சர்வதேச வசதியுரிமை

சர்வதேச வசதியுரிமை

சர்வதேச வசதியுரிமை
(International Servitude)

 

                      சர்வதேச வசதியுரிமை என்பது ஒரு நாடு, தன் நாட்டின் ஆள்நில எல்லைக்குள் தனக்கிருக்கும் அதிகாரவரம்பை மற்றொரு நாட்டின் நன்மைக்காக நிரந்தரமாக கட்டுப்படுத்திக் கொள்வதாகும்.  இக்கருத்தாக்கம், உள்நாட்டுச் சட்டத்தில் தனி நபரின் நிலச் சொத்துரிமையில் மற்றொரு நிலத்திற்கு இருக்கும் வசதியுரிமையை நாட்டின் ஆள்நில அதிகாரவரம்பிற்குப் பொருத்தும் ஒப்புமையின் மூலம் உருவாக்கப்பட்டதாகும்.
 

                    ஒரு நாட்டின் ஆள்நில எல்லையின் ஒரு பகுதி அல்லது முழுவதையும் ஒரு வரம்பிற்குபட்பட்ட முறையில் மற்றொரு நாட்டின் நலனுக்கான குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்கானதாக ஆக்கும் ஒரு உடன்படிக்கையின் மூலம் ஒரு நாட்டின் ஆள்நில மேலாதிக்கத்தின் மீது விதிக்கப்படும் அசாதாரணமான கட்டுப்பாடுகளே சர்வதேச வசதியுரிமை அல்லது நாட்டின் வசதியுரிமை எனப்படும் என்று ஒப்பன்ஹீய்ம் வரையறுக்கிறார்.
   

                    உதாரணத்திற்கு, ஒரு நாடு தன் நாட்டின் வழியாக கடந்து செல்வதற்கு மற்றொரு நாட்டின் இராணுவத்திற்கு அனுமதி வழங்க ஒரு உடன்படிக்கையின் மூலம் ஒப்புக் கொள்ளாலம் அல்லது ஒரு நாடு தனது அண்டை நாட்டின் பாதுகாப்பு நலனுக்காக எல்லையில் இருக்கும் குறிப்பிட்டதொரு நகரத்தில் இராணுவத்தை நிறுத்துவதில்லை என்று தனது அதிகாரவரம்பை ஒரு உடன்படிக்கையின் மூலம் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

சர்வதேச வசதியுரிமையின் முக்கியக் கூறுகள்


i) சர்வதேச வசதியுரிமை என்பது ஓர் பொதுவான கட்டுப்பாடு அல்ல.  அது ஓர் அசாதாரணமாக (Exceptional) கட்டுப்பாடு ஆகும். அதாவது அவ்வசதியுரிமை எல்லா நாடுகளுக்கும் பொதுவானது அல்ல. அது வழங்கப்படும் நாட்டுக்கு மட்டுமே உரியதாகும்


ii) சர்வதேச வசதியுரிமை ஓர் உடன்படிக்கையின் மூலமாக மட்டுமே வருவாக முடியும்.  அது வாய் மொழியாகவோ வழக்காற்றின் மூலமாகவோ உருவாகாது.

iii) சர்வதேச வசதியுரிமை என்பது ஒரு நாட்டின் ஆள்நில மேலாதிக்கம் அல்லது அதிகாரவரம்பின் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடு ஆகும்.


iv) சர்வதேச வசதியுரிமையின் மூலம் விதிக்கப்படும் கட்டுப்பாட்டின் விளைவாக ஒரு நாட்டின் ஆள்நில எல்லையின் ஒரு பகுதி அல்லது முழுவதும் மற்றொரு நாட்டின் நன்மைக்காக நிரந்திரமாக பயன்படுத்தப்படும் ஒன்றாக ஆக்கப்படுகிறது.


v) சர்வதேச வசதியுரிமை ஓர் மன்று சுட்டிய உரிமை (Rights in Rem) ஆகும்.  அதாவது உடன்படிக்கையின் மூலம் சர்வதேச வசதியுரிமையைப் பெற்ற நாடு அதனை வழங்கிய நாட்டுக்கு எதிராக மட்டுமின்றி உலகம் அனைத்திற்கும் எதிராக அவ்வுரிமையைப் பெற்றிருக்கும்.

சர்வதேச வசதியுரிமையின் வகைகள்

சர்வதேச வசதியுரிமை அல்லது நாட்டின் வசதியுரிமை பொதுவாக நான்கு வகைப்படும்.  அவை:
 

1) நேர்மறை வசதியுரிமை,
 2) எதிர்மறை வசதியுரிமை,
 3)இராணுவ வசதியுரிமை,
 4) பொருளாதார வசதியுரிமை ஆகியவனவாகும்.

1)நேர்மறை வசதியுரிமை (Positive Servitude)
 

                      வசதியுரிமையை வழங்கும் நாடு தன் நாட்டின் ஆள்நில எல்லைக்குள் சில செயல்களைச்செய்து கொள்ளும் உரிமையை மற்றொரு நாட்டிற்கு வழங்கினால் அது நேர்மறை வசதியுரிமை எனப்படும்.  உதாரணத்திற்கு தன் நாட்டின் வழியாக மற்றொரு நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு  கடந்து செல்லும் உரிமையை மற்றொரு நாட்டின் குடிமக்களுக்கு வழங்குவது நேர்மறை வசதியுரிமைகும்.

2)எதிர்மறை வசதியுரிமை (Negative Servitude)


                        மற்றொரு நாட்டின் நன்மைக்காக ஒரு நாடு தன் ஆள்நில எல்லைக்குள் குறிப்பிட்ட சில செயல்களைச் செய்வதில்லை என்று எதிர்மறையாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது எதிர்மறை வசதியுரிமையாகும்.  உதாரணத்திற்கு அண்டை நாட்டின் பாதுகாப்பு நலனுக்காக தன் எல்iலைப்புற நகர் ஒன்றில் இராணுவத்தை நிறுத்துவதில்லை என்று ஒரு நாடு ஒப்புக் கொள்வது எதிர்மறை வசதியுரிமையாகும்.

3)இராணுவ வசதியுரிமை (Military Servitude)


                       ஒரு நாடு தன் நாட்டின் ஆள்நில எல்லைக்குள் மற்றொரு நாட்டின் இராணுவத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அனுமதிப்பது இராணுவ வசதியுரிமையாகும்.  உதாரணத்திற்கு மால்டா நாடு, தனது தீவு ஒன்றை இங்கிலாந்தின் இராணுவத் தளம் அமைத்துக் கொள்வதற்காக நிரந்தரக் குத்தகைக்கு விட்டது இராணுவ வசதியுரிமையே ஆகும்.  அதுபோல தற்போது (2016) சிரியாவின் கிளர்ச்சிப் படைகளுக்கும் இஸ்லாமிய அரசுப்  படைகளுக்கும் எதிராக இரஷ்யா வான தாக்குதல் நடத்துவதற்கு ஈரான் தன் நாட்டு விமானத் தளத்தை பயன்படுத்துவதற்கு இரஷ்ய விமானப் படைக்கு அனுமதியளித்திருப்பதும் இராணுவ வசதியுரிமையே ஆகும்.

4)பொருளாதார வசதியுரிமை (Economic Servitude)


                       ஒரு நாடு தன் நாட்டின் ஆள்நில எல்லைக்குள் மற்றொரு நாட்டின் நன்மைக்காக சில பொருளாதார அல்லது உரிமைகள் போக்குவரத்து உரிமைகளை  வழங்குவது பொருளாதார வசதியுரிமை ஆகும். உதாரணத்திற்கு ஒரு நாட்டின் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொள்ளும் உரிமை அல்லது ஒரு நாட்டின் நிலப்பகுதி வழியாக வாகனப் போக்குவரத்து செய்து கொள்ளும் உரிமை அல்லது நான்கு  புறமும் நிலத்தால் சூழப்பட்ட நாட்டிற்கு அண்டை நாட்டின் துறை முகத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை போன்றவை பொருளாதார வசதியுரிமைகளாகும்.
                       

Rights of Passage over Indian Territory Case-இந்திய ஆள்நில எல்லை மீதான பாதையுரிமை வழக்கு எனும் இவ்வழக்கில் போர்ச்சுகீசியர் வசமிருந்த டாமனில் இருந்து பிற போர்ச்சுகீசிய பகுதிக்குச் செல்வதற்கு இடையில் இருந்த இந்திய நிலப்பரப்பின் வழியாக நீண்ட காலமாக அனுமதிக்கப்பட்டு வந்தது. இப்பாதையுரிமை அங்கீகரித்த சர்வதேச நீதிமன்றம், போர்ச்சுகீசிய குடிமக்களுக்கும் குடிமை அரசு அதிகாரிகளுக்கும் மட்டுமே இப்பாதையுரிமை உண்டு. இராணுவப் படைகளுக்கோ ஆயுதங்களுக்கோ இப்பாதையுரிமை கிடையாது என முடிவு செய்தது. மேலும் இப்பாதையுரிமை வழக்காற்று உரிமைதானேயொழிய இந்திய ஆள்நில எல்லை மீதான வசதியுரிமை அல்ல எனவும் சர்வதேச நீதிமன்றம் அறிவித்தது.
                       

Union of India-Vs-Sukumar Sen Gupta (AIR 1990 SC 1692, - டீன் பிஹா (Teen Bigha) வழக்கு என அறியப்பட்ட இவ்வழக்கில், பங்களாதேஷ் நாட்டின் தஹாஹ்ராம் (Dahagram) மற்றும் பன்பாரி மோஸா (Panbari Mouza) ஆகிய இரண்டு பகுதிகளை இணைக்கும் இந்திய நிலப்பகுதியாகிய டீன் பிஹா பகுதியை இந்திய அரசாங்கம் 1974 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் மூலம் பங்களாதேஷிற்கு நிரந்தரக் குத்தகைக்கு விட்டது.  குத்தகைக்கு விடப்பட்ட டீன் பிஹா பகுதி, பங்களாதேஷின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு சென்றுவர போக்குவரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கபட்டது.  இந்தக் குத்தகையின் உண்மையான சட்டத் தகுநிலை என்ன என்ற கேள்வியெழுந்து போது இந்திய உச்சநீதிமன்றம், 1974 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் மூலம் டீன் பிஹா பகுதி பங்களாதேஷிற்கு பிரித்துக் கொடுக்கப்படவில்லை:  அந்த ஆவணத்தின் மூலம் பங்களாதேஷிற்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமை சர்வதேசச் சட்டத்தில் வசதியுரிமை அறியப்படும் உரிமை மட்டுமே என்று தீர்ப்பளித்தது.  அதாவது இந்திய நிலப்பகுதியாகிய டீன் பிஹா பகுதியில் பங்காதேஷிற்கு வசதிரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியது.

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com