நாட்டின் அதிகாரவரம்பு

நாட்டின் அதிகாரவரம்பு

நாட்டின் அதிகாரவரம்பு
 (State Jurisdiction)

    ஒரு நாட்டின் அதிகாரவரம்பு என்பது, குற்றவியல் சட்டகளையம் ஒழுங்கு முறை சட்டங்களையும் இயற்றவும் அதனை அமல்படுத்தவும் ஒரு நாட்டிற்கு இருக்கும் அதிகாரமாகும். D.J. ஷாரிஸ் (D.J.Harris) “ உள்நாட்டுச் சட்டத்தின் மூலம் நபர்களையும் சொத்துக்களையும் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு நாட்டிற்கு சர்வதேசச் சட்டத்தின் கீழ் இருக்கும் அதிகாரமே நாட்டின் அதிகார வரம்பு ஆகும். அந்த அதிகாரவரம்பு விதிகளை ஆக்கும் அதிகாரத்தையும், அவற்றை அமல்படுத்தும் அதிகாரத்தையும் குறிப்பதாகும். அமலாக்கும் அதிகாரம் என்பதன் மூலம் நிர்வாக அமலாக்கத்தையும், நீதித் துறை அமலாக்கத்தையும் சேர்த்தே குறிக்கப்படுகிறது.  ஒரு நாட்டின் அதிகாரவரம்பு மற்ற நாடுகளுடன் சேர்ந்து இணை அதிகாரவரம்பாகவும் இருக்கலாம். தனித்த அதிகாரவரம்பாகவும் இருக்கலாம். அது உரிமையியல் அதிகாரவரம்பாகவும் இருக்கலாம். குற்றவியல் அதிகாரவரம்பாகவும் இருக்கலாம். நாட்டின் அதிகாரவரம்பு பற்றி சர்வதேசச் சட்டத்தில் உள்ள விதிகள், ஒரு நாட்டின் சட்ட வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் இருக்கும் நபர்களையும் சொத்துக்களையும் அடையாளம் காட்டுகின்றன. அத்துடன் அச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளையும் அவை கூறுகின்றன. அவ்விதிகள், ஒரு நாட்டின் உள்நாட்டுச் சட்டத்தின் உள்ளடக்கம் என்ன என்பது பற்றி கவனிப்பதில்லை.  மாறாக அந்த உள்நாட்டுச் சட்டத்திற்குள் ஒரு நபரை உட்படுத்துவது மற்றும் அதனை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளை வகுப்பது என்பது வரை மட்டுமே அவை உள்நாட்டுச் சட்டத்தைக் கணக்கில் கொள்கின்றன.” என்கிறார்.

    ஒரு நாட்டின் அதிகாரவரம்பிற்கும் இறையாண்மைக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்த போதிலும், ஒரு நாட்டின் அதிகாரவரம்பு என்பது, அந்நாட்டின் இறையாண்மை செல்லும் எல்லை வரை மட்டுமே செல்லும் என்று கூற முடியாது என்கிறார் ஒப்பன்ஹீய்ம். எனவே ஒரு நாட்டின் இறையாண்மை செல்லாத இடத்திலும் கூட அந்நாட்டின் அதிகாரவரம்பு செயல்படுத்தக் கூடியதாக இருக்கும்.

நாட்டின் அதிகாரவரம்பின் அடிப்படையும் வரம்புகளும் 
(Basis and Limits of State Jurisdiction)


    “பொதுவாக ஒவ்வொரு நாடும் தன் சொந்த ஆள்நில எல்லைக்குள் தனித்த அதிகாரவரம்பைக் பெற்றதாக இருக்கும். ஆனால் அந்த அதிகாரவரம்பு முழுமையானது அல்ல. ஏனெனில் இந்த அதிகாரவரம்பானது சர்வதேசச் சட்டத்தால் விதிக்கப்படும் சில வரம்புகளுக்கு உட்பட்டதே ஆகும்”  என்கிறார் J.L. பிரெய் அதவாவது ஒரு நாட்டின் ஆள்நில எல்லைக்குள் இருக்கும் ஒரு நபர் மீது கூட அந்நாடு தன் அதிகாரவரம்பை செலுத்த முடியாதவாறு சர்வதேசச் சட்டம் வரம்பிடலாம்.


    இதனை J.E.S. ஃபாசெட் (J.E.S.Fawcett) ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறார். ஒரு இங்கிலாந்துக்காரரும் ஜெர்மன்காரரும் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் வைத்து ஒரு பிரெஞ்சுக்காரை கொலை செய்து விட்டு, இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்று விடுகின்றனர்.  அவர்கள் ப்ரான்ஸ் நாட்டிற்குள் இருக்கும் வரை அவர்களை கைது செய்து விசாரித்து தண்டனை வழங்குவதற்கு ப்ரான்ஸ் நாட்டிற்கு அதிகாரவரம்பு உண்டு.  அவர்கள் இருவரும் அயல் நாட்டவர்கள் என்பது ப்ரான்ஸ் நாட்டின் அதிகாரவரம்பை எவ்விதத்திலும் பாதிக்காது. ஏனெனில் ஆள்நில எல்லைக்குள் இருப்பது ஒன்றே ப்ரெஞ்சு நீதிமன்றத்திற்கு அவர்கள் மீது அதிகாரவரம்பைத் தந்து விடுகிறது.  அதில் இங்கிலாந்தோ ஜெர்மனியோ தலையிட முடியாது அவர்கள் தங்கள் நாட்டுக் குடிமகனை மீட்டொப்படைக்குமாறு மட்டுமே கோர முடியும்.  ஆனால் அவர்கள் இருவரும் இங்கிலாந்திற்கு சென்று விட்ட பின்னர், இங்கிலாந்து நீதிமன்றம் இங்கிலாந்துக்காரரை மட்டுமே விசாரிக்க முடியும்.  அவருடன் குற்றமிழைத்த ஜெர்மனிக்காரர் அப்போது இங்கிலாந்தின் ஆள்நில எல்லைக்குள் இருந்தாலும், இங்கிலாந்து நீதிமன்றத்தால் அவர்மீது வழக்குத் தொடர இயலாது. ஏனெனில் இங்கிலாந்து நாட்டுக்கு அதன் குடிமகனாகிய இங்கிலாந்துக்காரர் மீது மட்டுமே அதிகாரவரம்பு இருக்கிறது.  அயல் நாட்டுக்காரரான ஜெர்மன்காரர் மீது அதற்கு அதிகாரவரம்பு இல்லை. எனவே ஒரு நாட்டின் அதிகாரவரம்பை எந்தவொரு அடிப்படையும் இல்லாமல் செயல்படுத்த முடியாது. அதிகாரவரம்பிற்கான அடிப்படை, ஆள்நில எல்லையாகவோ நாட்டுரிமை (Nationality) யாகவோ இருக்கலாம்.

நாட்டின் அதிகாரவரம்பு பற்றிய கோட்பாடுகள்
(Universal Principle of State Jurisdiction)


    ஒரு நாட்டின் அதிகாரவரம்பு பற்றிய கோட்பாடுகளை அதிகாரவரம்பிற்கான அடிப்படைகளைப் பொறுத்து பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
1.    ஆள்நில எல்லைக் கோட்பாடு 
2.    தற்காப்புக் கோட்பாடு
3.    நாட்டுரிமைக் கோட்பாடு
4.    பாதிக்கப்பட்டவர் நாட்டுரிமைக் கோட்பாடு
5.    உலகளாவிய கோட்பாடு 

1. ஆள்நில எல்லைக் கோட்பாடு (Territorial Principle)


    ஒரு நாட்டின் ஆள்நில எல்லைக்குள் நடக்கும் செயல்பாடுகள் அல்லது செயல்கள் மீது அந்நாட்டிற்கு அதிகாரவரம்பு உண்டு.  ஒரு நாட்டின் ஆள்நில எல்லையின் அடிப்படையில் அதிகாரவரம்பை நிர்ணயிக்கும் இக்கோட்பாடு ஆள்நில எல்லைக் கோட்பாடு எனப்படும்.  இறையாண்மை உள்ள ஒவ்வொரு நாடும் தன் நாட்டு ஆள்நில எல்லைக்குள் இருக்கும் அனைத்து நபர்கள் மீதும் சொத்துக்கள் மீதும் அதிகாரவரம்பைப் பெற்றிருக்கும்.
    S.S லோட்டஸ் (1927) வழக்கில் ஒரு நாடு தனது சொந்த ஆள்நில எல்லைக்குள் முழுமையானதும் தனக்கு மட்டுமேயானதுமாகிய அதிகாரவரம்பைப் பெற்றுள்ளது என்பதை சர்வதேசச் சட்டம் ஏற்றுக் கொண்டுள்ளது. இவ்வுரிமைக்கான விதிவிலக்கு எதுவும் அந்நாட்டின் சம்மதம் இன்றி ஏற்பட முடியாது என்று சர்வதேச நிரந்திர நீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது தனது ஆள்நில அதிகாரவரம்பை அந்நாடு விரும்பினால் மட்டுமே அதனிடமிருந்து பறிக்க முடியும்


    S.S. Lotus Case[PCIJ (Ser.A) No.10 (1927]-என்ற வழக்கில் ப்ரெஞ்ச் கப்பலான லோட்டஸ், துருக்கியின் கான்ஸ்டான்டி நோபிலுக்கு சென்று கொண்டிருக்கும் போது நடுக்கடலில் துருக்கி கப்பல் ஒன்றின் மீது மோதியது. துருக்கி கப்பல் உடைந்து மூழ்கியதில், அதிலிருந்த எட்டு துருக்கி குடிமகன்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். கப்பல்கள் மோதியதற்குக் காரணம் லோட்டஸ் கப்பலின் கவனக்குறைவே என்று குற்றம் சாட்டப்பட்டது. எனவே லோட்டஸ் கப்பல் கான்டான்டி நோபில் துறைமுகத்துக்கு வந்தவுடன் அக்கப்பல் அதிகாரிகளை துருக்கி கைது செய்தது.  ஆனால் ப்ரெஞ்சு தூதரகத்திற்கு முன்கூட்டியே எந்த தகவலும் அளிக்கவில்லை. லோட்டஸ் கப்பல் அதிகாரிகள் மீது துருக்கி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அவர்கள் துருக்கி குற்றவியல் நீதிமன்றத்திற்கு தங்கள் மீது அதிகாரவரம்பு இல்லை என்று வாதிட்டனர். அவர்களது வாதம் நிராகரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். ப்ரெஞ்சு அரசாங்கம் தூதரக நடவடிக்கை மூலம் லோட்டஸ் அதிகாரிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு அல்லது அவர்கள் மீதான வழக்கை தங்கள் நாட்டுக்கு மாற்றுமாறு கோரினர்.  முடிவில் அதிகாரவரம்பு பற்றிய இப்பிரச்னையை சர்வதேச நிரந்திர நீதிமன்றத்தின் முடிவிற்கு விட இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.


    வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு, ஒரு நாடு (துருக்கி) தன் நாட்டு ஆள்நில எல்லைக்கு வெளியே (நடுக்கடலில்) நடந்த குற்றச் செயலுக்காக அயல் நாட்டவர் (ப்ரெஞ்சு குடிமகன்) மீது குற்ற நடவடிக்கை தொடரக்கூடாது என்று தடை செய்யும் சர்வதேசச் சட்டவிதி உள்ளதா என்ற கேள்வி எழுந்தது. அக்கேள்விக்கு பதிலளித்த நீதிமன்றம் அவ்வாறு தடை செய்யும் சர்வதேசச் சட்டவிதி எதுவும் இல்லை. இவ்வழக்கில் குற்றமிழைத்த லோட்டஸ் அதிகாரி தன் நாட்டவர் என்ற முறையில் ப்ரெஞ்சு நாட்டு நீதிமன்றத்திற்கும், அவரது குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தன் நாட்டவர் என்ற முறையில் துருக்கி நாட்டு நீதிமன்றத்திற்கும் இணையான அதிகாரவரம்பு (Concurrent Jurisdiction) உள்ளது. எனவே லோட்டஸ் கப்பல் அதிகாரியின் குற்றத்தை விசாரித்து துருக்கி நீதிமன்றம்  தண்டனை வழங்கியது சரியே என்று சர்வதேச நிரந்தர நீதிமன்றம் முடிவு செய்தது. 
 

மிதக்கும் தீவுக் கொள்கை
(Theory of Floating Island)


    ஓரு நாட்டின் தேசியக் கொடியைத் தாங்கிய கப்பல் ஒன்று ஆழ்கடலில் மிதந்து கொண்டிருந்தாலும், அதன் தேசியக் கொடிக்குரிய நாட்டின் அல்லது பதிவு செய்யப்பட்டிருக்கும் நாட்டின் நிலப்பகுதி ஒன்று அதிலிருந்து துண்டித்து வந்து கடலில் மிதந்து கொண்டிருப்பதாகக் கருதப்படும் கொள்கையே மிதக்கும் தீவுக் கொள்கையாகும். இக்கொள்கை 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில், அடிமைகளை அவர்களது எஜமானர்களிடமிருந்து இங்கிலாந்து கப்பல்களில் மீட்ட போது உருவாக்கப்பட்டதாகும்.  அதன்படி அடிமைகள் இங்கிலாந்து கப்பலில் இருக்கும் போது இங்கிலாந்து நாட்டின் சட்டமே அவர்களுக்குப் பொருந்தும். ஏனெனில் இங்கிலாந்து தேசியக் கொடியைத் தாங்கிய கப்பல் இங்கிலாந்து நாட்டின் நிலப்பகுதியில் இருந்து பிரிந்து சென்று மிதக்கும் தீவுகளே என்று பல்வேறு சட்டவியல் அறிஞர்கள் தங்கள் சட்ட நூல்களில் எழுதினர்.  அது இங்கிலாந்து நீதிமன்றங்களாலும் பல சமயங்களில் பின்பற்றப்பட்டது. 

      Chung-Chi-Cheung-Vs-R(1939) – என்ற வழக்கில், சீன அரசாங்கத்தின் ஆயுதக் கப்பல் ஒன்று இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங்-இன் எல்லையோரக் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அக்கப்பலின் பணிபுரிந்த சிறுவன் ஒருவன் அக்கப்பலில் தலைமை மாலுமியை சுட்டுக் கொன்று விட்டான். உடனடியாக அக்கப்பல் ஹாங்காங் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. கொன்ற சிறுவனும் கொல்லப்பட்ட மாலுமியும் பிரிட்டனின் குடிமக்கள்.  கொலை நடந்த இடமும் பிரிட்டனின் அதிகாரவரம்பிற்குட்பட்ட எல்லையோரக் கடல் பகுதி என்பதால் ஹாங்காங் நீதிமன்றம் வழக்கை விசாரித்தது.  ஆனால் கொலை நடந்த கப்பல் சீனக் கப்பல் என்பதால் மிதக்கும் தீவுக் கொள்கைப்படி சீன நாட்டு நீதிமன்றத்திற்கே இவ்வழக்கை விசாரிக்க அதிகாரவரம்பு உண்டு. ஹாங்காங் நீதிமன்றத்திற்கு அதிகாரவரம்பு இல்லை என்று குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் தரப்பில் வாதிடப்பட்டது. மேல் முறையீட்டில்வழக்கை விசாரித்த இங்கிலாந்தின் பிரிவி கவுன்சில் நீதிமன்றம், மிதக்கும் தீவுக் கொள்கையை நிராகரித்து, அக்கொலை நடக்கும் போது ஹாங்காங்-இன் எல்லையோரக் கடலில் கப்பல் இருந்துள்ளதால் ஷாங்காங் நீதிமன்றத்திற்கே அதிகாரவரம்பு உண்டு என்று தீர்ப்பளித்தது.


    கேல்சன் தனது சர்வதேசச்சட்டக் கோட்பாடுகள் பற்றிய நூலில் (1952) “நடுக்கடலில் இருக்கும் கப்பலின் சூழ்நிலையை விளக்குவதற்கான வழக்கமான வழிமுறை மிதக்கும் தீவுக் கொள்கையே ஆகும். அதாவது அக்கப்பல், அதனுடைய சொந்த நாட்டின் மிதக்கும் பாகம் ஆகும். எனவே நடுக்கடலில அக்கப்பலில் மீது அதிகாரவரம்பு பெற்ற நாடு அக்கப்பலில் பறக்கும் தேசியக் கொடிக்குச் சொந்தமான நாடே ஆகும்.  கப்பல், அதன் சொந்த நாட்டின் மிதக்கும் பாகம் என்று கருதப்படுவதன் பொருள் யாதெனில், அக்கப்பலில் நடக்கும் எந்ததொரு செயலும்-குழந்தை பிறப்பு, வணிக பரிமாற்றங்கள், குற்றங்கள் போன்ற எந்தவொரு செயலும்-அக்கப்பலின் தேசியக் கொடிக்குரிய நாட்டின் ஆள்நில எல்லைக்குள் நடந்ததாகவே அந்நாடு கருதிக் கொள்ள முடியும் என்பதேயாகும்” என்று விவரித்துள்ளார்.


    Radov-Vs-The Prince pavel (45 Federal Supplement 15,16)-என்ற வழக்கில் அமெரிக்க நீதிமன்றம், ஆழ்கடலில் மிதக்கும் வணிகக் கப்பல், அதில் பறக்கும் தேசயக் கொடிக்கு உரிய நாட்டுக்குச் சொந்தமானதாகும். அக்கடலில் – கப்பலில் நடக்கும் அனைத்திற்கும் அத்தேசியக் கொடி நாட்டின் சட்டமே பொருந்தக் கூடிதாகும். ஒரு நாட்டின் தேசியக் கொடி தாங்கிய கப்பலுடன் அந்நாட்டின் அதிகாரவரம்பும் அதன் தேசியச் சட்டங்களும், ஆழ்கடலில் மட்டுமல்ல அக்கப்பல் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் அக்கப்பலுடனேயே செல்கின்றன என்று தீர்ப்பளித்தது.
 

2. தற்காப்புக் கோட்பாடு
(Protective Principle)


     ஒரு நாட்டின்  அதிகாரவரம்பு அந்நாட்டின் ஆள்நில எல்லைக்குள்ளேயே செயல்படும். சில நேரங்களில் நாடுகள் தங்கள் நாட்டு ஆள்நில எல்லைக்கு வெளியே நடக்கும், தங்கள் நாட்டு ஆள்நில எல்லையை பாதிக்கக் கூடிய செயல்கள் மீதும் அதிகாரவரம்பைக் கோரலாம் என்பதே தற்காப்புக் கோட்பாடாகும்.  ஒரு நாடு, தன் நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கக் கூடிய ராஜதுரோகம் (treason) உளவு பார்த்தல் (Espionage) மற்றும் கள்ள நோட்டு அச்சடித்தல் போன்ற அரசுக்கு எதிரான குற்றச் செயல்களை தன்நாட்டு ஆள்நில எல்லைக்கு வெளியே, வெளி நாட்டில், வெளி நாட்டவர் செய்தாலும் கூட அச்செயல் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரவரம்பு அந்நாட்டிற்கு உண்டு.


    G.B.Singh-Vs-Government of India[AIR 1973 SC 2667]-என்ற வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம், ஒரு நாட்டின் முதல் கடமை, தான் அழியாமல் உயிர் வாழ்வது. அவ்வாறு அழியாமல் தற்காத்துக் கொள்வதற்கு அந்நாடு வெளிப்படையான எதிரிகளையும், மறைமுகமான எதிரிகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உள்நாட்டு எதிரிகளையும் வெளிநாட்டு எதிரிகளையும் கையாள வேண்டியிருக்கும்.  ஒருவரை இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு செல்ல அனுமதித்தால், அவர் அங்கு இந்தியாவுக்கு எதிரான சதிச் செயல்களில் ஈடுபடக் கூடும் என்று இந்திய அரசு கருதினால் அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்று அதிகாரவரம்பு பற்றிய தற்காப்புக் கோட்பாட்டை அங்கீகரித்துள்ளது.

3.நாட்டுரிமைக் கோட்பாடு
(Nationality Principle)


    நாட்டுரிமைக் கோட்பாடு என்பது, நாடுகள் தங்கள் நாட்டுக் குடிமக்கள் அந்நாட்டின் ஆள்நில எல்லையை விட்டு வெளியேறி எங்கு சென்றாலும் அவர்கள் மீதான தன் அதிகாரவரம்பைக் கோருவதாகும் இது குடிமக்களின் நாட்டுரிமையின் அடிப்படையில் கோரப்படும் அதிகாரவரம்பாகும். இக்கோட்பாட்டின் படி ஒரு நாடு, வேறொரு நாட்டில் நடைபெற்ற செயல் தொடர்பாக தன் நாட்டுக் குடிமக்கள் மீது தன் நாட்டுச் சட்டங்களின் படி வழக்குத் தொடர்ந்து தண்டிக்கலாம்.

4.பாதிக்கப்பட்டவர் நாட்டுரிமைக் கோட்பாடு
(Passive Nationality)


    பாதிக்கப்பட்டவரின் நாட்டுரிமையின் அடிப்டையில் ஒரு நாடு அதிகாரவரம்பைப் பெறுவதே பாதிக்கப்பட்டவர் நாட்டுரிமைக் கோட்பாடு எனப்படும்.  அக்கோட்பாடு ஒரு நாட்டிற்கு, தன் நாட்டுக் குடிமக்களுக்கு வெளிநாட்டில் தீங்கு விளைவித்த வெளிநாட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரவரம்பு உண்டு என்கிறது.  இதன்படி, ஒரு நாடு வெளிநாட்டவர் மீதும் அதிகாரவரம்பைப் பெறுகிறது.

5.உலகளாவிய அதிகாரவரம்புக் கோட்பாடு
(Universal Jurisdition)


    கடற் கொள்ளை (Piracy) இனப்படுகொலை (Genocide) போர்க் குற்றங்கள் (War Crimes) போன்றவை எந்த நாட்டின் ஆள்நில  எல்லைக்குள் நடந்தாலும் எந்த நாட்டுரிமை பெற்றவரால் எந்த நாட்டுரிமை பெற்றவருக்கு எதிராக நிகழ்ந்தாலும் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அக்குற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரவரம்பைப் பெற்றுள்ளன என்பதே உலகளாவிய அதிகாரவரம்புக் கோட்பாடு ஆகும். இக்கோட்பாட்டின்படி, இக்குறிப்பிட்ட சில குற்றங்கள் மனிதச் சமுதாயத்திற்கெதிரான சர்வதேசக் குற்றங்களாகக் கருதப்பட்டு அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரவரம்பு அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.  பேராசிரியர் ஸ்வார்ஷன்பெர்கர் (Schwarzenberger)”சர்வதேசச் சமுதாயத்தின் அடித்தளங்களையே ஆட்டக் கூடிய செயல்கள் எதுவும் சர்வதேசக் குற்றங்களே” என்கிறார்.

சர்வதேசக் குற்றங்கள்

1.கடற்கொள்ளை
(Piracy)


    கடற்கொள்ளை சர்வதேசச் சட்டத்தின் கீழ் உலகளாவிய அதிகாரவரம்புக் கோட்பாட்டின்படி அனைத்து நாடுகளின் அதிகாரவரமபிற்குட்பட்டதாக இருக்கிறது.  அதே சமயத்தில் உள்நாட்டுச் சட்டத்தின் கீழ் அந்தந்தந்த நாடுகளின் அதிகாரவரம்பிற்கு உட்பட்டதாகவும் இருக்கிறது.

சர்வதேசச் சட்டத்தில் கடற்கொள்ளை
(Piracy Jure getium or Piracy at International Law)


    சர்வதேசச் சட்டத்தில் கடற்கொள்ளை என்பது மனித சமுதாயத்திற்கு எதிரான குற்றமாகக் கருதப்படுகிறது.  எனவே கடற்கொள்ளை மீதான அதிகாரவரம்பு தனித்தன்மையானதாகும் என்கிறார் ஸ்டார்க்.  கடற்கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடித்து விசாரணை செய்து தண்டிப்பதற்கு உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் அதிகாரவரம்பு உண்டு.
    
சர்வதேசச் சட்ட ஆணையத்தின் வரையறையின்படி கடற்கொள்கை என்பது பின்வரும் கூறுகளைக் கொண்டதாகும்.
i) கடற்கொள்ளை என்பது சட்டவிரோதமான வன்முறை, தடுத்து சிறைவைத்தல் அல்லது கொள்ளையிடும் செயல் ஆகும்.
ii) அத்தகைய செயல் தனிப்பட்ட லாபத்திற்காக செய்யப்பட்டிருக்க வேண்டும்.
iii) அது தனியார் கப்பல் அல்லது தனியார் விமானத்தில் வந்தவர்களால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
iv) அது நடுக்கடலில் (ஆழ்கடலில்) அல்லது ஆள்நில எல்லைக்குட்பட்ட கடல் அல்லது எந்ததொரு நாட்டின் அதிகாரவரம்பிலும் இல்லாத கடல் பகுதியில் நடந்திருக்க வேண்டும்.
v) அது அத்தகைய கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த கப்பலுக்கு எதிராக அல்லது கப்பலில் இருந்த நபர்கள் அல்லது சொத்துக்களுக்கு எதிராக செய்யப்பட்டிருக்க வேண்டும்.
    in Re Piracy Jure Gentium (1934)-என்ற வழக்கில் இங்கிலாந்தின் பிரிவி கவுன்சில், கடற்கொள்ளை எனும் குற்றத்திற்கு உண்மையில் கொள்ளையடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.  ஆழ்கடலில் கப்பலில் கொள்ளையிட முயற்சி செய்யப்பட்டு தோல்வியடைந்திருந்தாலும் அதுவும் கடற் கொள்ளையே என்று தீர்ப்பளித்தது.

உடன்படிக்கையில் கடற்கொள்ளை
(Piracy at Treaty)


        இரண்டு நாடுகள் தங்களுக்கு இடையிலான உடன்படிக்கையின் மூலம் வேறு சில செயல்களையும் கடற்கொள்ளையாக கருதும் வகையில் உடன்படிக்கையும் செய்து கொள்ளலாம். உதாரணமாக, இரண்டு நாடுகள், அடிமை வியாபாரமும் கடற்கொள்ளையாகவே கருதப்பட வேண்டும் என்று உடன்படிக்கை செய்து கொள்ளலாம். அதன் படி உடன்படிக்கையின் தரப்பு நாடுகள் கப்பல் மூலம் அடிமை வியாபாரம் செய்யும் தங்கள் நாட்டுக் குடிமக்களை கடற்கொள்ளைக்காக விசாரித்து தண்டனை வழங்கும் அதிகாரவரம்பைப் பெற்றிருப்பர்.

அரசுக்கப்பல்களின் செயல் கடற்கொள்ளை ஆகாது. சர்வதேசச் சட்டத்தில் கடற்கொள்ளை ஒரு தனியார் கப்பலால் மட்டுமே செய்யப்பட இயலும்.  ஒரு நாட்டு அரசாங்கத்தின் ஆணைப்படி செயல்படும் போர்க்கப்பல்கள் அல்லது பிற அரசுக்கப்பல்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கிளர்ச்சி அரசாங்கங்களின் (Belligerent Government) கப்பல்கள் மீது கடற்கொள்ளைக்காக குற்றம் சாட்டமுடியாது.  ஆனால் அத்தகைய கப்பல்களின் செயலுக்கு அதற்கு ஆணை வழங்கிய அரசாங்கத்தைப் பொறுப்புக்குள்ளாக்கலாம். ஆனால் அங்கீகரிக்கப்படாத கிளர்ச்சிப் படைகளின் கப்பல்களின் செயல்கள் கடற்கொள்ளை என்றே கருதப்படும்.


        The Ambrose Light Case (1885)-என்ற வழக்கில் அமெரிக்க பெடரல் நீதிமன்றம், அங்கீகரிகக்ப்பட்ட அரசாங்கம் அல்லது கிளர்ச்சி அரசாங்கத்திற்கு சொந்தமாமன கப்பல்களின் செயலால் பாதிக்கப்பட்ட நாடு சர்வதேசச் சட்டத்தின் கீழ் அதற்குப் பொறுப்பான அரசாங்கத்திடமிருந்து ஒரு தீர்வினைப் பெற முடியும். ஆனால் அங்கீகரிக்கப்படாத கிளர்ச்சிப் படையின் கப்பலின் செயலுக்கு அவ்வாறு சர்வதேசச் சட்டத்தின் கீழ் தீர்வு பெற முடியாது. எனவே அக்கப்பலின் செயல் கடற்கொள்ளையாகக் கருதப்பட்டு சர்வதேசச் சட்டத்தில் கடற்கொள்ளைக் குற்றத்தை விசாரிப்பது போலவே விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

2.போர்க் குற்றங்கள்
(War Crimes)


       கடற்கொள்ளையைப் போலவே போர்க் குற்றங்களும் உலகளாவிய அதிகாரவம்பிற்குட்பட்ட சர்வதேசக் குற்றமேயாகும். ஆரம்ப காலங்களில் சர்வதேசப் போர் விதிகள் மற்றும் வழக்காறுகளை மீறுவதே போர்க்குற்றம் எனக் கருதப்பட்டது. பேராசிரியர் கெல்சன் மற்றும் பேராசிரியர் ஹிஜ்ஜின்ஸ் (Prof.Higgins) போன்றோர் அங்கீகரிக்கப்பட்ட போர்க்கள் விதிகள் ஆயுதப்படை உறுப்பினர்களால் மீறப்படுவதே போர்க் குற்றம் ஆகும் என்றே வரையறுக்கின்றனர். ஆனால் இந்த வரையறை நவீன போர் யுக்திகளைக் கொண்ட தற்காலப் போர் முறைக்குப் பொருத்தமற்றதாகிவிட்டது.


         இன்றைய நிலையில் போர்க்குற்றம் என்பது, போர் விதிகளை மீறுவது மட்டுமல்லாமல் தடைசெய்யப்பட்ட பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவது, நோயுற்றவர்களையும் காயம்பட்டவர்களையும் மோசமாக நடத்துதல், சமாதானத்திறகான செஞ்சிலுவைக் கொடியைப் போரில் தவறாகப் பயன்படுத்துவது, தற்காலிகப் போர் நிறுத்த விதிகளை மீறுதல். பணயக் கைதிகளைக் கொல்வது. குடிமக்கள் அல்லாதவர்களை அல்லது போர்க்களத்தில் இருந்து சிதறியோடி சரணடைந்தவர்களைப் படுகொலை செய்வது,  பயணிகளையும் பணியாளர்களையும் பாதுகாப்பாக வைக்காமல் கப்பல்களை அழித்தல், பாதுகாப்பில்லாத இடங்களின் மீது குண்டு வீசுதல் போன்றவற்றையும் உள்ளடக்கியதாகும்.


        போர்க் குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்பதால் உலகில் உள்ள எந்த நாடும் அக்குற்றம் புரிந்தவர்களை விசாரித்துத் தண்டனை வழங்கலாம். அதுபோல போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது மேலதிகாரிகளின் உத்தரவையே நிறைவேற்றியதாகக் கூறித் தப்பமுடியாது. அவர்கள் தனிப்பட்ட முறையில் அக்குற்றத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று நியூரம்பர்க் வழக்கு விசாரணை, டோக்கியோ வழக்கு விசாரணை மற்றும் எய்ச்மென் வழக்கு போன்வற்றில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நியூரம்பர்க் வழக்கு விசாரணை (Neuremberg trial 1946)


        இரண்டாம் உலகப் போரின் முடிவில் வெற்றியடைந்த நேச நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, போரில் தோல்லிடைந்த ஜெர்மன் ராணுவத்தினர் செய்த போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச இராணுவத் தீர்ப்பாயம் (International Military Tribunal) ஒன்றை நியூரம்பர்க்கில் அமைத்தனர். அத்தீர்ப்பாயத்தின் நீதிபதிகளாக வெற்றி பெற்ற நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுனர்களே நியமிக்கப்பட்டனர்.


        நியூரம்பர்க் தீர்ப்பாயத்தில் ஜெர்மன் போர்க்குற்றவாளிகள், இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் தலைமையில் உலக சமாதானத்திற்கு எதிராகவும் மனித குலத்திறகு எதிராகவும் புரிந்த போர்க் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டனர். அவ்விசாரணையில் 1928ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையை மீறிய குற்றம் பிரதான குற்றமாகக் கருதப்பட்டது. அவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட்ட ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள், சர்வதேசத் தகராறுகளைத் தீர்ப்பதற்கு போரை ஒரு கருவியாக பயன்படுத்த மாட்டோம் என உறுதியளித்திருந்தன. அந்த உறுதிமொழியை ஜெர்மனி மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.


        வழக்கு விசாரணையின் போது ஜெர்மனியின் போர்க் குற்றவாளிகள், தங்கள் நாட்டு அரசாங்கம் மற்றும் மேலதிகாரிகளின் உத்தரவுகளையே தாம் செயல்படுத்தியதால் அதற்காக தம்மைத் தண்டிக்க முடியாது என்றும் ஜெர்மன் குடிமகன்களாகிய தங்களை விசாரித்து தண்டணை வழங்குவதற்கு மற்ற நாடுகளின் தீர்ப்பாயத்திற்கு அதிகாரவரம்பு கிடையாது என்றும் வாதிட்டனர். அவர்களின் வாதங்களை நிராகரித்த தீர்ப்பாயம் தனது நாட்டு அரசாங்கம் அல்லது மேலதிகாரிகளின் நியாயமான உத்தரவுகளுக்கு மட்டுமே கீழ்ப்படிய வேண்டும். அநியாயமான போர்க் குற்றங்களைச் செய்யாமல் தவிர்த்திருப்பதற்கு போதுமான வாய்ப்பிருந்தும் போர்க் குற்றவாளிகள் அவ்வாறு செய்யவில்லை. எனவே அரசாங்கம் அல்லது மேலதிகாரியின் உத்தரவையே செயல்படுத்தியதாகக் கூறி பொறுப்பு நிலையில் இருந்து தப்பிக்க முடியாது. மேலும் போர்க்குற்றம் மனித இந்த தீர்ப்பாயத்திற்கு இக்குற்றவாளிகளை விசாரித்து தண்டனை வழங்கும் அதகாரவரம்பு உண்டு என்று முடிவு செய்தது.  எனவே விசாரணையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட போர்க்குற்றவாளிகளில் மூவரை விடுவித்தது.  மற்ற போர்க்குற்றவாளிகள் 1928 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையை மீறி ஆக்கிரமிப்புப் போரை நடத்தியுள்ளனர் என்றும் போர்க் கைதிகளை மோசமாக நடத்தியுள்ளனர் என்றும் அதனால் அவர்கள் தண்டனைக்குரிய மரணதண்டனை விதித்தது. மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும் மீதமுள்ள நான்கு பேருக்கு நீண்ட காலச் சிறைச் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தது.

3.இன அழிப்பு (அ) இனப்படுகொலை (Genocide)


        ஜெர்மனியின் ஹிட்லர் தலைமையிலான நாஜிக்கள் எனும் பாசிசப் படையினர், ஜெர்மனிய இனத்தில் எதிரிகள் யூத இனத்தவரே என்றும் ஜெர்மானிய இனத்தைத் தூய்மைப் படுத்துவதற்கு யூத இனத்தையே அழிக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தனர். இரண்டாம் உலகப் போரின் போது உச்சத்தை அடைந்த யூத இன அழிப்பு உலகையே உலுக்கியது. மனிதகுல வரலற்றில் அதுவரையிலும் அப்படியொரு கொடுமை நடந்ததில்லை என்பதால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்தன. Genocide-என்ற வார்த்தையே ஆங்கில அகராதியில் அதன்பிறகு தான் உருவானது. இன அழிப்புக்கு எதிரான ஐ.நா. வின் பணிகளில் முக்கியப் பங்காற்றிய லெம்கின் என்பவராலேயே அச்சொல் உருவாக்கப்பட்டது. மனித குலத்திற்கு எதிரான உலகளாவிய குற்றமாகிய இன அழிப்பின் மீதான உலக நாடுகளின் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் முதல் அமர்வு, இன அழிப்பு என்பது ஐ.நா. வின் கொள்கைகளுக்கு விரோதமானதும் நாகரீக நாடுகளால் கண்டிக்கத் தக்கதுமானதொரு சர்வதேசக் குற்றம் என்று அறிவித்தது.


        ஐ.நா.வின் 1948ஆம் ஆண்டு இன அழிப்புக் குற்றத் தடுப்பு மற்றும் தண்டனை மாநாட்டுத்  தீர்மானம் (Convention on Prevention and Punishment of Crime of Genocide) ஷரத்து-II இன்படி, இன அழிப்பு என்பது தேசிய (National), கலாச்சார (Cultural) ,பாரம்பரிய(ethical) இன அல்லது மதக் குழு (Religious) முழுவதையும் அல்லது அதன் ஒரு பகுதியை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பின்வரும் செயல்கள் எதனையும் குறிக்கும்.

a) அக்குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது.
b) அக்குழுவின் உறுப்பினர்களுக்கு உடல் ரீதியான கொடுந் தீங்கை ஏற்படுத்துவது.
c) அக்குழு முழுவதையும் அல்லது அதன் ஒரு பகுதியின் உடல் தீதியான அழிவைக் கொண்டு வரும் திட்டத்துடன் கூடிய வாழ்கை நிலைமையை அக்குழுவின் மீது வேண்டுமென்றே திணிப்பது.
d) அக்குழுவிற்குள் பிறப்புகளை தடுக்கும் நோக்குடனான நடவடிக்கைகளைத் திணிப்பது.
e) அக்குழுவின் குழந்தைகளை கட்டாயப்படுத்தி மற்றொரு குழுவிற்கு மாற்றுவது.

அய்ஷ்மன் வழக்கு (Eichmann Case,1962)


    அய்ஷ்மன் என்பவர் ஹிட்லரின் தலைமையின் கீழ் யூதர்களுக்கு எதிராக பல கொடுமைகளை இழைத்தார். அவர் லட்சக்கணக்கான யூதர்களின் படுகொலைகளுக்குப் பொறுப்பானவர் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போர் முடிவடையும் தறுவாயில் அவர் ஜெர்மனியில் இருந்து தப்பி பல நாடுகளில் தலைமறைவாக சுற்றித் திரிந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் யூதர்களுக்கென்று உருவாக்கப்பட்ட நாடாகிய இஸ்ரேலின் உளவாளிகள் அவரைக் கைது செய்வதற்குத் தொடர்ந்து முயன்று வந்தனர்.  ஆனால் அவர் தொடர்ந்து நாடு விட்டு நாடு தப்பிச் சென்று கொண்டே இருந்தார். கடைசியில் அவரை அர்ஜென்டினாவில் வைத்து இஸ்ரேல் உளவாளிகள் கைது செய்தனர். ஆனால் அய்ஷ்மனை மீட்டொப்படைக்குமாறு முறைப்படி இஸ்ரேல் கோரினால் அர்ஜென்டினா அதனை மறுக்கக் கூடும் என்ற நிலையில், இஸ்ரேல் உளவாளிகள் அய்ஷ்மனை அர்ஜென்டினா அரசாங்கத்திற்குத் தெரியாமல் முறையற்ற விதத்தில் கடத்தி வந்து இஸ்ரேலில் ஒப்படைத்தனர்.


    இஸ்ரேல் நீதிமன்றத்தில் அய்ஷ்மன் மீது இனஅழிப்புக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்குப் பின்னர் மரண தண்டனை விதிக்க்ப்பட்டார். அத்தீர்ப்புக்கு எதிராக அய்ஷ்மன் இஸ்ரேல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டில், தன் மீதான குற்றச் சாட்டை விசாரிப்பதற்கு இஸ்ரேல் நீதிமன்றத்திற்கு அதிகாரவரம்பு கிடையாது. ஏனெனில், குற்றம் நடத்த இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் இஸ்ரேல் என்றொரு நாடே இல்லை என்று அய்ஷ்மன் தரப்பின் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை நிராகரித்த இஸ்ரேல் உச்சநீதிமன்றம், இன அழிப்பும் போர்க்குற்றமும் உலகளாவிய அதிகாரவரம்பிற்குப்பட்ட சர்வதேசக் குற்றம் என்பதால் அதனை விசாரிக்கவும் தண்டனை வழங்கவும் இஸ்ரேல் நீதிமன்றத்திற்கு அதிகாரவரம்பு உள்ளது என்று கூறி அய்ஷ்மனுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது.

4.விமானக் கடத்தல் (Air craft-hijacking)


    விமானக் கடத்தலும் பொதுவாக கடற்கொள்ளையைப் போன்று வான் கொள்ளை என்றே கருத்தப்படுகிறது. எனவே விமானக் கடத்தலும் கடற்கொள்ளையைப் போன்று உலகளாவிய அதிகாரவரம்பிற்குட்பட்ட சர்வதேசக் குற்றமாகும். உலகளாவிய அதிகாரவரம்பிற்குட்பட்ட சர்வதேசக் குற்றமாகும். உலகளாவிய அதிகாரவரம்பின்படி, விமானக் கடத்தல் குற்றத்திற்காக உலகின் அனைத்து நாடுகளும் தங்கள் அதிகாரவரம்பை செயல்படுத்தலாம்.

    விமானக் கடத்தல் என்பது குறித்த திட்டவட்டமான வரையறை எதுவும் இதுவரை வகுக்கப்படா விட்டாலும் 1970 ஆம் ஆண்டின் ஷேக் மாநாடு அதன் முக்கியக் கூறுகளை உள்ளடக்கிய பொதுவான வரையறை ஒன்றை வழங்கியுள்ளது.  இதன்படி, பறந்து கொண்டிருக்கும் ஒரு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் நபர், 

(a) சட்டவிரோதமாக, வன்முறையின் மூலம் அல்லது வன்முறை பிரயோகிக்கப்படலாம் என்ற அச்சுறுத்தலில் மூலம் அவ்விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருதல் அல்லது அவ்வாறு கைப்பற்றுவதற்கோ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கோ முயற்சி செய்தல் அல்லது 

(b) அத்தகைய செயலைச் செய்பவருக்கு அல்லது செய்ய முயற்சி செய்பவருக்கு உடந்தையாக இருத்தல் ஆகிய செயலைச் செய்தால் அவர் விமானக் கடத்தல் குற்றத்தைச் செய்தவராவர்.

    1970 ஆம் ஆண்டின் ஷேக் மாநாடும் 1917 ஆம் ஆண்டின் மான்ட்ரீல் மாநாடும் விமானக் கடத்தலை உலகளாவிய அதிகாரவரம்பிற்குட்பட்ட சர்வதேசக் குற்றமாமக அங்கீகரித்துள்ளன.  இவ்விரண்டு மாநாட்டுத் தீர்மானத்தின் படியும், விமானக் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளி அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் எவரும் ஒரு நாட்டின் எல்லைக்குள் இருந்தால் அந்நாடு அவரைக் கைது செய்து காவலில் வைக்கலாம். அக்கடத்தல் தொடர்பாக வேறு நாடு எதுவும் அக்குற்றவாளியை மீட்டொப்படைக்குமாறு கோரவில்லையெனில், அந்நாடே தன் நாட்டு நீதிமன்றத்தின் மூலம் விசாரித்துத் தண்டனை வழங்கலாம் என்று கூறுகின்றன. ஆனால் இரண்டு மாநாடுகளும், விமானக் கடத்தல் குற்றவாளியைக் கைது செய்த நாடு, அக்குற்றவாளியை வேறொரு நாடு கோரினால் மீட்டொப்படைத்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. அதுபோல அக்குற்றவாளியைக் கைது செய்து உள்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தியே ஆக வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், அந்நாட்டின் எல்லைக்குள் ஒரு குற்றம் நிகழ்ந்தால் அந்நாட்டு அரசு சாதாரணமாக என்ன நடவடிக்கை எடுக்குமோ அதே நடவடிக்கையை அவ்விமானக் கடத்தல் குற்றவாளியின் தீதும் எடுக்க வேண்டும். அவ்வாறு அந்நாடு அக்குற்றவாளியின் மீது நடவடிக்கை எடுப்பதாக முடிவு செய்துவிட்டால், உலகளாவிய அதிகாரவரம்புக் கோட்பாட்டின்படி அந்நாட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரவரம்பு கிடைத்து விடும் என்று அவ்விரு மாநாடுகளும் அறிவிக்கின்றன.  

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com