தூதாண்மை முகவர்களின் கடமைகள், வணிகத் தூதர்கள், வகைகள் , நியமனமும் பதவி முடிவுக்கு வருதலும்

தூதாண்மை முகவர்களின் கடமைகள், வணிகத் தூதர்கள், வகைகள் , நியமனமும் பதவி முடிவுக்கு வருதலும்

தூதாண்மை முகவர்களின் கடமைகள் (Duties)

1) தூதாண்மை முகவர்கள் தங்களை வரவேற்றிருக்கும் நாட்டின் சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் மதித்து நடக்க வேண்டும்.
2) தங்களை வரவேற்றிருக்கும் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது.
3) தங்களை வரவேற்றிருக்கும் நாட்டுடன் தங்களின் அதிகாரபூர்வமான தொடர்புகளை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
4) தூதரக வளாகங்களை தூதாண்மை நோக்கத்திற்குப் பொருந்தாத காரியங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது.
5) தங்களை வரவேற்றிருக்கும் நாட்டில், தங்களது தூதாண்மைப் பணி அல்லாமல், தனிப்பட்ட தொழில் அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

தூதாண்மை முடிவுக்கு வருதல்(Termination of Diplomatic Mission)

பின்வரும் காரணங்கள் அல்லது சூழ்நிலைகளில் தூதாண்மை முடிவுக்கு வரலாம்.

1. தூதரக உறவை முறித்துக் கொள்ளுதல் (Breaking of Diplomatic Relations)
    போர் அல்லது பகை அல்லது உள்நாட்டுப் போரின் காரணமாக ஒரு நாடு மற்றொரு நாட்டுடனான தூதரக உறவை முறித்துக் கொள்ளும் போது தூதாண்மை நிரந்தரமாக முடிவுக்கு வரும். மற்ற தருணங்களில் ஒரு குறிப்பிட்ட தூதாண்மை முகவரின் தூதாண்மை முடிவுக்கு வந்து மற்றொரு தூதாண்மை முகவர் நியமிக்கப்படுவார். ஆனால் தூதாண்மை உறவு தொடர்ந்து கொண்டிருக்கும்.

2. தூதரைத் திரும்பப் பெறுதல் (Recall of Envoy)
    தூதரை நியமித்த அரசு, அவரை திரும்ப அழைத்துக் கொள்ளும் போது தூதாண்மை முடிவுக்கு வரலாம். அவ்வாறு அழைத்துக் கொள்ளப்பட்டவருக்குப் பதிலாக புதிய தூதர் நியமிக்க்ப்படவில்லையெனில் அத்தூதாண்மை நிரந்தரமாக முடிவுக்கு வந்து விடும்.

3. தூதரின் பணி முடிவுறுதல் (End of Envoy Function)
    தூதரை நியமித்த அரசு, அவருக்கு இடப்பட்ட பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து அவரது தூதாண்மையை ஒரு அறிவிப்பின் மூலம் முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று வியன்னா மாநாடு, ஷரத்து 43 கூறுகின்றது. 

4. வரவேற்கும் நாட்டின் வேண்டுகோள் (Request of Receiving State)
    தூதரை வரவேற்றிருக்கும் நாடு அவரைத்திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு நியமிக்க நாட்டிடம் வேண்டுகோள் விடுக்கலாம். அந்த வேண்டுகோளின் அடிப்படையில் தூதாண்மை முடிவுக்குக் கொண்டுவரப்படலாம்.

5. கடவுச் சீட்டை ஒப்படைத்தல் (Delivery of Passport)
    தூதாண்மை முகவரிடம், அவரை வரவேற்கும் நாடு கடவுச் சீட்டை ஒப்படைத்தால் அதன் பொருள், அவர் அந்நாட்டிற்கு வேண்டப்படாத நபராக ஆகிவிட்டார். அதனால் அவர் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்பதாகும். அத்தகைய சூழ்நிலையில் அத்தூதாண்மை முடிவுக்கு வந்துவிடும்.

6. வேண்டப்படாத நபர் (Persona non-grata)
    ஒரு தூதாண்மை முகவரை வேண்டப்படாத நபராக அறிவிக்கும் உரிமை அவரை வரவேற்றிருக்கும் நாட்டிற்கு உண்டு என்று வியன்னா மாநாடு விதிகள் கூறுகின்றன. அவ்வாறு ஒரு தூதர் வேண்டப்படாத நபராக அறிவிக்கப்படும் போது அத்தூதாண்மை முடிவுக்கு வந்து விடும்.

7. தூதாண்மை நோக்கம் முடிவுறுதல் (End of Object of Mission)
    ஒரு தூதாண்மை முகவர் நியமிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறிவிட்டாலோ அல்லது முடிவுற்றுவிட்டாலோ அத்தூதாண்மை முடிவுக்கு வந்துவிடும்.

8. நம்பிக்கைப் பத்திரத்தின் காலம் முடிவுறுதல் (Expiration of Letter of Credence)
    ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் செயல்படும் வகையில் நம்பிக்கை பத்திரம் அளிக்கப்பட்ட தூதாண்மை முகவரின் தூதாண்மை அக்காலம் முடிந்தவுடன் முடிவுக்கு வந்துவிடும்.

9. இறப்பு (Death) 
    தூதாண்மை முகவர் இறந்து விட்டால் அவரது இறப்புடன் அவரது தூதாண்மை முடிவுக்கு வந்துவிடும்.

வணிகத் தூதர்கள்(Consuls)
    தூதாண்மை முவகவர்கள் நாடுகளுக்கு இடையிலான அரசியல் உறவுகள் பராமரிக்கிறார்கள் என்றால், வணிகத் தூதர்கள் நாடுகளுக்கு இடையிலான வணிக உறவுகளைப் பராமரிக்கின்றனர் எனலாம். எனவே வணிகத் தூதர்களும் ஒரு நாட்டு அரசின் பிரதிநிதிகளே என்றாலும் அவர்கள் தூதாண்மை முகவர்கள் அல்ல. அயல்நாட்டுப் பணியில் இருக்கும் அரசுப் பிரதிநிதிகளில் வணிகத் தூதர்கள், தூதாண்மை முகவர்களைக் காட்டிலும் படிநிலையில் கீழ்நிலையில் உள்ளவர்களே ஆவர். வணிகத் தூதர்களின் நியமனம், பணிகள், கடமைகள் ஆகியன குறித்து 1963 ஆம் ஆண்டு வணிகத் தூதுவ உறவுகள் பற்றிய வியன்னா மாநாடு (Vienna Convention on Consular Relations, 1963) விரிவான வகைமுறைகளைக் கொண்டுள்ளது. உலகமயமாக்கலைத் தொடர்ந்து உலக நாடுகளிடையே வாணிகம் பெருகி வரும் இந்நாட்களில் வணிகத் தூதர்களின் பணி முக்கியமானதாகும்.

நியமனமும் பதவி முடிவுக்கு வருதலும் (Appointment and Termination)
    வணிகத் தூதர்களை நியமனம் செய்யும் வழக்கம். தூதாண்மை முகவர்களை நியமிக்கும் வழக்கம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருவதாகும். ஆரம்ப காலங்களில் ஒரு நாட்டில் தங்கியிருந்து வணிகம் செய்யும் தன் நாட்டு வணிகர் ஒருவரையே வணிகத் தூதராக நியமனம் செய்யும் வழக்கம் இருந்தது. ஆனால் தற்காலத்தில் இதற்கென தனித்தகுதிகள் பெற்ற அதிகாரிகளே நிரந்தரமான வணிகத் தூதர்களாக நியமிக்கப்படுகின்றனர். தூதாண்மை முகவர்களைப் போல ஒரு நாட்டிற்கு ஒரு தூதர் என்ற முறையில் வணிகத் தூதர்கள் நியமனம் செய்யப்படுவதில்லை. ஒரே நாட்டில், வணிக முக்கியத்துவம் வாய்ந்த பல நகரங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட வணிகத் தூதர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
    வணிகத் தூதர்கள் நம்பிக்கைப் பத்திரத்தின் மூலம் நியமிக்கப்படுவதில்லை. வணிகத் தூதர்கள் நியமன ஆணை மூலம் நியமிக்கப்படுவர். எந்த நாட்டிற்கு அவர்கள் அனுப்பப்படுகிறார்களோ அந்த நாட்டின் அரசிற்கு அவரது நியமனம் பற்றிய அறிவிப்பு அனுப்பி வைக்கப்படும். அந்த அறிவிப்பனை ஏற்றுக் கொண்ட நாடு அந்த வணிகத் தூதரை வரவேற்று அவர் நாட்டில் வணிகத் தூதரின் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிடும்.
    ஒரு வணிகத் தூதர், தான் இருக்கும் நாட்டின் சட்டங்களை மீறுகிறார் எனில் அல்லது வேறு ஏதேனும் ஒழுங்கீனமான நடவடிக்கைகளில்  ஈடுபடுகிறார் எனில் அந்த நாட்டு அரசு அவருக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யலாம். அவ்வாறு அனுமதி ரத்து செய்யப்படும் போது வணிகத் தூதரின் பதவி முடிவுக்கு வந்துவிடும். அதுபோல வணிகத் தூதரை நியமித்த நாட்டு அரசு அவரை பதவி நீக்கம் செய்யும் போது அல்லது வேறு பணிக்கு மாற்றம் செய்து உத்தரவிடும் போது ஒரு வணிகத் தூதரின் பதவி முடிவுக்கு  வரலாம்.

வணிகத் தூதர் வகைகள் (Classification of Consuls)
    1963 ஆம் ஆண்டு வணிகத் தூதுவ உறவுகள் பற்றிய வியன்னா மாநாட்டின் 9 வது ஷரத்து வணிகத் தூதர்களை அவர்களின் படிநிலைப் படி பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளது. 
(a)    தலைமை வணிகத் தூதர் (Consul General)
(b)    வணிகத் தூதர்கள் (Consuls)
(c)    துணை வணிகத் தூதர்கள் (Vice-Consuls)
(d)    வணிகத் தூதுவ முகவர்கள் (Consular Agents)

இவர்களில் தலைமை வணிகத் தூதரே ஒரு நாட்டில் நியமிக்கப்படும் அனைத்து வணிகத் தூதர்களுக்கும் தலைமையிடமாகச் செயல்படுவார். அடுத்தடுத்த நிலையில் இருக்கும் மற்றவர்கள் அவருக்கும் கீழ் பணியாற்றுவார்கள். 

வணிகத் தூதர்களின் பணிகள் (Functions of Consuls)
    1963 ஆம் ஆண்டு வியன்னா மாநாடு வணிகத் தூதர்களின் முக்கியப் பணிகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றது.

1)    வணிகத் தூதர்கள் தாம் இருக்கும் நாட்டில் தங்கள் நாட்டு வணிக நலன்களைப் பாதுகாப்பது.

2)    தங்களது நாட்டில் இருந்து வருகின்ற அல்லது தங்களது நாட்டிற்கு செல்கின்ற சரக்குப் போக்குவரத்தை மேற்பார்வையிடுதல்.

3)    தாம் இருக்கும் நாட்டில் உள்ள தங்கள் நாட்டுக் குடிமக்களுக்கு கடவுச் சீட்டு, குடியேற்றப் பிரச்னை போன்றவற்றில் தேவையான உதவிகளைச் செய்தல்.

4)    தாம் இருக்கும் நாட்டில் உள்ள தங்கள் நாட்டுக் குடிமக்களின் திருமணம், பிறப்பு, இறப்பு ஆகியவற்றைப் பதிவு செய்தலும் அவர்கள் எழுதிக் கொடுக்கும் ஆவணங்களில் அவர்களது கையொப்பத்தை உறுதி செய்தலும்.

5)    தாம் இருக்கும் நாட்டில் தன் நாட்டைப் பிரதிநித்துவப்படுத்துவதற்கு தூதாண்மை முகவர் எவரும் நியமிக்கப்படவில்லையெனில், அந்நாட்டில் தூதாண்மை முகவரின் பணிகளையும் வணிகத் தூதர் மேற்கொள்வார். 


வணிகத் தூதர்களின் உரிமைகளும் தனியுரிமைகளும் (Rights and Privileges of Consuls)
    வணிகத் தூதர்கள், தூதாண்மை முகவர்கள் அல்ல என்பதால் அவர்களுக்கு தூதாண்மை முகவர்களுக்கு உள்ள தனியுரிமைகளும் காப்பு விலக்குகளும் கிடையாது என்பது பொதுவான சட்ட நிலையாகும். ஆனால், தங்களுக்கிடையே வணிகத் தூதர்களை பரிமாறிக் கொள்ளும் நாடுகள், இரு தரப்பு உடன்படிக்கைகள் மூலம் பரஸ்பரம் இரு நாடுகளின் வணிகத் தூதர்களுக்கும் தனியுரிமைகளும் காப்புவிலக்குகளும் அளிப்பதாக ஒப்புக்கொள்ளும் நடைமுறை சர்வதேச அளவில் பின்பற்றப்பட்டு வருகிறது. இன்னும் சில நாடுகள் தங்கள் நாட்டுத் தூதாண்மை முகவர்களையும் வணிகத் தூதர்களையும் ஒரே துறையின் கீழ் இணைப்பதன் மூலம் தூதாண்மை முகவர்களுக்குரிய தனியுரிமைகளும், காப்புவிலக்குகளும், வணிகத் தூதர்களுக்கும் கிடைக்க வழி செய்துள்ளன. எனவே இன்றைய நிலையில் இருதரப்பு உடன்படிக்கைகள் மூலமாகவும் தூதாண்மை முகவர் அமைப்பும் வணிகத் தூதர் அமைப்பு இணைக்கப்படுவதன் மூலமும் தூதாண்மை முகவர்களுக்குரிய தனியுரிமைகள், காப்புவிலக்குகள் ஆகியவற்றில் பெரும்பாலானவை வணிகத் தூதர்களுக்கும் இருக்கின்றன எனலாம்.

    இவை தவிர, 1963 ஆம் ஆண்டு வியன்னா மாநாடு வணிகத் தூதர்களின் உரிமைகள், தனியுரிமைகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றது.

1) வணிகத் தூதரின் அலுவலக வளாகம் உள்நாட்டு அதிகாரவரம்பிலிருந்து பாதுகாப்புப் பெற்றுள்ளது. (ஷரத்து 31).

2) வணிகத் தூதரின் ஆவணங்கள் மற்றும் ஆவணக் காப்பகம் எல்லா நேரங்களிலும் பாதுகாப்புப் பெற்றதாகும் (ஷரத்து 34).

3) வரவேற்றிருக்கும் நாடு தன் நாட்டின் பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து வணிகத் தூதர்களுக்கு தடையின்றி எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கான சுதந்திரம் வழங்க வேண்டும் (ஷரத்து 34).

4) வணிகத் தூதர்கள் தடையின்றி தகவல் தொடர்பைப் பராமரிப்பது உறுதி செய்யப்பட்ட வேண்டும் (ஷரத்து 35).

5) வணிகத் தூதரின் தனிநபர் பாதுகாப்பு, கண்ணியத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியது அவரை வரவேற்றிருக்கும் நாட்டின் கடமையாகும் (ஷரத்து 35).

6) கடுமையான குற்றச்சாட்டு தவிர மற்ற வழக்குகளில் வணிகத் தூதரை கைது செய்யவோ காவலில் வைக்கவோ கூடாது (ஷரத்து 41).

7) வணிகத் தூதருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடரப்பட்டால், அவர் அதில் முன்னிலையாக வேண்டும். ஆனால், அந்த வழக்கு நடவடிக்கையில் அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்ட வேண்டும். அவரது அலுவலகப் பணியை அவ்வழக்கு நடவடிக்கை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது (ஷரத்து

8) தூதாண்மை முகவர்கள் குற்ற வழக்கில் முன்னிலையாக வேண்டிய கட்டாயமில்லை என்பது இங்கு ஒப்பிடத்தக்கதாகும்.

    Devyani Khobragade (2013)- என்ற வழக்கில் தேவ்யானி கோப்ரகாடே என்பவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்தியாவின் துணைத் தலைமை வணிகத் தூதராக நியமிக்கப்பட்டிருநதார். அவர் தனது வீட்டில் பணிப் பெண்ணாகப் பணியாற்ற இந்தியாவில் இருந்து சங்கீதா ரிச்சர்ட் என்பவரை அழைத்துச் சென்றார். அவருக்கு அமெரிக்க விசா பெறும்போது சங்கீதாவிற்கு அமெரிக்காவின் குறைந்தபட்ச ஊதியச் சட்டப்படி ஊதியமும், ஓய்வு நேரமும் வழங்கப்படும் என்று எழுதப்பட்ட பணி ஒப்பந்தத்தை சமர்ப்பித்தார். ஆனால், விசா பெற்ற பிறகு அதைவிட குறைவான ஊதியத்திற்கு தனியாக சங்கீதாவுடன் வேறொரு ஒப்பந்தம் செய்து கொண்டார். சங்கீதாவை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்ற பின்னர் தேவ்யானி, விசா விண்ணப்பத்தில் சமர்ப்பித்த பணி ஒப்பந்தப்படி சம்பளம் வழங்காமல் இரண்டாவது ஒப்பந்தப்படி சம்பளம் வழங்கினார். அது அமெரிக்காவின் குறைந்தபட்ச ஊதியத்தில் பாதிக்கும் குறைவானது ஆகும்.

    இதுகுறித்து அமெரிக்காவின் குடியேற்றத் துறையில் சங்கீதா அளித்த புகாரின் அடிப்படையில், விசா விண்ணப்பத்தில் பொய்யாவணம் சமர்ப்பித்தது, அமெரிக்காவின் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை மீறி பணிப் பெண்ணுக்கு குறைவான ஊதியம் கொடுத்தது ஆகிய குற்றங்களுக்காக 2013 டிசம்பர் 11 அன்று நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் குற்ற வழக்குத் தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 12 அன்று தேவ்யானி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டார். இங்கு அவர் தனது கடவுச் சீட்டை ஒப்படைத்ததன் பேரில் அன்றைய தினமே பிணையில் விடப்பட்டார். வெளியில் வந்த தேவ்யானி, வணிக தூதருக்குள்ள காப்புவிலக்கை மீறி தான் கைது செய்யப்பட்டதாக இந்திய அரசிடம் முறையிட்டார். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமெரிக்க அரசிடம் விளக்கம் கேட்டது. அதற்கு அமெரிக்க அரசு, தேவ்யானி வணிகத் தூதரே என்பதால் அவர் குற்றவியல் நீதிமன்ற அதிகாரவரம்பிற்கு உட்பட்டவராவார் என்றும் அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது என்றும் விளக்கமளித்தது. அதனைத் தொடர்ந்து அவர் மீதான குற்றச்சாட்டை பதிவு செய்யும் முயற்சியல் அமெரிக்க அரசு வழக்கறிஞர் இறங்கினார். குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விட்டால் தேவ்யானி கைது செய்யப்படும் அபாயம் ஏற்பட்டது. எனவே இந்திய வெறியுறவு அமைச்சகம் முழுமையான காப்புவிலக்கு பெறும் வகையில் தேவ்யானியை நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபைக்கான இந்தியப் பிரதிநிதியாக 2014 ஜனவரி 8 அன்று நியமித்தது. மறுநாள் ஜனவரி 9 அன்று அமெரிக்க ஜீரி நீதிமன்றம் தேவ்யானி மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்தது. அதே நாளில் ஐ.நா. பிரதிநிதி எனும் முழுக் காப்புவிலக்குடன் தேவ்யானி இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டார்.

தேவ்யானி இந்தியாவில் இருப்பதால் அவரை அமெரிக்காவால் கைது செய்ய முடியவில்லை. ஆனால் முழு காப்புவிலக்கு இன்றி தேவ்யானி எப்போது அமெரிக்கா சென்றாலும் கைது செய்யப்படும் அபாயம் தொடர்ந்து கொண்டே உள்ளது.

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com