் வளர்ச்சிப் போக்குகளை சட்டப் பூர்வமான வழிமுறைகளின் மூலம் அறிந்து தன்னை அனுப்பிய நாட்டிற்கு அறிக்கையாக அனுப்பி வைத்தல், அதற்காக சட்ட விரோதமான வழிகளைப் பயன்படுத்தும் போது அதுவே உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதற்கும் வாய்ப்பு உண்டு. 
(v) தன்னை அனுப்பிய நாட்டிற்கும் வரவேற்றிருக்கும் நாட்டிற்கும் இடையில் நட்புறவை வளர்ப்பது.
இவை தவிர அவ்வப்போது தங்களுக்கு இடப்படும் பணிகளையும் தூதாண்மை முகவர்கள் மேற்கொள்வர். ஆனால் குறிப்பிட பணிகளுக்கு மட்டுமே நியமிக்கப்படும் தூதாண்மை முகவர்கள் அக்குறிப்பிட்ட பணிகளை மட்டுமே மேற்கொளவர்.

கொள்கை அடிப்படை (Theoretical Basis)
    தூதாண்மை முகவர்களுக்கு அவர்களை வரவேற்றிருக்கும் நாட்டில் அளிக்கப்படும் உரிமைகள், தனியுரிமைகள், காப்பு விலக்குகள் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு முன்னர், அவை எதனடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.
    தூதாண்மை முகவர்களுக்கு சிறப்புரிமைகளும் காப்பு விலக்குகளும் அளிக்கப்படுவது பற்றி இரண்டு விதமான கொள்கைகள் நிலவுகின்றன. அவை (1) ஆள்நில எல்லைக்கு அப்பாற்பட்டது பற்றிய கொள்கை (2) பணி சார்ந்த கொள்கை ஆகியனவாகும்.

1) ஆள்நில எல்லைக்கு அப்பாற்பட்டது பற்றிய கொள்கை (Theory of Extra-territoriality)
    இக்கொள்கையின்படி தூதாண்மை முகவர்கள், அவர்களை வரவேற்றிருக்கும் நாட்டின் ஆள்நில அதிகாரவரம்பிற்கு வெளியில் உள்ளவர்கள் என்பதாலேயே அவர்களுக்கு தனியுரிமைகளும் காப்பு விலக்குகளும் வழங்கப்படுகின்றன. ஆள்நில எல்லைக்கு அப்பாற்பட்டது பற்றிய இக்கொள்கை பொருத்தமற்றது என விமர்சிக்கின்றனா. 1961 ஆம் ஆண்டு வியன்னா மாநாடும் இக்கொள்கை அடிப்படையை ஏற்றுக் கொள்ளவில்லை.

2) பணி சார்ந்த கொள்கை (Functional Theory)
    இக்கொள்கையின்படி தூதாண்மை முகவர்களின் தனியுரிமைகளும் காப்புவிலக்குகளும், அவர்கள் உள்நாட்டு ஆள்நில அதிகாரவரம்பிற்கு அப்பற்பட்டவர்கள் என்பதால் அளிக்கப்படுவதில்லை. மாறாக அவர்களது பணியின் சிறப்புத் தன்மையின் காரணமாகவே அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. ஒரு வேற்று நாட்டில் இருந்து கொண்டு தன் நாட்டின் நலனுக்காக பணியாற்ற வேண்டிய அவர்களின் பணிச் சூழலைக் கருத்தில் கொண்டே தனியுரிமைகளும் காப்புவிலக்குகளும் அளிக்கப்படுகின்றன. இல்லாவிட்டால் அவர்களால் இப்பணியை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் போய்விடும். வியன்னா மாநாடும் பணிசார்ந்த கொள்கையின் அடிப்படையிலேயே தூதாண்மை முகவர்களின் தனியுரிமைகள், காப்புவிலக்குகள் பற்றிய வகைமுறைகளை வகுத்துள்ளது. 

தூதாண்மை முகவர்களின் உரிமைகள் தனியுரிமைகள் மற்றும் காப்புவிலக்குகள் (Rights, Privileges and Immunities)

1. தூதாண்மை முகவர்களின் தனிநபர் பாதுகாப்பு (Inviolabilitty of Persons of Envoys)
    தூதாண்மை முகவரின் உடலுக்கும் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவரை வரவேற்றிருக்கும் நாட்டின் கடமையாகும். மற்றவர்களிடமிருந்து மட்டுமல்ல அவரை வரவேற்றிருக்கும் நாட்டின் அரசிடமிருந்தும் அவர் பாதுகாப்புப் பெற்றவராவர். எனவே தூதாண்மை முகவரை, உள்நாட்டு அரசு கைது செய்யவோ அவரது உடலுக்கு தீங்கு செய்யவோ கூடாது. 1961 ஆம் ஆண்டு வியன்னா மாநாடு, ஷரத்து 29 இன்படி, ஒரு தூதாண்மை முகவரை கைது செய்யவோ சிறையிலடைக்கவோ கூடாது. அது மட்டுமின்றி அவர் மீது அல்லது அவரது சுதந்திரம் அல்லது கண்ணியத்தின் மீது வரக்கூடிய தாக்கதல்களில் இருந்து அவரைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் அவரை வரவேற்றிருக்கும் நாட்டிற்கு உண்டு. ஆனால் அதே சமயத்தில், அவரை வரவேற்றியிருக்கும் நாட்டில் உள்நாட்டுக் கலவரங்களை ஏற்படுத்தும் அல்லது உளவு பார்க்கும் வேலைகளில் ஈடுபடமால் இருக்க வேண்டிய கடமை தூதாண்மை முகவருக்கும் உண்டு. அத்தகைய முறையற்ற செயல்களில் ஒரு தூதாண்மை முகவர் ஈடுபட்டால் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற அந்நாட்டு அரசுக்கு முழு உரிமை உண்டு.

    1992 இல் இந்தியா, பாகிஸ்தானின் தூதுவரை உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டி வேண்டாதவராக அறிவித்து நாட்டை விட்டு வெளியேற்றியது. அடுத்த இரு தினங்களில் பாகிஸ்தானில் இருந்த இந்திய தூதரை பாகிஸ்தான் அரசு அதே குற்றச்சாட்டிற்காக கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் அவரை நாட்டை விட்டு வெளியேற்றியது. அதற்குப் பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானின் தூதரக அதிகாரிகள் இருவரை வேண்டப்படாத நபர்களாக அறிவித்து நாட்டிடைவிட்டு வெளியேற்றியது.

     United States Diplomatic and Consular Staffs in Tehran Case(1980)- வழக்கில் 1979 இல் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்த அமெரிக்க தூதரகத்தை, ஈரானிய கலகப் படை கைப்பற்றி அங்கிருந்த தூதர் மற்றும் தூதரக ஊழியர்களைப் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டது. ஈரான் அரசு, தூதாண்மை முகவர்களைப் பாதுகாக்கவோ மீட்கவோ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அது பற்றி அமெரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. சர்வதேச நீதிமன்றம் ஈரானின் செயல் வியன்னா மாநாடு ஷரத்து 29 ஐ மீறிய செயலாகும். எனவே அமெரிக்க தூதரக அதிகாரிகளை மீட்பதற்கு ஈரான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியது.

2. குற்றவியல் அதிகாரவரம்பிலிருந்து காப்புவிலக்கு (Immunity from Criminal Jurisdiction)
    1961 ஆம் ஆண்டு வியன்னா மாநாடு, ஷரத்து 31 இன்படி, தூதாண்மை முகவர்களுக்கு அவர்களை வரவேற்றிருக்கும் நாட்டின் குற்றவியல் நீதிமன்ற அதிகாரவரம்பில் இருந்து கைப்புவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தங்களை வரவேற்றிருக்கும் நாட்டில் சட்டங்களை மதித்து நடக்க வேண்டியது தூதாண்மை முகவர்களின் கடமையாகும். ஏதேனுமொரு தூதுவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டால், அது குறித்து அவரது நாட்டுத் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு அவரை திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு கோரவே முடியும். ஒரு குற்றச் செயலுக்காக உள்நாட்டு நீதிமன்றத்தில் தூதுவர் ஒருவர் மீது குற்றவழக்கு தொடரப்பட்டால் அவர் அந்நீதிமன்றத்தில் மன்னிலையாகி வாதிட வேண்டிய அவசியமில்லை. தான் ஒரு தூதாண்மை முகவர் என்பதால் தனக்கு காப்புவிலக்கு உண்டு என்ற கடிதம் மூலம் நீதிமன்றத்தில் மன்னிலையாகி தனது வாதத்தை எடுத்து வைக்கிறார் எனில் அவர் தனக்குரிய காப்புவிலக்கை விட்டுக் கொடுத்து விட்டு உள்நாட்டு நீதிமன்ற அதிகாரவரம்பிற்குத் தன்னை தானே உட்படுத்திக் கொண்டுள்ளார் என்பதே பொருளாகும்.
    வரவேற்றிருக்கும் நாட்டின் குற்றவியல் அதிகாரவரம்பில் இருந்து தூதாண்மை முகவர்கள் காப்பு விலக்குப் பெற்றிருந்தாலும், அவர்கள் அந்நாட்டின் அரசுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டால் அவர்கள் அந்த காப்புவிலக்கை இழக்க நேரிடலாம். உதாரணத்திற்கு 1712 இல் இங்கிலாந்துக்கான ஸ்வீடன் நாட்டின் தூதுவர், இங்கிலாந்து மன்னருக்கு எதிரான சதிச் செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதைக் குறிப்பிடலாம். 

3. உரிமையியல் அதிகாரவரம்பில் இருந்து காப்புவிலக்கு (Immunity from Civil Jurisdiction)
    தூதாண்மை முகவர்களுக்கு அவர்களை வரவேற்றிருக்கும் நாட்டின் உரிமையியல் நீதிமன்ற அதிகாரவரம்பில் இருந்து காப்புவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடனை திரும்ப வசூலித்தல், ஒப்பந்த மீறல் போன்றவற்றுக்காக தூதாண்மை முகவர் மீது உரிமையியல் வழக்கு தொடர முடியாது. ஆனால் வியன்னா மாநாடு ஷரத்து 31 இன்படி, தூதரகத்திற்காக அல்லாமல், தன்னை வரவேற்றிருக்கும் நாட்டில் தூதுவர் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்து தொடர்பான வழக்கு அல்லது தூதாண்மை முகவரின் வணிக அல்லது வியாபார நடவடிக்கைகளின் மூலம் எழும் தனிப்பட்ட வழக்குகளுக்கு அவர் மீது உரிமையில் வழக்கு தொடரப்படலாம். 
    இந்தியாவில் தூதாண்மை முகவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கு மத்திய அரசாங்கத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்று உரிமையியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 86 கூறுகின்றது. மத்திய அரசாங்கம், கைப்புவிலக்கு பெற்ற நடவடிக்கைகளில் தூதாண்மை முகவர் மீது வழக்குத் தொடர அனுமதி மறுக்கலாம் என்ற வழக்கில் ஒரு இந்தியக் குடிமகன், இந்தியாவில் இருந்து ஆப்பானிஸ்தான் தூதர் மீது வாடகை பாக்கிக்காக வழக்குத் தொடர மத்திய அரசிடம் அனுமதி கோரினார். ஆனால் மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்து விட்டது. அவர் உயர்நீதிமன்றத்தில் நீதிப் பேராணையில் வழக்குத் தொடர்ந்தார். டெல்லி உயர்நீதிமன்றம், ஆப்கானிஸ்தான் தூதரின் செயல் அவரது இறைமைப் பணி சார்ந்தது அல்ல என்பதால் மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. 

Century Twenty One (P) Ltd-Vs-Union of India [ AIR 1987 Delhi 124]  - என்ற வழக்கில் ஒரு இந்தியக் குடிமகன் புதுடெல்லியில் இருக்கும் அல்ஜீரியாவின் தூதரகத்தைப் புதுப்பித்து பராமரித்து வகையில் வரவேண்டிய தொகை பாக்கியை வசூலிப்பதற்காக வழக்குத் தொடர மத்திய அரசிடம் அனுமதி கேட்டார். ஆனால் மத்திய அரசாங்கம் அனுமதி தர மறுத்து விட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உரிமையில் நடைமுறைச் சட்டம் பிரிவு 86 இன்படி நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், அயல்நாட்டுத் தூதுவர் மீது இந்தியாவில் வழக்குத் தொடரப்படலாம். இந்த வழக்கில் அல்ஜீரிய நாட்டுத் தூதரகப் பராமரிப்பிற்காக வரவேண்டிய பாக்கியை வசூலிக்க முடியாத சூழலை தன் நாட்டுக் குடிமகனுக்கு ஏற்படுத்தி, இரு நாட்டு உறவைப் பராமரிக்க இந்தியா முயல்வது அந்த உறவுக்கு மரியாதை தரக் கூடியதாக இல்லை. எனவே மத்திய அரசு அல்ஜீரிய தூதரகத்துடன் பேசி பரஸ்பரம் சமாதானமாக பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகளை முயற்சிக்க வேண்டும். அயல்நாட்டுத் தூதர்கள் தர வேண்டிய வாடகை பாக்கி, பராமரிப்புத் தொகை பாக்கி போனற விஷயங்களுக்காக தூதாண்மை காப்புவிலக்கைக் காரணம் காட்டி இந்தியக் குடிமக்களை விரக்திக்கு உள்ளாக்குவது அந்தத் தூதரக உறவின் கண்ணியத்திற்கு இழுக்கேற்படுத்தக் கூடியதாகும் என்று தீர்ப்பளித்தது.

4. தூதாண்மை முகவரின் குடியிருப்புக்கான காப்புவிலக்கு (Immunity regarding residence of Diplomate)
    தூதரக வளாகத்தைப் போலவே தூதாண்மை முகவர்கள் குடியிருக்கும் குடியிருப்பு வளாகத்திற்கும் காப்புவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வரவேற்றிருக்கும் நாட்டின் காவல் படை, தேடுதல் அல்லது கைது செய்தல் போன்ற எந்நோக்கத்திற்காகவும் தூதாண்மை முகவர்களின் குடியிருப்பிற்குள் நுழையக் கூடாது. இதனை  - என்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் மறு உறுதி செய்துள்ளது. ஒருவேளை தூதாண்மை முகவரின் குடியிருப்பிற்குள் காப்புவிலக்குப் பெறாத தேடப்படும் நபர் ஒருவர் தங்கியிருந்தால், அவரை அத்தூதாண்மை முகவரே தன்னை வரவேற்றிருக்கும் நாட்டின் அரசிடம் ஒப்படைத்து விடுவதே இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வரும் சர்வதேச மரபாக இருந்து வருகிறது.

5. சாட்சியாக முன்னிலைப்படுத்துவதில் இருந்து காப்பு விலக்கு (Immunity from presenting as Witness)
    உள்நாட்டு நீதிமன்றத்தில் சாட்சியாக முன்னிலைப் படுத்துவதில் இருந்து தூதாண்மை முகவருக்கு காப்புவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு வழக்கிலும் சாட்சியாக வந்து சாட்சியமளிக்குமாறு தூதாண்மை முகவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் ஒரு தூதுவர், தனது காப்புவிலக்கை விட்டுக் கொடுத்து விட்டு தாமாக முன்வந்து சாட்சியமளிப்பதில் எந்தத் தடையுமில்லை.

6. வரிவிதிப்பில் இருந்து காப்புவிலக்கு (Immunity from Taxation)
    தூதாண்மை முகவர்களுக்கு, அவர்களை வரவேற்றிருக்கும் நாட்டின் நேரடி வரிவிதிப்புகள் அனைத்தில் இருந்தும் முழு காப்புவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டச் சட்டப்படி செலுத்தப்பட வேண்டிய வருமான வரி, சேவை வரி போன்ற நேரடி வரிகளைச் செலுத்துமாறு தூதாண்மை முகவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் அவர்கள் வாங்கும் சரக்குகளின் விலையுடன் சேர்க்கப்பட்டிருக்கும் விற்பனைவரி போன்ற முறைமுக வரிகளில் இருந்து காப்புவிலக்கு கிடையாது. அதுபோல அவர்களின் தனிப்பட்ட சொத்துக்கள், வியாபாரங்கிளன் மீதான உள்நாட்டு வரியைச் செலுத்த அவர்கள் கடமைப்பட்டவர்களாவர்.

7. வழிபாட்டு  உரிமை (Right to Worship)
    வரவேற்கும் நாட்டின் மதநம்பிக்கைக்கு அப்பாற்பட்டு தாங்கள் விரும்பும் மதத்தை பின்பற்றவும் வழிபடவும் தூதாண்மை முகவர்களுக்கு முழு உரிமை உண்டு.

8. சுதந்திரமாக பயணிக்கும்  உரிமை (Freedom of free travel)
    தூதாண்மை முகவர்கள், வரவேற்றிருக்கும் நாட்டின் எந்த இடத்திற்கும் தடையின்றி சென்று வருவதற்கான பயண உரிமையைப் பெற்றுள்ளனர். ஆனால் உள்நாட்டுப் பாதுகாப்புக் காரண்ஙகளுக்காக தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் செல்வதற்கு தூதாண்மை முகவருக்கு உரிமை கிடையாது.

9. அலுவலக தகவல் தொடர்பு சுதந்திரம் (Freedom of Official Communication)
    தூதாண்மை முகவர்கள், தங்களது பணிகள், கடமைகள் ஆகியன தொடர்பாக தங்கள் நாட்டு அரசாங்கத்துடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான சுதந்திரம் அவர்களுக்கு உண்டு என்று வியன்னா மாநாடு, ஷரத்து 27 கூறுகின்றது.

10. தூதாண்மை முகவரின் பைகளை சோதனையிடுவதில் இருந்து காப்புவிலக்கு (Immunity from Inspection of Baggages)
    வியன்னா மாநாடு, ஷரத்து 36 இன்படி, தூதாண்மை முகவர்களின் தனிப்பட்ட பைகளை வரவேற்றிருக்கும் நாடு சோதனையிடக் கூடாது. விதிவிலக்கான சூழ்நிலையில், காப்புவிலக்கிற்கு உட்படாத பொருட்கள் ஏதேனும் அவரது பையில் இருப்பதாக வலுவான ஆதாரம் இருந்தால் சோதனையிடலாம். அவ்வாறு சோதனையிடும் போது தூதாண்மை முகவர் அல்லது அவரது பிரதிநிதி ஒருவர் முன்னிலையிலேயே அச்சோதனை நடைபெற வேண்டும்.

11. பாதையுரிமை (Right of passage)
    ஒரு நாட்டிற்கு  அனுப்பப்பட்ட தூதுவப் பிரதிநிதி, தனது பணியை ஏற்பதற்காக அந்நாட்டிற்கு செல்லும் வழியில் அல்லது தன் சொந்த நாட்டிற்குத் திரும்பும் வழியில், மூன்றாவது நாடு ஒன்றைக் கடந்து செல்லும் போது அல்லது மூன்றாவது நாட்டின் அனுமதிச் சீட்டுடன் அந்நாட்டில் தங்கிச் செல்லும் போது, அம்மூன்றாம் நாடு அத்தூதுப் பிரதிநிதிக்குரிய அனைத்து காப்புவிலக்கு உரிமையையும் தர வேண்டும். அதே போன்ற காப்புவிலக்கு அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் உண்டு. தூதாண்மை முகவர்களின் இவ்வுரிமையே பாதையுரிமை அல்லது கடந்த செல்லும் வழியுரிமை எனப்படும்.

Bergman-Vs-De sieys(1946)  -என்ற வழக்கில், பொலிவியாவிற்கான ப்ரெஞ்சு வெளியுறவு அமைச்சர் நியூயார்க்கை கடந்து செல்லும் வழியில், அவர் மீது உரிமையியல்  வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் ஒரு வெளியுறவு அமைச்சர் தான் பதவியல் இருக்கும் இடத்தில் இருந்து தனது சொந்த நாட்டிற்குச் செல்லும் வழியில் மூன்றாம் நாடு ஒன்றில் இறங்கியிருந்தாலும், அவருக்கு அம்மூன்றாம் நாடு காப்புவிலக்கு அளிக்க வேண்டும். எனவே அவர் மீது உரிமையில் வழங்குத் தொடர முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த விதி வியன்னா மாநாடு, ஷரத்து 40 இல் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்விதியின்படி தூதாண்மை முகவருக்கு மட்டுமல்லாது, அவருடன் வரும் அல்லது அவருடன் சேர்ந்து கொள்வதற்காக தனியே வரும் வேறான வரும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புவிலக்கு உண்டு. தூதாண்மை முகவரின் பாதையுரிமையும் நாடுகளின் தீங்கற்ற பாதையுரிமையும்  வேறு வேறான உரிமைகள் என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும். 

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com