நாட்டின் ஆள்நில எல்லை - (பாகம் 2)

நாட்டின் ஆள்நில எல்லை - (பாகம் 2)

நாட்டின் ஆள்நில எல்லை-2

நாடுகள் தங்கள் ஆள்நில எல்லைகளை அடைவதை போலவே இழக்கவும் செய்கின்றன. 
அவை வருமாறு:- 

1.    கைவிடுதல்
2.    இயற்கை நிகழ்வுகள் 
3.    அடிமைப்படுத்தல் 
4.    நீடானுபோகம் 
5.    விட்டு கொடுத்தல் 
6.    கிளர்ச்சி அல்லது புரட்சி 
7.    நாட்டின் விடுதலை
 

1. கைவிடுதல் (Abandonment)
    ஆக்கிரமிப்பின் மூலம் ஆள்நில எல்லையை அடைவதைப் போலவே ஆக்கிரமித்த  நிலப்பகுதியை கைவிடுதல் மூலம் ஒர நாடு தன் அள்நில எல்லைகளை இழக்க நேரிடும். தன் ஆள்நிலப்பரப்பாக இருந்த பகுதியை நெடுங்காலத்துக்கு ஒரு நாடு கைவிடும் போது அந்நாடு அப்பகுதியின் மீதான இறையாண்மை உரிமையை இழந்து விடும். கைவிடுதல் மூலம் ஆள்நில எல்லையை இழப்பது எப்போதாவது நிகழக்கூடிய அரிய நிகழ்வேயாகும்.

2.  இயற்கை நிகழ்வுகள் (Natural Events)
    இயற்கை நிகழ்வுகளால் அடையும் நிலப்பெருக்கத்தின் மூலம் ஆள்நில எல்லைகளை அடைவதைப் போலவே இயற்கை நிகழ்வுகளால் அழியும் நிலப்பகுதி இழப்புகளின் காரணமாக ஒரு நாடு தன் ஆள்நில எல்லைகளை இழக்கவும் கூடும். உதாரணத்திற்கு கடல்நீர் உட்புகுத்தல், ஆற்றின் போக்கு மாறுதல் போன்ற இயற்கை நிகழ்வுகளால் ஆள்நில எல்லை இழத்தல் ஏற்படலாம்.

3. அடிமைப் படுத்தல் (Subjugation)
    ஒரு நாடு மற்றொரு நாட்டின் பகுதியை இணைத்துக் கொள்வதன் மூலம் ஆள்நில எல்லையை அடைவது போலவே, அவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்ட நாடு அடிமைப்பட்டு தன் ஆள்நில எல்லையை இழக்கிறது. அடிமைப்படுத்தல் என்பது ஆக்கிரமிப்பில் இருந்து வேறுபட்டதாகும். ஏனெனில், அடிமைப்படுத்தல் என்பது ஏற்கனவே ஒரு இறையாண்மை நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதியை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருதல் ஆகும். ஆனால் ஆக்கிரமிப்பு என்பது அதற்கு முன்பு  எவரது கட்டுப்பாட்டின் கீழும் இல்லாத ஒரு நிலப்பகுதியை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது ஆகும். உதாரணமாக இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை இந்திய உள்ளிட்ட பல நாடுகள் இங்கிலாந்து போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்கு காலனியாக அடிமைப்படுத்தப்பட்டிருந்ததைக் குறிப்பிடலாம்.
    ஆனால் இவ்வாறு ஒரு நாட்டை அடிமைப்படுத்தி இணைத்துக் கொள்வது ஐ.நா.சாசனத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளதால் இன்றைய நிலையில் அடிமைப்படுத்துதல் மூலம் நாட்டின் ஆள்நில எல்லை இழப்பு நடைபெற வாய்ப்பில்லை.

4. நீடானுபோகம் (Prescription)
    ஒரு நாடு மற்றொரு நாட்டின் நிலப்பகுதியை நீண்டகாலம் தன் அனுபவத்தில் வைத்து நிர்வகித்து வரும் போது அந்நாடு நீடானுபோகத்தின் மூலம் ஆள்நில எல்லையை அடைகிறது என்பதை முன்னர் கண்டோம். அவ்வாறு ஒரு நாடு நீடானுபோகத்தின் மூலம் ஆள்நில எல்லையை அடையும்போது அந்நிலப்பகுதியை ஏற்கனவே வைத்திருந்த நாடு அம்மற்ற நாட்டின் நீடானுபோகத்தின் காரணமாக தன் ஆள்நிலப்பரப்பை இழக்கிறது.

5. விட்டுக்கொடுத்தல் (Cessation)
    ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு தன் நிலப்பகுதியை விட்டுக் கொடுக்கும் போது விட்டு கொடுக்கும் நாடு தன் ஆள்நில எல்லையை இழக்கிறது. இது விட்டு கொடுத்தல் மூலம் ஆள்நில எல்லையை ஒரு நாடு அடையும் வழிமுறையின் எதிர்விளைவாக எழக்கூடியதாகும். 1974-இல் இந்தியா கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததைக் குறிப்பிடலாம்.

6. கிளர்ச்சி அல்லது புரட்சி (Revolt or Revolution)
    மேலே கண்டவற்றுடன் கிளர்ச்சி அல்லது புரட்சியின் மூலம் ஆள்நில எல்லை இழக்கப்படுவதையும் சேர்க்க வேண்டும் என்று ஒப்பன்ஹீய்ம் கருதுகிறார். ஒரு நாட்டு அரசுக்கு எதிராக அந்நாட்டின் மக்கள் நடத்திய கிளர்ச்சி அல்லது புரட்சியின் மூலம் அந்நாட்டில் புதிய அரசு உருவாக்கப்படும் போது அதன் முந்தய அரசு தன் ஆள்நிலப்பரப்பை இழந்து விடுகிறது. இதில் கிளர்ச்சி என்பது அந்நாட்டின் அடிப்படை அரசியல் அமைப்பை மாற்றாமல் அரசை மட்டும் மாற்றும் மக்களின் எழுச்சியாகும். புரட்சி என்பது அரசுடன் சேர்த்து அடிப்படை அரசியலமைப்பையும் மாற்றும் மக்களின் எழுச்சியாகும். சமீப காலங்களில் லத்தீன் அமெரிக்க நாடுகளில்  மக்களின் எழுச்சிகள் மூலம் அடிக்கடி அரசுகள் மாற்றப்படுவதை, கிளர்ச்சி மூலமான ஆள்நில எல்லை இழப்பிற்கு உதாரணமாகக் கூறலாம். 1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவிலும் 1948 இல் சீனாவிலும் நிகழ்ந்த மக்களின் ஆயுத எழுச்சியின் மூலம் பழைய அரசுகள் மாற்றப்பட்டு சோசலிச அரசுகள் உருவாக்கப்பட்டதை புரட்சியின் மூலமான ஆள்நில எல்லை இழப்பிற்கு உதாரணமாகக் கூறலாம்.

7. நாட்டின்  விடுதலை (Independence)
    ஒரு நாட்டிற்கு கட்டுப்பட்ட அடிமை நிலையில் இருக்கும் மற்றொரு நாட்டின் மக்கள் கிளர்ந்தெழுந்து, தங்களது சுதந்திரப் போராட்டத்தின் மூலம் விடுதலை அடைந்து சுதந்திர நாடாக அறிவித்துக் கொள்ளும் போது,  அந்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடு தன் ஆள்நில எல்லையை இழந்து விடுகிறது. இந்திய மக்கள் தம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த இங்கிலாந்து நாட்டிற்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தின் மூலம் 1947ஆகஸ்ட் 15 இல் சுதந்திரம் அடையும் போது இங்கிலாந்து, இந்தியா எனும் மிகப் பெரும் ஆள்நில எல்லையை இழந்ததை உதாரணமாகக் கூறலாம். நாட்டின் விடுதலை என்பது கிளர்ச்சி அல்லது புரட்சியிலிருந்து வேறுபட்டதாகும். ஏனெனில், கிளர்ச்சி அல்லது புரட்சி என்பது ஒரு நாட்டின் சொந்த மக்கள் அந்நாட்டு அரசுக்கு  எதிராக கிளர்ந்து எழுவதாகும். நாட்டின் விடுதலை என்பது தம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் மற்றொரு நாட்டு அரசுக்கு எதிராக சுதந்திர முழக்கத்துடன் கிளர்ந்து எழுவதாகும்.

சர்வதேச நதிகளின் நீர்வழிப்பாதை உரிமை(Freedom of Navigation on International Rivers)
    பல நாடுகளுக்கு இடையில் பாயும் நதிகளை, தேசிய நதிகள் (National River) என்று கூற முடியாது. அவை ஒரு நாட்டிற்கு மட்டும் சொந்தமான நதிகள் அல்ல. அந்நதிகள் பாயும் ஒவ்வொரு நாட்டிற்கும் அதில் உரிமை உண்டு. அவற்றில், பல நாடுகளைக் கடந்து கடலில் கலப்பதாகவும் கடலில் இருந்து அந்நதிகளின் வழியே படகு அல்லது கப்பல் போக்குவரத்துக்குரியதாகவும் இருக்கும் நதிகள் சர்வதேச நதிகள் எனப்படும் என்கிறார் ஒப்பன்ஹீய்ம்.

    க்ரோஷியஸ் தொடங்கி சட்டவியலாளர் பலரும் சர்வதேச நதிகளின் வழிநெடுகிலும் இருக்கும்  அனைத்து நாடுகளுக்கும் அந்நதிகளில் பயணிக்கும் பாதையுரிமை (Rights of Passage) உண்டு என்று கருதுகின்றனர். ஒப்பன்ஹீய்ம் ‘அமைதிக் காலங்களில் அனைத்து நாட்டு வணிகர்களும் ஐரோப்பா மற்றும் அதற்கு வெளியிலுள்ள பிற நாடுகளின் வழியே செல்லும் சர்வதேச நதிகளில் பயணம் செய்யும் உரிமை சர்வதேச வழக்காற்றுச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என்கிறார். ஆனால் ஸ்டார்க், அவ்வாறு அங்கீகரிக்கப்படவில்லை என்று மறுக்கிறார்.

    சர்வதேச நதிகளின் நீர்வழிப் பாதை உரிமை தொடர்பாக மூன்று விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. அவை:-

(i)    சில சட்டவியலாளர்கள், சர்வதேச நதிகளின் நீர்வழிப் பாதைக்கனா உரிமை அமைதிக்காலங்களில் மட்டுமே உண்டு. போர்க்காலங்களில் அவ்வுரிமையை செயல்படுத்த முடியாது என்று கருதுகின்றனர்.
(ii)    சர்வதேச நதிகளில் எல்லா நாடுகளுக்கும் நீர்வழிப்பாதை உரிமை கிடையாது. அந்நதி எந்தெந்த நாடுகளைக் கடந்து செல்கிறதோ அந்த நாடுகளுக்கு மட்டுமே அவ்வுரிமை உண்டு என்கின்றனர் ஸ்டார்க் போன்ற சட்டவியலாளர்கள்.

(iii)    மூன்றாவது வகையினர், சர்வதேச நதிகளின் நீர்வழிப்பாதை உரிமை, அமைதிக்காலத்திற்கு மட்டுமே ஆனதுமல்ல. நதிக்கரையோர நாடுகளுக்கு மட்டுமே உள்ள உரிமையுமல்ல. அது அனைத்து காலங்களிலும் அனைத்து நாடுகளுக்கும் உள்ள உரிமையாகும். ஆனால் அவ்வுரிமை, கரையோர நாடுகள் ஒவ்வொன்றும் தங்கள் ஆள்நில எல்லையோரங்களில் செல்லும் நதிநீர் வழியைப் பயன்படுத்துவதற்காக ஏற்படுத்தும் ஒழுங்குமுறை (Regulatory) விதிகளுக்குட்பட்டு செயல்படுத்தப்படும் உரிமையாகும்.

தற்போது சர்வதேச நதிகளின் நீர்வழிப்பாதை உரிமையானது. அது குறித்து ஏற்படுத்தப்படும் சிறப்பு உடன்படிக்கையின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் பாயும் சர்வதேச நதிகளின் நீர்வழிப்பாதை உரிமைகளை ஒழுங்குப்படுத்தும் நடைமுறைகள் 1814 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து துவங்கியது எனலாம். அது இறுதியில் 1921 ஆம் ஆண்டு பார்சிலோனா மாநாட்டு விதிகள் ஏற்கப்பட்டதுடன் இறுதி வடிவத்திற்கு வந்துள்ளது.

சர்வதேச நீர்வழிப் போக்குவரத்து பற்றிய பார்சிலோனா மாநாடு (1921)
 (Barcelona Convention on International Navigable Water Ways) (1921)

    சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்திற்குரிய நீர்வழிகள் பற்றிய பார்சிலோனா மாநாடு, போதுமான உறுப்பு நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தற்போது செயலில் இருந்து வருவதாகும். இதன்படி,

(i)    மாநாட்டுத் தீர்மானத்தில் ஒப்பமிட்ட ஒரு நாடு, தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் ஓடும் போக்குவரத்திற்குரிய நதிகளில், அதில் ஒப்பமிட்டுள்ள மற்ற நாடுகளின் கொடி பறக்கும் கப்பல்கள் சுதந்திமாகப் பயணிப்பதற்க அனுமதிக்க வேண்டும்.

(ii)    கரையோர நாடுகளுக்கு அந்த நதிகளை உள்நாட்டுப்  போக்குவரத்திற்கு பயன்படுத்துதல், மீன்பிடித்தல் போன்ற தனிப்பயனுரிமை (Right to Cabotage) உண்டு. மேலும் கரையோர நாடுகள் சர்வதேச நதியினுள் போர்க் கப்பல்கள் நுழையாமல் தடுக்கலாம்.

(iii)    சர்வதேச நதியின் நீர்வழிப் போக்குவரத்தில் ஒப்பமிட்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் முழுமையான சமத்துவம் உண்டு.

(iv)    கரையோர நாடுகள் அனைத்தும் சர்வதேச நதியின் நீர்வழிப்போக்குவரத்து வசதியைக் குறைக்கும் வகையிலான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கக்கூடாது.

சர்வதேசக் கால்வாய்கள் மீதான உரிமை (Right over International Canals)
    சர்வதேச நீர்வழிப் பாதைகளை இணைக்கும் சர்வதேசக் கால்வாய்கள் மீது அனைத்து நாடுகளுக்கும் போக்குவரத்து உரிமை இருப்பதாக சர்வதேசச் சட்டம் கூறுகிறது. பொதுவாக, சர்வதேசக் கால்வாய்களின் பயன்பாடும் கட்டுப்பாடும் சர்வதேசக் கால்வாய்களில் மிகமுக்கியத்துவம் வாய்ந்தவை மூன்று ஆகும். அவை,

(i)    சூயஸ் கால்வாய் 
(ii)    பனாமா கால்வாய் 
(iii)    கீல் கால்வாய் 

i)    சூயஸ் கால்வாய் (Suez canal)
    சூயஸ் காலவாய் செங்கடலையும் (Red Sea) மத்திய தரைக் கடலையும் (Mediterrean Sea) இணைக்கும் சர்வதேசக் கால்வாய் ஆகும்.  இக்கால்வாய் எகிப்தின் ஆள்நில எல்லையோரத்தில் அமைந்துள்ளது.  ஆரம்பத்தில் இக்கால்வாய் ப்ரெஞ்சு கம்பெனி ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வசம் வந்தது.  1954 இல் பிரிட்டனும் எகிப்தும் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி பிரிட்டன் கால்வாய் பகுதியில் இருந்து தனது உடன்படிக்கையின்படி பிரிட்டன் கால்வாய் பகுதியில் இருந்த தனது படையை விலக்கிக் கொண்டது.  அதன் பின்னர் 1956-இல் சூயஸ் கால்வாயை எகிப்து தேசவுடைமையாக்கியது.  பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் எகிப்தின் நடவடிக்கை அக்கால்வாயின் மீது மற்ற நாடுகளுக்கு இருக்கும் உரிமையை பாதிக்கும் என்று கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.  பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகள் கூட்டாக இராணுவ நடவடிக்கையும் எத்தன.  முடிவில் இரஷ்யா, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொது சபையின் தீவிரமான தலையீட்டைத் தொடர்ந்து உடன்பாடு எட்டப்பட்டது.  அதன்படி,

1.    சூயஸ் கால்வாய் சர்வதேச அரசியலுக்கு அப்பாற்பட்டது. அனைத்து நாடுகளுக்கும் இக்கால்வாயை பயன்படுத்துவதற்கு உரிமை உண்டு.
2.    எந்தவொரு நாடும் சூயஸ் கால்வாயின் சர்வதேசப் போக்குவரத்தை தடை செய்யக் கூடாது.
3.    ஆனால் இக்கால்வாயை பயன்படுத்தும் கப்பல்களிடமிருந்து நுழைவு வரி வசூலிக்கும் உரிமை எகிப்திற்கு உரியதாகும்.  நுழைவு வரி அளவு உடன்படிக்கைகள் மூலம் இறுதி செய்யப் பட வேண்டும்.

ii) பனாமா கால்வாய் (Panama Canal)
    1801 ஆம் ஆண்டு, பிரிட்டனும் அமெரிக்காவும் கூட்டாகச் சேர்ந்து, வட அமெரிக்க கண்டத்திற்கும் தென்னமெரிக்கக் கண்டத்திற்கு இடையில் அட்லாண்டிக் கடலையும், பிசிபிக் கடலையும் பிரிக்கும் முக்கிய நிலப்பகுதியை ஊடறுத்து இரு கடலையும் இணைக்கும் வகையில் ஒரு கால்வாய் வெட்டுவது என்று ஒப்பந்தம் செய்து கொண்டன.  இந்த ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்ட கால்வாய் பனாமா கால்வாய் ஆகும்.  ஒப்பந்தப்படி அதன் இராணுவப் பாதுகாப்புக்கான பொறுப்பு அமெரிக்காவிடம் இருந்தது.  ஆனால் கால்வாய் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான போக்குவரத்துப் பாதையாக இருந்தது.  சூயஸ் கால்வாயைப் போலவே போர்க காலத்திலும் அமைதிக் காலத்திலும் பனாமா கால்வாயின் நடுநிலைத் தன்மை பராமரிக்கப் படவேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டது.

    அதன் பின்னர் 1903 இல் பனாமாக் குடியரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது.  இவ்வுடன்படிக்கையின்படி பனாமா கால்வாய், பனாமா நாட்டுக்குச் சொந்தமாக ஆனது.  கால்வாய் பாதுகாப்பிற்காகவும் பாரமரிப்பிற்காகவும் என ஒரு பகுதி அமெரிக்காவிற்கு கொடுக்கப்பட்டது.  பின்னர் இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தொடர்ந்து 1977 இல் இரு உடன்படிக்கைகள் எட்டப்பட்டன. அதன் படி அமெரிக்கா 1999 டிசம்பரில் தனது இராணுவத்தை பனாமா நாட்டுக்குச் சொந்தமான பனாமா கால்வாய், சூயஸ் கால்வாயைப் போன்று அனைத்து நாடுகளுக்கும் உரிமையுள்ள சர்வதேசப் போக்குவரத்துப் பாதையாக உள்ளது.

iii) கீல் கால்வாய் (Keil canal)
    பால்டிக் கடலையும் வட கடலையும் (Baltic Sea and North Sea) இணைக்கும் வகையில் யுத்த தந்திர நோக்கத்திற்காக ஜெர்மனியால் உருவாக்கப்பட்டது கீல் கால்வாய் ஆகும்.  சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து கால்வாய்களுள் இதுவும் முக்கியமான ஒன்றாகும்.  1919 ஆம் ஆண்டு வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின்படி. கீல் கால்வாயும் அதன் முகத்துவாரங்களும் ஜெர்மனியின் நட்பு நாடுகள் அனைத்தின் வர்த்தகக் கப்பல்களும் போர்க் கப்பல்களும் சென்று வரும் வகையில் திறக்கப்பட்டிருக்க வேண்டும்.  1921 இல பிரிட்டனின் போர்க் கப்பலான S.S. விம்பிள்டன், சோவியத் யூனியனுடன் போரில் ஈடுபட்டிருந்த போலந்திற்கு உதவுவதற்காக ஆயுத தளவாடங்களுடன் இக்கால்வாயை கடக்க முயற்சித்தது.  ஆனால் ஜெர்மன், சோவியத் யூனியன்-போலந்து போரில் தான் நடுநிலை வகிப்பதாகவும், அப்போரில் உள்ள ஒரு நாடாகிய போலந்திற்கு உதவியாக போர்க் கப்பலை அனுமதிப்பது தனது நடுநிலைத் தன்மையை பாதிக்கும் என்று கூறி ளு.ளு விம்பிள்டன் கப்பலை தடுத்து நிறுத்தியது. பிரிட்டன் சர்வதேச நிரந்திர நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.  சர்வதேச நீதிமன்றம் கால்வாய் வழியாக போர்க் கப்பல் செல்ல அனுமதிப்பது ஜெர்மனியின் நடுநிலைத் தன்மையை பாதிக்காது என்றும் S.S. விம்பிள்டன் கப்பலுக்காக கீல் கால்வாய் திறந்துவிடப்பட வேண்டும் என்றும் முடிவு செய்தது.
    இரண்டாம் உலகப் போருக்குப் பினனர் கீல் கால்வாய் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான சர்வதேசச் கடல் வழிப் பாதையாக ஆக்கப்பட்டுவிட்டது.

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com