நாடுகளுக்கு இடையிலான யுத்தம்: யுத்தத்துக்கான காரணங்கள் - யுத்தத்தின் வகைகள்

நாடுகளுக்கு இடையிலான யுத்தம்: யுத்தத்துக்கான காரணங்கள் - யுத்தத்தின் வகைகள்

யுத்தம்

மனித வரலாற்றில் யுத்தம் இல்லாத காலப்பகுதியை அடையாளப்படுத்த முடியாது. பல்மர் மற்றும் பெர்கின்ஸ் (Palmer and perkins) ஆகியோர் "யுத்தத்தின் பயங்கரத்தினை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் தேவையற்றவை. யுத்தம் எண்ணற்றோரின் வாழ்க்கையினை அழித்து ஒழித்திருப்பதுடன், சாதாரண வாழ்க்கை சாத்தியமற்றது என்ற எண்ணத்தினையும் மனிதன் இப்பூமியில் வாழ்வது ஆபத்தானது என்ற எண்ணத்தினையும் உருவாக்குகிறது. இது சர்வதேச சமூகத்தின்  சாபக்கேடாகும். இது தேசிய அரச முறைமைக்கே உரியதாகும்" என்று கூறுகிறார்.

யுத்தம் அதிகாரத்தினை முழுமையாகத் தீர்மானிக்கும் நீதிபதியாகும். இதனால் இது சர்வதேச அரசியலில் ஆதிக்கமுடைய பங்கு வகிக்கின்றது. சர்வதேச அரசியலுக்குள் உச்ச அதிகாரமானது எப்பொதும் மறைந்திருந்தே வருகிறது. மனித வரலாறு யுத்தத்தினால் நிறைந்ததாகும். 

யுத்தத்தின் வரையறை

 
யூஜீன் ஹாப்மன் நிக்கர்சன்

யூஜீன் ஹாப்மன் நிக்கர்சன் (Eugene Hoffman Nickerson) யுத்தம் என்பது “முரண்பாடான இரண்டு அரசியலைப் பின்பற்றுகின்ற மனித குழுக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட பலத்தினை பிரயோகித்தலாகும். இவ்விரண்டு குழுக்களுக்கு ஒருவர் மீது மற்றொருவர் தத்தமது கொள்கைகளை திணிக்க விரும்புவார்கள்’ என்று வரையறுக்கிறார்.

 
குயின்சி ரைட்


குயின்சி ரைட் (Quincy wright)  யுத்தம் என்பது சமநிலை கொண்ட இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட பகையுணர்வு கொண்ட குழுக்கள் சட்ட விதிமுறைக்குட்பட்டு ஆயுதம் தரித்து மோதுவதே யுத்தம் என்கிறார்.

 
ப்ரானிஸ்லா மலினோஸ்கி


ப்ரானிஸ்லா மலினோஸ்கி (Bronisław Malinowski) ”யுத்தம் என்பது தெசிய அல்லது குலமரபுக் கொள்கைகளைப் பின்பற்றவைப்பதற்கு இரண்டு குழுக்கள் ஆயுத மோதலில் ஈடுபடுவதே யுத்தமாகும் என்று கூறியுள்ளார்.
 


கார்ல் வொன் க்ளாஸ்விட்ஸ்


கார்ல் வொன் க்ளாஸ்விட்ஸ் (Karl Von Clausewitz) “அரசியல் தொடர்பின் ஒரு பகுதி, ஆகவே யுத்தத்தினை அரசியலுடன் கலக்கின்ற போதுதான் அது அர்த்தமுடையதாகிறது எனக் கூறுகிறார்.

ரேமண்ட் அரோன்(Raymond Aron) யுத்தம் என்பது ஒரு அரசியல் செயல். இது அரசியல் சூழ்நிலைகளாலும் அரசியல் தூண்டுதலினாலும் எழுச்சியடைகிறது என்கிறார்.

யுத்தத்திற்கான காரணங்கள்
1925-ஆம் ஆண்டு யுத்தத்திற்கான காரணங்களும் குணப்படுத்துதலும் (Cause and Cure of Civil war) என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் யுத்தத்திற்கான 250 காரணங்கள் வெளியிடப்பட்டன. இதில் அரசியல், சமூக, சித்தாந்த, சமூக-சமய, உள, பொருளாதார காரணங்களால் ஏற்படுகிறது என்று குயின்சி ரைட் கூறுகிறார்.

உளவியல் காரணங்கள்
மனிதன் இயற்கையிலே சண்டையிடும்  உள்ளுணர்வு கொண்டவனாகும், இந்த உள்ளுணர்வு ஆதிக்கம் செலுத்தும் உணர்வாக வளர்ச்சி அடைகிறது. மனிதனிடம் சுயநலம், ஆக்கிரமிப்பு உணர்வு என்பன காணப்படுகின்றன. அரசியல்வாதிகளாலும், ஆட்சியாளர்களாலும் யுத்த உணர்வு தூண்டப்படுகிறது. எனவே தலைவர்கள் தான் யுத்த உணர்வுக்கு காரணம். இவர்களே மக்களை மோதலுக்கு தயார்படுத்துகிறார்கள்.

பொருளாதாரக் காரணங்கள்
பெருமளவு யுத்தத்திற்கு பொருளாதாரமே காரணமாகிறது. தொழில்மயமாக்கம் யுத்தத்திற்கும், மோதல்களுக்கும் தலைமை தாங்குகிறது. கைத்தொழில் துறையில் அரசு வளர்சியடைந்து  அதிகாரத்தினை வலுப்படுத்தி ஏனைய அரசு மீது அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இந்நாடுகளுக்கு அதிக நிலங்களும், மேலதிக வளங்களும் தேவைப்பட்டதால் யுத்தத்துக்குச் சென்றன. யுத்தத்தினால் பெறப்பட்ட பொருளாதார நன்மைகளை விட இழப்புகளே அதிகம் என்கிறார் சர் நார்மன் ஏக்கெல் (Sir norman Angell)

கலாச்சார , சித்தாந்த காரணங்கள்
சில வரலாற்று ஆசிரியர்கள் முரண்பாடான கலாசாரங்கள் மற்றும் சித்தாந்தங்களால் யுத்தங்கள் ஏற்படுவதாக கூறுகிறார்கள். இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையேயான யுத்தமாகவும், அரபு-ஸ்ரேல் யுத்தம் முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்குமான யுத்தமாகவும் வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. சீனா - சோவியத் யூனியனுக்குமான பனிப்போர் சித்தாந்த யுத்தமாகவே கருதப்படுகிறது.

அரசியல் காரணங்கள்

ஒரு நாட்டு அரசு, தேசிய நலனில் உள்ள அதீத கவனத்தால் உந்தப்பட்டு சில நேரங்களில் ஒன்றுடன் ஒன்று மோதலில் ஈடுபடுகின்றன. ஒவ்வொரு அரசும் தங்கள் அதிகாரத்தினைப் பயன்படுத்தி தமது தேசிய நலன்களை அடைய முயற்சிக்கின்றன. இதற்கு பல சந்தர்பங்களில் முழுமையான கருவியாக யுத்தம் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் சில அரசுகள் மட்டுமே யுத்தத்தினை ஆரம்பிக்கின்றன. பெரும்பாலான அரசுகள் யுத்தம் என்பது தமது பாதுகாப்பிற்கு ஆபத்ததானது என்று உணர்கின்றன.

சர்வதேச முறைமை
சர்வதேச முறைமை பெருமளவிற்கு மோதலை அல்லது யுத்தத்தினை விரும்புவதில்லை. உண்மையில் சர்வதேச முறைமையானது யுத்தத்தினைத் தடுப்பதில் தோல்வி கண்டதன் மூலமே யுத்தத்திற்குப் பங்களிப்புச் செய்துள்ளது எனக் கூறலாம். சர்வதேச சமுதாயம் அரசாங்கம் இல்லாததும், திறன் வாய்ந்த அரசாங்க நிறுவனங்கள் இல்லாததுமான சமுதாயமாகும். தனிநபர்கள் அரசாங்கம் இன்மையானது யுத்தம் நிகழ்வதற்குக் காரணமாகிறது. முடிவாகக் கூறின், யுத்தம் நிகழ்வதற்குப் பல காரணங்கள் துணை நிற்கின்றன. குறிப்பிட்ட யுத்தத்திற்குப் பொறுப்பாக இருந்த காரணங்கள் எவையெனக் கண்டறிவது கடினமானதாகும். ஒவ்வொரு யுத்தத்திற்கும் வெவ்வேறு காரணிகள் துணையாக இருந்துள்ளமையினை வரலாற்று ஆசிரியர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

யுத்தத்தின் வகைகள்

சர்வதேச அரசியலில் பலதரப்பட்ட யுத்தங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. வரலாற்று ரீதியாக நடைபெற்ற யுத்தங்கள் பல்வகைப்பட்டதாகவும் உள்ளன. இவ்வகையில் யுத்தத்தின் வகைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

முழு யுத்தம்

நவீன யுத்தமானது முழு யுத்தம் என்றே அழைக்கப்படுகிறது. இன்று யுத்தமானது ஆயுதப்படைகளுடன் மட்டும் நின்று விடுவதில்லை. பதிலாக ஒரு அரசியலிலுள்ள மக்கள் அனைவரும் யுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றார்கள். மொர்கன்தோ நவீன யுத்தமானது “முழு மக்களுடைய யுத்தம், முழு மக்களாலான யுத்தம், முழு மக்களுக்கும் எதிரான யுத்தம்” எனக் கூறுகிறார். நவீன யுத்தத்தில் முழு மக்களும் உணர்ச்சிவசப்பட்டு ஈடுபாடு காட்டுகின்றனர். நவீன யுத்தம் எதிரணி ராணுவத்தினை அழிப்பதாக மட்டும் இருப்பதில்லை. பதிலாகப் பொதுமக்களை அழிப்பதை இலக்காகக் கொண்டும் யுத்தம் நடத்தப்படுகின்றன. எனவே தான் இது முழு யுத்தம் என அழைக்கப்படுகிறது.

அணு யுத்தம்

அணு யுத்தம் இரண்டும் வகையானதாகும். ஒன்று மட்டுப்பத்தப்படாத அணு யுத்தம், அடுத்தது மட்டுப்படுத்தப்பட்ட அணு யுத்தம். மட்டுப்படுத்தப்படாத அணு யுத்தமானது எதிரியை பூரணமாக அழிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். மட்டுப்படுத்தப்பட்ட அணு யுத்தமானது ராணுவத் தளங்கள், மக்கள் குடியிருப்புக்கள், ராணுவ தளங்கள் இல்லாத ஏனைய பிரதேசங்கள் போன்ற அனைத்தையும் தாக்கி அழிப்பதை இலக்காகக் கொண்டதாகும். மட்டுப்படுத்தப்பட்ட அணு யுத்தமானது எதிரியின் தீர்மானிக்கப்பட்ட இலக்குகள் மீது மட்டும் தாக்குதல்களை நடத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். அதாவது எதிரியின் அணு ஆயுதங்களையும், களஞ்சியங்களையும் அழிப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டதாகும். மக்களையோ, ராணுவத் தளங்கள் இல்லாத பகுதிகளையோ தாக்குவது இந்த யுத்தத்தின் நோக்கமாக இருக்காது. ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட அணு யுத்தத்தின் போது ராணுவத் தளங்கள், ராணுவத் தளங்களற்ற இடங்கள் என்பவைகளை இனங்கண்டு தாக்குவது கடினமானதாகும். மட்டுப்படுத்தப்பட்ட அணு யுத்தம் மட்டுப்படுத்த முடியாதளவிற்குரிய யுத்தமாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட யுத்தம்

மட்டுப்படுத்தப்பட்ட யுத்தமானது எதிரி திகைப்படையக்கூடிய இழப்புக்களை மட்டும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். இந்த யுத்தம் மட்டுப்படுத்தப்பட்ட இலக்குகள், நோக்கங்களைக் கொண்டாதாகும். சம்பிரதாயமான ஆயுதங்கள் மட்டுமே இந்த யுத்தத்தின்போது பயன்படுத்தப்படும். ஆயினும் குறிப்பிட்ட யுத்தத்தினை மட்டுப்படுத்தப்பட்ட யுத்தமா? இல்லையா? என்ற எல்லையை வரையறுப்பது கடினமானதாகும்.

கொரில்லா யுத்தம்

மரபு ரீதியாக ஒழுங்கமைக்கப்படாத ராணுவத்தினைக் கொண்டு நடத்தப்படும் யுத்தமாகும். போதியளவு ஆள்பலம், ராணுவ பலம் எதுவுமின்றித் தாக்குதல்களை நடத்துவதுடன், நேருக்கு நேர் யுத்தம் செய்வதையும், ரகசிய இடங்களில் பதுங்கி இருப்பதையும் பண்பாகக் கொண்டிருக்கும், கொரில்லாக்கள் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பி ஓடுகிற தந்திரோபாயத்தினைக் கொண்டிருப்பார்கள்.

சிவில் யுத்தம்

சிவில் யுத்தம் என்பது ஒரு அரசுக்குள் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட குழுக்கள் அரசுக்கு எதிராக நடத்தும் யுத்தமாகும். சட்டரீதியான அரசாங்கம் ஒன்றை எதிர்த்து ஏனைய குழுக்கள் யுத்தத்தில் ஈடுபட்டு அதிகாரத்தினைக் கைப்பற்ற முயற்சி செய்யும். நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் சட்டரீதியான அரசாங்கத்தினை எதிர்த்து புரட்சியை ஏற்படுத்துவார்கள். இதனையே சிவில் யுத்தம் என்று அழைக்கின்றனர்.
 

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com