இன அரசியல்-15: இன உணர்வு, இனவாதம், இனவெறி

இன அரசியல்-15: இன உணர்வு, இனவாதம், இனவெறி

முன்னால் நாம் விவாதித்த மிக நெருக்கமான உறவுகளைக் கொண்ட இனங்களுக்கிடையே ஏற்பட்ட விரிசல்கள் , கலகங்கள் பற்றி பார்ப்போம்.

இன உணர்வு பற்றி யாரும் சிறிதும் கூச்சப்படுவதில்லை. சில சமயம் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய விஷயமாகவே இன உணர்வு இருந்துள்ளது.

இன உணர்வு என்பது ஆழ்ந்த நோக்கில் அர்த்தமற்ற ஒன்று. ஆயினும் சமுதாயத்தில் இனவேறுபாடுகள் உள்ளபோது அவ்வவ்வேறுபாடுகள் வாழ்வின் வெவ்வேறு துறைகளைப் பாதிக்கும்போது அந்த உணர்வைப் பெரும்பாலானோரால் தவிர்க்க முடிவதில்லை. இன உணர்வு என்பது ஒரு மனிதனது தன்னடையாளங்களில் ஒன்றாகச் செயல்படுகிறது. அது மொழி மதம், கலாசாரம் போன்ற பல்வேறு வகையில் வெளிப்படும் காரணத்தால் அது முற்றாக புறக்கணிக்கக்கூடிய ஒன்றல்ல. மனித சமுதாயமும், சிந்தனையும் மேலும் வளர்ச்சியடையும்போது இன உணர்வுகள் சற்றே ஒதுக்கி வழிவிடவே செய்வன. ஆயினும் மனிதனை அவன் உள்ளவாறே ஏற்றுக்கொள்ளும எந்தச் சிந்தனையும் இன உணர்வுகளை மதியாமல் இருக்க முடியாது. இன்றைய சூழ்நிலையில் இன உணர்வு என்பது இயல்பான ஒன்று என்ற அளவில் மதிக்கப்படவேண்டிய ஒன்றாக உள்ளது. இதைக் கடப்பவர்கள் குறுகிய சுய நலனுக்காக கடப்பவர்களாக இருக்கலாம் அல்லது பரந்து விரிந்த மனித இன முழுமையினது நலன் நாடுபவர்களாக இருக்கலாம். எனவே, இனஉணர்வு இல்லாமை என்பது மட்டும் முற்போக்கான ஒன்றாகிவிடாது. அதன் இடத்தில் பரந்துபட்ட மானுட உணர்வு உள்ளதா அல்லது வெறும் சுயநலமோ சுரண்டும் வர்க்க நலமோ உள்ளதா என்பதையொட்டியே இனஉணர்வு இல்லாமையை மதிப்பிட முடியும்.


இனவாதம், இன வெறி

மனிதர்கள் மத்தியில் இன உணர்வுகள் வேறுபடும் அளவுகளில் இருக்கலாம். தன் இனத்தின் நலனை மற்ற இனங்களின் நலன்களுக்கு முரணானதாகக் காணவும், காட்டவும் முனையும் போதும் தன் இனத்தின் இயல்புகளை இன்னொரு இனத்தினதும் மேலான ஒன்றாகக் காட்ட முனையும் போதும் இன உணர்வு இனவாதமாகிறது. இது மற்ற இனங்கள் பற்றிய இழிவான மதிப்பீடு, கலாசார வேறு பாடுகளை ஏற்றத்தாழ்வுகளாகத் தரம் பிரித்தல், பிரச்னைகளை இனமொன்றின் கண்ணோட்டத்தில் மட்டுமே தனிமைப்படுத்திக் காண முனைதல் போன்று, தன்னை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது. இன உணர்வு இனவாதமாகும்போது முரண்பாடுகள் பகைமைத் தன்மை கொள்ள ஆரம்பிக்கின்றன. பகைமை உணர்வுகள் வளர்ந்து சகிப்புத் தன்மையின் எல்லை மீறப்படும்போது இனவாதம் இன வெறியாகிறது.

ஒரே சமுதாயம் முன்னேறிய “நாகரிக’’ சமுதாயம் என்பதால் அங்கே இனவாதமும் இனவெறியும் இல்லை என்றாகாது. ஐக்கிய அமெரிக்காவில் நீக்ரோக்களுக்கு எதிரான இன வெறி, தென்னாப்பிரிக்க வெள்ளை இனவெறி, ஜெர்மனியில் ஹிட்லரின் இனவெறி, ஜாரிஸ் ரஷியாவில் பேரினவாதம் இவையெல்லாம் பின்தங்கிய சமுதாயங்கட்குரியவல்ல, இனவாதமும் இனவெறியும் தொற்று நோய்களைப் போல் பரவுகின்றன. ஒரு இனத்தின் இனவாதமும் இனவெறியும் மற்ற இனங்களிடையே இனவாதத்தையும் இனவெறியையும் தூண்டி வளர்த்து, அதன் மூலம் தம்மையும் வளர்த்துக் கொள்கின்றன.

மனிதனது பலவீனங்களைச் சுரண்டும் வர்க்கங்கள் எப்போதும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இன உணர்வு இன்றைய சமுதாயத்தின் தனிமனிதனுக்கு ஒரு ஆதாரமாகவே தோன்றினாலும் அது உண்மையில் அவனுடைய பலவீனம். அந்த இன உணர்வை மனிதர்களை வேற்றுமைப்படுத்தவும் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றுபடாமல் தடுக்கவும் பயன்படுத்துவதில் பிற்போக்குச் சக்திகள் மிகவும் கவனம் செலுத்தி வந்துள்ளன. அறியாமையும் தெளிவீனங்களும் இன உணர்வுகளை உக்கிரப்படுத்த உதவும் சாதனங்கள் இனவாதப் பொய்களையும் அரை உண்மைகளையும் நம்பிப் பழகிவிட்ட மனங்களுக்கு உண்மை உடனடியாகப் புலனாகாது. அதற்காக நாம் சோர்ந்துவிட அவசியம் இல்லை. இனவாதிகளும் இனவெறியர்களும் என்றைக்குமே மக்களை ஏமாற்ற முடியாது. அதற்காக, கைகளைக் கட்டிக்கொண்டு காலம் வரும் என்று காத்திருக்கத் தேவை இல்லை. இனவாதச் சேற்றால் கலங்குண்ட மனங்களை தெளிய வைக்கும் கடமை நம்முன் உள்ளது. மற்றவர்களின் இனவாதத்தை இலகுவாக அடையாளம் காணும் நாம் நம் மத்தியிலுள்ள இனவாதத்தையும் அடையாளம் காணத் தவறக்கூடாது. இன வாதத்தை ஒழிப்பது என்பது பல முனைப்போராட்டம். அதற்கு மற்ற இனத்தவரைப் புரிந்து கொள்ளவும் உள்ளபடியே மனிதர்களாக ஏற்றுக் கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

இனப் பகை 

கலாசார வேறுபாடுகள், முக்கியமாக மத நம்பிக்கைகள் சடங்கு சம்பிரதாயங்கள் தொடர்பானவை, இனங்களினதும் சிறுபான்மை இனப் பிரிவுகளினதும் தனித் தன்மையை வலியுறுத்துகின்றன. அவை இனங்கள் ஒன்றையொன்று பரஸ்பரம் புரிந்துகொள்வதற்குத் தடையாக இருக்க அவசியமில்லை. ஆயினும் உயர்வு தாழ்வு அடிப்படையிலான வேறுபடுத்தல்களுக்கு அவை இடமளிக்கின்றன. இரு இனங்களிடையே சினேகப்பூர்வமான உறவு வளரும்போது இவ்வேறுபாடுகளே கலாசாரப் பரிமாறலுக்கும் அதன் விளைவான கலாசார விருத்திக்கும் துணை நிற்கின்றன. மொழி வேறுபாடுகளுங்கூட, முதலில் இனங்களிடையே உறவுக்குத் தடையாக நின்றாலும், சினேக உறவுகள் தோன்றியதும், தொடர்பின் விளைவாக மொழிகளின் விருத்திக்கு வழி செய்கின்றன, இது வரலாறு நமக்குப் பன்முறை கூறியுள்ள பாடம்.

இனங்களிடையே உள்ள கலாச்சார, மொழி வேறுபாடுகள் இனப்பகைமை வளர்க்கப் பயன் படுத்தப்பட்ட சூழ்நிலைகள் பல உள்ளன. இதற்கு ஆதாரமாக ஐரோப்பாவில் நிலவிய யூத இன விரோத உணர்வுகளையும் ஆப்பிரிக்காவின் தென்முனையில் நிறவெறியையும் விட அதிகமாக எதையும் குறிப்பிடவேண்டியதில்லை.

நவீன வரலாற்றில் எப்போதும் அதிகார வர்க்கங்கள் தம் நலன்களைப் பேணி ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரித்து வைக்கவே இவ்வேறுபாடுகளைப் பயன்படுத்தியுள்ளன. எனவே, இனங்களிடையே வேறுபாடுகள் பற்றிப் பரந்துபட்ட மக்களின் நலன்களை நாடுவோரது கண்ணோட்ட மும் சுரண்டும் வர்க்கங்களின் கண்ணோட்டமும் எதிர்மாறானவை எனலாம்.

வரலாற்று அனுபவங்கள், வரலாறு விளனப்பட்டுள்ள விதம், சமுதாய நெருக்கடிகளின்போது தனிப்பட்டோரதும் குழுக்களினதும் குறுகிய கால நலன்கள் பாதிக்கப்படல் போன்றவை இனங்களிடையிலான முரண்பாடுகளாகத் தோன்றுகின்றன அல்லது தோற்றுவிக்கப்படுகின்றன. இவை அரசியல் நேரடியாகப் பயன்படுத்தப்படக் கூடிய சூழ்நிலையில் எவ்வித தயக்கமுமின்றிப் பிற்போக்குச் சக்திகளால் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் நீடிப்பு இனப்பகைக்கு வழிகோலுகிறது.

இனங்களிடையிலும் இனப் பிரிவுகளிடையிலும் நல்லுறவு வளர்த்தல் ஒடுக்கப்பட்ட மக்களது நலனுக்கு அவசியமானது. ஒரு இனத்தவர் மற்ற இனத்தவர்கட்குரிய குறிப்பான பிரச்சினைகளையும் அவர்களது வாழ்க்கை முறையையும் சிந்தனைகளையும் பற்றி ஓரளவு தெளிவு பெறுவதும் பிரச்னைகளை தம் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி மற்றவர்களது கண்ணோட்டத்திலும் காண முயல்வதும் மக்களிடையே இன அடிப்படையிலான முரண்பாடுகளில் பகைமையைக் குறைந்து சினேக இயல்பை வலுவூட்ட உதவும்.

ஒரு சாதியினர் பற்றி இன்னொரு சாதியினர் நடுவில் பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இவை யாவுமே தீங்கானவை அல்ல. எல்லாமே அடிப்படை இல்லாதனவுமல்ல. ஆனால், சில நேரங்களில் ஓரிரு தனி நபர்கள் பற்றி அனுபவங்கள் ஒரு முழு இனத்துக்குமே உரியனவாக்கப்படுகின்றன. ஒரு நேரத்தில் ஒரு மனிதனது ஒரு குறிப்பிட்ட செயல் அவனது முழுமையும் குறிப்பது ஆகிவிடாது. தனி மனிதனது இயல்பு அவன் சார்ந்த முழு இனத்தினது இயல்புமாகி விடாது. பகை முரண்பாடுகளை வளர்க்க விரும்புவோர் ஒருவனது தவறான செயலை வைத்து அவனை அவனுடைய முழு இனத்தையுமே தீயவர்களாகச் சித்தரிக்க முனைகிறார்கள். இது இன வெறியர்க்கும் மதவெறியர்கட்கும், சாதி வெறியர் கட்கும் பொருந்தும். இவர்கள் ‘பகை’ இனத்தின் நல்ல பண்புகளை எல்லாம் மூடி மறைப்பதிலும் அவர்களது நியாயமான பிரச்னைகளை எல்லாம் மறைப்பதிலும் கூடத் தம் பங்கையாற்றவே செய்கிறார்கள்.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com