சர்வதேச உடன்படிக்கைக்குக் கட்டுப்பட்டவர்கள், விதிவிலக்குகள், செல்லுந்தன்மை மற்றும் பொருள் விளக்கம்

சர்வதேச உடன்படிக்கைக்குக் கட்டுப்பட்டவர்கள், விதிவிலக்குகள், செல்லுந்தன்மை மற்றும் பொருள் விளக்கம்

உடன்படிக்கைக்குக் கட்டுப்பட்டவர்கள் யார் யார்?
(Person bound by Treaty)

    “உடன்பாடுகள் மூன்றாம் நபருக்குத் தீங்கும் விளைவிக்காது பயனும் தராது” (Pacta terties nec nocent nec prosunt-Agreement neither harm nor benefit third parties) எனும் சட்ட முதுமொழியின் படி ஒப்பந்தங்கள் அல்லது உடன்பாடுகள் தரப்பினர் அல்லாத மூன்றாவத நபர்களைக் கட்டுப்படுத்தாது. இது ஒப்பந்தச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். சர்வதேச உடன்படிக்கைகளும் ஒப்பந்த வகைப்பட்டது என்பதால் உடன்படிக்கைகளும் அதன் தரப்பினர்களை மட்டுமே கட்டுப்படுத்தக் கூடியதாகும். இக்கோட்பாட்டையே 1969 ஆம் ஆண்டு  உடன்படிக்கைகள் சட்டம் பற்றிய வியன்னா மாநாட்டின் 34 வது ஷரத்து கூறுகிறது. ஆனால், 35 முதல் 38 வரையிலான ஷரத்துக்களில் இக்கோட்பாட்டுக்கான விதிவிலக்குகள் கூறப்பட்டுள்ளன.

விதிவிலக்குகள் (Exceptions)

(1) மூன்றாம் நபர்களுக்கு சில உரிமைகளை வழங்கும் உடன்படிக்கைகள்:
(2) நிலைநாட்டப்பட்ட சர்வதேச வழக்காற்றுச் சட்டத்தை அறிவிக்கும் பலதரப்பு உடன்படிக்கை.
(3) புதிய சர்வதேசச் சட்ட விதிகளை உருவாக்கும் பரதரப்பு உடன்படிக்கைகள்.
(4) துறைமுகங்கள், நீர்வழிகள் போன்றவற்றுக்கு சர்வதேசத் தகுநிலை வழங்கும் சர்வதேச உடன்படிக்கைகள்.
(5) உலகளாவிய வகையில் செயல்படுவதற்காக அறிவிக்கப்படும் பலதரப்பு மாநாடுகள் அல்லது ஐ.நா.பிரகடனங்கள்.
ஆகியன உடன்படிக்கையின் தரப்பினரல்லாத நாடுகளையும் கட்டுப்படுத்தக் கூடியனவாகும்.

உடன்படிக்கைகள் தரப்பினரால் கடைபிடிக்கபட வேண்டும் (Pacia Sunt Servanda)
    “உடன்படிக்கைகள் தரப்பினரால் கடைபிடிக்கப்படி வேண்டும்” எனும் சட்ட முதுமொழி சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் பொருந்தக் கூடியதாகும். நாடுகள் உடன்படிக்கையின் கீழ் தாங்கள் ஏற்றுக் கொண்ட கடப்பாடுகளை நல்லெண்ணத்துடன் நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளன என்று சர்வதேசச் சட்ட ஆணையும் கூறியுள்ளது. இதே கோட்பாடு வியன்னா மாநாட்டின் ஷரத்து 26-இலும் கூறப்பட்டுள்ளது. உள்நாட்டுச் சட்டத்தின் வகைமுறைகளைக் காரணம் காட்டி சர்வதேச உடன்படிக்கை மீறுவதை நாடுகள் நியாயப்படுத்தக் கூடாது என்று வியன்னா மாநாட்டு விதி கூறுகிறது. சர்வதேச உடன்படிக்கைகளை நம்பி நாடுகள் செயல்பட வேண்டியுள்ளதால், தரப்பு நாடுகள் அதனதன் கடப்பாடுகளை நல்லெண்ணத்துடன் நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது சர்வதேச ஒத்துழைப்பிற்கு அவசியமானதாகும்.
Austrlia-Vs-France [Nuclear Test Case] - அணுச் சோதனைகள் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இக்கோட்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. நல்லெண்ணக் கோட்பாடு, சர்வதேசச் சட்டக் கட்டுப்பாடுகளை உருவாக்குவதிலும், நிறைவேற்றுவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது என்று கூறியுள்ளது.

உடன்படிக்கைகளின் செல்லுந்தன்மை (Validity of Treaties) 
    சர்வதேச உடன்படிக்கை என்பது அடிப்படையில் சர்வதேச நபர்களுக்கு இடையிலான ஒப்பந்தமே என்பதைக்  கண்டோம். எனவே ஒரு செல்லத்தக்க ஒப்பந்தத்திற்குரிய அனைத்துக் கூறுகளும் செல்லத்தக்க உடன்படிக்கைக்கும் பொருந்தக் கூடியதே ஆகும். அதனடிப்படையில் வியன்னா மாநாட்டின் 48 முதல் 58 வரையிலான ஷரத்துக்கள் ஒரு உடன்படிக்கையின் செல்லுந்தன்மையை  தீர்மானிப்பதற்கான விதிகளை வகுத்துள்ளது. அவை:

(i) தவறு (Error)
    ஒரு உடன்படிக்கை இறுதி செய்யப்படுவதற்கு அடிப்படையாக இருப்பதாக ஒரு நாடு நினைத்துக் கொண்டிருந்த பொருண்மை (Fact) ஒன்று உண்மையில் இல்லை என்று தெரியவரும் போது அந்நாடு அந்த உடன்படிக்கை செல்லாது எனக் கூறலாம். ஆனால், அந்தத் தவறு ஏற்படக் காரணமே அந்த நாடுதான் எனில் அந்த உடன்படிக்கை செல்லாது எனக் கூறமுடியாது. அதுபோல உடன்படிக்கையின் வாசகங்களில் உள்ள வார்த்தைகளில் உள்ள தவறுக்காக அந்த உடன்படிக்கையே செல்லாது எனக் கூறமுடியாது.

(ii) மோசடி (Fraud)
    மற்றொரு நாட்டின் மோசடியான ஏமாற்று நடவடிக்கையால் ஒரு உடன்படிக்கையில் ஒப்பமிட்ட நாடு அந்த மோசடியைக் காரணம் காட்டி அந்த உடன்படிக்கையை செல்லாததாக்கலாம்.

(iii) பிரதிநிதியின் ஊழல் (Corruption of a representative)
    ஒரு நாட்டின் பிரதிநிதியின் சம்மதம், அந்தப் பிரதிநிதிக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ லஞ்சம் கொடுத்து பெறப்பட்டிருந்தால் அந்த ஊழலைக் காரணம் காட்டி தான் அளித்த சம்மதத்தை செல்லாததாக்கலாம்.

(iv) அச்சுறுத்தல் (Coercion)
    ஒரு நாட்டின் பிரதிநிதியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அச்சுறுத்தி பெறப்பட்ட சம்மதத்துக்கு அந்த நாடு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை.

(v) வன்முறை பிரயோகம் (Use of Force)
    ஐக்கிய நாடுகள் சாசனத்தின் சர்வதேசச் சட்டக் கோட்பாடுகளுக்கு விரோதமாக ஒரு நாட்டை வன்முறையைப் பயன்படுத்தி அதாவது ராணுவ பலத்தை பயன்படுத்தி அல்லது பயன்படுத்தப் போவதாக மிரட்டி ஏற்பட்டுத்தப்பட்ட உடன்படிக்கை செல்லத்தக்க உடன்படிக்கை அல்ல. அவ்வாறு வன்முறை மற்றும் பலத்தை பிரயோகித்து அச்சுறுத்திப் பெறப்பட்ட சம்மதம் செல்லத்தக்க சம்மதம் அல்ல. எனவே அந்த உடன்படிக்கையும் செல்லத்தக்கதல்ல. அத்தகைய உடன்படிக்கைகள் பொதுவாக சமனற்ற உடன்படிக்கைகள் (Unequal Treaties) என்று அழைக்கப்படுகிறது. முன்னாள் சோவியத் யூனியன், சீனா போன்ற சோசலிச நாடுகளே இக்கண்ணோட்டத்தை முன்வைத்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். சமனற்ற உடன்பாடுகளை அச்சுறுத்தப்பட்ட நாடு நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை.

கட்டாயப்படுத்தும் சட்டத்துடன் முரண்படும் உடன்படிக்கைகளின்ன செல்லுந்தன்மை (Validity of treaty conflicting with jus congens)
    கட்டாயப்படுத்தும் சட்டம் (jus cogens)  எனப்படும் மீற முடியாத அடிப்படை நியதிக்கு (pre-emptory) முரணாக சர்வதேச உடன்படிக்கைகள் மேற்கொள்ள முடியாது. கட்டாயப்படுத்தும் சட்டம் அல்லது மீற முடியாத அடிப்படை நியதி என்பது சர்வதேச நாடுகளின் உலக சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதிகள் ஆகும். எனவே ஏதேனுமொரு உடன்படிக்கை அல்லது உடன்படிக்கையின் ஏதேனுமொரு ஷரத்து கட்டாயப்படுத்தும் சட்டத்துடன் முரண்படுமானால் அந்த உடன்படிக்கை அல்லது ஷரத்து செல்லாததாகிவிடும். இந்த விதி வியன்னா மாநாட்டின் 53வது ஷரத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் வியன்னா மாநட்டின் 64வது ஷரத்து, ஒரு உடன்படிக்கை ஏற்படும் போது இல்லாமல், பின்னாளில் உருவான கட்டாயப்படுத்தும் சட்டத்தின் மீற முடியாத அடிப்படை நியதிக்கு முரணாக ஒரு உடன்படிக்கை ஆகிவிட்டாலும் அந்த உடன்படிக்கை செல்லாது எனக் கூறுகிறது. ஆனால் இந்த விதி, உடன்படிக்கைகள் பற்றிய நிச்சயத் தன்மையை பாதிப்பதால் உலக  நாடுகளில் பல இந்த விதியை ஏற்றுக் கொள்ளவில்லை.

உடன்படிக்கைகளின் மறு ஆய்வு, திருத்தம் மற்றும் மாற்றம் (Revision, Amendment and Modification of Treaties)
    கால மாற்றத்தில் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் ஏதேனுமொரு தரப்பு நாட்டுக்கு கூடுதல் சுமையை தருவதாக ஆகலாம். அல்லது உடன்படிக்கைக்கான காரணங்களில் மாற்றம் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில் உடன்படிக்கையின் தரப்பினர்கள் அந்த உடன்படிக்கையை மறு ஆய்வு செய்து தேவையான திருத்தங்களையும் மாற்றங்களையும் செய்யலாம். பெரும்பாலும் உடன்படிக்கைகளில் திருத்தம் செய்வதற்கான நடைமுறை அந்த உடன்படிக்கையிலேயே கூறப்பட்டிருக்கும்.
    உடன்படிக்கைகளில் திருத்தம் செய்வது பற்றிய பொதுவான விதிகள், வியன்னா மாநாட்டின் 39வது ஷரத்தில் கூறப்பட்டுள்ளது. பலதரப்பு உடன்படிக்கையில் திருத்தம் செய்வது குறித்து ஷரத்து 40 கூறுகின்றது. ஷரத்து 39 இன்படி திருத்தத்திற்கான முன்மொழிவு தரப்பு நாடுகள் அனைத்திற்கும் அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். திருத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்து கையொப்பமிட்ட நாடுகளுக்கு மட்டுமே திருத்தப்பட்ட உடன்படிக்கை பொருந்தும். அந்த திருத்தத்தில் கையொப்பமிடாத நாட்டை அந்த திருத்தம் கட்டுப்படுத்தாது. ஷரத்து 40 இன்படி பலதரப்பு உடன்படிக்கையின் தரப்பினர்களில் ஒரு சில நாடுகள் மட்டும் அந்த உடன்படிக்கையின் மீதான திருத்தத்திற்கான தனி உடன்படிக்கை அதில் ஒப்பமிட்ட நாடுகளுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும். மற்ற நாடுகளைப் பொருத்த வரை திருத்தப்படாத உடன்படிக்கையே பொருந்தக் கூடியதாகும்.

உடன்படிக்கைகளின் பொருள் விளக்கம் (Interpretation of Treaties)
    உடன்படிக்கையில் எழுதப்பட்டுள்ள வாசகங்களுக்கான உண்மையான அர்த்தம் பற்றிய குழப்பம் ஏற்படும் போது அல்லது அந்த வாசகங்கள் இரு பொருள்படுவது போலவோ, ஒன்றுக்கொன்று முரண்படுவது போலவோ, பொருள் மயக்கம் ஏற்படும் போது அந்த வாசகத்திற்கான உண்மையான பொருள் என்ன என்பதற்கான பொருள்விளக்கம் அளிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது. பொதுவாக உடன்படிக்கைகளுக்கு, சர்வதேச நீதிமன்றத்தால் அல்லது ஐ.நா.சபை அல்லது ஐ.நா. சபையின் தொழில்நுட்ப அங்கங்களால் பொருள் விளக்கம் அளிக்கப்படுகிறது. பெரும்பாலும் உடன்படிக்கைகளின் பின்னிணைப்பாக அந்த உடன்படிக்கைகளில் உள்ள சொற்கள், வாசகங்களுக்கு எப்படிப் பொருள் கொள்ள வேண்டும் என்பதற்கான பொருள் விளக்க விதிகளும் இணைக்கப்பட்டிருக்கும். அதுபோல ஒரு உடன்படிக்கை ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் எழுதப்பட்டிருந்தால் அவற்றுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டால் எந்த மொழியில் உள்ளதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் உடன்படிக்கையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். 

பொது விதிகள் (General Principles) 
    சர்வதேச உடன்படிக்கைகளுக்கு பொருள் விளக்கம் காண்பது தொடர்பான பொது விதிகளை பார்போம்.

(i) இலக்கணப் பொருள் சார்ந்த பொருள்விளக்கம் (Grammatical Interpretation)
    ஒரு உடன்படிக்கைக்கான பொருள் விளக்கம் காணும்போது, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளுக்கான நேரடியான இலக்கணப் பொருளின் படியே பொருள் விளக்கமாகும். இதுவே உடன்படிக்கைகளின் பொருள்விளக்கம் பற்றிய பொதுவான விதியும்  ஆகும். அவ்வாறு இலக்கணப் பொருள் சார்ந்து பொருள் விளக்கம் காணும் போது அதன் பொருள், அர்த்தமற்றதாக அல்லது குழப்பம் தரக் கூடியதாக அல்லது உடன்படிக்கையின் பிறவகை முறைகளுடன் ஒத்துப் போகாததாக அல்லது தரப்பு நாடுகளின் நோக்கத்துடன் முரண்படுவதாக இருந்தால் மட்டுமே இலக்கணப் பொருள் சார்ந்த பொருள்விளக்கம் தவிர்க்கப்பட வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் அந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்படும் போது அதன் தரப்பு நாடுகளின் நோக்கம் என்னவாக இருந்தது என்பது வேறு வழிமுறைகளில் உறுதி செய்யப்பட வேண்டிய அவசியம் எழுகிறது. அதற்கு வேறு வகையான பொருள் விளக்கம் பயன்படுத்தப்பட வேண்டும். 

(ii) உடன்படிக்கை எழுந்த சூழ்நிலையும், நோக்கமும் (Object and content) 
    ஒரு உடன்படிக்கையின் நேரடியான இலக்கணப் பொருள் தெளிவில்லாமல் இருந்தால் அந்த உடன்படிக்கை உருவாகக் காரணமாக இருந்த சூழ்நிலையையும் அதன் நோக்கத்தையும் கணக்கில் கொண்டு பொருள் விளக்கம் காண வேண்டும்.

(iii) நியாயமான தன்மையும் முரண்பாடின்மையும் (Reasonableness and Consistency)
    உடன்படிக்கைக்கான பொருள்விளக்கம் காணும் போது, நியாயமான அர்த்தம் கிடைக்கும் வகையில் பொருள்விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் அவ்வாறு அளிக்கப்படும் பொருள்விளக்கம் நிலவும் சர்வதேசச் சட்ட விதிகளுடன் முரண்படாத வகையில் அமைய வேண்டும். 

(iv) செயல் விளைவு பற்றிய கோட்பாடு (Principle of Effectiveness) 
    உடன்படிக்கையின் வாசகங்களை எழுதும் போது அதன் தரப்பு நாடுகள், ஒரு குறிப்பிட்ட செயல் விளைவைத் தருவதற்காகவே அதை எழுதுகின்றனர். எந்த விளைவும் தராத அர்த்தமற்ற வாசகங்களை எழுதுவதில்லை. எனவே உடன்படிக்கைக்கு பொருள்விளக்கம் காணும் போது, அந்த வாசகத்திற்கு செயல் விளைவு அளிக்கும் வகையிலேயே பொருள்விளக்கம் அளிக்க வேண்டும். எந்தவொரு வகைமுறையினையும் அர்த்தமற்றதாக அல்லது செயல் விளைவு அற்றதாக ஆக்கும் வகையில் பொருள்விளக்கம் காணக் கூடாது. 

(v) வெளிப்புறக் காரணிகளை நாடுதல் (Recourse to Extrinsic material) 
    பொதுவாக உடன்படிக்கையின் வாசகங்களே பொருள் விளக்கத்திற்கான அடிப்படையாக இருந்தாலும், அந்த உடன்படிக்கையில் வெளிப்படையான தடை எதுவும் இல்லாத பட்சத்தில், பின்வரும் வெளிப்புறக் காரணிகளையும் கணக்கில் கொள்ளலாம்.

(a) கடந்த கால வரலாறு, அதே தரப்பு நாடுகளுக்கு இடையில் அல்லது ஏதேனுமொரு தரப்பு நாட்டுக்கும் மூன்றாம் நாடு ஒன்றுக்கும் இடையே எட்டப்பட்ட முந்தய உடன்படிக்கைகள்.

(b) ஆய்வுக்குரிய உடன்படிக்கை இறுதி செய்யப்படுவதற்கு முன்பு நடந்த தயாரிப்பு வேலைகள், மாநாட்டுக் குழுக்களின் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகள், ஆரம்ப வரைவு உடன்படிக்கைகள் அல்லது வரைவு திருத்தங்கள்.

(c) உடன்படிக்கையுடன் இணைந்த பொருள்விளக்கத் துணை ஆவணங்கள்.

(d) தரப்பு நாடுகளின் நோக்கம், அந்த உடன்படிக்கை பற்றிய அந்நாடுகளின் கருத்து முதலானவற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த அந்நாடுகளின் உடன்படிக்கைக்குப் பிந்தய கால நடத்தைகள்.

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com