இன அரசியல் 22: தமிழ் ஈழப் படுகொலை

இன அரசியல் 22: தமிழ் ஈழப் படுகொலை

இலங்கைத் தமிழர்

1,50,000 ஆண்டுகள் இலங்கை குமரிக்கண்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. குமரிக்கண்ட அழிவில் எஞ்சிய பாகமாக தற்போதைய இலங்கை இருக்கிறது. குமரிக்கண்டத்தில் இருந்த அதியுயர் மலை மேருமலையாகும். பல கடற்கோள்களில் தப்பிப் பிழைத்த இம்மலையையே தெய்வ தச்சனான விஸ்வகர்மா இலங்கையை நகராக மாற்றினர் என்பது வடமுனி வால்மிகி தருகின்ற சான்றாகும், வால்முகியின் கூற்றைக் கருத்தை கம்பரும் ஒட்டக்கத்தரும் வழிமொழிந்துள்ளார்கள் "இலங்கைத் தமிழர்" என்ற தொடர், இலங்கையின் அதிகாரபூர்வ ஏடுகளில், இலங்கையைத் தமது பாரம்பரிய பிறப்பிடமாகக் கொண்டு வாழும் தமிழர்களைக் குறிப்பிடுவதற்கான ஒரு தொடராகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத்தொடர், இலங்கையில் இப்பொழுது வாழ்ந்து வருகின்ற இன்னொரு தமிழ்க்குலத்தினராகிய "இந்திய வம்சாவழித் தமிழரை" உள்ளடக்கும் ஒன்றாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இலங்கையின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அவர்களை "இந்தியத் தமிழர்" (Indian Tamils) என்றே குறிப்பிடும். ஆயினும் 1960இல் வந்த சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தமும் அதன் பின்னர் 1988ல் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களும், இந்தியத் தமிழர்களில் ஒரு பகுதியினரை இலங்கைப் பிரஜைகளாக ஏற்றுக்கொண்டுள்ளன. "இலங்கைத் தமிழர்" என்ற அதிகாரப் பூர்வ வரையறைக்குள், இந்த "இந்திய வம்சாவழித் தமிழர்" கொண்டுவரப்படுவதில்லையெனினும், இவர்கள், இலங்கையைத் தமது நாடாகக் கொள்ளும் ஒரு தமிழ்க் குழுமத்தினர் என்னும் வகையில், இந்நாட்டின் தமிழ்மொழிப் பயன்பாடு, பிரயோகம் ஆகியனவற்றைப் பொறுத்தவரையில் இலங்கைத் தமிழர் போன்ற ஒரு நிலையினராகவே உள்ளனர் என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஓர் உண்மையாகும்.

"இலங்கைத் தமிழ்" அலகை ஒரு பண்பாட்டுக்கூறாகக் கொண்டால், அதனுள் வரும் உப - பண்பாட்டுக் கூறுகளாக பின்வரும் பகுதிகள் அமையும்:

1. மட்டக்களப்பு 

2. திருகோணமலை மாவட்டம் – மூதூர்

3. வன்னிப் பகுதி 

4. யாழ்ப்பாணம்

5. மன்னார்

6. வடமேல் மாகாணம் - குறிப்பாக புத்தளம், சிலாபப் பகுதிகள்

7. கொழும்பு

8. தென்மாகாணம்

9. மலையகம்

இனப்பிரச்சினை கருக்கொண்ட விதம்

இலங்கையில் இன்று நிலவும் தேசிய இனப்பிரச்சினையானது சிங்கள பெளத்த ஐதிகம் ஒன்றைமைய மாகக் கொண்டு அமைந்துள்ளது. இது சுருக்கமாக தம்மதிப கோட்பாடு எனப்படும். அதாவது பெளத்த தர்மத்தைப் பேணிப் பாதுகாக்கவென புத்தபிரானாவே தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு என்பதாகும். இக்கோட்பாடு பற்றிய ஐதிகக்கதை பின்வருமாறு கூறுகிறது: புத்தபிரான் பரிநிர்வாணமடைந்து கொண்டிருந்த விசாகப் பெளர்ணமி தினத்தில் விஜயனும் அவனது குழுவினரும் இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்தனர். இவ்வாறு இலங்கையில் காலடி எடுத்து வைத்துக்கொண்டிருந்த விஜயனும் அவனது வழித் தோன்றல்களுமே பெளத்தத்தை பாதுகாக்கப்போகின்றனர் என்று பரிநிர்வாணமடைந்துகொண்டிருந்த புத்தபிரான் கூறியதாக மகாவம்சத்திலுள்ளது. மேலும் அவ்விஜயன் இலங்கையில் அரசமைத்து ஆட்சி செலுத்தினான் என்றும்; அதனைத்தொடர்ந்து சிங்கள் பெளத்த அரசமைப்பு உருவானதென்றும் மகாவமசம் வர்ணிக்கின்றது. இம்மகாவம்சம் ஐதீகத்தின் பிரகாரம் பின்வரும் முடிவுகளிற்குத் தெளிவாக வரலாம்.

1. இலங்கை பெளத்த மதத்தின் பொருட்டு புத்தபிரானால் தெரிந்தெடுக்கப்பட்ட தீவு.

2. விஜயனே இலங்கையில் முதல் மனிதன்.

3. விஜயனும் அவனது வழித்தோன்றல்களுமே பெளத்தத்திற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்.

4. விஜயனுடனேயே இலங்கையில் அரசு என்பது உருவானது.

அவ்வாறாயின் தம்மதீப என்ற இந்த ஐதீகம் இனம், மதம், மொழி நாடு, அரசு ஆகிய இவ்வைந்து அம்சங்களையும் ஒன்றாகப் பின்னிப்பிணைந்த ஒரு கோட்பாடாகும். இத் "தம்மதிப" கோட்பாட்டின்படி இலங்கைத் தீவானது ஓரினம், ஒரு மதம், ஒரு மொழி, ஓர் அரசு என்பவற்றுக்கு மட்டுமே உரியதென்று ஆகிவிட்டது.

இலங்கைத் தமிழரின் சுதந்திரப் போராட்டம் 1950 களில் ஆரம்பித்தாலும் உடனே கருகிவிட்டது. 1969 களில் குட்டிமணி, ஜெகன் போன்ற இளைஞர்கள் தமிழீழ விடுதலை அமைப்பு என்ற அமைப்பை உருவாக்கினார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் பொன்னுதுரை சிவகுமரன் போன்றோர் இணைந்தனர். 1975 ஆம் ஆண்டு ஈழ விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.

1974, ஜனவரி நடைபெற்ற உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளில் 9 தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதன்பின் தமிழ்  இளைஞர்கள் தங்கதுரை தலைமையில் தமிழீழ விடுதலை ராணுவம் (TELA) என்ற அமைப்பை ஏற்படுத்தினர். 

 1979 ஜூலை 3 இல் சிங்கள் பகுதிகளை வவுனியா மாவட்டத்துடன் இணைக்கு பிரேரணை மக்கள் மனதில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. 1979 ஜூலை 14 இன்பம் மேயர் துரையப்பா படுகொலை இலங்கை மக்கள் இன்றும் மறக்கமாட்டார்கள்.

1979 டிசம்பர் 31ம் தேதிக்குள் பயங்கரவாதத்தை ஒழிக்கப்போவதாக குளுரைத்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மேலதிக ராணுவ அனுப்பி பிரிகேடியர் விரதுங்கை அனுப்பி, பயங்கரவாத நடவடிக்கைகளை இல்லாதொழிக்க அவசரகால நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவித்தார். 1979 ஜூலை 19 பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பயங்கரவாத ஒடுக்குமுறைச் சட்டம் மேலிம் அடக்கு முறையைக் கையாண்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam, LTTE)

வேலுப்பிள்ளை பிரபாகரன்

தமிழீழ விடுதலைப் புலிகள் சுருக்கமாக விடுதலைப் புலிகள் அல்லது த.வி.பு என்பது இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட இனவேற்றுமைகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய போராட்ட அமைப்பு ஆகும். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார். அவரால் இவ்வியக்கம் 1976 இல் உருவாக்கப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகள் கொள்கைகள்

தன்னாட்சி, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம், இயக்க ஒழுக்கம், சாதிபேதமற்ற சமூகம், சம பெண் உரிமைகள், சமய சார்பின்மை தனித்துவமான சமவுடமை ஆகியன தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகள் என்பர்.

படைத்துறை

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைப் பிரிவானது பின்வரும் தனிப்பட்ட பிரிவுகளைத் கொண்டுள்ளது.

1. தரைப்புலிகள் - புலிகளின் தரைப்படை பல சிறிய படையணிகளாக பிரித்து  நிர்வகிக்கப்படுகிறது.

2. பெண்புலிகள்

3. கடற்புலிகள் - கடற்சார் போர் மற்றும் கடல் சார் போரியல் உதவிகளைச் செய்யும் அணி.

4. ஈரூடகப் படையணி - தரையிலும் கடலிலும் போரிடக்கூடிய சிறப்பு அணியாகும். 

5. வான்புலிகள் - இது வான்கலங்களைக் கொண்ட அணியாகும். இதில் சில இலகு வகை விமானங்கள் காணப்படுகின்றன.

6. கரும்புலிகள் - சிறப்பு தற்கொலைத் தாக்குதல் அணி. சிறப்புப் படையணிகள்.

7. வேவுப்புலிகள் - உளவுத்துறையாகும், இது உலகம் முழுவதும் செயற்பட்டு வருகிறது விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவு. இவையனைத்தும் நேரடியாக மத்திய தலைமையகத்தால் கட்டுப்படுத்தப்பட்டன.

இந்திய அமைதி காக்கும் படையை (IPKF- Indian Peace Keeping Force)

1987 ஆம் ஆண்டு இலங்கை ராணுவம் யாழ் குடாநாட்டைப் புலிகளிடமிருந்து மீட்கும் நோக்குடன் ஒப்பரேசன் லிபரேசன் (operation liberation) என்ற ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழ் நாட்டில் பெருகி வந்த ஈழத் தமிழர் ஆதரவினாலும் இந்தியா நோக்கிச் சென்ற அகதிகளாலும் இந்தியா முதன் முறையாக இலங்கை உள்நாட்டுப் போரில் பூமாலை நடவடிக்கையில் இலங்கை வான்பரப்பை மீறி யாழ்பாணத்துக்கு உணவுப் பொருட்களை வழங்கியதன் மூலம் தலையிட்டது. பின்னர் ஏற்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கையும், இந்தியாவும் 1987-ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி இலங்கை அரசு தமிழருக்கு கூட்டாட்சி வடிவிலான தீர்வை வழங்கும். அதேவேளை ஈழ இயக்கங்கள் போர்க் கருவிகளை கீழ் வைக்க வேண்டும். போர்க் கருவிகளைக் களைவதை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்தியா, இந்திய அமைதி காக்கும் படையை (IPKF- Indian Peace Keeping Force) அனுப்புவதாகவும் ஒப்பத்தில் ஏற்பாடாகியிருந்தது.

பல ஈழ இயக்கங்கள் இவ்வொப்பந்தத்தை ஏற்றுக் கொண்டாலும், புலிகள் அமைப்பு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொள்வதற்கு எதிர்புத் தெரிவித்து ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்திய அமைதிப்படை புலிகளிடம் ஆயுதங்களை களைந்துக்கொண்டு இருந்த போது இந்திய உளவுத்துறையான RAW பிற போராளிக்குழுக்களுக்கு போர் கருவிகளைத் தந்தது . இதனால் புலிகள் தமது போர்க் கருவிகளை இந்திய அமைதி காக்கும் படைகளிடம் ஒப்படைக்க மறுத்தனர். இதை இந்திய அமைதிப் படை தளபதி அரிகிராத் சிங்க தன்னுடைய Indian Intervention in Sri Lanka என்கிற நூலில் உறுதிபடுத்துகிறார். 


இலங்கைத் தமிழர் இனப்படுகொலை 

இலங்கைத் தமிழர் இனப்படுகொலை என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும், ஏவுகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்தது இன அழிப்பைக் குறிக்கும். குறிப்பாக தமிழர்களின் நியாயமான பிரச்னைகளுக்கு எவ்வித நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்காது, பொது மக்களைப் பொருட்படுத்தாது மேற்கொண்டுவரும் போரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்படுதலைக் குறிக்கிறது. 2009 போரில் மட்டும் சுமார் 20,000 மக்கள் கொல்லப்பட்டனர். மே தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஐநா அறிக்கை சுமார் குறைந்தது 7,000 மக்கள் வரையில் கொல்லப்பட்டதாக கூறுகிறது. எனினும் இந்த அறிக்கை முழுமையானது இல்லை என Amnesty Inernational சுட்டிக்காட்டி, முழுமையான தகவலை ஐநா வெளியிட வேண்டும் என்று கோரி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக 1,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மானிட வரலாற்றில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிக நீண்ட மிகப் பெரிய இனப்படுகொலை இதுவென கருதப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் படுகொலை

முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கே அமைந்த முள்ளிவாய்க்கால் என்ற கடற்கரை கிராமத்தில், ஈழப் போரின் இறுதிக் கட்டம் 2009-ஆம் ஆண்டில் நிறைவுற்றது. இறுதிப் போரின் போது ஒன்றுமறியாத நாற்பதாயிரம் தமிழர்கள், சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். 

போர் முடிந்து 10 ஆண்டுகாலம் நிறைவடையும் இத்தருணத்திலும் ஈழத்தமிழருக்கு நீதியும், அமைதியும் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம்.

References:

  • இலங்கைத் தமிழர் - யார், எவர்? கார்த்திகேசு சிவத்தம்பி
  • இலங்கைத் தமிழர் வரலாறும் இன்றைய நிலையும் ம.செல்லத்துரை
  • இலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படைகள்- மு. திருநாவுக்கரசு  1991


தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com